Feb 8, 2013

3 Kanya

சில படங்களைப் பார்த்த மாத்திரத்தில் எரிச்சலைக் கிளப்பி விடும். சிலது ஓகே. இன்னும் சில படங்கள் நல்ல எண்டர்டெயினராக அமைந்துவிடும். ஆனால் வெகு சில படங்களே படம் பார்த்து நாட்களாகியும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கும். அபர்ணா, தாமினி, நான்சி என்கிற மூன்று பெண்களை சுற்றி நடக்கும் கதை. பெண்களைப் பற்றிய கதை என்றதும் அழுவாச்சியாய் இருக்குமோ என்று யோசித்தீர்கள் என்றால் உங்கள் கணிப்பை மாற்றி அமைத்துவிடும் இப்படம். இது ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படம்.


அபர்ணா ஒரு பத்திரிக்கைக்காரி. பிரபல டிவியில் நீயூஸ் ஹெட்டாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்து கொண்டிருப்பவள். தாமினி ஒர் ஐ.பி.எஸ்.ஆபீசர்.  நான்சி ஒர் கால்கேர்ள்.  தன் கணவனுக்கும் ஐ.பி.எஸ்.ஆபீஸர் தாமினிக்கு தொடர்பிருக்கிறது என்ற சந்தேகம் அபர்ணாவுக்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அபர்ணாவின் கணவனை தாமினி கைது செய்து வைத்திருக்கும் பெரிய தாதாவை விடுவிப்பதற்காக கடத்தி சென்றுவிட்டதாய் தாமினியிடம் புகார் செய்ய வருகிறாள் அபர்ணா. நான்சி தான் கற்பழிக்கப்பட்டதாய் புகார் செய்ய போலீஸ் நிலையம் வருகிறாள். விபச்சாரியான அவளை கற்பழிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கிண்டலடித்து போலீஸ்காரர்கள் கேஸெடுக்க மறுக்க, அவள் அபர்ணாவை நாடுகிறாள். இந்த மூன்று பெண்களின் கதையும் எப்படி ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து யாரும் எதிர்பாராத ஒர் திருப்பத்துடன்  முடிகிறது கதை.

படத்தின் முதல் காட்சியில் ஃபோர்க்ரவுண்டில் நகரின் முக்கிய சாலை காட்டப்பட, அதில் ஒர் பெண் காரிலிருந்து தள்ளப்படுகிறாள். அடுத்த நாள் காலையில் அவளே போலீஸ் ஸ்டேஷனில் போய் தான் கற்பழிக்கப்பட்டதாய் சொல்ல, போலீஸ் கிண்டல் செய்கிறது. காசு கொடுத்தா நீயே போய் படுக்கப் போற உன்னை எவன் ரேப் பண்ணுவான்? என்கிறார்கள். ஏன் விபசாரியாக இருந்தால் கற்பழிக்கப்படக்கூடாதா? அவளுக்கென்று மரியாதை இல்லையா? என்று போராட ஆரம்பிக்கிறாள். தன்னை கற்பழித்தவர்களின் அரசியல் பின்னணியை பற்றி டிவியில் சொல்ல, அரசியல் அரங்கமே அல்லோலகல்லோல படுகிறது.  அமைச்சரின் மகன் தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தமில்லை என்று சொல்ல, இன்னொரு பக்கம் இந்த கேஸுக்கு உதவ முடியாமல் போன ஐ.பிஎஸ்.ஆபீசர் தாமினிக்கு கிடைக்கும் நான்சியின் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து எய்ட்ஸ் இருப்பதாய் அரசியல்வாதி மகன் வைக்கும் ப்ரஸ் மீட்டில் சொல்கிறாள்.  தன் கணவனின் அகால மரணத்துக்கு பிறகு வயதான தாய், எட்டு வயது மகளோடு வாழும் நான்சி தனக்கு எய்ட்ஸ் இருப்பதாய் தெரியவந்தவுடன் அதனோடுபோராடியபடியே தன் உரிமைக்காக போராடும் நான்சி, எய்ட்ஸ் கொண்டவளோடு உடலுறவு கொண்டதினால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் மகன், மற்றும் அவனது நண்பர்களின் எமோஷனல் நிலை ஒரு புறமென்றால், தாமினியிடம் தன் கணவனை காப்பாற்றுமாறு ப்ரெஷர் கொடுக்கும் அபர்ணா. தாமினியின் வீட்டிற்கு பார்சலாய் வரும் அபர்ணாவின் கணவனின் கைவிரல், தன்னிடம் உள்ள கைதியை விடுவிக்க ஏன் அபர்ணாவின் கணவனை கடத்தி தன்னை மிரட்டாமல் அபர்ணாவை மிரட்டுகிறார்கள் என்று புரியாமல் விழிக்கும் தாமினி. தேவையேயில்லாமல்தன் பெயரை இழுத்துவிட்டிருக்கும் அபர்ணாவின் மீது வஞ்சம் கொண்டு வெளியே வந்தவுடன் அவளை தாக்க வரும் அரசியல் ரவுடி. என்று ஒர் விறுவிறு க்ளைமாக்சை நோக்கி பயணப்படுகிறது கதை. இதன் முடிவை நீங்கள் யோசிப்பது கொஞ்சம் சிரமம்தான். அதற்கான லீடை சொன்னால் அது ஸ்பாய்லராய் அமைந்துவிடும்.

மூன்று பெண்களின் கேரக்டரில் எனக்கு மிகவும் பிடித்தது நான்சியின் கேரக்டர்தான். நான்சியாக நடித்த அனன்யா சட்டர்ஜியின் நடிப்பு அவ்வளவு இயல்பு. டிவி இண்டர்வியூவில் லைவ்வில் இவருக்கு வந்த நிலை போல உங்கள் பெண்களுக்கும் வரலாம் என்று அபர்ணா சொல்ல, கால் செய்யும் ஒர் பெண் ஏன் எங்கள் பெண்ணுக்கு வர வேண்டும். இவளைப் போல நடு ராத்திரியில் சுற்றுவதில்லை, பப்பில் ஆட்டம் போடுவதில்லை குடிப்பதில்லை, என்று கத்த, அதை டிவி ரேட்டிங் ஏற்ற டிவி சேனல் பின்னணியில் செய்யும் வேலைகளை மிகச் சிறிய டயலாக்கில், ஷாட்களில் சூப்பராய் சொல்லியிருக்கிறார்கள். படம் நெடுக வசனங்கள் சாட்டையாய் நம்மை சொடுக்கி இழுக்கிறது.  தாமினியாக நடித்த உன்னட்டியின் பாடிலேங்குவேஜ் சிக். நடிக்க பெரியதாய் வாய்ப்பில்லை என்றாலும், நான்சியின் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை ப்ரஸ்மீட்டில் தெரிவித்துவிட்டு, மந்திரி மகன்கள் நிரபராதி என்றால் அவர்களின் ரிப்போர்ட் சொல்லும் என்று சொல்லிவிட்டு போகுமிடத்திலும், க்ளைமாக்சில் அவருக்கும், அபர்ணாவுக்குமிடையே  நடக்கும் போராட்டங்களில் நினைவில் நிற்கிறார்.  இன்னொரு பக்கம் கணவனின் மீதான ஆதீத அன்பு, அதே அன்பு பொசசிவ்வாக மாறி சந்தேகம் துரத்தும்  கணவனை பிய்த்தெடுக்கும் அபர்ணா. இன்னொரு பக்கம் கணவன் காணாமல் போனதும் அவனை கண்டுபிடிக்க காட்டும் துடிப்பு, க்ளைமாக்சில் தாமினியிடம் காட்டும் ஆவேசம் எல்லாம் க்ளாஸ்.

அக்னிதேவ் சட்டர்ஜீயின் கதை, இயக்கத்தில், சுதீபா மகோபாத்யாயாவின் திரைக்கதையை அற்புதமான ஷார்ப்பான வசனங்களோடு சிறப்பாக கையாண்டிருக்கிறார். கொஞ்சம் ஆங்காங்கே நான்சியின் பார்ட் வரும் போது லேசான மெலோட்ராமாவும், பாடல்களும் ஆங்காங்கே படம் போகும் போக்கை ஸ்லோவாக்கினாலும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அளித்ததற்காக பாராட்டப்பட வேண்டும். 
கேபிள் சங்கர்

2 comments:

ananthu said...

படம் எந்த தியேட்டர்ல ஓடுது ஜி ?

கேரளாக்காரன் said...

three extremes படத்தின் அப்பட்டமான காப்பி.

http://www.imdb.com/title/tt0420251/?ref_=tt_rec_tti