Thottal Thodarum

Apr 19, 2017

கொத்து பரோட்டா -2.0-20

கொத்து பரோட்டா 2.0-20
இணையத்தில் மக்கள் தங்கள் உரிமைக்காக பல பெட்டிஷன்களை இணைய மக்களிடம் மின்னஞ்சல் மூலம் கையெழுத்து வேட்டை நடத்தி, போராடி வெற்றிப் பெற்றதுண்டு. நிர்பயா, ஆன்லைன் டிக்கெட்டுக்கு கொள்ளை, ஆம்னி பஸ்கள் கட்டணம், என பல விஷயங்களுக்காக கையெழுத்து போராட்டம்  நடத்திக் கொண்டிருந்தாலும், சமீபத்தில் வந்த பெட்டிஷன் மனசை பாதிக்கவே செய்தது. கிட்டத்தட்ட 90 % உடல் ஊனமுற்ற இரண்டு பெண்களின் பாஸ்போர்ட்டுக்காக 75 வயதான பெற்றோர்களின் பெட்டிஷன். அவர்களின் பெண்களை வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் பொறுப்பேற்க தயாராய் இருக்கிறார்கள். இப்பெண்களுக்கான பாஸ்போர்ட் பெறுவதில்தான் சிக்கல். பாஸ்போர்ட் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் நேரிடையாய் போக வேண்டும் என்பது விதி. இவர்களோ முற்றிலும் ஊனமுற்றவர்கள்.பாஸ்போர்ட் அலுவலகமோ 100 கி.மீட்டருக்கு மேல். இம்மாதிரியான ஸ்பெஷல் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற வழிவகை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை சுஷ்மா சுவராஜிடமும், சம்மந்தப்பட்ட அமைச்சகத்திலும் கோரிக்கை வைத்துள்ளனர். நிஜமாகவே இவர்களைப் போல் பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஊனமுற்றவர்களுக்காக அரசு பல வகைகளில் உதவ திட்டங்கள் தீட்டப்பட்டாலும், செயல்வடிவத்தில் பல வேலைக்காவதில்லை. அப்படியே அது செயல்படுத்தப்பட்டால், அதில் உள்ள சட்ட ஓட்டைகளை வைத்து அரசியல்வாதிகளும், மீடியேட்டர்களும் பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.  அரசு அலுவலகங்களில், பொது விநியோக இடங்களில் ஊனமுற்றவர்கள் வந்து போக வசதியாய் வழித்தடம் அமைத்திருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. எத்தனை இடங்களில் அதை செயல்படுத்தியிருக்கிறார்கள்?. ரேஷன், பேங்க், என சாதாரண மனிதன் செய்ய வேண்டிய அத்துனை வேலைகளும் உடல் ஊனமுற்றவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் அவர்களுக்காக எத்தனை விஷயங்கள் சுலபமாக்கியிருக்கிறது அரசு?. எத்தனை உதவிகள் வீடு தேடி வரும் படியாய் செயல்படுத்த விழைந்திருக்கிறது?. பாஸ்போர்ட் போன்று பல விஷயங்களை அவர்களுக்கு எளிமையாக்க வேண்டிய கடமை அரசுக்கும், அவர்களின் பிரச்சனையை அரசுக்கு தெரிவிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை உணர்ந்து சுஷ்மா சுவராஜ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வீட்டிற்கே வந்து விண்ணப்பங்களை பெற்று பாஸ்போர்ட்டையும் கொடுத்துவிட்டார். இதை அனைவருக்குமான சட்டமாய் மாற்றினால் சிறப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நரம்பு புடைக்க கத்தவில்லை
வன்முறை ஏதுமில்லை
குடித்து விட்டு கும்மாளமிடவில்லை
தவறு ஏதாவது நேர்ந்துவிட்டால் எங்கே தங்கள் குலத்துக்கே இழுக்கு வந்து போராட்டத்தை நீர்த்துவிடுமோ என்ற பயத்துடன் தன்னொழுக்கம் பயின்று, தன் உரிமை நிலைநாட்டிட போராடிய என் இளைஞர் கூட்டத்திற்கு வந்தனங்கள். இனி வரும் காலங்களில் எத்தனை லட்சம் பேரை தன் கட்சி மாநாட்டுக்கு கூட்டி கணக்கு சொன்னாலும் அது நீ கூட்டி வந்த கூட்டம். தானா சேர்ந்த கூட்டம் அது மாதிரி உனக்கு வருமா? என்ற கேள்வி அவர்களுக்குள்ளேயே எழாமல் இருக்காது. இன்றைய தலைவர்கள் எவரும் தங்களுக்கு தேவையில்லை என்று தவிர்த்த இளைஞர்களையும், மக்களையும் பார்த்து அரசியல் வாதிகள் பயந்து தான் போயிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தப் போராட்டத்தை அரசு தடுக்க வேண்டுமென நினைத்திருந்தால் முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அனுமதித்தார்கள். கொண்டாட்டமாய், ஒர் போராட்டத்தை ஆண், பெண் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாய் சென்று போராடுகிறவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு வர ஆவன செய்தார்கள். எத்தனை கூட்டமிருந்தாலும் பாதுகாப்பு இருக்கிறது என்பதை மீடியாவும் இணையமும் உறுதி செய்தது. எப்படி ஒர்  சீரிய முறையில் ஒர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே வகையில் முடிவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்திற்கு மதிப்பிருக்காது. இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் தன் சமூகத்திற்காக, கலாச்சாரத்துக்காக மக்களே ஒன்றிணைந்த போராட்டம்.  ஆவணப்படுத்த வேண்டிய போராட்டம். அதை அரசு சட்டம் இயற்ற முடிவு செய்த அன்றே ஒத்துக் கொண்டு, கலைந்திருந்துவிட்டு, ஒரு வேளை சரியாக செயல்படுத்தப் படவில்லையானால் மீண்டும் போராட  வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த முடிவை யார் எடுப்பது என்ற குழப்பம் தான், அரசியல் கட்சிகளும், வன்முறையாளர்களும், ஆளும் அரசும், போலீஸும் பயன்படுத்த அனுமதித்தது. கூட்டத்தில் மீடியாவை கவர்வதற்காக பேசியவர்கள் எல்லாம் தலைவர்களாய் போன அவலம் ஏற்பட்டது. இதையெல்லாம் மீறி மக்களிடமும், போராட்டக்காரர்களிடமும் இருந்த பிடிவாததிற்கான காரணம்? அரசியல்வாதிகள் மீதிருந்த அவநம்பிக்கை. இதை அரசியல் கட்சிகளும், அரசும் உணர வேண்டிய நேரம். இன்று கலாச்சாரத்துக்காக, தன் இனத்துக்காக போராடியவர்கள் நிச்சயம் உங்களுக்கு எதிராகவும் போராட தயாராகி விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உருவாகித்தான் இருக்கிறது. அது அவர்களுக்கும் நல்லதல்ல. இந்த வன்முறை முடிவு அதைத்தான் தெரியப்படுத்துகிறது.
@@@@@@@@@@@@@@@@@@
Escorts
பிம்புகளும், மேடம்களும் சூழ் விலைமாதர் உலகை இண்டர்நெட் சுதந்திரமாக்கியிருக்கிறது. குடும்ப கஷ்டம், வயசுக்கு வந்த தங்கச்சி, கண் தெரியாத அப்பா, உடம்பு சரியில்லாத அம்மா போன்ற செண்டிமெண்ட் கதைகளைக் காரணம் சொல்லி, இதனால் தான் விபச்சாரத்தில் வீழ்ந்தேன் என்கிற உட்டாலக்கடி கதையெல்லாம் இல்லாமல் இரண்டு ப்ரிட்டிஷ் எக்ஸ்கார்டுகள் தங்கள் வாழ்க்கையை பப்பாரப்பா என்று கடை விரித்திருக்கிற டாக்குமெண்டரி. இரண்டு பேரும் இளம் பெண்கள். இண்டர்நெட் மூலம் தங்கள் நெட்வொர்க்கை பரப்பி, விபச்சாரம் செய்து சம்பாதிக்கிறவர்கள். இத்துனை சுலபமாய் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது என்று அடிக்கடி சொல்கிறார்கள். அவர்களுடய கஸ்டமர்களைப் பற்றியும், இத்தொழிலில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும், தங்கள் பெற்றோர்கள், குடும்பத்தை பற்றியும் அளவளாவுகிறார்கள். நன்றாக சம்பாதித்த பின் குடும்பம் குட்டி என செட்டிலாக முடிவெடுத்திருப்பதைப் பற்றியும். அவர்களுடய பாய்ப்ரெண்டுகள், அவர்களுக்கு தெரிந்தே இத்தொழிலில் ஈடுபடுவதைப் பற்றியும் பேசுகிறார்கள். ஈஸியாய் பணம் சம்பாதிக்க இதை விட சிறந்த வழியில்லை என்கிறார்கள். அதில் ஒருத்தி எதிர்காலத்தில் நேரடியாய் எஸ்கார்ட் ஏஜென்ஸி ஒன்றை நான் வெப்சைட் மூலமாக உருவாக்கி தொழில் முனைவராவேன் என்கிறார். டாக்குமெண்டரி நெடுக டாப்லெஸ்சும், ஃபுல் நியூடிட்டியும் சகஜமாய் வந்து போகிறது. தங்களின் தொழில் நேர்மையைப் பற்றியும், தங்களுடய போதை பழக்கத்தைப் பற்றியும், வருகிற வாடிக்கையாளரின் பழக்க வழக்கம். அவர்களின் எதிர்பார்ப்பு. என விவரணையாய் போகிறது. என்ன தான் தங்களது தொழில், பணம் என விபச்சாரத்தை நியாயப்படும் விதமாய் இந்த பெண்களின், டாக்குமெண்டரியின் தொனியாய் தெரிந்தாலும், எதிர்காலத்தில் உங்களது குழந்தை இந்த தொழில் செய்ய அனுமதிப்பீர்களா? என்ற கேள்வி வரும் போது இரண்டு பேரிடமிருந்தும் வரும் பதில் “நோ”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஷதமானம் பவதி
கிராமத்தில் குடும்பத் தலைவர், தலைவி மட்டும். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருக்க, கூடவே இருந்து பெரியவர்களுக்கு உதவியாய், ஊருக்கு நல்லவனாய், மண்ணை மதிப்பவனாய் ஹீரோ. பொங்கலுக்கோ, அல்லது ஊர் திருவிழாவிற்கோ மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு கொண்டாட மாட்டோமா என்ற ஏக்கம். பிள்ளைகள் எல்லோரும் பிஸி. வெளிநாட்டிலிருந்து வரும் அத்தைப் பெண், முறைப் பையன் ஹீரோ. இது நம்ம வருஷம் 16 காலத்துக் கதை தான் என்றாலும் தெலுங்கில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நடிகர்கள் தங்களை பேமிலி ஆடியன்ஸ் ஆர்டிஸ்டாய் நிலை நிறுத்திக் கொள்ள இக்கதை பயன் பட்டிருக்கிறது. இந்த முறை நம்ம எங்கேயும் எப்போதும் சர்வானந்திற்கு. இதில் ஊர் பெருசான பிரகாஷ்ராஜும், ஜெயசுதாவும் பிள்ளைகளின் வரவிற்காக தவிக்கிறார்கள். முக்கியமாய் ஜெயசுதா.   தான் தன் மனைவியை டைவர்ஸ் செய்யப் போவதாய் எல்லா பிள்ளைகளுக்கும் மெயில் அனுப்புகிறார் பிரகாஷ்ராஜ். மனைவிக்கே தெரியாமல். எல்லோரும் பொங்கலுக்காக வருவது போல குடும்பமாய் பத்து நாட்களுக்கு முன்னமே வந்து பிரச்சனையை சரி செய்ய நினைக்கிறார்கள். தன் புருஷன் தன்னை டைவர்ஸ் செய்ய போகிற மேட்டர் தெரிந்ததும் ஜெயசுதா அழுத்தமாய் அவர் என்ன என்னை டைவர்ஸ் செய்யுறது நான் டைவர்ஸ் பண்றேன் என்று முறுக்கிக் கொள்ள, எப்படி சமாளிக்கிறார்கள் என்பது கதை. அனுபமா க்யூட்டாக இருக்கிறார். மிக்கி ஜே மேயரின் இசை, சர்வானந்தின் அழகான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ். சமீர் ரெட்டியின் பளீச் ஒளிப்பதிவு என ஒரு பேமிலி படத்துக்கான அத்துனை டெம்ப்ளேட்டுகளுடன் இருந்தாலும் ஏனோ நெருடவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

Post a Comment

1 comment:

thanjai gemini said...

Whr is adult corner