தமிழில் கிரவுட் ஃபண்டிங் சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம்தான். ஸ்டூடியோ அமைப்பின் கீழ் இயக்கும் ஹாலிவுட்கூட ‘இண்டிபெண்டண்ட் சினிமா’ எனும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகளவில் கிரவுட் ஃபண்டிங் முறையில் படங்களைத் தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமரசங்களுக்கு இடம்கொடுக்காத இண்டிபெண்டெண்ட் இயக்குநர்களே.



ஆனால் இதுபோன்ற படங்களுக்கென்றே அங்கே தனி மார்க்கெட்டும் இருக்கிறது. பார்வையாளர்களும் இருக்கிறார்கள். முதலில் நியூயார்க் போல சில நகரங்களில் மட்டும் இவ்வகையில் தயாராகும் படங்களின் வரவேற்பைப் பொறுத்து, அமெரிக்காவெங்கும் வெளியாகிச் சக்கை போடு போட வாய்ப்பும் அமைகிறது. தவிர கவனம் கிடைத்துவிட்டால் டிவிடி, ஆன்லைன், பே பெர் வியூ, ப்ளூ ரே என எத்தனை விதமான வியாபாரம் உண்டோ அத்தனை வகையான வியாபாரம் செய்யவும் அங்கே சந்தை இருக்கிறது. அதனால் சமரசம் இல்லாமல் எடுக்கப்படும் படங்களுக்கு அங்கே மினிமம் கியாரண்டி உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு வாய்ப்பே இல்லை.

ஹாலிவுட் முன்மாதிரி
‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற ஹாரர் படம் 2006-ம் ஆண்டு வெறும் 11 ஆயிரம் டாலர் முதலீட்டில், ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு திரைப்பட விழாவாக அப்படத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்தார் அதன் இயக்குநர் ஓரன் பெலி. 2007-ல் கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்க, 2008-ம் ஆண்டு அவருக்கு யோகம் அடித்தது. ஒரு திரைப்பட விழாவில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மேலும் நாலாயிரம் டாலர் கொடுத்தார்.

“இந்தப் பணத்தைச் செலவு செய்து க்ளைமேக்ஸை மட்டும் மாற்றிவிட்டு வாருங்கள்” என்றார். மொத்தம் 15 ஆயிரம் டாலரில் எடுக்கப்பட்டு, சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரிய அளவில் ரிலீஸாகி, 100 மில்லியன் அளவுக்குத் திரையரங்க வசூல் மூலம் சம்பாதித்தது. உலகெங்கும் உள்ள சிறு முதலீட்டு, இண்டிபெண்டண்ட் இயக்குநர்களின் நம்பிக்கையே இம்மாதிரியான படங்களின் வெற்றிதான்.

கர்நாடகமும் தமிழ்நாடும் ஒன்றல்ல
நடிகனாய், திரைக்கதாசிரியனாய், இயக்குநராய் வலம் வந்த பவன் குமார், அப்படித்தான் ‘லூசியா பவன் குமார்’ ஆனார். 2011-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘லைஃபூ இஷ்டேனே’ (Lifeu Ishtene) என்ற படம் 40 திரையரங்குகளில் வெளியாகி சுமார் ஆறு கோடி வசூல் ஆனது. இவரின் முதல் பட வெற்றிக்குப் பிறகு அவர் எழுதிய புதிய திரைக்கதையை எடுத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை அணுக, சரியான ஆதரவு கிடைக்காமல், தன்னுடைய வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் எழுதினார்.

அங்கு கிடைத்த ஆதரவில் சுமார் 110 முதலீட்டாளர்களைக் கொண்டு, வெறும் 75 லட்சத்துக்குள் படத்தைத் தயாரித்தார். முதல் பட வெற்றி அடுத்த முயற்சிக்கு நிதி திரட்ட மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. ஆடியோ உரிமையை உதயா டிவி வாங்கிக் கொள்ள, பிவிஆர் நிறுவனம் படத்தை வெளியிட்டது. சுமார் 3 கோடி வசூலானது. இது இவரது முதல் பட வசூலைவிடக் குறைவானதுதான்.

ஆனால் இப்படத்தின் மூலமாக விமர்சகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் கிடைத்த அங்கீகாரத்தால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தின் ரீமேக் உரிமை விற்கப்பட்டுக் கணிசமான தொகை கிடைத்தது. பவன் குமார் தனது அடுத்த படமான C10H14N2 என்ற படத்தையும் கிரவுட் ஃபண்டிங் மூலம்தான் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். கன்னடத் திரையுலகில் படங்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதால் பவன் குமார் போன்ற இளம் இண்டிபெண்டண்ட் சினிமா படைப்பாளிகளுக்கு அம்மாநிலத்தில் பாதுகாப்பான இடம் இருக்கிறது.
ஆனால் தமிழ்நாடு கர்நாடகம் ஆக முடியாதே! இவரின் வெற்றிதான் இங்கே பல பேருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

எங்கிருக்கிறது சந்தை?
தற்போது பவன் குமார் தந்த நம்பிக்கை தமிழ்நாட்டிலும் பரவி, பலர் படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவர்களின் கதைக்கென அதுகோரும் காட்சியமைப்புகளைத் திரையில் கொண்டுவரக் கச்சிதமான பட்ஜெட் ஒன்றை வைத்திருப்பார்கள். அதற்குள் படத்தை முடித்துவிட்டாலும் இங்கே இருக்கும் பெரிய சவாலே படத்தை வெளியிடுவதுதான்.

வாரத்துக்கு ஐந்து முதல் எட்டுப் படங்கள் வரை வெளிவருகின்றன. அப்படி வருகிற பல சின்ன படங்களுக்கு விளம்பர பட்ஜெட்டுக்கு வழி இல்லாததால் வந்ததும் தெரியாமல் திரையரங்கிலிருந்து வெளியேறியதும் தெரியாமல் காணாமல்போகும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இங்கே இண்டிபெண்டண்ட் படங்களுக்கான சந்தை தனியே இல்லாததுதான் இதற்குக் காரணம்.

சிறிய படத்தைப் பார்க்க வைக்க, வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், இணையம் எனக் கூவிக் கூவித்தான் பார்வையாளர்களை அழைக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கூவ சில பல லட்சங்கள் நிச்சயம் தேவை. அதற்கு கிரவுட் ஃபண்டிங் படங்களுக்குத் தெம்பு இருக்கிறதா என்பது தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர, ஆடியோவிலோ, அல்லது ஏரியாவின் மீதோ, சாட்டிலைட் உரிமை மூலமாகவோ, பணம் என்ற ஒன்று ‘முன் பணமாய்’வியாபாரம் மூலம் சிறு முதலீட்டு படங்களுக்கு வருவது அரிதாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தயாரிப்புச் செலவோடு, மார்க்கெட்டிங் செய்வதற்கெனக் குறைந்த பட்சம் 50 முதல் 60 லட்சம் தேவை.

நல்ல சினிமாவை, தரமான சினிமாவை, குறைந்த செலவில் கொடுக்க விரும்பும் இண்டிபெண்டெண்ட் திரை ஆர்வலர்கள் கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டும்போது முதலீடு செய்ய முன்வருபவர்களுக்குத் தயாரிப்புக்கான செலவோடு படத்தை மார்க்கெட்டிங் செய்ய, விளம்பரம், மற்றும் வெளியீட்டுச் செலவுக்கு ஆகும் செலவையும் கணக்கிட்டு, வெளிப்படையான பட்ஜெட்டை அவர்களுக்கு விளக்கினால் முதலீடு செய்பவர்கள் நம்பிக்கையுடன் வருவார்கள்.
இதை உணராமல் ஒரு கோடியில் படமெடுத்தால் வியாபாரம் செய்து ஒன்றரைக் கோடி லாபம் கிடைக்கும் என்பதெல்லாம் பகல் கனவே. நாளையே தமிழ் சினிமா உலகில் எல்லாப் படங்களுக்கும் குறைந்தபட்ச வியாபாரம், இண்டிபெண்டட் படங்கள் ரிலீஸ் செய்ய திரையரங்குகள், பைரஸி இல்லா தமிழ்திரை, நியாயமான கட்டணம். சினிமாவுக்கான மாற்று வழிகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட வருமானம் என எல்லாம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் கிரவுட் ஃபண்டிங் மற்றும் சிறு முதலீட்டு படங்களுக்கான வியாபாரம் சிறப்பாக அமையும். என்றாலும் சிறு படங்களுக்கு எந்தெந்த வகையில் வருமானம் பெறலாம் என்பதை அடுத்த வாரம் அலசுவோம்.

மினி ரிவ்யூ
ஒரு நெருக்கமான நண்பனிடம் பேசுவதுபோல தனது கடந்தகால வாழ்க்கை, ஆசை, நிஜம், தேடல் எல்லாவற்றையும் பற்றிய புலம்பலும், ஆங்காரமும், கோபமுமாய் இந்த நான்கு நிமிடக் குறும்படம் போகிறது. எழுதி இயக்கி நடித்திருந்த ஷமீர் சுல்தானின் நடிப்பு, வசனமெல்லாமே படு இயல்பு. திடீரென வரும் கெளதம் மேனன் ஸ்டைல் வசனத்தைத் தவிர. ஒளிப்பதிவு மற்றும் எடிட் செய்த மதன் குணதேவாவுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து குறும்படம் பார்ப்பவர்களுக்கு கிளைமாக்ஸ் ட்விஸ்டாய் இருக்காது..
எனினும் இது சுவாரஸ்யமான குறும்படமாய் அமைந்ததற்கு நடிப்பும், அதைக் கொடுத்த விதமும் ஒரு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட இதையொரு ஒரு செல்பி குறும்படம் என்று கூடச் சொல்லிவிடலாம். யூடியூபில் பாருங்கள் நீங்களே உணர்வீர்கள்.
தொடர்புக்கு sankara4@gmail.com