சில்லு - ஒர் முன்னோட்டம்.


என்ன தான் நாம் சினிமாவை சிலாகித்தாலும், அது கொடுக்கும் பிரம்மாண்டத்தை வாய் பிளந்து பார்த்தாலும், எனக்கு நாடகம் என்பது அதை விட பாகாசூரத்தனமான பிரம்மாண்டம். ஏனென்றால் நாடகத்தில் ஒன்ஸ்மோரே கிடையாது. எதுவாக இருந்தாலும் ஸ்பாண்டினிட்டியோடு, வெளியாக வேண்டும். குட்டோ, பாராட்டோ அவ்வப்போதே கிடைக்குமிடம். என் தந்தையின் நாடக குழுவில் தொடர்ந்து நாடகங்கள் போடப்படும் போது அந்நாடகங்களில் ரிகர்சலை மிக ஆவலுடன் பார்ப்பேன். அதிலும் அரங்கேற்றத்திற்கு முதல் நாள் நாடகம் நடக்கும் மேடையிலேயே ஒரு காட்சி முழுக்க, முழுக்க ஒத்திகை பார்ப்பார்கள். அப்படி நாடகம் அரங்கம் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் முழு நாடகத்தையும், நடத்துவார்கள்.  


ஒரு சில பேர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய் மாறியிருக்க, இன்னும் சிலரோ நான்கைந்து நாடகங்கள் நடித்த அனுபவத்தில் கொஞ்சம் தொனி தெரிய ஸ்டேஜுல பிக்கப் பண்ணீருவென் என்கிற லேசான திமிர் கலந்த நடிப்பு, சில அதிமேதாவித்தனங்களுமாய் கலந்து கட்டி நடக்கும். ஒரு நாடக இயக்குனருக்கு இது பெரும் சவால். அதிலும் நிறைய நடிகர்கள் நடிக்கும் போது சட்டென கூட்டமாய் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களையெல்லாம் கிட்டத்தட்ட ஸ்கூல் பிள்ளைகளை வழி நடத்துவது போல பேசி தன்னைக்கட்டி கொண்டு வர வேண்டும். இந்நாடகங்களை ஸ்கிரிப்ட் நாள் முதற்க் கொண்டு கூடவே இருந்திருந்த காரணங்களினால் திடீரென மேடையேற்றப்பட்டு நடித்ததும் உண்டு.  தேர்ந்த நடிகர்கள் நடித்த காலத்திலிருந்து அமெச்சூர் நாடக நடிகர்கள் நடிக்க ஆரம்பித்ததும், பல பிரச்சனைகளைத் தாண்டித்தான் இன்று நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 
எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், வரதராஜன், காத்தாடி ராமமூர்த்தி போன்ற ஜாம்பவான்களும், நண்பர் டி.வி.ராதாகிருஷ்ணன், பாம்பே கண்ணன் போன்ற சிலபல நாடக ஆர்வலர்களைத் தவிர அதுவும், காமெடி நாடகங்களாகவே போய்க் கொண்டிருந்த வேளையில், சில வருடங்களுக்கு முன்னால்  ரிஸ்கெடுத்து அரங்கேற்றப்பட்ட மேஜிக் லேண்டர்னின் “பொன்னியின் செல்வன்” தான் பெரும் முயற்சி, பெரும் வெற்றி. அது கொடுத்த தைரியம் இன்னும் பல வித்யாசமான நாடகங்களை நிறைந்த பொருட் செலவில் வெளிவர ஆரம்பித்தது. அதில் முக்கியமான ஒன்று சில வருடங்களுக்கு முன்னால் மேடையேற்றப்பட்ட ‘வேலு நாச்சியார்” என்ற நாட்டிய நாடகம். அந்நாடகத்தை வைகோ தயாரிப்பில் வெளிக் கொண்டு வந்தார். 

இப்போது அந்த வரிசையில் எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய “சில்லு” என்கிற சையின்ஸ் பிக்‌ஷன் நாடகம். தீபாவின் இயக்கத்தில் மேடையேற்றப்படவிடுக்கிறது. முழுக்க முழுக்க, அமெச்சூர் நடிகர்களை மட்டுமே கொண்டு லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அடுத்த வாரம் முதல் சென்னையில் அரங்கேறப் போகும் இந்நாடகத்தின் இயக்குனர் தீபா என்னை நாடகத்தில் முழு ஒத்திகையை பார்க்க அழைத்திருந்தார். முழுக்க முழுக்க இளமை ததும்பும் கூட்டத்தில் ஒரிரண்டு முதியவர்கள் இருந்தாலும் இளையவர்களாகவே வளைய வந்தார்கள். கூட்டம் அப்படி :)

நாடகத்தின் ஒத்திகை ஆரம்பித்தது. சரசரவென எந்தவிதமான தயக்கமும், இல்லாமல், காட்சிகளை கண் முன் கொண்டு வர ஆரம்பித்தார்கள். முதலில் சொன்ன அமெச்சூர் நாடக நடிகர்கள் என்கிற வார்த்தையில் அமெச்சூர் என்கிற வார்த்தை மெல்ல காற்றில் கரைய ஆரம்பித்திருக்க, ஒரு பரபர, விறுவிறு, சயின்ஸ் பிக்‌ஷன் நாவலை, கிட்டத்தட்ட சுஜாதாவின் சர்க்காஸத்தோடும், இன்பர்மேஷனோடும் சுவாரஸ்ய கதை சொல்லலோடும், அருமையாய் நடித்து, நடத்தினார்கள். ஒவ்வொரு நடிகர் நடிப்பிலும் கடந்த ஒரு மாத காலமாய் எடுத்துக் கொண்டிருக்கு பயிற்சி தெரிந்தது. யாரையும் புதியதாய் நடிக்க வந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி, திறம்பட தயார் செய்திருந்தார் இயக்குனர் தீபா. நடிகர்களுக்கான ஸ்பெஷல் காஸ்ட்யூம், வடிவமைக்கப்பட்ட எதிர்கால செட் ப்ராபர்ட்டி, செட் என ஏகப்பட்ட விஷயங்களுக்காக பிரத்யோகமாய் மெனக்கெட்டிருப்பதாக தீபா சொன்னார். நாடகத்தை பார்க்கும் போது கற்பனையில் யோசிக்க, யோசிக்க,  எதிர்பார்ப்பை கிளப்பியது என்பது உண்மை. 

அந்த எதிர்பார்ப்பு, முதல் முறையாக தேணாண்டாள் பிக்ஸர்ஸ் இந்நாடகத்தை ஷ்ரத்தா மற்றும் கிரியாவுடன் சேர்ந்து அளிக்க முன்வந்திருப்பதே இந்நாடகத்தின் குவாலிட்டிக்கு ஒரு சான்று. ஒரு மாறுபட்ட, சுவாரஸ்ய தமிழ் சயன்ஸ் பிக்‌ஷன் நாடகத்தை ப்ரிவியூ பார்த்த ஆர்வத்தோடு அரங்கேற்ற மேடையில் பார்க்க காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேன்.  வாழ்த்துக்கள் தீபா அண்ட் டீம்.
கேபிள் சங்கர்


Comments

Unknown said…
Great effort..Appreciate as an erstwhile stage artist...
உங்கள் பதிவு பார்த்ததும் எங்களுக்கும் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்