Thottal Thodarum

Sep 25, 2015

குற்றம் கடிதல்

தேசிய விருதும் உலகபட விழாக்களிலும் அங்கீகாரமும், பரிசும் பெற்ற படம். ட்ரைலர், ஏற்கனவே பார்த்தவர்கள் சொன்னதை வைத்து பார்க்கும் ஆவல் அதிகமாகியிருக்க, சரியான தியேட்டர்களில் காட்சிகள் இல்லாமல் போரூர் கோபாலகிருஷ்ணாவில் பார்த்தேன். 


பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவனை மெர்லின் டீச்சர் அடித்த மாத்திரத்தில் மயக்கமாகி கீழே விழுகிறான். அதன் பின்பு நடந்த்து என்ன என்பதுதான் கதை. சிம்பிளாய் ஷங்கர் பட ஸ்டைலில் சொல்லக்கூடிய கதை தானே இதிலென்ன பெரிய விஷயம் என்று கேட்டீர்களானால்,  அதை சொன்ன விதம் தான். என்ன ஒரு அருமையான ரைட்டிங். டீடெயிலிங்.

புதியதாய் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த மெர்லின், மணிகண்டன். அவர்கள் அன்றைய நாள் ஆரம்பம், மெர்லினின் ஸ்கூல், அவளை மதிக்கும் பள்ளி. துறு துறு குழந்தைகள், ஏன் ஸ்கூல் குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்கக் கூடாது? என்கிற விவாதம். என மெர்லினின் ஸ்கூலைப் பற்றியும், அதன் பின்னணியைப் பற்றி ஒரு டீடெயிலிங் என்றால். இன்னொரு பக்கம் அச்சிறுவனின் மாமா, அம்மாவின் கேரக்டர் பற்றி சொல்லிய காட்சிகள் அட என்றால். மணிகண்டனின் அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழ் பேசும் சிங், இந்தி பேசும் மணிகண்டன் அவனின் வேலை என சொன்ன விதம் அட்டகாசம். இதில் ஊழியம் செய்யும் மெர்லினின் அம்மா. ஸ்கூல் ப்ரின்ஸிபல், அவரது மனைவி. ரீப்ரொடக்‌ஷன் பற்றி க்ளாஸ் எடுத்து மாணவர்களை கண் கலங்க வைக்கும் அந்த டீச்சர். மெர்லினின் மேல் சிறிய ஈடுபாடு கொண்ட பி.டி மாஸ்டர் பற்றிய வசனம் மூலமாய் கொடுக்கப்படும் அறிமுகம், மீடியா இம்மாதிரியான செய்திகளை டீல் செய்யும் முறை, என பார்த்து பார்த்து எழுதிய காட்சிகளை கண் முன் விரிக்கிறார்கள்.

குறிப்பாய் ஆட்டோ ட்ரைவர் பிரின்சிபல் வீட்டில் போய் பேசும் காட்சியில் பிரின்சிபல் மனைவி அவரை எதிர் கொள்ளும் காட்சி, லாரி ட்ரைவர் சாப்பாடு வாங்கி வரும் காட்சி, தான் மதம் மாறி பொட்டு வைத்ததால் தான் ஏசு தன்னை தண்டிக்கிறாரோ என்ற குற்ற உணர்ச்சியில் தன் நெற்றியில் வைத்த பொட்டை திரும்பத் திரும்ப அழிக்கும் காட்சி, க்ளைமேக்சில் அம்மாவும், மெரிலினும் சந்திக்கும் காட்சிகள் என அற்புதமாய் எழுதப்பட்ட காட்சிகள் நம்மை அப்படியே படத்தினுள் இழுத்துச் செல்கிறது. புதியவர்கள் என்கிற உறுத்தலே இல்லாத அற்புதமான நடிப்பு. மெர்லினாக நடித்த ராதிகா பிரஸித்தாவாகட்டும், சிறுவன் அஜய்யாகட்டும், ஆட்டோ ட்ரைவராகட்டும், அத்தனை பேரும் அசத்தியிருக்கிறார்கள்.

இயல்பான மணிகண்டனின் ஒளிப்பதிவு.  ரொம்பவும் கேஷுவலான மேக்கிங். உறுத்தாத பின்னணியிசை, கொஞ்சம் நேர எக்ஸ்டன்ஷனுக்காக திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், குற்றவுணர்ச்சியை பற்றிப் பேசும் கூத்துக் காட்சிகள் போன்ற மிகச் சில விஷயங்களைத் தவிர, அற்புதமாக, பெருமைப்படக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை அளித்ததற்காக, தயாரிப்பாளர் கிறிஸ்டி, ஜே. எஸ். கே, எழுதி இயக்கிய பிரம்மாவை வாழ்த்த வேண்டும்.
கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

கடை(த்)தெரு said...

செழியன் மயங்கிவிழ காரணம் டீச்சர் அடித்ததால் இல்லை, அவனது மூளையில் இருக்கும் கோளாறே அதற்கு காரணம் என்பது அவனை மருத்துவமனையில் சேர்த்த உடனே தெரிந்துவிடும்தானே. அதை க்ளைமேக்ஸ் வரை இழுப்பது திரைக்கதையில் இருக்கும் மிகப்பெரிய லாஜிக் ஒட்டை அல்லவா? சரிதானே சங்கர் சார்.

- இன்பா