Thottal Thodarum

Apr 26, 2017

கொத்து பரோட்டா 2.0-21

 கொத்து பரோட்டா  2.0-21
The Walking Dead
அமெரிக்க கேபிள் டிவி சேனல்களில் அதிகபட்சமான பார்வையாளர்களை கடந்த ஆறு வருடமாய் கொண்டிருக்கும் சீரிஸ். 2003ல் காமிக்ஸ் சீரியஸாய் வந்த கதை. 2010ல் அதை அடிப்படையாய் வைத்து டிவி சீரீஸ் ஆனது. கதையென்று பார்த்தால் சிம்பிள் தான். ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு டெபுடி ஷெரீப் நம் கதை நாயகன் ரிக். ஒரு கடத்தலை பிடிக்க போகும்போது குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் கோமாவில் இருக்கிறான். கண் முழித்து பார்க்கும் போது ஜார்ஜியா மட்டுமல்ல நாட்டில் உள்ள பெரும்பாலனவர்கள் ஜோம்பிக்களாய் மாறியிருக்க, காணாமல் போன தன் மனைவி, மகளை தேட ஆரம்பிக்கிறான். தினம் தினம் ஜோம்பிக்களிடமிருந்து தப்பிப்பது ஒருவிதமான டென்ஷன் என்றால் இன்னொருபக்கம் சர்வைவலுக்காக மனிதர்களை எதிர் கொள்வதும், அவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் ஒரு பக்கமென பரபர நிமிடங்கள் ஒவ்வொரு எபிசோடிலும். மனிதர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என கண்டறிவதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் இருப்பதே சவாலான உலகம். அதில் தன் மனைவி, மகளை கண்டு பிடிக்கிறான். அங்கே இருக்கும் குழுவுக்கு பொறுப்பேற்று தலைவனாகிறான். அவர்களை வழி நடத்துக்கிறான். பிரச்சனைகளை களைந்து காப்பாற்றுகிறான். புதியவர்களை சேர்க்கிறான். நண்பனை கொல்கிறான். மனைவியை இழக்கிறான். பல பாச, எமோஷனல் போராட்டங்கள். பட் எல்லோருடய குறிக்கோளும் சர்வைவல் மட்டுமே. அதை நோக்கித்தான் பயணமே. இவர்களுடன் இணையும் ஆட்கள். அவர்களின் கேரக்டர்கள். பெண்டாட்டியை காட்டடி அடிக்கும் புருஷன். அடங்கிப் போகும் பெரிதாய் உலகம் தெரியாத பெண், அவளது மகள். அவளின் கணவனின் இறப்புக்கு பின் ஏற்படும் மாற்றம். பையனை காப்பாற்ற போய் கிடைக்கும் புதிய நட்பு. அங்கே ஏற்படும் கொரிய பையன் அமெரிக்க பெண் காதல். அவர்களுடய நெருக்கம். வாள் வீச்சில் புலியான மினோ என அம்பு வீச்சிலும், அதிரடியாய் செயல்படும் டெரில், எதையும் சரியாய் சிந்தித்து செயல்படுத்தும் டாக்டர் ஹெர்ஷல். அவரது மகள்கள். என அதீத வயலண்டிக்கான ஒரு சீரிஸ். எல்லா ஜோம்பிக்களையும் வாழைத்தாரில் கத்தி குத்தி பழகுவது போல மண்டையோட்டின் மேல் வச்சி சர்ரக்.. சர்ரக் என குத்தி பழகுகிறார்கள். ரத்தம் பீச்சியடிக்கிறது. ஆங்காங்கே லைட்டாய் செக்ஸும். பட். ஒவ்வொரு சீசனின் ஆரம்பமும், முடிவும் அட்டகாசம். ஆறாவது சீசன் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியே.
@@@@@@@@@@@@@@@@@@@@
புத்தக கண்காட்சியில் உலவும் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவம். ஒரு நாள் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனுடனான எழுத்து இல்லாத அவரது துறை சார்ந்த பேச்சு. கண்காட்சி முடிந்தும் பேச்சு போய்க் கொண்டேயிருந்தது. அவ்வளவு பரபரப்பு. இதை வைத்து நீங்கள் நாலு நாவலாவது எழுதலாம் போல என்றேன். எங்க எழுதுன ஒரு சிறுகதையையே எவனும் பப்ளிஷ் பண்ண மாட்டேனுட்டானுங்க. என்றார். அவரின் சிறுகதை அட்டகாசமானது. இன்னொரு நாள் விநாயகமுருகன். அவரின் புத்தகம் குறித்த என் விமர்சனத்தை எழுதியதைப் குறித்து பாராட்டிவிட்டு, திட்டினாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் எழுதணுமில்லை என்றார். சாரு தன் மொழிப்பாளருடன் வந்திருந்தார். இந்த வருடம் ஏன் புத்தகம் ஏதும் வரவில்லை என்றதற்கு தமிழில் எழுதுகிறவனை எவன் மதிக்கிறான்? மதிக்காதவனை மதித்து எழுதுவதை விட, மதிக்கிறவனுக்கு எழுதுறதுதான் சரி என்றார். லஷ்மி சரவணக்குமார்  பேஸ்புக்கில் தன் புதிய பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகத்தின் விற்பனை, அவர் கொடுத்த எழுத்தாளர் ராயல்டி. அடித்த புத்தகங்கள் என டீடெயிலான விவரங்களை அளித்திருந்தார். ராயல்டி கொடுக்கும் பதிப்பாளர் என்பதே பெரிய விஷயம்.  அதிலும் அட்வான்ஸாக. வாழ்த்துக்கள் லஷ்மி. பிரிண்ட் ஆன் டிமாண்ட் குவாலிட்டி பற்றியும், எழுத்தாளர்களுடனான நெருக்கத்தைப் பற்றியும் நற்றிணை யுவனுடனான பேச்சு படு சுவாரஸ்யம். மனுஷ்ய புத்திரன் சாரு, விமலாதித்த மாமல்லன், மோகன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களை வைத்துக் கொண்டு, “குமுதத்தில எழுதினா புக் பேர் வரது இல்லையா? “ என்று கேட்டார். இல்லை தலைவரே நான் வரும் போது நீங்க இல்லை என்றேன் அடக்கமாய். அப்ப குமுதத்துல எழுதினா நான் இருக்கும் போது வரதில்லையா? அவ்வளவு பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்களா? என்று அத்துனை பேரையும் வைத்து என்னை ரேகிங் செய்தார். மனதளவில் சந்தோஷம் அம்மாம் பெரிய எழுத்தாளர்கள் மத்தியில் என்னையும் எழுத்தாளர் லிஸ்டில் சேர்த்துக் கொண்டதற்கு. இந்த வருடம் பெரியாரின் புத்தகம் தான் அதிகம் விற்பனையான புத்தகம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திருக்குறள் ஒவ்வொரு பள்ளி மாணவர் வீட்டிலும் ஒரு காப்பி இருக்கும் எத்தனை பேர் அதை படித்து பின்பற்றுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில மாதங்களுக்கு முன்  சன் நியூஸ் தொலைக்காட்சியில் உத்த பஞ்சாப் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேச அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் கொடுக்கும் அதிகாரிகள் பெரிய படமென்றால் ஒரு விதமான மனநிலையும், சிறிய படமென்றால் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மனநிலையுடன் தான் கையெழுத்திடுகிறார்கள். நான் இயக்கிய  தொட்டால் தொடரும் படத்திற்கு யூ சர்டிபிகேட் வாங்க அவர்கள் கொடுத்த சவுண்ட் மியூட்டெல்லாம் அபத்ததின் உச்சம். மியூட் போட்டா டபுள் மீனிங் ஆயிருங்க.. என்றேன்.. இல்லைங்க ஆபாசமா இருக்கு என்றார்கள். இன்றைக்குபோடட்டுமா?’ என்று பெண்களைப் பார்த்து கேட்பது யூ சர்டிபிக்கேட் வசனமாகி விட்டது. சமீபத்தில் மெட்ரோ எனும் தமிழ் படம் இதே போன்ற பல இன்னல்களுக்கு உள்ளாகி வெளியாக இருக்கிறது. செயின் பறிப்பை அடிப்படையாய் கொண்ட படம். இதை பார்த்தால் செயின் பறிக்க ஆரமித்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லி, சர்ட்டிபிக்கேட்டே மறுத்திருக்கிறார்கள். இன்று ட்ரிப்யூனல் சென்று சர்டிபிகேட் வாங்கி வெளியிட தயாராக இருக்கிறது. உத்த பஞ்சாப் படம் கோர்ட்டுக்கு சென்ற பிறகு தான் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு தெரியும் இவர்கள் சர்டிபிகேட் மட்டுமே கொடுக்க பணித்தவர்கள் கட் கொடுக்க அல்ல என்பதை. அதையெல்லாம் மீறி நமக்கு கட் கொடுக்கும் காட்சியை சொல்லி இதை விட மோசமான ஒரு காட்சியை கட் செய்யாமல் விட்டுவிட்டு யூ சர்டிபிகேட் வேறு கொடுத்தீர்களே என்று கேட்டால் அதெல்லாம் இங்க பேசக்கூடாது என்று ரூல் வேறு பேசுவார்கள். இது சமீபத்தில் ட்ரிப்யூனலுக்கு போய் யூ சர்டிபிகேட் வாங்கிய ‘விழித்திரு” படம் வரை தொடர்கிறது. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்களுக்கான விஷயமே வேறு. இதை கொஞ்சம் சரி பண்ணனும். போராடித்தான் ஆகணும். வேற வழியில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“LADIES ROOM”
வெப் சீரீஸ் எல்லாம் இன்னும் சைவமாகவே தமிழில் இருக்க, ஹிந்தியில் படு அடல்ட் கண்டெண்ட் எல்லாம் சும்மா சர்வ சாதரணமாய் எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். யாஷ் ராஜின் டிஜிட்டல் குழுமத்தில் வெளியாகியிருக்கும் “லேடீஸ் ரூம்” என்கிற ஆறு பார்ட் வெப் சீரீஸ் படு நான் வெஜ். அமெரிக்க செக்ஸ் அண்ட் த சிட்டி போல லேலீஸ் ரூமில் நடக்கும் பெரும்பாலான பேச்சுக்கள், செக்ஸ், ரிலேஷன் ஷிப், பச்சை பேச்சுக்கள், ப்ரெக்னென்சி, அபார்ஷன். வேலை. அது கொடுக்கும் டென்ஷன் என ராதிகா கன்னா, டிங்கோ இருவரும் பேசாத பேச்சுக்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் எதிலும் டபுள் மீனிங் எல்லாம் கிடையவே கிடையாது ரத்னா பாலி, நேகாவின் எழுத்தில் எல்லாமே நேரடி தான். அஷிமா சப்பரின் இயக்கம் படு தடாலடி. . நாங்களெல்லாம் கலாச்சாரம், பண்பாடு போன்ற டேஷ் டேஷை பாலோ செய்கிறவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டதேயில்லை என்று ஹிப்போக்கிரேட்டுகளாய் நடிப்பவர்கள் உட்பட பார்த்தால் உள்ளூர சிரித்து ரசிக்க கூடும். தீவிர கற்பு, கந்தாயம் பேசுகிறவர்கள் ரெண்டு பேஜ் தள்ளிப் போய் வேறொரு நல்ல சீரீஸ் பார்க்க கடவது. https://www.youtube.com/watch?v=HT5S-axdp9k

Post a Comment

1 comment:

ராஜி said...

மியூட்டில் போட்டு டபுள் மீனிங்க் புரியாதவங்களுக்கு கூட யோசிக்க வச்சுடுவாங்க.