Thottal Thodarum

Feb 15, 2013

சில்லுனு ஒர் சந்திப்பு

 விமலுக்கும் ஓவியாவுக்கும் பள்ளியிலேயே காதல். வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள விழைகிறார்கள். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விமல் அமெரிக்காவிலிருந்து வருவதாய் காட்டுகிறார்கள். அங்கே ஓவியா என்றொரு ஜீவனைப் பற்றி ஏதும் சொல்லப்படவேயில்லை. என்னடா இது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தீபாஷாவின் மேல் காதல் கொள்கிறார். இருவர் வீடும் இவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறது. அடக்கமான, கலாச்சார காவலராய் வளர்ந்திருக்கும் தீபாஷாவுக்கு விமலின் ஸ்கூல் காதல் பற்றி தெரிய வர, இருவரும் பிரிகிறார்கள். பிரிவுக்கு பிறகு ஒரு நாள் ஓவியாவை சந்திக்க, என்னவானது என்பதுதான் கதை.


விமல் - ஓவியா ஸ்கூல் காதல், விமல்- தீபாஷா மெச்சூர்ட் காதல், தீபாஷாவின் தோழி - அவரின் பத்து வருட காதல், நாற்பது வருட தம்பதியரின் டைவர்ஸ் என உறவுகளிடையே உள்ள சிக்கல்களையும், புரிதல்களையும் பற்றிய சிக்ஸ்ர் அடிக்க வேண்டிய கதைக்களம். ஆனால் அதை சொதப்பியெடுத்து, குழப்பியடித்திருக்கிறார்கள். 
 பள்ளிக்காதல் என்பது இனக்கவர்ச்சி மட்டுமே பின்னாளில் அவர்கள் வளர, வளர இருவரது விருப்பு, வெறுப்புகள் வித்யாசப்பட, அவர்களுக்குள் பிரிவு வரும் என்பதை உணர்த்த விமல் - ஓவியா கேரக்டர் மூலமாகவும், தீபாஷாவின் தோழியின் மூலமாகவும் விளக்கியிருகிறார் இயக்குனர். காலத்தின் கட்டாயம் காரணமாய் 14 வயதில் திருமணம் முடித்து ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்காக வாழ்ந்து, அவர்கள் செட்டிலானதும், விஸ்ராந்தியாய் தங்களுக்காக வாழப் போவதாய் டைவர்ஸ் செய்து கொள்ளும் சாருஹாசன் தம்பதியினர். அழகாய் மூன்று ட்ராக்காய் ஆரம்பித்து அதனுள் திரைகக்தை பயணித்திருந்தால் சுகமான விதயாசமான படமாய் அமைந்திருக்கும். ஆனால் படத்தில் இருக்கும் கேரக்டரிகள் யார், யார்? அவர்களுக்கு என்ன உறவு என்ற யோசனைகள். எதற்காக தீபாஷா, விமலுக்கிடையே உருவான காதலுக்கு பெற்றோர்கள் அவர்களை சேர்த்து வைக்க போராட வேண்டும்? அமெரிக்காவிலிருந்து குழந்தை அழுதா எல்லாருக்கும் சொல்லுற ரயில் பொம்மையை எதற்காக விமல் வாங்கி வர வேண்டும்? அந்தக் காட்சிக்கான காரணம் என்ன? எதற்கு அபத்தமான குத்துப் பாட்டு?. 

கையைக் காலை ஆட்டாமல், வாயைத் திறக்காமல் பேசினால் அமைதியாய் அடிப்பதாய் அர்த்தம் என்று விமலுக்கு யார் சொன்னது என்றே தெரியவில்லை. படம் பூராவும் செத்த வீட்டில் துக்கம் கேட்க வந்தவர் போலவே பேசுகிறார். முடியலை.  பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி போன்ற விசயங்களை கற்காமல் இனிமேல் சிட்டிக் கதைகளில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்தால் நன்றாக  இருக்கும். ஓவியாவின் ஓவர் மேக்கப் உடம்புக்காகவில்லை. தீபாஷா சரியாக பொருந்தியிருக்கிறார். தவறு செய்தால் தலையில் குட்டிக் கொள்வது க்யூட். ஆனால் இவர் ஒர் கலாச்சார காவலரா? காதலை ஆதரிப்பவரா? அல்லது எதிர்ப்பவரா? என்று இவரது கேரக்டர் குழப்ப காரணத்தால் ஒன்ற முடியவில்லை. மனோபாலாவின் காமெடி படு மொக்கை. 

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓகே. ஊட்டி என்று கொடைக்கானலில் உள்ள ஜெமினி கணேசன் மாளிகையை காட்டுகிறார்கள். சரி.. அது லொக்கேஷன் தெரிந்தவர்களுக்கு தானே? என்றால் மலேசியாவின் பேக்கப்பில் சென்னையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையில் எங்கேயும் வெளிநாடு போவதாய் காட்சிகளேயில்லாத போது இக்காட்சிகளுக்காக மலேசியா போயிருந்தால் ம்ஹும். என்ன சொல்றது.  ஃபைசலின் இசையில் பஸ்சே பஸ்ஸே பாடல் ஓகே.. வெளிநாட்டு லொக்கேஷனில் எதற்கு கிராமத்து வாடையோடு ஒர் பாடல் என்று தெரியவில்லை. அதை வெளிநாட்டு லொக்கேஷன் என்று பெரிதாய் வெளிப்படுத்தவில்லை.

எழுதி இயக்கியவர் ரவிலல்லின். கொஞ்சம் படிப்பவர் போல, மணிமேகலை, சீவக சிந்தாமணி பற்றியெல்லாம் பேசுகிறார்கள். சீத்தலை சாத்தனார் பற்றி விமல் சொல்ல,  தமிழில் பி.ஹெச்.டி செய்திருக்கும் தீபா ஷா அதைப் பற்றி ஏதும் தெரியாதவர் போல கேட்டதற்காக விமல் கோபப்பட, அதற்கு தீபா.. நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலைன்னு சொல்றது எழுதும் போது கவிதையா வந்திருக்கலாம். ஆனால் அதை காட்சியாய் பார்க்கும் போது ம்ஹும். நிறைய காட்சிகள் துண்டு துண்டாய் ஓடுகிறது. கதையில் அம்மா பாட்டி என்பவர் யார்? விமலின் அம்மாவின் அம்மாவா? ஏகப்பட்ட கேரக்டர்கள் ஆங்காங்கே உலவிக் கொண்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் மனோபாலா அடிக்கும் டபுள் மீனிங் செம சொதப்பல். ஆங்காங்கே வசனங்களாய் நச்சு நச்சென இருந்தாலும். நல்லா, ஜாலியா, ரொமாண்டிக்கா, ஃபீல் குட்டாய் போயிருக்க வேண்டிய கதையை, நல்ல திரைக்கதையாக்காமல் சொதப்பியெடுத்ததால் சந்திப்பு கடுப்பாகி போய்விட்டது என்பதை சொல்ல வருத்தமாய்த்தான் இருக்கிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

News from Prasanna said...

படம் பூராவும் செத்த வீட்டில் துக்கம் கேட்க வந்தவர் போலவே பேசுகிறார்
hahhahh

வாசு said...

Takkunnu oru escape -padam parpathillirunthu. Tanx