Thottal Thodarum

Jul 16, 2018

கொத்து பரோட்டா 2.0-60

கொத்து பரோட்டா 2.0-60
இந்த தமிழக அரசு கேளிக்கை வரியால் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாய் வரை விலையை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லியும் கூட, அனைத்து மல்ட்டிப்ளெக்ஸுகளும் வேணாம் எங்களுக்கு 120 ரூபாய் போது என்றிருக்கிறார்கள். பி.வி.ஆரும், ஐநாக்ஸும், இரட்டை வரி விதிப்புக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கள் திரையரங்குகளை மூடி, எதிர்ப்பு தெரிவித்திருந்த நேரத்தில், மெர்சல் ரீலீசின் போது சத்யமும், ஏஜிஎஸ்ஸும், அவர்களது திரையரங்குகளின் கடைசி நேரம் வரை மெர்சல் புக்கிங் ஆரம்பிக்காமலேயே இருந்தார்கள். காரணம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான 150-120 ரூபாய் பிரச்சனைதான். 150 ரூபாய் டிக்கெட் விலைக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் சேர்த்து 204 ரூபாய் வருகிறது. அத்துடன் ஆன்லைன் டிக்கெட் விலையும் சேர்த்தால் 240 வந்துவிடும். முதல் மூன்று நாட்களுக்கு பெரிய நடிகர்கள் படத்திற்கு வேண்டுமானால் ஆட்கள் வருவார்கள். ஆனால் அதன் பின்பு எங்களது அரங்குகளுக்கு புட்பால் குறைந்துவிடும். அப்படி குறைந்தால் எங்களது திரையரங்கின் புட் அண்ட் பிவரேஜ் பிஸினெஸ் முழுவதுமாய் பாதிக்கப்படும். 200 ரூபாய்க்கு மேல் செலவு செய்து திரையரங்குக்கு வருகிறவன் நிச்சயம் தன் செலவை குறைக்க அவன் உண்ணும் உணவில் தான் முதலில் கை வைப்பான். இப்படி நாங்கள் குறைந்த விலை வைப்பதினால் எங்களது திரையரங்குக்கு என வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் என்றார்கள்.

இதற்கு முன்பு வரி விலக்கு பெற்ற தமிழ் படங்கள் என்றால் 120 ருபாயில் அறுபது ரூபாய் விநியோகஸ்தருக்க் கொடுப்போம் வரி உள்ள படமென்றால் வரி போக கிட்டத்தட்ட 45 வரை ஷேர் வரும்.  இப்போது வரி என்பது அடிப்படை விலைக்கு மேல் என்றாகிவிட்டதால் அறுபது ரூபாய் ஷேருக்கு ஓகே என்றால் படம் போடுகிறோம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விநியோகஸ்தரும் ஒத்துக் கொண்டார்கள். பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வாரம் திறந்த பிவிஆர், ஐநாக்ஸும் இதையே கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். ப்ளெக்ஸி ரேட்டை வைக்க அனுமதி கொடுங்கள் என்று கூவியவர்களின் முதன்மையானவர்கள் மல்ட்டிப்ளெக்ஸ் காரர்கள் தான். அவர்களுக்குத்தான் இந்த இரட்டை வரி பெரிய அடி. பெரும்பாலும் மற்ற மொழி திரைப்படங்களை வைத்தே கல்லா கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு புட்பால் குறைந்தால் பெரிய அடி விழுந்தே தீரும். இவர்களைப் பார்த்து பார்க்கிங் சார்ஜை ஏற்றியவர்கள் தற்போது விலையையும் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற பிரபல மல்ட்டிப்ளெஸுகளை இதை தொடரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
சமீபத்தில் வெளியான ஹிட் திரைப்படமான் சீக்ரட் சூப்பர் ஸ்டார், மற்றும் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கு கூட்டமே இல்லை என்பது விலையுர்வும், வரிகளும் மக்களை தற்சமயம் தியேட்டர் பக்கமிருந்து சற்று தள்ளியே நிற்க வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீக்ரட் ஸூப்பர் ஸ்டார்
ஃபீல் குட் வகையரா திரைப்படங்களை எடுப்பதில் ஹாலிவுட்டுக்கு இணையாய் வளர்ந்துவிட்டது ஹிந்தி திரையுலகம். இன்சியா 15 வயது மிடில்க்ளாஸ் முஸ்லிம் பெண். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரி. ஆனால் டிபிக்கல் முஸ்லிம் ஆணாதிக்க, அடிப்படைவாத அப்பாவின் வன்முறை ஆதிக்கத்தால் தன் குரலுக்கான அங்கீகாரத்தை தேட முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளது அம்மா. இன்சியாவின் கனவை, தன் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வன்புணர்வு வாழ்வுக்கிடையே மலர வைக்கிறவள். பெண்ணின் பாடல் ஆசைக்காக தன் நகையை விற்று லேப்டாப் வாங்கிக் கொடுத்து அவள் சீக்ரட் சூப்பர்ஸ்டாராய் வலம் வரும் போது பெரும் சந்தோஷமாகட்டும், நகை விற்றதால் கணவனிடம் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் அவதிப்பட்டு அடிவாங்குமிடமாகட்டும், க்ளைமேக்ஸில் தீவிரமான முடிவெடுத்து கிளம்புமிடமாகட்டும் மெஹரின் நடிப்பு ஆசம்.

இன்சியாவாக சாய்ரா. 15 வயது பெண் குழந்தையின் பரபரப்பு. அப்பாவின் மேல் உள்ள வெறுப்பை காட்டுமிடத்தில் முகத்தில் தெரியும் கோபம். தன் பாடலை உலகமே கேட்க வேண்டுமென்ற பேராவல். நிஜத்தை உணர்ந்து எல்லாவற்றையும் இழக்க முடிவு செய்யும் போதான  அழுத்தம், பாடும் போது வெளிப்படும் உடல் மொழி. க்ளாஸ் மேட் சித்தனுடனான காஃப் லவ். என களேபரமான நடிப்பு.
அமீர்கான் வழக்கம் போல இதில் ஒர் காமியோ செய்திருக்கிறார். சற்றே கார்டூனிஷாக இருந்தாலும் சின்னச் சின்ன வசன மாடுலேஷன்களிலும், உடல் மொழியிலும் மனுஷன் பின்னி பெடலுக்கிறார்.

படத்தில் வரும் அமித் திரிவேதியின் பாடல்கள் அட்டகாச ஹிட் ரகமில்லையென்றாலும், நல்ல பாடல்கள். என்ன தான் டெம்ப்ளேட்டாய் ஸ்ட்ரிக்ட் அப்பா என்றாலும் கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்கு காட்டியிருப்பதும், 15 வயது பெண் வதோராவிலிருந்து பாம்பேவுக்கு ஸ்கூல் கட் அடித்துவிட்டு விமானத்தில் தனியே பறப்பது போல ஒரு சில நெருடல்கள் ஆங்காங்கே முளைத்தாலும், தன் அம்மா ஒரு இடியட், என்று திட்டிய மகள் பெண் என்பதால் அவள் கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்த குடும்பத்திலிருந்து தப்பித்து, அவளை பெற்றெடுத்த பின் வந்த விஷயத்தை இன்சியா கேள்விப்படும் காட்சி, தனக்காக கவலைப்படும் ஸ்கூல் பட்டீ சிந்தனிடம் “ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்கிறாய்? உனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் கிடையாதா?’ என வித்யாசமான வசனங்கள் . எப்படியாவது இந்த பெண் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற ஆதங்கம் மனம் முழுக்க வியாபித்து, அவள் அழும் போதெல்லாம் “வேணாண்டீம்மா குழந்தை” என்று தூக்கி அணைத்து ஆறுதல் சொல்ல விழையும் மனதை நமக்குள் உருவாக்கி விடுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்டேண்டப் காமெடி என்று சொன்னவுடன் அது என்ன நின்னுட்டு காமெடி என்பவர்களும், பல பேர் பேசறதே காமெடிதான் இதுல உக்காந்துட்டு பேசினா என்னா? நின்னுட்டு பேசினா என்ன? என்பார்கள். பலருக்கு விஜய் டிவியில் வரும் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் பேசுகிறவர்கள் நியாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. ஆங்கிலத்தில் இந்திய அளவில் வீர்தாஸ், கபில் ஷர்மா, வருண் தாகூர், நீத்தா பால்டா எனும் பெண் என பலர் பிரபலம். உலக அளவில் ராபி வில்லியம், எட்டி மர்பி போன்றோர் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பேர் இருந்தாலும் தமிழ் நாட்டில் தமிழில் ஸ்டாண்டப் காமெடி என்றால் ரெக்கார்டட் கைத்தட்டல், சிரிப்புக்கிடையே ஜோக்கு தோரணங்களை கொடுப்பவர்கள் தான். ஆனால் நிஜத்தில் முன்னாள் சாக்லெட் பாய், பாரின் மாப்பிள்ளை என அன்புடன் அழைக்கப்படும், சுச்சீ லீக்ஸ் சுச்சியின் கணவர் கார்த்திக் குமார் மிகப் பிரபலம். இவர் பிரபலம்னு சொல்வதற்கு எதுக்குடா சுச்சி எல்லாம் என மைண்ட் வாய்ஸ் ஓடுவது  எனக்கு கேட்கிறது. அவரது நிறுவனமான ஈவாம்ஸ் மூலமாய் நிறைய பேர் தங்கிலீஷ் ஸ்டாண்டப் காமெடியன்களாய் வெற்றிகரமாய் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாய் அரவிந்த் எஸ்.ஏ, அலெக்ஸாண்டர் போன்றோர்.
நடுநடுவே ரெண்டொரு வரிகள் தமிழில், மச்சா, ஓத்தா.. போன்ற சிறப்பு வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். இவர்களது ஷோக்கள் பார், பப், காபி ஷாப் அல்லது ஏதாவது கார்பரேட் லாஞ்ச் ஷோவுக்கிடையே நடப்பதால்,  அதற்கு வருகிற கூட்டம்  பெரும்பாலும் ஹையர் மிடில் க்ளாஸ் வகையராவாகவும், பல மாநிலத்தவர்களாகவும் இருப்பதால் இவர்களின் நிகழ்ச்சி தங்கிலீஷாகவே இருப்பது ஸ்டாண்டப் காமெடியர்களின் பலம்.  

மிக இயல்பாய், ஜோக்கு தோரணங்களாய் இல்லாமல், சமகால அரசியல் சமூக விஷயங்களை தங்களது இயல்பான நகைச்சுவை உணர்வைக் கொண்டு சர்காஸமாய் பேசுவது தான் ஸ்டாண்டப் காமெடி. கிட்டத்தட்ட.. அந்தக்கால எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போல என்று கூட சொல்லலாம். ஆங்கில ஸ்டாண்டப் காமெடியன்கள் சமீப சினிமா, அரசியல், சமூகத்தில் நடக்கும் அவலங்கள், என எல்லாவற்றையும் கலாய்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சென்னையை அடிப்படையாய் கொண்ட காமெடியர்கள் பெரும்பாலும் லோக்கல் பாலிடிக்ஸ் பேசுவதில்லை. குறிப்பாய் பிரபலங்களை கலாய்த்தல் என்பது மிகப் பெரிய ஸ்டேட் துரோகமாய் கருதும் ஊர் இது. நகைச்சுவைக்கு பேர் போனவர்கள் இருக்கும் மாநிலமென்றாலும் சமீபகாலமாய் நகைச்சுவை உணர்வே சுத்தமாய் இல்லை என்கிற அளவில் மழுங்கிப் போய் எதற்கெடுத்தாலும் என்னை எப்படி அப்படி பேசலாம் என்று அவர்களே சொந்தத்திற்கு கலாய்த்து கொண்டு திரிகிறவரக்ளாய் உருவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே செயல் பட வேண்டியிருக்கிறது. இருந்தாலும் ஆதனால் முழுக்க முழுக்க, தமிழில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சமீபகால வரவாக ஜகன் கிருஷ்ணனின் வருகை. பல புதிய அமெச்சூர் கலைஞர்கள் என களமிறங்க ஆரம்பித்திருப்பது தமிழ் “நின்னுட்டு பேசுற நகைச்சுவை”க்கு பலம் சேர்க்கும் என்று தோன்றுகிறது..  https://www.youtube.com/watch?v=rpuhdhhoFIg&feature=youtu.be https://www.youtube.com/watch?v=A6AJifUmSt8

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

2 comments:

sarav said...

Boss

idhu enna meel pathiva ? Secret Super star pathi ellam irukku ?

சிகரம் பாரதி said...

சிறப்பு. வரிகளில் இடைவெளிவிடுவது நல்லது.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/