Thottal Thodarum

Nov 23, 2015

கொத்து பரோட்டா - 23/11/15

ஏற்கனவே சென்னை மிதந்து இப்போதுதான் வடிய ஆரம்பித்திருக்கிறது. இப்போது திரும்பவும் அவ்வப்போது நாலு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் கொட்டித் தீர்க்கிறது. இதற்கிடையில் அங்க ஏரி உடைஞ்சிருச்சு, இங்க ரோடெல்லாம் வெள்ளம், செம்பரம்பாக்கத்தை மறுக்கா திறந்துட்டாங்கன்னு எல்லாம் வாட்ஸப்பில் புரளி பரப்பி வருகிறார்கள். நண்பர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தானே புயலில் செயல்பட்ட அளவில் பாதி செய்திருந்தால் கூட சென்னைக்கு விடிந்திருக்குமென்றார்கள். அதானே என தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@
டிஜிட்டல் புரட்சி வந்ததிலிருந்து எப்படி தமிழகமெங்கும், பட்டித்தொட்டியெல்லாம், குறும்படமும், பெரும்படங்களும் எடுக்க ஆரம்பித்திருக்க, இதே நிலையில் இலங்கையிலும் தமிழ் திரைப்படங்கள் நிறைய எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கே எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் வெளியிடப் படுவதேயில்லை. பெரும்பாலும் அங்கிருக்கும் சினிமா ஆர்வம் கொண்ட இளைஞர்களில் ஐரோப்பிய தொடர்பு மூலம் மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். அப்படங்களை ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டு தமிழில் படமெடுக்கிறார்களே என்று வந்து பார்க்கிறார்கள் என்கிறார்கள். டிஜிட்டல் தான் இந்த புரட்சிக்கு காரணம். ஆனால் டெக்னிக்கலாய் அடிப்படைக் கூட தெரியாமல் அப்படங்களை பார்க்கும் போது லோக்கல் சேனல் படங்களை விட மோசமானதாய் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் ஆர்வம் அபரிமிதமானது. பெரும்பாலும் இலங்கையில் வெளியாகும் நம் தமிழ் படங்கள், மற்றும் ஹிந்திப் படங்களின் தாக்கம் தான் அவர்களின் கதைகளில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படும் இலங்கைத் தமிழ் திரைப்படங்களின் நிலையும் இதே தான். கொஞ்சம் டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்டுகளில் மட்டும் பெட்டர். இம்மாதிரியான படங்களில் ஒரு சில பேர் மட்டும் கிடைத்த வசதிகளை வைத்து அவர்களின் ஆர்வத்தினால் சுயமாய் கற்றெழுந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள மொழி திரைப்படங்களை வெளியிடும் தியேட்டர்கள் அப்படங்களை குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஓட்டியே ஆகவேண்டுமாம். இலங்கை தமிழ் படங்களுக்கு அப்படி ஏதும் கிடையாதாம். அப்படியே செலவு செய்து ரிலீஸ் செய்தாலும் மக்கள் பார்க்க வர மாட்டார்கள் என்கிறார்கள். இல்ல தம்பி அவர்கள் பார்க்காதற்கு காரணம் தமிழ் படமென்பதால் இல்லை. அதன் தரத்தினால் தான் என்றேன். கொஞ்சம் யோசித்து ஆமாமென்றார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@
எங்கள் ஏரியாவில் எல்லாம் செம்பரம்பாக்கம் திறந்துவிடப்பட்டதினால் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் இதற்கு ஏற்கனவே தயாராகி விட்டதினால் சேஃப்பாக வெளியேறி, கூட்டம் கூட்டமாய் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் வீட்டிலும், அருகிலிருந்த ஸ்கூலிலும் உட்கார்ந்து கொண்டு, எப்படியும் இந்த வாட்டி ஐந்தாயிரம் கொடுப்பாங்க என்று வரவை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள். கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஆளாளுக்கு சாம்பார் சாதம் அண்டா அண்டாவாய் கொடுத்து திகட்டி விட்டார்கள். ரெண்டாவது நாள் அன்று வேறொரு கட்சிக்காரர் வெஜிட்டபிள் பிரியாணி கொடுத்துவிட, சாம்பார் சாதம் கொண்டு சென்றவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
குமாரி 21F
இயக்குனர் சுகுமாரின் எழுத்தில் அவரது உதவியாளர் இயக்கி வெளிவந்திருக்கும் படம். ஏ சர்டிபிகேட் படம். அதற்காக, ஹீரோயின் வரும் போது பால் பாக்கெட்டை கையில் வைத்து பிதுக்கவில்லை. ஆனால் படம் நெடுக, இன்றைய இளைஞர்களின் காமம், காதல்  காதலியின் கன்னித்தன்மை என பல விஷயங்களை பேசுகிறது. இலக்கில்லாமல் சுற்றும் இளைஞர்கள். ஏடிஎம்மில் சின்னச் சின்னதாய் திருடி கொண்டாட்டமாய் வாழ்ந்து வரும் நண்பர்கள். சிங்கப்பூர் ஸ்டார் க்ரூயிஸில் செஃப்பாக வேலைக்கு சேரும் ஆசையில் உள்ள ஹீரோ.ராஜ் தருண். என்னைப் பார்த்து ஐநூறு ரூபா கொடுக்குறேன் வர்றியான்னு கேக்குறான் என்று ஊர் முழுக்க ஒருவரை துரத்தி துரத்தி அடித்துவிட்டு, ஹீரோவை பார்த்து, நான் எப்பேர் பட்ட பிகர்நான் என்னை ஐநூறு ரூபாக்கு கூப்பிடுறான் என்று அங்கலாயிக்கும் அதிரடி பெண்ணாய், குட்டிக் குட்டி ஷார்ட்ஸ் போட்டு அலைந்தாலும், மனசை கலங்கடிக்காத க்யூட் ஹீரோயின் ஹீபா பட்டேல்.  இவர்களிடையே ஆன காதல், காமம், குழப்பம், அவளைப் பற்றிய ஒர் ரகசியம் என போகிறது கதை. முக்கியமாய் கதாநாயகியின் கற்பைப் பற்றி நிறைய பேசுகிறது. கல்யாணம் பண்ணிய பெண்ணின் தங்கையோடும், அத்தையோடுமே குத்தாட்டம் போடும் வக்கிர தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் சீரியஸாய் செக்ஸ் பற்றியும், இன்றைய இளைஞர்கள் பற்றியும் பேசியிருக்கிறார்கள். நிறைய ட்ராமாவாய் காட்சிகள். டெம்ப்ளேட் சீன்கள் எல்லாம் இருந்தாலும் என்கேஜிங்.. அதற்கு முக்கிய காரணம், தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசை, ராண்டியின் சீப் அண்ட் பெஸ்ட் ஒளிப்பதிவு. அவைளைபிள் லைட்ஸை மட்டுமே வைத்துக் கொண்டு, ஸ்மூத்தான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட ரெண்டு கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது என்கிறார்கள். அதே நேரத்தில் இப்படம் ப்ரெஞ்சு படத்தை “காப்பி கொட்டிய” படமென்றும் பேச்சும் உலவுகிறது.விரைவில் இந்தி, மற்றும் தமிழில் இப்படம் ரீமேக்காகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாள் இரவில்
மலையாள ஷட்டரை ரீமேக்கியிருக்கிறார்கள். லாலுக்கு பதில் சத்யராஜ், சீனிவாசனுக்கு பதில் யூகிசேது. கிட்டத்தட்ட ஒரிஜினலை எங்கேயும் மாற்றாத வர்ஷன். சொல்லப் போனால் மலையாளப் படங்களில் பேசும் அரசியலை மொத்தமாய் தவிர்த்திருக்கிறார்கள். அனுமோள் விபச்சாரியாய். வருண் ஆட்டோ ட்ரைவராய். மலையாளம் பார்க்காதவர்களுக்கு இந்த வர்ஷன் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருந்தாலும் போகப் போக, சீக்கிரம் திறங்கப்பா என்று ஆகிவிடக்கூடிய ஆபத்து படம் நெடுக இருப்பதை தவிர்க்க முடியாமல் போனதற்கான காரணம், லால் கொடுத்த இயல்பான நடிப்பு, பதைபதைப்பு போன்றவைகள். முக்கியமாய் லால் சபலப்படும் காட்சிக்கு முன்பு அதற்கான உருவேற்றல் நடக்கும். அது கொடுக்கும் இம்பேக்ட் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அவரிடம் சபலத்தை ஏற்படுத்தும். அதே போல அனுமோளை பார்க்கும் காட்சி. ரொம்பவே நாடகத்தனமாய் இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்களில் இருக்கும் புத்திசாலித்தனம் கொஞ்சம் ஒட்டாமல் போய்விடுகிறது. மலையாள சீனிவாசனிடம் தனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற அலுப்பு இருக்கும் நம்பிக்கையின்மை இருக்காது. ஆனால் இங்கே யூகியிடம் விரக்தியும், நம்பிக்கையின்மையும் மட்டுமே இருக்கிறது. மலையாளத்தில் சீனிவாசன் கேரக்டர் கதை பைல் வேண்டுமென்பதற்காக குடித்த ஆட்டோ ட்ரைவரை அரஸ்ட் செய்யும் போது, தவறு செய்ய தூண்டிய தன்னையும் அரஸ்ட் செய் என்று ரூல்ஸ் பேசி அரஸ்ட் ஆவார். ஆனால் இங்கே அதெல்லாம் துண்டிக்கப்பட, அதனால் வேறு வ்ழியில்லாமல் வருண் மாட்டிய விஷயமாய் இல்லாமல் வலிய திணிக்கப்பட்ட விஷயமாய் தெரிகிறது. ஒரு நாள் இரவு முழுவதும் அவர்கள் அங்கே தங்கியிருக்கும் நேரம் கிட்டத்தட்ட நாமே இருப்பது போல இருக்கும். ஆனால் இப்படத்தில் அவ்வுணர்வுகளை சட் சட்டென கடந்துவிடுவது எமோஷனை குறைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Spectre
ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் வெளிவந்திருக்கும் புதிய படம். உலகமெங்கும் துண்டு துண்டாய் வெளியாகி பெரிய அளவில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் படம். இதற்கு முந்தைய படமான ஸ்கைபால் எனக்கு பிடிக்கவில்லை. அதே படத்தின் இயக்குனர் என்றாலும் ஜேம்ஸ்பாண்ட் படத்தை பார்க்காமல் விட்டால் சாமி குத்தமாகிவிடக்கூடிய சாத்தியம் இருப்பதால் மொக்கை ஐமேக்ஸில் பார்க்காமல் ஐநாக்சில் பார்த்தேன். அட்டகாசமான ஓப்பனிங் சீன். அதுவும் சிங்கிள் ஷாட்டில். மெக்ஸிக்கோவின் வீதிகளீல் ஆரம்பித்து மொட்டை மாடிகளில் அநாயசமாய் நடந்து வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாஷ அதிரடி. ஆனால் அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் டி.ஆர்.ராமண்ணா காலத்துக் கதை. அக்கா, தங்கை, அம்மா செண்டிமெண்ட் தவிர அத்துனை செண்டிமெண்டுகளுடன் பேசியே சில சமயம் மாய்கிறார்கள். வழக்கமாய் பாண்ட் படத்தில் வரும் டைட்டில் பாடல் காட்சி அட்டகாசப்படுத்தியிருப்பார்கள். பட் இதில் அதுவும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை. மொத்தத்தில் ஸ்பெக்டர் ம்ஹும். தலைவி மோனிக்கா பெலூச்சியை ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலுக்கு ஆக்கி விட்ட இந்திய சென்சார் போர்ட் ஒழிக.
@@@@@@@@@@@@@@@@@@@@
X Past Is Present
பதினோரு இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இயக்குனருடய முன்னாள் காதல்களைப் பற்றி படமெடுத்திருக்கிறார்கள். இயக்குனராய் ரஜத் கபூர். மிஷ்கின் போல ராத்திரியிலும் கண்ணாடி போட்டு சுற்றுகிறவர். 20 படங்களை இயக்கியிருப்பவர். ஒரு பெஸ்டிவல் பார்ட்டியின் போது ஒரு பெண்ணை சந்திக்கிறார். அவர் வயதில் பாதி இருக்கும் பெண். அவளூடன் பேச ஆர்மபிக்க, மெல்ல அவரது நினைவுகளில் அவளது வயதே உடைய பியா பாஜ்பாயின் கதை ப்ளாஷ்கட்டில் வருகிறது. இப்படி ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு. கமிட்மெண்ட் இல்லாத வாழ்க்கை வாழ்வது ஏன்? என அவருடய காதல் நினைவுகளூடே முன்னேயும் பின்னேயும் அலைக்கழித்து சொல்கிறார்கள். ஒவ்வொரு ப்ளாஷ்பேக்கும் ஒவ்வொரு இயக்குனர் இயக்கியது. பப்பில் மீட் செய்யும் பெண்ணிடம் நெருக்கமாவதற்கு முன் அவளின் சாயலை பார்த்து அவளது அம்மாவின் பெயரை சொல்கிறான் கே. அவள் எனது முன்னாள் என்றும் சொல்கிறான். அப்ப நீ எனக்கு அப்பாவா? எனக் கேட்கிறாள் அவள். இல்லை என்கிறான்.  இபப்டியாக போகும் கதையில் அவளுடனான பேச்சு போகும் திசையில் எல்லாம் அவன் வாழ்க்கையும் முன் பின் போகிறது. கொஞ்சம் தெலுங்கு பட சாயலில் வரும் கொல்கத்தா காதல் கதை. பார்க்காமலேயே பிரியும் காதல். அதில் ஆங்காங்கே தெளிந்த நீரோடையாய் வழியும் கவிதைகள், அன்பேயில்லாமல் அன்பாய் இருப்பதாய் நீ நடிக்கிறாய் என்று முகத்துக்கு நேரே சொல்லி, உன் குழந்தையை கலைத்துவிட்டேன் என்று சொல்லும் மனைவி ராதிகா ஆப்தேவும் அவரது மென் சோகக் கண்களும், லண்டனின் பார்க்கும் டாக்டர் பெண், அவள் மேல் கே கொள்ளும் மையல். அதனால் அவளை அடையத் துடிக்கும் டெஸ்பரசி எனப் போய் காரியம் ஏதும் நடக்காமல் பிரியும் பெண்ணின் கதை. தன்னை விட பெரியவளான ஹுமா குரேஸியுடனான காமம் அவளது ஆதிக்கம், நடிகையுடனான காமம் மட்டுமே கொண்ட காதல். கதை எழுத முடியாமல் ஸ்டர்க் ஆகி இருக்கும் போது வீட்டு வேலைக்காரியிடம் கதை சொல்லி கதைக்கு முடிவு தேடு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி சந்திரமுகி, பாரோ பெண்ணின் கதை, எங்கேயும் எவரிடமும் கமிட்மெண்ட் இல்லாமல் சுற்றுவதற்கான காரணம் சொல்லும் படமாய் நம்மூர் கதை. அதில் வரும் அட்டகாச ட்விஸ்ட், பின்பு முதல் காட்சியில் பப்பில் பார்த்த பெண் கொடுக்கும் டைம் மிஷின் வாட்சில் மீண்டும் அந்த காலத்திற்கு செல்லும் போது வெளியாகும் க்ளைமேக்ஸ் சுவாரஸ்ய ட்விஸ்ட். என்னங்கய்யா குழப்புறீங்க? என்று கேட்டீர்களானால்.. ஆதே கேள்வியை படம் நெடுக, ரஜத் கபூரிடம் கேட்கிறார் சென்னியப்பா.. முடிவில் அக்கேள்வி நம்மிடமும் கேட்கப்படுவது தான் சுவாரஸ்யம். 

பாராட்டப்பட வேண்டிய முக்கிய விசயம். இம்மாதிரியான கதை சொல்லல். விமர்சகர்களான சுதீஷ் காமத், ராஜா சென் ஆகியோர் இயக்குனராகியிருப்பது. இதில் சுதிஷிற்கு மூன்றாவது படம். ஸ்ரீகர் ப்ரசாத்தின் மற்றும் இன்னொருவரின் எடிட்டிங்,  க்ளைமேக்ஸ் கதை.  மைனஸாய்.. ஒரு கட்டத்திற்கு மேல் ரிப்பீடீஷனாய் பெண் பாத்திரங்களை முன் வைத்து கதை நாயகனான கேவை திரையில் காட்டாமல் வாண்டடாய் அவுட்டாப் போகஸிலும், ஜெர்க் ஷாட்களிலும் கவனம் செலுத்தி புதிய முறையில் கதை சொல்ல முயன்ற முயற்சி சமயங்களில் சலிப்படைய செய்கிறது. பட்.. ஆன் த ஹோல்.. எக்ஸ். சுவாரஸ்யமான விதயாசமான முயற்சி.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A man boards a plane with six kids. After they get settled in their seats, a woman sitting across the aisle leans over to him and asks, "Are all of those kids yours?" He replies, "No. I work for a condom company. These are customer complaints."
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

கலையன்பன் said...

சுவையான கலவை!