முதன் முதலாய் இவரை நான் பீச் பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன். கையில் ஒர் நோட்டுப் புத்தகம். சற்றே பெரிய உடல், கனீரெண்ற குரலில் ”நான் டோண்டு ராகவன்.. நீங்க தான் கேபிள் சங்கரா?.. ஆமா அதென்ன கேபிள் சங்கர்னு பேர் வச்சிருக்கேள்?” என்ற டிபிக்கலான பிராமண ஆக்செண்டோடு. நான் பெயர் காரணத்தை சொன்னதும் ‘ ஓ அதுவும் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மேல் ஒர் கவனிப்பை ஏற்படுத்துகிறது. என் பதிவெல்லாம் படிச்சிருக்கேளா?” என்றவரிடம் என்னால் சட்டென பொய் சொல்ல முடியவில்லை. “இல்லை சார்.. இனிமேதான்.. ” என்று இழுத்தேன்.
“பரவாயில்லை ஒண்ணும் தப்பில்லை.. மொள்ள படிச்சிட்டு சொல்லுங்கோ” என்றவர் அடுத்த பதிவரிடம் தன்னை அறிமுகப்படுத்த கிளம்பிவிட்டார். அவருக்கு வயது அறுபது இருக்கும் ஆனால் அவரிடம் இருந்த எனர்ஜி என்னை ஆக்கிரமித்தது. பதிவர் சந்திப்பில் வந்தவர்களின் பெயர்களை கேட்டெழுதி வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அவரது பதிவில் யார் யார் எல்லாம் வந்திருந்தார்கள் என்று லிஸ்ட் போடுவார். சமயங்களில் இவரது லிஸ்டைப் பார்த்துத்தான் ஓ இவர்களும் வந்திருந்தார்களா?. இவரு தான் அவரா? என்றெல்லாம் கண்டுபிடித்த காலங்கள் உண்டு. தீவிர விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். இஸ்ரேல், ஈரான், ஈராக், அமெரிக்கா என்று தீவிரமாய் பேசுகிறவர். ஜாதியை முன்னிறுத்தி பேசுவார். ஆனால் அதற்காக மற்ற ஜாதியினரை தாழ்த்திச் சொல்லி, பேசிப் பார்த்ததில்லை.
எதிலும் பிடிவாதமாய் தன் கருத்தை எடுத்துச் சொல்வதில் இவருக்கு இணை இவரே.. கடைசி வரை மாற்றிக் கொள்ளவே மாட்டார். தன் பக்க வாதங்களை ஆணித்தரமாக வைத்துக் கொண்டேயிருப்பார். இவரது கேள்வி பதில் பகுதிகளில் சில சமயம் படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்புகளில் புலமை பெற்றவர். அதை தொழிலாய் செய்து கொண்டிருந்தவர். ஜெயாடிவியில் வரும் நான் பிராமணன் பகுதிகளை பற்றி தொடர்ந்து எழுதியவர். மற்றவர்களிடம் லோக்கல், உலக அரசியல் பற்றிப் பேசினாலும், என்னிடம் பெரும்பாலும் சினிமா பற்றி மட்டுமே பேசுவார். திடீரென போன் செய்து பேசலாமா? என்று கேட்டுவிட்டு, பழைய இந்திப்படத்தின் சாயலில் வந்த ஒர் தமிழ் திரைப்படத்தின் காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு, தமிழ் படத்தின் பெயர் என்ன? என்றெல்லாம் கேட்பார். 1968 எல்லாம் மிக சமீபத்தில் என்றெழுதி புகழ்பெற்றவர். பழைய பதிவர்கள் எல்லாம் “அந்தக்காலத்துல என்று பேச ஆரம்பித்தால் டோண்டுவைப் பற்றியும், போலி டோண்டுவைப் பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
வெகு சமீபத்தில் துளசி கோபால் இல்ல விழாவில் ஒருவர் வந்து “எப்படி இருக்கேள் கேபிள்?’ என்றவரை பார்த்த மாத்திரத்தில் சட்டென புரியாமல் “ யார் நீங்க?” என்று கேட்டுவிட்டேன். “டோண்டு என்றார். அதிர்ச்சியாய் இருந்தது. துரும்பாய் இளைத்திருந்தார். “என்னா சார் ஆச்சு?” “கால்ல கேன்சர்” என்றார். அதன் துன்பங்களைப் பற்றி நன்றாக தெரிந்ததால் மேலும் கேட்டு கஷ்டப்படுத்தாமல்.” இப்போ சரியாடுத்து இல்லையா.. குட்.. உடம்ப பாத்துக்கோங்க சார்..” என்று சொல்லிவிட்டு, அவரை இப்படி பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அங்கிருந்து வெளியேறினேன். பிராமணர்களை தூக்கி வைத்து பேசுகிறார். ஜாதியம் பேசுவார் என்றெல்லாம் சொல்வார்கள். எல்லாரும் அவரவர் ஜாதியை தனியே தூக்கி வச்சி பேசிண்டு, வெளியே பேசும் போது மட்டும் ஜாதி இல்லை, மதமில்லைன்னுட்டு நடிக்கிறா.. அவாளை விட நான் எவ்வளவோ தேவலை” என்றார். அவர் சொன்னது என்னவோ சரி தான் என்று பட்டது. நேற்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பதிவர் ராஜா மூலமாய்த்தான் தெரிந்தது. வெளியே ஒர் முக்கிய வேலையில் இருந்ததால் செல்லமுடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
கேபிள் சங்கர்
Comments
உண்மை, இவர் ஜாதிகள் குழு அடையாளம் தலித் உள்ளிட்ட மற்ற ஜாதிகளும் போராடி சமநிலையை அடையவேண்டும், எதிர்ப்பவகளை போடா ஜாட்டான் என்றும் தூக்கி எறிய சொன்னவர், பல முற்போக்கு போலிகள் உலவும் இடத்தில் உலவிய நேர்மையாளர்
அஞ்சலிகள்.
ஆனால்.. :(
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
இந்தப் பாசாங்கு இல்லாத்து தான் அவரின் தனி ஸ்பெசாலிட்டி.
மேலோட்டாம பார்த்தால் சாதி பற்றாளர் என்பது போல் தோற்றம் கிட்டும் ஆனால் அவர் அப்படி அல்லர் என்பதை என்னால் உணரமுடிந்தது.
அவர் பதிவு முழுக்க அவரின் அனுபவம் விரவிக்கிடக்கிறது.
நெஞ்சில் திடமும் நேர்மைத் திறமும் கடைசி வரை அவருக்கிருந்தது.
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
உண்மை!
சரவெடி போன்ற எழுத்துப் போராளி டோண்டு அண்ணா மறைவு, இழப்பே!
அவர் ஆத்மா சாந்தியுறட்டும்.