Thottal Thodarum

May 13, 2015

கோணங்கள் -28

கோணங்கள் 28: வலையில் சிக்கவைத்த விலை

பாரம்பரியத் திரையிடலுக்கு மாற்றாக வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். அதன் தரம், அதைப் பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றோடு பொருளாதாரச் செலவு மிகக் குறைவு என்று திரையரங்கை நடத்துகிறவர்களுக்குத் தெரியவந்தது. மெல்ல டிஜிட்டல் திரையிடல் பிரபலமானது. இண்டு விதமான ஒளிபரப்பும் கருவிகளைத் தவணை முறையில் தர, பிலிம் சுருள்களில் எடுக்கப்படும் படங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.
ஆரம்ப காலத்தில் இந்நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் முறைக்குக் குறைந்தபட்சத் தொகையை வாங்கிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை வேண்டுமானாலும், சோதனைக் காட்சி திரையிட்டுக்கொள்ள அனுமதித்தார்கள். இலவசக் காட்சிகளுக்குக்கூட ஏற்பாடு செய்தார்கள். வெறும் ஆயிரத்து சொச்ச ரூபாய்க்கு நூறு திரையரங்குகளில் வெளியிட வெறும் ஒன்றிரண்டு லட்சங்களே அப்போது செல்வாகும்.

அதுவே பிலிம் பிரதி என்றால் ஒரு பிரதிக்கு 65 ஆயிரம் என்கிற கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். அட டிஜிட்டல் திரையரங்காக இருந்தால் வசதி என்று புரிய ஆரம்பித்து எல்லோரும் மெல்ல டிஜிட்டல் பக்கம் திரும்ப ஆரம்பித்தார்கள். ஆனால் இது டிஜிட்டல் வலையில் சிக்கவைப்பதற்கான வலை என்று தயாரிப்பாளர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் வைத்ததுதான் சட்டம்
இப்படியான தொடர் முயற்சியில்தான் இந்தத் தொழில்நுட்பத்தை இங்கே வளர்த்தார்கள். ஒரு காலத்தில் டிஜிட்டலில் படமாக்கிய பகுதிகளை அவர்களிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் இலவசமாக அதை ஹை டெஃபனிஷன் முறையில் கன்வர்ட் செய்து, எத்தனை முறை வேண்டுமானாலும் திரையிட்டுப் பார்க்கும் வசதி, உள்ளிட்ட பல உதவிகள் எனத் திரையிடல் விஷயங்களுக்கான வலதுகரமாய் வலம் வந்தார்கள்.

இன்றைக்கு அப்படியில்லை என்பதுதான் உண்மை. கிட்டத்தட்ட ஒரு ஏகபோக நிலையில் இருப்பதால் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்டது. இதை ஒவ்வொரு தயாரிப்பாளரும் உணர்ந்தும் மனப் புழுக்கத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஜிட்டல்மயமாகி விட்டது. எல்லாத் திரையரங்குகளிலும் டிஜிட்டல் திரையிடல் கருவிகளைத் தவணை முறையில் பத்து வருட ஒப்பந்தத்தில் போட்டாகிவிட்டது. படப்பிரதியை ரசிகர்களுக்குத் திரையிடும்முன் சோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் நள்ளிரவு ஒரு மணிக்குக்கூட அழைப்பார்கள். போய்த்தான் தீர வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் கிடையாது. இரண்டு முறை கரெக் ஷன் செய்த பின் மீண்டும் கரெக்‌ஷன் என வந்தால் அதற்குத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் எத்தனை லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்திருந்தாலும், ஒரு பைசாகூடக் கடன் கிடையாது.

கருணை காட்டாத டிஜிட்டல்
எல்லா பிலிம் லேப்களிலும் கேட்டுப் பாருங்கள். பழைய தயாரிப்பாளர்களுக்கு எத்தனை விதமான உதவிகளைக் கடைசி நேரங்களில் லேப் கணக்கிலிருந்து விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று. சரி குறைந்தபட்சமாய் டிஜிட்டல் முறையில் ஒப்பந்தம் போடப்பட்ட தியேட்டர்களில் அதன் தரமான ஒளிபரப்புக்காவது ஒரு நிறுவனம் உத்தரவாதம் ஏதாவது தருகிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் பிரபலத் திரையரங்கு ஒன்றில் வெளியான திரைப்படத்தில் லைவ் சவுண்ட் முறையைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

அத்திரையரங்கில் ஒலியும் சரியில்லை. அதைவிட மிக மோசம் ஒளி. திரையிடல் கருவியில் மாற்ற வேண்டிய பல்பை அதன் காலம் முடிந்தும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் திரையிடலுக்காக நிறுவிய உபகரணங்களுக்கான ஒப்பந்தம் உள்ளதால் அவற்றில் விளம்பரங்களைத் திரையிடுகிறார்கள். இப்படித் திரையிடப்படும் விளம்பர வருவாயில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் டிஜிட்டல் நிறுவனங்களும் பங்கு உண்டு. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்குக் கிடையாது.

விறுவிறு விலையேற்றம்
தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு டிஜிட்டல் நிறுவனத்துக்குப் போட்டியாக வடநாட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் இருக்கின்றன. வழக்கமாக இம்மாதிரியான தொழில் போட்டி வந்தால் நல்லது நடக்குமென்பது உண்மை. ஆனால் இங்கு நடப்பதே வேறு. ஒவ்வொரு தியேட்டரிலும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு என்று ஒரு ஹார்ட் டிஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதை ஒளிபரப்ப, ஒரு பாஸ்வேர்ட் கீ கொடுக்கப்படும். அங்கொன்றும் இங்கொன்றுமாக டிஜிட்டல் அரங்குகள் இருந்த காலத்தில் இதற்கு முதல் வாரத்தில் ஆயிரத்து சொச்சம் வாங்கியவர்கள் இன்று, கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் டிஜிட்டல் அரங்கான காலத்தில், வரிகள் எல்லாம் சேர்த்துக் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். போட்டி நிறுவனங்களில்கூடக் கிட்டத்தட்ட அதே விலைதான். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.

விலைவாசி ஏற்றப்படி கணக்கிட்டுப் பார்த்தால் இது ஒன்றும் அதிக விலையில்லையே; அது மட்டுமில்லாமல் பிலிம் விலை வைத்துக் கணக்கிட்டிருந்தால் இன்றைய காலத்தில் ஒரு பிலிம் பிரதி ஒரு லட்சம் ரூபாய்கூட வந்திருக்கும் அப்படிப் பார்க்கும்போது இது மலிவுதானே என்று யோசிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பிலிம் பிரதிக்கும் ஆகும் செலவைவிட, இம்மாதிரியான டிஜிட்டல் பிரதிக்கு ஆகும் செலவு மிகக் குறைவு. மொத்தமாக ஒரு முறை கன்வர்ட் செய்யப்பட்டதை ஆங்காங்கே நிறுவ ஆகும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் அதற்கான ஆட்கள் செலவு மட்டுமே.

இந்நிறுவனங்கள் பல திரையரங்குகளில் இணையம் மூலமும், அல்லது நேரடி சாட்டிலைட் தொடர்பு மூலமும் டவுன்லோட் செய்துகொள்ளக்கூடிய வசதிகளை இன்று தர ஆரம்பித்துவிட்டன. அதனால் போக்குவரத்துச் செலவுகளும் குறைந்துவருகிறது. தவிர இன்றைக்குத் தமிழகத்தில் எழுபது சதவிகித அரங்குகளைத் தங்கள் வசம் வைத்திருக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வியாபாரத்தைக் கணக்கிட்டால் அது பிலிம் லேப்கள் செய்த வியாபாரத்தைவிடப் பன்மடங்கு அதிகம். காரணம் அதிக எண்ணிக்கையில் இன்று எல்லா மொழிப் படங்களும் தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டன.

போராட வேண்டிய கட்டம்
முதல் வாரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த வாரங்களில் இதற்கான கட்டணம் குறையும் என்று இருந்தாலும் இன்றைய காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் எத்தனை படங்கள் தொடர்ந்து ஓடுகின்றன? அது மட்டுமில்லாமல் முன்பெல்லாம் எத்தனை காட்சிகள் போடப்படுகிறதோ அத்தனை காட்சிகளுக்கு மட்டுமே பணம் கட்டும் வசதியிருந்தது. ஆனால் இன்றோ முதல் வாரத்தில் எத்தனை காட்சிகளாக இருந்தாலும், மொத்தமாய் ஒரு வாரத்துக்கான தொகையைக் கட்டித்தான் ஆக வேண்டும்.

அது மட்டுமில்லாமல் 2கே, 4கே என டிஜிட்டல் தரம் உயர உயர அதற்கான பணம் தனி. இன்றைய நிலையில் 2கே தரத்துக்கு சுமார் 20 ஆயிரத்துக்கு மேல் பணம் கட்ட வேண்டியிருக்கிறது. நுகர்வோர்கள் அதிகமாக, அதிகமாக விலை ஏற்றத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. அப்படி இல்லாத வியாபாரம்தான் எப்போதும் சரியாக இருக்கும்.

தயாரிப்பாளர் சங்கம் இதற்கெல்லாம் எதிராகப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. காட்சி அடிப்படையில் பணம் வாங்கிக் கொள்ளுதல், விளம்பரங்கள் மூலமாக வரும் வருமானத்தில் பங்கு, முதல் வாரத் தொகையில் கட்டணக் குறைப்பு, மற்றும் நடுராத்திரி ஷோக்கள் எனக் கேட்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. நவீனத் தொழில்நுட்பம் நல்ல விஷயம்தான் ஆனால் அதுவே காலில் கட்டிய அடிமைச் சங்கிலி ஆகிவிடக் கூடாது.

Post a Comment

No comments: