Box Office உண்மைகள்
தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல்.
என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் வசூல் ஷேர் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னுடய சினிமா வியாபாரம் 3.0 வை வாங்கிப் படியுங்கள் வேறு வழியில்லை.
ஸோ அந்த படம் போட்ட காசை விட இன்னொரு மடங்கு லாபம். நிஜ ப்ளாக் பஸ்டர்
சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 80+ கோடி. அதன் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் 20 கோடிக்கு போனது. வெளிநாட்டு உரிமை மற்றும் ஹிந்தி மற்ற மொழி உரிமை எல்லாம் சுமார் 15 கோடிக்கு போனது. தமிழ் நாட்டின திரையரங்கு உரிமை 23 கோடி அட்வான்ஸ். இது வரை தயாரிப்பாளருக்கு அந்த பெரிய நடிகரின் படத்தின் மூலமாய் வருமானமே 58 கோடி தான். படம் விமர்சன ரீதியாய் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலாய் தமிழ்நாட்டில் 42 கோடி தான் கிராஸ். வெறும் 15 கோடி தான் விநியோகஸ்தருக்கு. அவர் கொடுத்த 23 கோடிக்கு 7 கோடி ரிட்டர்ன் கொடுத்தாக வேண்டும். ஆனால் படம் வெற்றி வெற்றி உலகம் முழுக்க 100 கோடி வசூல் என்று சொல்லிக் கொள்ளலாம். இதுதான் நிஜம்.
இதே இன்னொரு படம். சுமார் 100 கோடியில் தயாரிக்கப்படுகிறது. 80கோடி டிஜிட்டலிலும், மற்ற வியாபாரங்கள் எல்லாம் சேர்த்து 65 கோடிக்கு விற்றாகிவிட்டது. அந்த தயாரிப்பாளரைப் பொறுத்தவரை படம் வெற்றி. சுமார் 45 கோடி லாபம். ஆனால் அப்படம் திரையரங்கில் வசூல் செய்யவில்லை மக்களால் நிராகரிக்கப்பட்டது என்றால் வாங்கிய அத்தனை பேருக்கும் போட்ட காசு வராது. ஒரு பக்கம் தயாரிப்பாளர் வெற்றி. வியாபாரம் செய்தவர்களுக்கு நஷ்டம். ஆப்பரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்.
கேபிள் சங்கர்
Comments