வெளியீட்டு தேதி முடிவாகிவிட்டால் பட வேலைகள் ஜெட் வேகத்தில் பறக்கும். பின்னணி இசை அமைக்கப்பட்டதும் பிறகு தணிக்கைச் சான்றுக்கு அனுப்பப்படும். அது கிடைத்தவுடன் பிரிண்ட்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கும். ஆளவந்தான் வெளியான சமயத்தில் அதுவரை இல்லாத வகையில் மொத்தம் 250 பிரிண்ட்கள் போடப்பட்டன. சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இயங்கிவந்த முன்னணி லேப்களிலும் பிரிண்ட்கள் இரவுபகலாகத் தயாராயின.


பிலிம் லேப்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் நுழைந்ததால் லேப்கள் தங்கள் தொழிலை இழந்தன. அடுத்து என்ன செய்வது என்று லேப்கள் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே புகுந்தன டிஜிட்டல் ஃபார்மெட்டில் சினிமா பிரதியை அடைத்துத் தரும் நிறுவனங்கள். தற்போது இந்திய திரையுலகை ஆண்டு கொண்டிருப்பது இந்த நிறுவனங்கள்தான். ஆனால், இவை தொடக்கத்தில் எப்படி இருந்தன இப்போது எப்படி நடந்துகொள்கின்றன என்று பார்த்தால் வெள்ளைக்காரன் இந்தியாவைப் பிடித்த கதைதான்.

பத்து வருடங்களுக்கு முன்புவரை டிஜிட்டலில் படமெடுப்பது சாத்தியமில்லாத விஷயம். ஃபிலிமின் தரம் டிஜிட்டலில் வருமா? டிஜிட்டல் வீடியோவை ரசிகர்கள் பார்ப்பார்களா என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். டிஜிட்டலில் படமெடுப்பது ஒரு புறம் இருக்கட்டும், டிஜிட்டல் திரையிடல் முறைக்குத் திரையரங்குகள் தயாராக இல்லாத காலம்.

தமிழின் முதல் டிஜிட்டல் படமென்று சொன்னால் எஸ்.ஏ.சி.யின் ‘முத்தம்’. அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர். செல்வா. ஆனால் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘வானம் வசப்படும்’ படத்தைத் தமிழின் முதல் ஹை டெஃபனிஷன் டிஜிட்டல் சினிமா என்று சொல்லலாம். அதன் பின் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ என மெல்ல டிஜிட்டல் கேமராக்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

அப்படி ஆக்கிரமிக்க முக்கியக் காரணங்களாகச் சொல்லப்பட்டவை படப்பிடிப்புக்கான செலவுகள். லைட் அவ்வளவாய் தேவையில்லை. கேமரா வாடகை குறைவு, சின்ன பட்ஜெட் படங்களுக்குச் சுலபமான வழி போன்ற பல விஷயங்கள் அனுகூலமாக முன்னால் நின்றன. என்னதான் படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டாலும் அவற்றை பிலிம்களில் பிரிண்ட் போட்டுத்தான் திரையரங்குகளில் திரையிட முடியும் என்கிறபோது தொழில்நுட்பம் வளரத் தடை இருந்தது.

ஏனென்றால் டிஜிட்டலில் எடுக்கப்படும் படங்களை ரிவர்ஸ் டெலிசினி செய்து மீண்டும் பிலிம் முறைக்கு மாற்ற குறைந்தபட்சம் பதினைந்து லட்சத்திலிருந்து இருபது லட்சம் வரை அன்றைய காலகட்டத்தில் செலவானது. அதனால் டிஜிட்டல் படமெடுக்கும் ஆர்வம் அப்போது குறைந்தது. அப்போது மல்டி பிளெக்ஸ் திரையரங்குகள் அனைத்தும் புரொஜெக்டர்களில் ஹாலோஜன் விளக்குகளை மாட்டி அடுத்த கட்ட தரத்துக்கு உயர்ந்து கொண்டிருந்த நேரம். டிஜிட்டல் திரையிடலுக்கு மாற அனைவரும் யோசித்தார்கள். இதற்கு மாற்றாக வந்த டிஜிட்டல் திரையிடலில் என்னென்ன நன்மைகள் என்று வியாபாரப் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது முதல் விஷயமாய் அவர்கள் சொன்னது செலவு.

அப்போதெல்லாம் படத்தின் ஒரு பிலிம் பிரிண்ட் போட 65 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். டி.டி.எஸ். ராயல்ட்டி தனி. ஒரு படத்துக்கு நூறு பிரிண்டுகள் எனும்போது பிரிண்ட் செலவு மட்டுமே 65 லட்சத்துக்கும் அதிகமாகிவிடும். பின்பு, அவற்றை அனுப்பும் செலவு அது இது என லாஜிஸ்டிக் செலவு தனி. “டிஜிட்டல் திரையிடலில் படங்களை வெளியிட்டால் வெறும் ஆயிரத்து சில்லறை ரூபாய் கொடுத்தால் ஹார்ட் டிஸ்க்கில் கொண்டு போய் இன்ஸ்டால் செய்துவிடுவோம். 65 ஆயிரம் எங்கே ஆயிரத்து சில்லறை எங்கே என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
பைரஸி உச்சம் பெற ஆரம்பித்திருந்த நேரமது. ஆஹா… கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கில் படத்தை அனுப்பினால் எளிதாகத் திருடிவிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது அதெல்லாம் இங்கே முடியவே முடியாது. ஒவ்வொரு படத்தின் ஹார்ட் டிஸ்க்குகளுடன் ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவற்றைக் கொண்டே தியேட்டர் ஆபரேட்டர் படங்களைப் போட முடியும். அது மட்டுமில்லாமல் எத்தனை ஷோக்கள் அந்தத் திரையரங்கில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதோ அத்தனை ஷோக்களுக்கு மட்டுமே பாஸ்வேர்ட் கொடுக்கப்படும் எனவே யாரும் திருட்டுத்தனமாகப் படத்தை எங்கேயும் கொண்டு போய் ஒளிபரப்பி காப்பி எடுக்க முடியாது” என்ற உத்திரவாதமும் கொடுத்தார்கள்.

அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் பிரதிகள் தரம் இழக்காது. முதல் நாள் பார்த்தபோது எப்படி இருந்ததோ அது போலவே நூறாவது நாளும் தரமாய் இருக்கும். பிலிம்கள் தொடர் ஓட்டத்தில் தேய்ந்து போய் எல்லாக் காட்சிகளிலும் மழை பெய்வதுபோல் தெரியும். தேய்ந்துபோன நிலையில் பிரிண்ட்களைப் புதிதாகப் போட வேண்டியதில்லை. இவை போன்ற பல விஷயங்கள் சாதகமாக இருக்க, தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் திரையிடலுக்கு மெல்ல தலையசைக்க ஆரம்பித்தார்கள்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழைய விஷயங்களிலிருந்து உடனடியாய் மாற பெரிதும் யோசிப்பார்கள். மாறத் தயாராகிவிட்டார்கள் என்றால் ஒரேடியாய் அந்தர் பல்டிதான்.

தமிழர்களிடம் எப்போதுமே மாஸ் சைக்காலஜி நன்றாக வேலைசெய்யும். ஒரே சமயத்தில் டிஜிட்டல் படமாக்கல், திரையிடல் இரண்டையும் ஊக்குவிப்பதைவிட டிஜிட்டல் திரையிடல் வசதியை நிறுவிவிட்டால் டிஜிட்டல் படமாக்கல் தானாகப் பிரபலமாகிவிடும் என்ற கணக்கு சரியாய் வேலை செய்யும் என்ற முடிவை அந்த நிறுவனம் எடுத்தது. அடுத்த கட்டமாகத் திரையரங்க உரிமையாளர்களிடம் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஆனால், எந்தத் திரையரங்க உரிமையாளரும் இருக்கும் தொழில்நுட்பத்தை விட்டுவிட்டுப் புதிய ஒன்றுக்குச் சட்டெனெச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கத் தயாராக இல்லை. அதற்கு முக்கியக் காரணம் எத்தனை படங்கள் டிஜிட்டலில் வரப்போகிறது என்பது தெரியாததும், அதற்கான முதலீடும்தான். அப்போது சென்னையில் மல்டிபிளெக்ஸ் திரையரங்கு என்ற புதிய கலாச்சாரத்துக்கு அடிக்கோடிட்ட ஒரு திரையரங்கம் முதலில் ஆதரவு தர, மெல்ல டிஜிட்டலின் தரம் மக்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனால் தரம் என்ற ஒற்றை மந்திரத்தைச் சொல்லியே டிஜிட்டல் திரையிடல் நிறுவனங்கள் தங்களது ஏகபோக முகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்... அது தங்களது ராஜயோகம் என்று குதூகலிக்கத் தொடங்கினார்கள்.. அந்த முகத்தை அடுத்து பார்ப்போம்.