Thottal Thodarum

May 26, 2022

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்


சார்.. நம்ம ஆபீஸுக்கு டீ கொடுக்க ஒரு பையன் வருவான். அவன் உங்களை மீட் பண்ணணுமாம்?” என்றார் அலுவலக ஊழியர்.

என்னவாம்?”

ரெண்டு நாள் முன்னாடி வந்து இங்க சினிமா சம்பந்தமா ஏதாச்சும் பண்ணுறீங்களானு? கேட்டாரு. ஆமான்னே. அவரு ஒரு ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராம் அவராண்ட ரெண்டு மூணு கதை இருக்காம் அது பத்தி உங்களோட பேசணும்னு சொன்னாரு.. நேத்து டீ கொடுத்துட்டு கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணாரு. நீஙக் மீட்டிங்குல இருந்தீஙக்.. அதான் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வைக்கச் சொன்னாரு.. நாளைக்கு காலையில வரச் சொல்லட்டுமா?”

திறமை எங்கே வேண்டுமானாலும் இருக்கும் அதை கண்டுபிடிப்பதுதான் நல்ல கலைஞனின் கடமை என்று யாரோ சொன்னது நியாபகம் வந்தது.“சரி நாளைக்கு காலையில வரச் சொல்லுங்கஎன்றிருந்தேன்.

அடுத்த நாள் மதியமாய் வந்தான்

உங்க பேர்?”

சொன்னான்.

சொல்லுங்க தம்பிஎன்றேன்.

சார் நான் ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் எழுதுவேன். ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன். த்ரில் கதை. உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா?” என்றான். அவன் படும் அவசரத்தைப் பார்த்தால் நாளைக்கே அதை படமாக்குவீங்களா? என்று கேட்பான் போல.

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். சரி.. உங்களைப் பத்தி சொல்லுங்க? என்ன படிச்சிருக்கீங்க? யார் கிட்ட வேலைப் பார்த்தீங்க? உங்க வயசு மிஞ்சிப் போனா இருபது இருக்குமா

“8வது தான் படிச்சிருக்கேன். படிப்புக்கும் ஸ்க்ரீன் ப்ளேவுக்கும் என்ன சம்பந்தம்?”

அது சரி..” 

முத்து பாண்டினு ஒரு டைரக்டர். பெரிய படம் தான் பண்ணணும்னு முயற்சி பண்ணாரு. ஆனா ஷார்ட் பிலிம் தான் பண்ணாரு. நீயே வருவாய்னு. அதுல நான் தான் அஸிஸ்டெண்ட்

சரி.. “

முழு ஷார்ட் பிலிம் வேலை பார்த்தேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஓரளவுக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு. நாம தனியா வேலைப் பார்க்க வேண்டியதுதானு முடிவெடுத்துட்டேன்

ஒரு ஷார்ட்பிலிமுல?”

புரிஞ்சுக்குறதுக்கு ஷார்ட் பிலிமா இருந்தா என்னா? படமா இருந்தா என்ன?”

அதுவும் சரிதான்.”

அதான் நானே ஸ்க்ரீன் ப்ளே எழுத ஆரம்பிச்சிட்டேன். ஸ்க்ரீன் ப்ளே புக்கெல்லாம் படிச்சிருக்கேன்

அப்படியா? என்னா புக்கு?”

திரைக்கதை எழுதுவது எப்படி?. சுஜாதானு ஒருத்தர் எழுதுன புக்கு

அஹான். அதுல என்னா கத்துக்கிட்டே?”

திரைக்கதை எழுதுறது எப்படினு

.. திரைக்கதைன்னா என்னா? தம்பி?”

ம்ம்.. திரைக்கதைன்னா கதை. இப்படி இப்படி நடக்கப் போவுதுனு எழுதுறது

அப்படி எப்படி எழுதுவ?”

சார்.. முதல்ல சீன் நம்பர் போட்டுக்கணும். அப்புறம் பகலா இரவானு எழுதணும். அப்புறம் லொக்கேஷன்

தம்பி அது டீடெயிலு.. ஸ்க்ரீன் ப்ளேன்னா என்னா?”

அதான் சார்.. சொன்னேனே?”

சரி.. அந்த சுஜாதா புத்தகத்துல சொன்ன படத்தையெல்லாம் பார்த்திருக்கியா?”

அதான் படிச்சிட்டேன் இல்ல எதுக்கு பார்க்கணும்.டைம் வேஸ்டு இல்லை. அதான் நானே எழுதிட்டேன். கதை எடுத்துட்டு வரவா?”

நீண்ட பெருமூச்சை விட்டேன்.

ழ்தம்பி.. உன் கதையெல்லாம் படிக்க வேண்டாம். நான் ஒரு சிட்ஷுவேஷன் சொல்லுறேன். அதை திரைக்கதையா எழுதிட்டு வரியா?”

மையமாய் தலையாட்டினான்.

நீ இந்த இடத்துக்கு வந்தது. இந்த ஆபீஸைப் பத்தி விசாரிச்சது. இப்ப என்னாண்ட வந்து பேசுறது. வாய்ப்பு கேட்குறது. இதான் சீன்

சரி..” என்று பெரிதாய் தலையாட்டினான்.

இதை மூணு வர்ஷன் அதாவது மூணு விதமா திரைக்கதை எழுதிட்டு வந்தியானா..உன் கதையை படிக்க எடுத்துக்குறேன். இல்லாட்டி. அஸிஸ்டெண்ட்டா சேர்ந்து வேலை கத்துக்கஎன்றேன்

கோபி தம்பிக்கு நாலைஞ்சு பேப்பர் பேனா எல்லாம் கொடுஎன்றேன்

சார்.. இப்பவே எழுதணுமா?. வீட்டுல போய் எழுதிட்டு வர்றேனே?” என்றான்.

சின்ன சீன் தானேதம்பி இங்கயே எழுத முடியாதா?.. சரி.. எழுதிட்டு வா” 

என்று அனுப்பி வைத்தேன். இது நடந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. பையன் தினமும் டீ கொண்டு வருகிறான் என் அறைக்கு மட்டும் வருவதேயில்லை


Post a Comment

No comments: