Thottal Thodarum

May 10, 2017

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-24
தமிழ் சினிமாவும் தமிழ் ராக்கர்ஸும் இணை பிரியாத எதிரிகளாகிவிட்டார்கள். சிங்கம் படத்தின் துரைசிங்கம் தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிப்பதுதான் சிங்கம் 4 படத்தின் கதை என்று மீம்ஸ் வரும் அளவுக்கு அவர்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது. நீ படத்த ரிலீஸ் பண்ணு, நான் காலையில லைவ்வுல போடுறேன் என்று சவால் விடும் அளவிற்கு. சிங்கம் படம் ரிலீஸான நேரத்தில் அவர்களும் லைவில் படம் போட, அதை முடக்க இவர்களின் நடவடிக்கை என பரபரப்பாகவே இருந்தது. பைரஸி நிச்சயமாய் சினிமாவை முடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பெரிய படங்கள் என்றில்லாமல். சின்ன படங்கள் கூட ஹெச்.டியில் பைரஸியில் வெளியாகிறது. பெரும்பாலான சின்னப்படங்களின் பைரஸி, வெளிநாட்டு உரிமைகள் விற்கப்படும் போது, அடியில் கண்ட சொத்துகள் அனைத்தும் என்கிற ரீதிரியில் டிஜிட்டல் உரிமங்களைக் கூட விற்று விடுகிறார்கள் மிகச் சகாய விலைக்கு. நான் இயக்கிய தொட்டால் தொடரும் படத்தினை தயாரிப்பாளர் யாருக்கும் விற்கவில்லை. வெளிநாட்டு உரிமையை அவரே வைத்திருந்தார். சிங்கப்பூர், மலேசியாவில் திரையிட்டார். யாருக்கும் டிஜிட்டல் உரிமையை கொடுக்க வில்லை. டிவிடி உரிமையை கொடுக்க வில்லை. அதனால் படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு பைரஸி என்கிற பேச்சுக்கே இடமில்லை. எல்லா சின்ன படங்களையும் கேமரா வைத்து ரிஸ்க் எடுத்து திருட்டு வீடியோ எடுக்க மாட்டார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு என் திரைப்படம் ஹெச்.டியில் 5.1 ஆடியோவோடு பளிச் ப்ரிண்ட் வெளியானது. அது எப்படி வெளியானது என்று எனக்கு தெரியும். என் திரைப்படத்தின் வெளிநாட்டு இண்டர்நெட் உரிமையை விற்றோம். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் டெண்ட் கொட்டாய், ஹீரோ டாக்கீஸ், தற்போது பிரபலமாக உள்ள நெட்ப்ளிக்ஸ், அமோசான் ப்ரைம் போன்ற நெட்வொர்க்குகளின் ஆன்லைனில் பார்க்க உரிமையை விற்பது. அதில் விற்பனை செய்த ஒரு மணி நேரத்தில் என் படம் நாங்கள் கொடுத்த அதே குவாலிட்டியில், தமிழ் ராக்கர்ஸில் மட்டுமல்ல, அனைத்து பைரஸி சைட்டுகளிலும்,
ஆன்லைனில் படம் பார்க்க, பணம் கொடுத்து பார்க்கிறவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அதே தளத்துக்கு பைரஸிக்காக டவுண்ட்லோட் செய்து , அதை பைரஸி சைட்டில் அப்லோட் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியாக வெளிவந்த சமீபத்திய படம் “லைட்மேன்” எனும் டாக்குமெண்டரி படம். படத்தை இந்த மாதம் பத்தாம் தேதி வெளியிட ப்ளான் செய்து, அதே நேரத்தில் வெளிநாட்டு இண்டர்நெட் உரிமையை ஹீரோ டாக்கீஸில் கொடுத்திருக்கிறார்கள். பைரஸிக்காரர்களைப் பொறுத்தவரை புதிதாய் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஸ்வீட் எடு கொண்டாடு என்கிற மனப்பான்மைதான். டவுன்லோடிட்டார்கள் அப்லோடிவிட்டார்கள். இதற்கு காரணம் இண்டர்நெட் ரைட்ஸ் வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் கிடையாது. திருடன் அவர்களின் வாடிக்கையாளராய் பணம் கொடுத்துத்தான் இருக்கிறான். ஆனால் இம்மாதிரியான தளங்களின் செக்யூரிட்டி தான் இங்கே கேள்வியாகிறது. ஆனால் நெட்ப்ளிக்ஸின் சமீபத்திய தயாரிப்பான ஐபாய் எனும் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே கிடைக்கும் அதையே நம்மூர் தமிழ் ராக்கர்ஸ் போல இருக்கும் அதகளக்காரர்களின் சைட்டுகளில் பார்க்க முடிகிற போது நம்மூர்காரர்களின் சைட்களின் செக்யூரிட்டிகள் எல்லாம் ஜுஜுபி.
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் பிரபல ஆஃப்களில் யார் முதலில் பைரஸி ஹெச்.டி பிரிண்டுகளை வெளியிடுகிறார்கள் என்ற போட்டியே இருக்கிறதாம். டென்மார்க்கில் விநியோகஸ்தராய் இருக்கும் என் நண்பரின் கூற்று. இவர்களின் பைரஸியினாலும், போட்டியாலும், சமீபகாலமாய் தமிழ் திரைப்பட விநியோகத்தையே நிறுத்தி வைத்திருப்பதாய் சொன்னார்.
இன்றைக்கு தமிழ் சினிமாவிற்கு ஆன்லைன் வியாபாரம் என்கிற பிரகாசமான வியாபாரம் உருவாகியிருக்கிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அதே போல மிக இந்தியாவிலும் ஆரம்பித்தால் கொஞ்சம் பைரஸிக்காரர்களுக்கு டஃப் பைட் கொடுக்கலாம். ஆனால் அங்கே ஏழு டாலருக்கு மாதம் பூராவும் படம் காட்டுகிறவர்கள் நம்மிடம் வரும் போது மாசம் ஆயிரம் கொடு, ரெண்டாயிரம் கொடு என்றால் மீண்டும் பைரஸிக்கே ஓட்டு போயிவிடும். அதை விட, எந்த தியேட்டரிலிருந்து பைரஸி எடுத்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் டெக்னாலஜி யை வைத்துக் கொண்டு கண்டு பிடித்த பின் இது வரை அந்த திரையரங்க உரிமையாளர் மீதோ, அல்லது திரையரங்கின் மீதோ நடவடிக்கை எடுத்ததாய் தெரியவில்லை. எத்தனையோ சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் மீது கேஸ் என்று போட்டு விட்டு அடுத்த வாரமே புதிய படத்தை வெளியிடுகிறார்கள். எவன் படம் பைரஸி போனால் எனக்கென்ன, நம்ம படம் வராத வரைக்கும் ஓக்கே என்கிற விதமான ஒற்றுமைதான் இங்கே பெரிய மைனஸ். அது மட்டுமில்லாமல் பைரஸியை ஒழிக்க வேண்டுமென்றால் தியேட்டர்கள் நல்ல தரமானதாய் இருக்க வேண்டும். உள்ளே நுழையும் போதே பார்வையாளனின் ட்ரவுசரை அவிழ்க்க முற்படும் வகையில் பார்க்கிங்கிலிருந்து ஆரம்பிக்கும் அராஜகம். என ஆரம்பித்து, அரசின் முழு ஆதரவும் வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல், தயாரிப்பாளர்களின் ஒற்றுமையில்லாமல், சகாய விலையில பார்க்க வகை செய்யாமல், நம் எண்ணம் துரிதமாய் ஈடேறாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Strange Things
நெட்ஃப்ளிக்ஸின் சைன்ஸ் பிக்‌ஷன், ஹாரர் சீரீஸ். மேட் டஃபர், ராஸ் டஃபர், எனும் இரட்டையர்கள் ட்ஃபர் ப்ரதர்ஸ் எனும் பெயரில் எழுதி இயக்கிய சீரீஸ். 1980களில் ஆரம்பிக்கிறது கதை. ஹாக்வின்ஸ் எனும் ஊரில் ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவனை தேடும் படலத்தில் ஆரம்பிக்கிறது. அவனுடய அம்மா, முரட்டு அண்ணன். என கதை போனாலும், கதையின் உண்மையான நாயகர்கள் தொலைந்த சிறுவனின் நண்பர்கள் . பையனின் தாய்க்கும் லோக்கல் போலீஸ் ஆபீசருக்குமான நட்பு, அதன் காரணமாய் அவர் ஒரு புறம் தீவிரமாய் தேட, சிறுவனின் நண்பர்கள் இவர்களை நம்பாமல் தேட ஆரம்பிக்கிறார்கள். அப்போது அவர்கள் ஒரு சைக்கோகினிஸிஸ் பவர் கொண்ட சிறு பெண்ணை சந்திக்கிறார்கள். அவளை தங்கள் வீடுகளில் பெற்றோருக்கு தெரியாமல் தங்க வைத்து, நண்பனையும் தேடுகிறார்கள். அவளின் மைண்ட் பவரினால் அவர்களுக்குள் ஏற்படும் குழப்பம், அவள் தப்பி வந்த ஊர் எல்லையில் உள்ள ஹாஸ்பிட்டல், அங்கு அவள் உள்ளாக்கப்படும் டெஸ்டுகள். ஊரில் நடக்கும் அமானுஷ்யங்கள், எனக் கலந்து கட்டி ஹிட்டித்த சீரிஸ். பெரும்பாலான எபிசோடுகளில் சிறுவர்கள் தான் நாயகர்கள் என்பதால் சுவாரஸ்யம் அதிகம். அவர்களின் அதீத ஆர்வம், புதிதாய் வந்த பெண்ணால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, பிரிவு. போட்டி. அப்பெண்ணின் நடிப்பு. என சுவாரஸ்ய திரில் ரைட் தான். என்ன ஸ்பீல் பெர்க்கின் ஈ.டி யை நினைவுப்படுத்தாமல் இருக்காது. கிட்டத்தட்ட அதன் உட்டாலக்கடி என்றே கூட சொல்லலாம். இயக்குனர்கள் அவர்களின் ரசிகர்கள் என்றும், இன்ஸ்ப்ரேஷன் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்
குடி அதன் தீமைகளையும் பற்றி பேசும் குறும்படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்த 5 நிமிட குறும்படம் அதை அழுத்தமாய் மனதை பிசையும் வகையில் சொன்ன படம். கவிஞர் சு. சிவராமன் என்பவரின் கவிதைக்கான வீஷுவல். படத்தின் க்ளைமேக்ஸில்ல் கிடைக்கும் சோகம் அடக்க நேரமாகும். குழந்தைகளை வைத்து படமெடுப்பது சிரமான காரியம். கவிதையின் ஆழத்தையும், சிற்ந்த நடிப்பையும் ஒரு சேர எதையும் குறைவில்லாமல் சிறப்பாய் அளித்திருக்கிறார் இயக்குனர் புஷ்பநாதன். வாழ்த்துக்கள். https://www.youtube.com/watch?v=Jtr0PVg7LkE
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடு நிசிக் கதைகள்
சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய் விட்டு அசோக் நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தேன். வழக்கமாய் உதயம் தியேட்டருக்கு முன்னால் செக் போஸ்ட் வைத்து செக் செய்து கொண்டிருக்கும் போலீஸார்.. இங்கே ரவுண்டாவுக்கு அருகில் செக் போஸ்ட் அமைத்திருந்தனர். ரவுண்டானாவை நெருங்கும் வேளையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென்று நியாபகம் வர, சட்டென வலது புறம் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் நியாபகத்துக்கு வர, வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம் இருக்கும் வளாகத்துக்கு சென்றேன். இருட்டாய் இருந்த வளாகத்தினுள் என் பின்னே யாரோ தொடர்வது போல இருக்க, திரும்பிப் பார்த்த போது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர்.
என்ன சார்..?” என்றேன்.
தண்ணியடிச்சிருக்கீங்களா?”
நான் ஒன்றும் புரியாமல்.. “இல்லியே?” என்றேன்.
கிட்ட வந்து ஊதுங்க.. நாங்க எடம் மாத்தினது தெரியாம வந்து மாட்டிக்கிட்டு, சட்டுனு எஸ்ஸாக ஏடிஎம்முக்கு நுழைச்சிட்டா மாட்டாம போயிருவீங்களா?” என்று கிட்டே வந்து தேவர் மகன் ஸ்டைலில் முகத்துக்கு அருகே தன் முகத்தை பார்க் செய்தார். மூச்சில் எந்த வாடையும் இல்லாததால்.. முகம் வாடிப் போக,

தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கிறது சட்டம். வண்டிய நிறுத்திட்டு, ஏடிஎம் போகக்கூடாதுன்னு கிடையாது.. உங்க கடமை உணர்ச்சிய பார்த்தா. ரொம்ப சந்தோஷமா இருக்கு தலைவரெ” என்றேன். அவர் ரியாக்‌ஷன்.. என்னத்த சொல்ல.

Post a Comment

2 comments:

kaja said...

நண்பா இணிமேல் தொட்டால் தொடரும் படத்தப்பத்தி பேசினிங்க எனக்கு கெட்ட கோவம் வரும் நான் பார்த்திலே மகா மட்டமான படைபபு

Unknown said...

Unless theatre tickets and canteen are affordable we cannot save cinema.