Thottal Thodarum

Feb 14, 2013

வனயுத்தம்

வீரப்பனின் கூட்டாளிகளுக்கு கருணை மனு நிராகரித்த நேரத்தில் படம் வெளிவந்திருப்பது ஒரு விதத்தில் படத்திற்கு பப்ளிசிட்டியாக அமைய வாய்ப்பிருக்கிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படம் தான் இந்த வனயுத்தம்.


வீரப்பன் எப்படி கடத்தல்காரனானான், பின்பு எப்படி சந்தன மரம் கடத்த ஆரம்பித்தான், எதனால் பாரஸ்ட் ஆபீஸருக்கும் அவனுக்குமான பிரச்சனை கொலையில் முடிந்தது என்று ஆரம்பித்து, அவனின் என்கவுண்டரில் முடிகிறது கதை. ஒரு பிரபலமான கடத்தல்காரனின் கதை எனும் போது நிறைய பரபர சம்பவங்கள் நிறைந்ததாய் தான் அவன் வாழ்க்கை இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இக்கதையில் ப்ரச்சனை என்னவென்றால் அவனை நல்லவனாய் காட்டுவதா? இல்லை கெட்டவனாய் காட்டுவதா என்பதுதான். ஏனென்றால் அவன் யானை தந்தங்கள் கடத்திய உண்மை, பின்பு சந்தன மரம் வெட்டிக் கடத்தியது உண்மை. பாரஸ்ட் ஆபீஸ்ர்களின் அதரவில் வளர்ந்தவன் என்பதும் உண்மை. பணம் பறிப்பதற்காக ராஜ்குமாரை கடத்தியதும் உண்மை. இப்படி பல உண்மைகள் இருந்தாலும், வீரப்பனைப் பற்றிய விஷயங்கள் ஒர் செய்தி தொகுப்பாய்த்தான் வந்திருக்கிறதே தவிர விறுவிறு திரைக்கதையாக்க தவறியிருக்கிறார்கள். ஆனால் அங்கே மிஸ்ஸாகும் விறுவிறுப்பு இடைவேளைக்கு பிறகு STF ஆபீசர் விஜயகுமார் எண்டர் ஆனதும் தொற்றி கொள்கிறது. 
வீரப்பனைப் போன்ற ஒரு கடத்தல்காரனை பிடிப்பதற்காக போலீஸ் செய்யும் வழிமுறைகள், அதறகான முஸ்தீபுகள், எக்சிக்யூஷன் முறைகள் என்று கொஞ்சம் டீடெய்லாகவே சொல்லியிருக்கிறார்கள். அந்த டீடெயிலிங் படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.  

வீரப்பனாய் கிஷோர் மிக சரியான கேஸ்டிங். நன்றாக பொருந்தியிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் வேடப் பொருத்தத்தை தவிர நத்திங் ஸ்பெஷல். உடன் வரும் நடிகர்களான அருள்மணி, கவிஞர் ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு  ஓகே. படத்தின் இன்னொரு சரியான காஸ்டிங் விஜயகுமார் கேரக்டரில் வரும் அர்ஜுன். ஒர் தேர்ந்த அதிகாரியை கண் முன் நிறுத்தியிருக்கிறார். 

படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் அஜயன் பாலா. தன்னை துறுத்திக் கொண்டு முன்நிறுத்தாமல் இயல்பான வசனங்கள் மூலம் கவர்கிறார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருக்கும் போது “ டேய்.. பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி கடத்தியிருக்கோமே? காசு கொடுப்பாங்களா?” என்று கேட்குமிடம் சிறப்பு. ஒளிப்பதிவு விஜய்மில்டன். காடுகளை காட்ட எடுக்கப் பட்ட ஏரியல் ஷாட்களும், க்ளைமாக்ஸ் காட்சிகளிம் தெரிகிறார். சந்தீப் செளதாவின் பின்னணியிசை ஓகே. பாடல்களை எல்லாம் போட்டு இம்சை படுத்தாதற்கு நன்றி.
எழுதி இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். வழக்கமான படமாய் எடுக்காமல் ஒர் பிரச்சனைக்குரியவனின் வாழ்க்கையை படமாக்க துணிந்ததற்கு வாழ்த்துக்கள். ஆனால் அதே நேரத்தில் அவனின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் வீரப்பனின் கேரக்டரை எப்படி காட்டப் போகிறோம் என்று முடிவெடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவனை வீரனாகவும் காட்ட முடியாமல், நல்லவனாகவும் காட்டமுடியாமல், அவனின் பர்சனல் வாழ்கையையும் காட்டமுடியாமல் போனதால் ஒவ்வொரு சம்பவங்களை பற்றியும் காட்டப்பட்ட காட்சிகள் எல்லாம் உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரித்தனம் இருப்பது குறை. ஆனால் அதே இரண்டாவது பாதியில் அர்ஜுனை வைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கும் முறை, தமிழக முதல்வரின்  ஈடுபாடு, அவரோடு அர்ஜுன் பேசும் காட்சிகள், என்று சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. நிறைய சென்சார் கட், வீரப்பனின் மனைவியினால் வந்த ப்ரச்சனை, அரசை எதிர்த்து படமெடுக்க முடியாத நிலை என்று பல இக்கட்டுக்களை சந்தித்துத்தான் இப்படம் தமிழில் வெளியாகியிருக்கிறது. கன்னட வர்ஷன் தான் இயக்குனரின் முழு சுதந்திரத்தோடு வெளிவந்திருப்பதாய் சொன்னார்கள். தமிழ் வர்ஷனைப் பொறுத்த வரை நக்கீரன் கோபாலின் வீடியோ பெட்டர் என்றே தோன்றுகிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Naresh Kumar said...

//கன்னட வர்ஷன் தான் இயக்குனரின் முழு சுதந்திரத்தோடு வெளிவந்திருப்பதாய் சொன்னார்கள்.//

கன்னட வர்ஷனில் வீரப்பனின் மனைவியின் பிரச்சினை இருக்காது! இன்னும் சொல்லப்போனால் முழுக்க முழுக்க வீரப்பன் ‘மட்டுமே’ கெட்டவன் என்று காட்ட முடியும்... ஆனால் அங்கு வீரப்பன் மட்டுமே கெட்டவனில்லை என்ற கருத்து வருமாறு படமெடுக்க முயன்றிருந்தால் இயக்குனரின் சுதந்திரம் இன்னும் தெளிவாய் தெரிந்திருக்கும்...

kanavuthirutan said...

சார்... இன்னைக்குதான படமே ரீலீஸ்... இன்னும் முத சோ கூட முடிஞ்சிருக்காதே... அதுக்குள்ள ரிவ்வூயுவா... செம ஸ்பீடு சார் நீங்க....

R. Jagannathan said...

நக்கீரன் கோபால் ஆக நடிப்பது யார்?! ராஜ்குமார் முகத்தில் மூக்கு சரியாக இருக்கிறதா! - ஜெ

saravanan selvam said...

அப்படி ஆனால் படத்தை இன்று கன்னடாவில் பார்த்து விட வேண்டியதுதான்.நான் பெங்களூர் தான் வசிக்கிறேன். படம் நல்ல இருக்குதா இல்லையான்னு சரியாய் எழுதலையே.

விஜய் said...

எதற்கு ஒருவனை வீரனாய் அல்லது கொடியவனாய் காட்டவேண்டும்? ஒரு கதாபாத்திரம் அதன் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அது தானே திரைக்கதை. அதை அடுக்கிய விதத்தில் விறுவிறுப்பு வேண்டுமானால் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பல விஷயங்களை சேர்க்கமுடியாத அரசியல் சூழலில் என்னதான் செய்யமுடியும்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

saravanan selvam said...

நான் சொன்னது போல கன்னட மொழி இல் படம் பார்த்தேன்.முத்துலட்சுமி வரும் காட்சிகளில் எல்லாம் அவரை blur செய்து உள்ளார்கள்.படம் ஓர் அளவுக்கு பொழுதுபோக்கான படமாக உள்ளது.ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்.