Thottal Thodarum

Apr 20, 2018

கந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா? -3


சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, ஏரியா வியாபாரங்கள் என எந்த விதமான வியாபாரத்துக்கு நிச்சயமில்லாத ஒர் சின்னப் பட தயாரிப்பாளர் எதை வைத்து கடன் வாங்க முடியும்?. ஆனால் இதெல்லாம் ஆகும் என்கிற நம்பிக்கையை ஏதோ ஒரு சின்னப்படம் கொடுத்த தைரியத்தில் தான் நம்ம படமும் அப்படி ஆகும் என்கிற நம்பிக்கையில் படமெடுக்க கிளம்புகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பைனான்ஸே கிடைக்காது என்கிற பட்சட்தில் எங்கிருந்து கந்து வட்டியெல்லாம். ஆனால் பெரும்பாலான சின்னப் பட தயாரிப்பாளர்கள் மாட்டிக் கொள்வது அனுபவமில்லாத இயக்குனர்கள், மற்றும் டெக்னீஷியன்களிடம் மாட்டி, ஒரு ஒன்னார்ரூவால படத்த முடிச்சிட்டா, பிஸினெஸ் பண்ணீரலாம் போன்ற அதீத பொய்களை எல்லாம் நம்பி அவருடய பெருங்கனவான திரைப்பட தயாரிப்பில் இறங்குவார். சொந்த பணத்தில்.

நண்பர் ஒருவர் சின்ன வயதில் இருந்து சினிமா ஆசை. வாழ்க்கை அவரை துரத்தியதில் ஆசையை விட சர்வைவல் தான் முக்கியம் என்று புரிந்து போராடி ஊர் மிராசுதார் லெவலுக்கு வளர்ந்து சில கோடிக்கு சொந்தக்காரர் ஆனாலும் விடாது கருப்பான சினிமா ஆசை விடவேயில்லை. என்னிடம் வந்தார். சார்.. உங்க படம் பார்த்தேன் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. எனக்கு அது போல ஒரு படம் பண்ணனும். என ஒர் பெரும் தொகைக்கான செக்கை என் முன் வைத்தார்.  மொத்தம் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்? ஏன் என்றால் என் படத்திற்கான பட்ஜெட் மட்டுமே சுமார் ஒன்னரை கோடி வரும் என்றேன்.  அதை ரெடி பண்ணிரலாம் என்றார். ஒரு கணம் அவரைப் பார்த்தேன். கண்கள் பூராவும் பளபளவென சந்தோஷமாய் என்னிடம் செக்கை கொடுக்க தயாராக இருந்தார். 

சார்.. நான் சொல்றேனு தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒன்னரை கோடி ரூபாய்க்கு படம் பண்ணா. பெரிய வியாபாரமெல்லாம் நிச்சயமில்லை. எல்லா வியாபார்த்தையும் நாமே விளம்பரப்படுத்தி வெளியிட்டாத்தான் வர வாய்ப்பு இருக்கு. அப்படின்னா அதுக்கு குறைந்தபட்சம் எழுபதிலிருந்து என்பது லட்சமாவது தேவை. ஸோ.. மொத்தமா ரெண்டரை கோடியில்லாமல் படம் பண்ண முடியாது. என்றேன். அவர் கண்களில் பளபளப்பு லேசாய் குறைந்தார்ப் போல தெரிந்தாலும், அதெல்லாம் பார்த்து பண்ணிரலாம்ங்க. என்றார். இந்த செக்கை வாங்கிக்கங்க.. என்று கையில் வைத்து அழுத்திவிட்டு போனார். ஊருக்கு போன மாத்திரத்தில் அவருடய குலதெய்வக் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அங்கே போன போதுதான் தெரிய வந்தது அவர் ஏற்கனவே யாரையோ நம்பி கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய் இழந்திருப்பதும், அதற்காக நிலத்தை அடகு வைத்து வாங்கிய கடனை இப்போதுதான் அடைத்து மீட்டிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் மீண்டும் படம் ஆரம்பிக்கவே முடிவெடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. நிச்சயம் படத்தின் பப்ளிசிட்டிக்காக வெளியிடுவதற்காகவும் அவரிடம் ப்ணம் இல்லை. என்பது தெளிவாகியது. அப்படி அதற்காக பணம் தேட முயன்றால் மீண்டும் பெரும் கடனில் மூழ்க அதிக வாய்ப்பு என்பது அவரின் மனைவியின் பேச்சில் தெரிந்தது. பூஜை முடிந்தது. கிளம்பும் போது சென்னைக்கு வாங்க கொஞ்சம் பேசணும் என்றேன்.

வந்தார். “சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நாம ரஜினி, கமலை வச்சி படம் பண்ணலை நிச்சயம் ஒரு நாற்பது சதவிகிதமாவது கையில் காசு வரும்னு. நிறைய ரிஸ்க் நிறைஞ்ச தொழில். உங்க ஊருக்கு வந்த போதுதான் தெரிஞ்சது உங்க நிலைமை.. இந்த நிலைமையில நீங்க ப்ரோடியூஸ் பண்றது எல்லாம் ரொம்பவும் ரிஸ்க். கொஞ்சம் அங்க இங்க போனாலும் மொத்தமா எல்லோருக்கும் கஷ்டம். இன்னும் கொஞ்ச வருசம் காத்திருப்போம். நீங்களும் உங்க கடனையெல்லாம் அடைச்சிட்டு கொஞம் நாள் நிம்மதியா இருங்க.. வியாபாரத்த பாருங்க.. சினிமா எங்கையும் போகாது. நானும் எங்கயும் போக மாட்டேன். எல்லாம் போக ஒரு படம் பண்ணுற அளவுக்கு உங்க கிட்ட எக்ஸ்ட்ராவா பணம் ரெடியாகவரைக்கும் காத்திருப்பதுதான் ஒரே வழி. வேற யாரும் இதை இப்படி உங்க கிட்ட சொல்லிட்டிருக்க மாட்டாங்க. எனக்கு மனசாட்சி இருக்கு. எனக்கு பணத்தோட ப்ரோடியூசர் வரலாம் வராம போகலாம். ஆனா என் மனசரிஞ்சு உங்கள இக்கட்டுல மாட்டி விடுறது நல்லதுக்கு இல்லை. என்று சொல்லி அவரின் செக்கை ரிட்டன் செய்தேன். கொஞ்ச நேரம் அவர் கவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.


“நீ சொல்றது புரியுது தம்பி.. என்ன ஒரு மூணு வருஷம் வேல மட்டும் பார்த்தேன்னா.. நிச்சயம் திரும்ப எழுந்து வந்துருவேன். கையில காசு கொடுத்து அதை நீ திரும்ப கொடுக்கும் போதே புரியுது இதுல இருக்குற ரிஸ்க் என்னான்னு. ஆனா நான் நிச்சயம் படம் பண்ணுவேன். நீதான் அப்ப எனக்கு பண்ணித்தரணும் எவ்வளவு பெரிய ஆளானாலும் என்று சொல்லிவிட்டு.. பாக்கெட்டில் கைவிட்டு சில அயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் வைத்து இதை அட்வான்ஸா வச்சிக்கங்க.. என்று கிளம்பினார்.  அவர் இன்னமும் என்னிடம் தொடர்பில் இருக்கிறார். ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போதும் அடுத்த வருஷம் ரெடியா இருங்க வந்திடறேன் என்று தான் முடிப்பார்.. அவர் எடுக்கிறாரோ இல்லையொ.. ஒரு நல்ல மனிதனை கடன் புதைகுழியிலிருந்து காப்பாற்றிய சந்தோசத்துடன் வைப்பேன்.

Post a Comment

1 comment:

ஆதி said...

நன்றீ,நல்லவன் வாழ நாடும் வாழும்...