Thottal Thodarum

Mar 17, 2015

கோணங்கள் -20

கோணங்கள் 20 - வீட்டுக் கதவைத் தட்டும் சினிமா!

சேரனின் சிடுஎச் டி.வி.டி. ஒரு வழியாக வெளியாகிவிட்டது. திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் டி.வி.டியிலும் வெளியாகும் என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் அனைவரும் சேரனுக்கு, யார் யாரெல்லாம் படம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்று தடை போடுமளவுக்கு வாய்மொழி உத்தரவு போட்டதையும் மீறிக் களமிறங்கிவிட்டார்.
சேரனின் படம் வெளிவந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தின் வீடியோ டோரண்டில் வலம் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக வரும் 4.7 ஜிபி இல்லாமல் 8 ஜிபி அளவுக்கான கன்டென்ட்டை கம்ப்ரஸ் செய்து 1.7 ஜிபிக்கு டவுன்லோடு செய்து கொள்ளும் அளவுக்கு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் திருட்டு வீடியோ நண்பர்கள். இனி அவ்வளவுதான் இது வேலைக்காகாது; போட்ட காசை எடுக்க முடியாது என்று ஆளாளுக்கு ஒருபுறம் கருத்தாகவும், சந்தோஷமாகவும், பொறாமையுடனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைதான் விற்றது இத்தனைதான் விற்றது எனக் கணக்கிட்டுக் காசு தேறலை என்று பேசுவார்கள். இப்படிப் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் செயல்படுவதேயில்லை.

நிச்சயம் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னும் பெரிய உழைப்பும், தியாகமும் இருக்கின்றன. டி.வி.டி.யில் வெளியிடுகிறேன் என்று சொன்னதும் உன் படத்தைக் கொடுப்பியா என்ற கேள்வி நிச்சயம் சேரனுக்கு வந்திருக்கும் “இதோ நான் என் தயாரிப்பு இயக்கத்தில் வந்த படத்துடன் ஆரம்பிக்கிறேன்” என்றதும். அந்தக் கேள்விக்கான அழுத்தம் குறைந்து இதன் சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கினார்கள். சேரன் செய்த புத்திசாலித்தனமான விஷயம் இத்திட்டத்துக்கான மார்க்கெட்டிங் செட் அப்பை நிறுவியதுதான். அதனால் லட்சக்கணக்கில் டி.வி.டி. விற்றிருப்பதும், கேரள மாநிலத்தில் டிஜிட்டல் கேபிளின் மூலம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 7,500 பேர் நூறு ரூபாய் கொடுத்துப் படத்தைப் பார்த்திருப்பதும் நடந்துள்ளது. யோசித்துப் பாருங்கள் கிட்டத்தட்ட 7.5 லட்ச ரூபாய் வசூல். இது உண்மையா இல்லையா என்று ஆராய்வதைவிட, இம்முறையிலும் ஒரு சினிமா சம்பாதிக்க முடியும் என்ற விஷயத்தை முன்வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
ஒரு சூப்பர் ஹிட் படத்தின் வாழ்வே மூன்று வாரங்கள் என்றாகிவிட்டது. தியேட்டர் கிடைக்காத, பெரிய படங்களோடு வரிசை கட்டி நிற்க வேண்டிய சூழல் நிலவும் இன்றைய நிலையில் ஒரு படத்தைப் பற்றிய விஷயம் வெளியே சென்று சேருவதற்குள் அடுத்த வாரம் தியேட்டரில் இல்லாத நிலையே அதிகம். இதற்காக தியேட்டர்களைக் குறைகூறிப் பிரயோஜனமில்லை. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

டிமாண்டுக்கு மீறிய சப்ளை உள்ளது. அப்படியே போனாலும் தியேட்டரின் தரம், விலை, எனப் பொருளாதார விஷயங்கள் முன்னின்று மிரட்டுகின்றன. வாரத்துக்கு நாலு படமென்று வெளிவரும்போது அதில் எது சிறந்தது என்று பார்ப்பவர்களைவிட, பிரபல நடிகர்கள் நடித்த படங்களைக் காணப் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தக் காரணங்களால் திரையரங்கு உரிமையாளர்களும் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இத்திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடர்ந்து செயல்படுவதுடன் நல்ல திரைப்படங்களை இவர்களது நிறுவனம் தொடர்ந்து அளிக்கிறது என்கிற பிராண்ட் வேல்யூவையும் பெற வேண்டும். அதேநேரம் கமர்ஷியலாகவும், பாமர மக்களின் ரசனையோடு ஒத்த படங்கள் தேவை. அப்படிச் சிறப்பாக நடக்கும் பட்சத்தில் வெறும் டி.வி.டி. மூலமாக மட்டுமில்லாமல், ஆன்லைனில் பணம் கட்டி டவுன்லோட் செய்து கொள்ளும் முறை, ஆன்லைனிலேயே பார்க்கும் முறை, பே பர் வியூ, வீடியோ ஆன் டிமான்ட் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாத்தியப்பட வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சிறிய,பெரிய படங்களின் டி.வி.டி.க்களைப் படம் வெளிவந்து சில வாரங்கள் கழித்து இவர்கள் தங்கள் நெட்வொர்க் மூலம் விற்பனைக்குக் கொண்டு வந்தால் தமிழ் சினிமாவில் மீண்டும் வீடியோவுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகும்.

உலக அளவில் ஹாலிவுட் படங்களில் பல படம் வெளிவருவதற்கு முன்பே டி.வி.டி.யில் வெளியாகி, பின்பு லிமிடெட் ரிலீஸ் என்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. அப்படியில்லாமல் தியேட்டரில் ரிலீஸான படம் அடுத்த வாரங்களில் வீடியோ ஆன் டிமாண்டில், வெளியாகி, பின்பு ஓரிரு வாரங்களில் புளூரே டி.வி.டியாகவும், ஹெச்டி வீடியோவாகவும், பே சேனல் எனப்படும் கட்டண சேனலிலும், பின்பு சில காலம் கழித்து இலவச சேனல்களிலும் வெளியாகி ஒவ்வொரு வெளியீட்டிலும், படத்தை விலைக்கு விற்றுப் போட்ட முதலை எடுக்கிறார்கள்.

தியேட்டரில் மட்டுமே வெளியாகிப் போட்ட முதலை எடுக்க வேண்டுமென்று காத்திருப்பதில்லை. யார் யாருக்கு எப்படி எல்லாம் படம் பார்க்க விருப்பமோ அப்படி அவர்களின் விருப்பத்துக்கேற்ப அதைக் கொண்டு செல்கிறார்கள். டிமாண்டுக்கு ஏற்ப சப்ளை இருப்பதால் அவரவர் தேவைக்கு ஏற்ப உபயோகித்துக்கொள்கிறார்கள். அதே போன்ற மனநிலையில் இங்கேயும் செயல்பட ஆரம்பித்தால், நிச்சயம் இம்மாதிரியான வீடு தேடி வரும் சினிமாவுக்குப் பெரும் வரவேற்பும், பொருளாதார வெற்றியும் கிடைக்க ஆரம்பிக்கும். அம்மாதிரியான வெற்றிகள், மேலும் பல புதிய விஷயங்கள், திறமைகள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை.

மினி ரிவ்யூ - சூர்யா Vs சூர்யா
சூர்யா எனும் ஹீரோவுக்கு போர்ப்ரியா (Phorphria) என்றொரு வித்தியாசமான வியாதி. வெய்யிலில் வெளியே போனால் அவர் இறந்துவிடுவார். அதனால் இரவில் மட்டுமே அவரது வாழ்க்கை. பணக்கார பையன் என்பதால் சகல வசதிகளையும் கொண்டவர். இதனால் இரவுக் கல்லூரியில் படிக்க, அப்போது டிவி ஆங்கராக இருக்கும் ஹீரோயினை பெண்ணைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்கள். பின்னாளில் அவரது பிரச்சினை தெரிந்து இருவரும் பிரிந்துவிட, எப்படிச் சேருகிறார்கள் என்பதுதான் கதை.
ஆரம்பக் காட்சியிலிருந்து முதல் பாதி வரை, வயதான தனிகலபரணி, ஆட்டோக்கார சக படிப்பாளிகளுடன் காமெடியாகவே நிகில் சித்தார்த் கொட்டம் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ். பின்பு ஹேப்பி எண்டிங். தணிகலபரணி, நிகில், அவருடைய அம்மா மது ஆகியோரைச் சுற்றியே வருகிறது கதை. குறிப்பாய் முதல் காட்சியில் அவரைக் கடத்திப் போகும் உள்ளூர் ரவுடியுடனான காட்சிகளும் வசனமும் சுவாரஸ்யம். க்ளைமேக்ஸ் வழக்கமான பீல்குட், தெலுங்குப் படங்களுக்கான டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும், இம்மாதிரியான கதையை அழ, அழ வைத்து உணர்ச்சிப் பெருக்காமல், கலகல ஜாலி ஜிம்கானாவாய் அமைந்திருப்பது சந்தோஷம். இயக்கம் கார்த்திக். ஒருமுறை பார்க்க ஏற்ற தெலுங்குப் படம்.
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: