Thottal Thodarum

May 6, 2022

OTTகளின் மவுசு குறைகிறதா?

.டி.டி மவுசு குறைகிறதா?

ஆனானப் பட்ட நெட்ப்ளிக்ஸே சப்ஸ்கிரைபர் போய்ட்டானு பப்ளிக்கா சொல்லியிருக்கான். இனிமே அவ்வளவுதான். எத்தினி .டி.டிக்கு பணம் கட்டுறது?. ஒருத்தன் ஆயிரம்ங்கிறான். இன்னொருத்தான் முன்னூறுங்கிறான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா வருஷத்துக்கு பத்தாயிரம் வந்திரும் போல. இதுல பே பர் வியூனு பார்க்குற படத்துக்கு மட்டுமே கட்டுனு நாலு பேரு இருக்கான். எல்லாம் வந்த புதுசுல ஜோராத்தான் போவும். குப்பை படத்தைத்தான் .டி.டில கொடுப்பாங்கன்னா எவன் அதுக்கு பணம் கட்டுவான்? என்று ஆளாளுக்கு ஓடிடியின் வியாபாரம் குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும் ஸ்டேடஸும், கருத்துக்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் நெட்ப்ளிக்ஸின் சந்தாதாரர்கள் குறைந்தார்கள் என்கிற அறிவிப்புத்தான். இப்படி கருத்து சொல்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் எல்லா .டி.டிக்கும் பணம் கட்டியவர்கள் இல்லை. நண்பர்களின் ஐடியையோ அல்லது பைரஸி டவுன்லோட்டிலோ தான் படம் பார்க்கிறார்கள்உண்மையிலேயே .டி.டியின் மவுசு போய் விட்டதா? என்று கேட்டீர்களானால் இல்லை என்றுதான் சொல்வேன். எப்படி நீங்கள் ஆணித்தரமாக சொல்வீர்கள் என்று கேட்பீர்களானால் நாங்களும் மூவிவுட் எனும் ஒரு .டி.டி தளத்தை நடத்துகிறவர்கள் என்கிற உரிமையில் தான் பேசுகிறேன்.


அப்படி ஒரு .டி.டி. இருக்கிறதா என்ன? என்று கேட்கிறவர்கள் மத்தியில் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருட சந்தா கட்டி எங்கள் கண்டெண்டுகளை பார்த்து வருகிறார்கள். மாதம் குறைந்த பட்சம் 50-150 பேர்  புதிய சந்தாதாரர்கள் சேருகிறார்கள் என்று சொன்னால் என்ன சொல்வீர்கள்?. நெட்ப்ளிக்ஸுக்கு குறைந்த அதே நேரத்தில் தான் எங்களுக்கான சந்தாதாரர்கள் ஏறியிருக்கிறார்கள்


சமீபத்திய சர்வேயின்படி .டி.டி மார்கெட் வருகிற ஆண்டுகளில் சுமார் 2000 கோடி வரையில் புரளக் கூடிய மார்கெட் என்கிறார்கள் வல்லுனர்கள். அப்படியிருக்க, ஏன் நெட்ப்ளிக்ஸின் வாடிக்கையாளர்கள் போனார்கள்?.  அதற்கான காரணங்களை அவர்களே சொல்லியிருந்தார்கள். குறிப்பாய் ரஷ்யாவில் அவர்களின் ஒளிபரப்பை ரத்து செய்ததினால் சுமார் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சுமார் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் மீண்டும் சந்தா கட்டாமல் இருப்பதால் தான் என்றும், அது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் அவர்களது பாஸ்வேர்டுகளை மற்றவர்களூக்கு இலவசமாய் கொடுத்துவிடுவதால் புதிய சப்ஸ்கிரைபர்கள் வருவதில்லை என்பதை சொல்லியிருக்கிறார்கள்


இத்தனைக்கும் இந்தியாவில் மாதம் எட்டு நூறு வரை கட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அறுநூறாய் குறைந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் நெட்ப்ளிக்ஸ் மொபைல் வர்ஷனுக்கு மாதம் 149 கட்டினாலே போது என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த விலை குறைப்பினால் இந்திய மார்கெட்டை கவர்ந்துவிடலாம் என்று கணக்கிட்டது பெரிய அளவில் வேலைக்கு ஆகவில்லை. ஏன்?


காரணம் அவர்களின் வெளீயிடும் கண்டெண்டுகள் தான். பெரும்பாலும் நெட்ப்ளிக்ஸை பார்க்கிறவர்கள் வெளிநாட்டு சீரீஸ்கள், படங்கள், என உலக மொழிப்படங்களை விரும்பிப் பார்க்கிறவர்கள். இன்றளவில் ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் உள்ள சீரீஸ்கள் இவர்கள் அளவுக்கு வேறு யாரிடமாவது இருக்கிறதா? என்று தேடினீர்களானால் இல்லை என்றே சொல்வேன். என்னைப் போன்ற ரசிகர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால் அதே சாதாரண ரசிகனுக்கு அங்கே பெரிய அளவில் மாத பணம் கட்ட வேண்டிய அளவுக்கு கண்டெண்ட்  இல்லை என்பது உண்மை. அப்படியும் அவர்கள் மாதம் சில மலையாள படங்கள், ஹிந்தி படங்கள், தமிழ்,தெலுங்கு போன்ற படங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவைகள் எல்லாமே பெரும்பாலும் மேல்தட்டு வர்கபடங்களாகவும், அதே நேரத்தில் அப்படங்கள் மக்களை கவராமல் போய் விடுவதாலும் எதற்கு மாதம் பணம் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்ஆனால் அதே நேரத்தில் இவர்களின் இந்திய போட்டியாளர்களான ப்ரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி, ஜீ, போன்ற சேனல்கள் சரியான லோக்கல் கண்டெண்ட்டுகளை தருவதால் இவர்களுக்கு சந்தா தாரர்கள் ஏறிக் கொண்டுதானிருக்கிறார்கள்


அது மட்டுமில்லாமல் மற்ற .டி.டி நிறுவனங்கள் எல்லோரும் வருட சந்தா வாங்கிக் கொண்டிருக்க, நெட்ப்ளிக்ஸ் மற்றும் முபி போன்றவர்கள் மட்டுமே மாத சந்தாவை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வருடத்திற்கு ஆயிரத்தி ஐநூறு என்று கணக்கிட்டு வாங்கிக் கொண்டிருக்கும் ஹாட்ஸ்டார், அமேசானின் விலையை மாதசந்தாவாக்கினால் கிட்டத்தட்ட நெட்ப்ளிக்ஸின் மாத சந்தாவுக்கு ஈடாகத்தான் இருக்கும். ஆனால் அது தெரியாத வண்ணம் மொத்தமாய் வாங்குவதாலும், சமயங்களில் ஏதாவது ஆஃபர்கள் கொடுத்து சந்தாதாரர்களை கவர்ந்து விடுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் நெட்ப்ளிக்ஸ் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர். ஆஃபரெல்லாம் கிடையாதுஅத்தோடு நெட்ப்ளிக்ஸின் போட்டியாளரான அமேசானில் சுமார் பத்து பேர் வரை ஒரே சமயத்தில் பார்க்க அனுமதிக்கிறது. நெட்ப்ளிக்ஸ் இதிலும் நோ காம்ப்ரமைஸ்.


புதிய படங்களை வாங்குவதற்கான போட்டியில் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயம். அது மட்டுமில்லாமல் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டிய நிலை என நிறைய முதலீடுகளை வேறு செய்ய வேண்டியிருக்க, இவர்கள் வாங்கும் சந்தா நிச்சயம்  கட்டுப்படியாகுமா? என்று கேட்டீர்களானால் நிச்சயம்  ஆகும். எப்படி கட்டுப்படி ஆகும்?


இந்திய அளவில் சுமார் 150க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய மற்றும் மிகச் சிறிய ஓடிடிகள் இருக்கிறது. அதில் நம்பர் ஒன் என்றால் அது டிஸ்னி ஹாட்ஸ்டார் தான். காரணம் கிரிக்கெட்டை அவர்கள் அதில் ஒளிபரப்ப ஆரம்பித்ததுதான். வருடத்துக்கு 200 ரூபாய்க்கு சந்தாதாரர்களை வளைக்க ஆரம்பித்தவர்கள் இன்று நான்கைந்து வகைகளில் சந்தாக்களை பிரித்து வைத்து, யாருக்கு என்ன தேவையோ அதை வைத்து சந்தாதாரர்களை தக்க வைத்துக் கொள்கிறார்கள். இத்தனை ரூபாய் பணம் கட்டினால் இத்தனை பேர் தான் ஒரே நேரத்தில் படம் பார்க்க முடியும் மேலும் பார்க்க வேண்டுமென்றால் அதிக அளவு பணம் கட்ட வேண்டும் என்கிறார்கள். ஆயிரத்தி சொச்சம் பணம் கட்டினாலும் விளம்பரம் வேறு வரும். அப்படி விளம்பரம் வராமல் பார்க்க வேண்டுமென்றால் வருடத்துக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் வரை கட்ட வேண்டும். நிறைய பேர் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் பிரபல நடிகர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை நேரிடையாய் வெளீயிடுகிறார்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ பெரிய நடிகர்கள் நடித்த படங்களை எல்லோரும் பார்க்க ஆசைப் படுவார்கள். இன்று பணம் கட்டாமல் பார்த்தவர்கள் கூட மெல்ல எத்தனை நாள் மற்றவகளிடம் பாஸ்வேர்ட் வாங்கி பார்ப்பது என்று யோசித்து குறைந்த பட்ச பணம் கட்டியாவது பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இது தான் முதல் படி. இப்படி பணம் கட்டியவனை அடுத்தடுத்த மாதம் பிரபல, அல்லது நலல் கண்டெண்டுகளை கொடுத்து தக்க வைத்துக் கொள்கிறார்கள்


அதையேத்தான் அமேசான் ப்ரைம். சோனி, ஜீ போன்றவர்கள் செய்கிறார்கள். லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருட சந்தாவிற்குள் வரும் போதுதான் அவர்களின் லாபமேஆனால் இன்றைய போட்டி நிலையில் சந்தாவை மட்டுமே நம்பினால் வேலைக்காகாது என்று பெரிய ப்ளேயர்கள் எல்லாம் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஓடிடிக்கள், தொலைக்காட்சியிலிருந்து .டி.டிக்கு வந்தவர்கள். அவர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை விற்று பழகியவர்கள். அதே நேரத்தில் .டி.டிக்களின் வரவினால் லீனியர் டிவி எனப்படும் தற்போது ஒளிபரப்பப்படும் நேரத்தில் பார்க்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே போகிறது. கிரிக்கெட் மேட்ச், மற்றும் நியூஸைத் தவிர யாரும் நிகழ்ச்சி வரும் போது பார்ப்பதில்லை. அவரவர்கள் வசதிக்கு ஏற்ப கிடைத்த நேரத்தில் பார்த்துக் கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு படத்தை ஒரே நேரத்தில் பார்ப்பவர்களைப் போல, ஒரு சீரீஸின் எட்டு எபிசோடையும் ராத்திரியோடு ராத்திரியாய் பார்ப்பது போல, இல்லாமல் பத்து பத்து நிமிஷமாய் பார்க்க பழகி, டெலிவிஷனில் அவர்களின் விளம்பரங்களோடு பார்க்க விழையாமல், விளம்பரமில்லாமல் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பார்வையாளர்கள் முடிவெடுக்க, நீ என் ஓடிடிக்கு பணம் கட்டினால் டிவியில் காட்டுவதற்கு ஐந்து மணி நேரம் முன்பே ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல ஆபர்களை எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொலைக்காட்சி மற்றும் .டிடி. நடத்துபவர்கள்


விளம்பரங்கள் மூலமாகவே பணம் சம்பாரித்துக் கொண்டிருந்தவர்களிடம் இனி டி.ஆர்.பி இல்லாத காரணத்தால் விளம்பரப்பணம் அவ்வளவு வராது எனும் போது வேறேதாவது வகையில் அந்த வருமானத்தை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அது தான் விளம்பரம் மூலம் ஓடிடியில் பணம் சம்பாரிப்பது. எப்படி கட்டணச் சேனல் என்று வைத்துக் கொண்டு விளம்பரம் போட்டு சம்பாரிப்பார்களோ அது போலவே வருட சந்தா வாங்கிக் கொண்டு கூடவே விளம்பரமும் வரும் வேண்டாமென்றால் இன்னும் பணம் கட்டு என்று கேட்கிறார்கள். டிஸ்னி, எம்.எக்ஸ் ப்ளேயர் போன்றோர்கள் ஏற்கனவே விளம்பரங்கள் வெளியிட்டு கொண்டிருக்கும் வேளையில் அமேசான், போன்றோரும் விளம்பரம் மூலம் பணம் ஈட்ட முடிவெடுத்திருப்பதாய் தகவல். சமயங்களில் அமேசானில் வெளியிடப்படும் நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை அவ்வப்போது கொடுக்க ஆரம்பித்து வாடிக்கையாளர்களை பழக்க முடிவு செய்திருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால் விளம்பரம் மூலம் மட்டுமே .டி.டி நடத்திய எம்.எக்ஸ் ப்ளேயர் தற்போது விளம்பரம் வேண்டாமா? மாதம் இரு நூறு ரூபாய் கட்டுங்கள் என்று களமிறங்கியிருக்கிறது. காரணம் விளம்பரத் தொல்லையால் வாடிக்கையாளர்கள் அவர்களது நிகழ்ச்சிகளை பார்ப்பது குறைகிறது என்று அவர்களின் டேட்டா பேஸ் மூலம் கிடைத்த தகவல் தான் காரணம். ஒரு பக்கம் சந்தா வாங்கியவர்கள் எல்லாரும் விளம்பரத்துக்கு போகலாம் என்று முடிவெடுக்க, இன்னொரு பக்கம் விளம்பரம் செய்தவர்கள் சந்தாவுக்கு வருகிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.


இத்தனை ஓடிடிக்கு எப்படி பணம் கட்டுவது என்கிற கேள்விக்கு விரைவில் பதில் கிடைத்துவிடும் ஏற்கனவே ஜியோ தன் நெட்வொர்க்கில் இணைந்தவர்களுக்கு பதினைந்துக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை இலவசமாய் தர ஆரம்பித்திருக்கிறது. அது போல மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ளாட்பார்மில் பல சேனல்களை இணைக்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களது ஏதாவது ஒரு சேவையை பெற்றால் இத்தனை ஓடிடிக்கள் இலவசம் என்று பேக்கேஜ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன் டிடிஎச் சேவை வழங்கும் டாடா ஸ்கை போன்ற நிறுவனங்கள் தங்களது செட்டாப் பாக்ஸுகளை ஆண்ட் ராய்ட் சப்போர்ட் கொடுத்து சில ஓடிடிக்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது


எப்படி டிவி சேனல்களை கேபிள் டிவி மூலமாகவும், டி.டி.எச் மூலமாகவும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கிழ் மொத்தமாய் ஒரு பணத்துக்கு கொடுக்க ஆரம்பித்தார்களோ? அது போல இனி வரும் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்கள், இண்டர்நெட் தருகிற நிறுவனங்கள் ஒரு ப்ளாட்பார்மாக மாறி அனைத்து ஓடிடிக்களையும் ஒரு சேர பேக்கேஜாய் கொடுக்கும் காலம் விரைவில் வரும். அப்போது இப்படி எல்லா ஓடிடிக்கும் தனித்தனியே பணம் கட்ட தேவையிருக்காது. அது தான் இனி வரும் காலத்தில் .டி.டியின் எதிர்காலமாய் இருக்கும். ஆனால் இனி நிச்சயம் .டி.டிதான் எதிர்காலம். லீனியர் டிவியும் கேபிள் டிவியும், டி.டி.எச்சும் வழிவிட்டு விலக வேண்டிய காலம் கிட்டத்தட்ட வந்தேவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இனி வரும் காலம் ஸ்ட்ரீமிங் காலம் தான்.


கேபிள் சங்கர்

Post a Comment

No comments: