Thottal Thodarum

Feb 1, 2019

பஞ்சாட்சரம்


அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின் நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.

முன்னால் படை நடத்தி வந்தவன் கூட்டத்தைப் பார்த்து தேவையேயில்லாமல் “அமைதி.. அமைதி” என்று கத்தினான். அவன் போட்ட கூச்சல் தான் அங்கிருந்த நிசப்தத்தை கலைத்தது. குதிரையில் கட்டி வரப்பட்ட உருவத்திடமிருந்து எந்த விதமான் அசைவும் இல்லை. உடலெல்லாம் ரத்த சகதியாய் இருந்தது. அவன் அணிந்திருந்த அங்கி வித்யாசமாய் இருந்தது. கூட்டத்தை கலைத்துக் கொண்டு இன்னொரு படை வீரன் வேகமாய் வர, பின்னால் ஒரு சாரட்டு வண்டி அங்கே வந்து நின்றது. வண்டியில் இருந்த குதிரையோட்டி, அதீதமான பவ்யத்துடன் வண்டியை திறந்து விட்டான். உள்ளிருந்திருந்து ஒரு வெண் தாடி பெரியவர் இறங்கினார். முகம்  முழுவதும் இருந்த தாடியை மீறி கண்களில் ஒரு பளபளப்பும் அதிகாரமும் இருந்தது. நெற்றியில் தகதகத்த திருநீறு அவரின் முகத்திற்கு மேலும் ஒரு களையை கொடுத்தது. தொண்டையை கனைத்தபடி ”எனதருமை மக்களுக்கு இந்த ராஜகுருவின் ஆசீர்வாதம் உரித்தாகுக. இதோ இங்கே குதிரையின் சேணங்களில் பூட்டப்பட்டு இழுத்து வரப்பட்டிருக்கும் இந்த தேசத் துரோகியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக
, நம் அரசனின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறேன்.” என்றதும் கூட்டத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டது. ராஜகுரு அருகில் இருந்த குதிரை வீரனை திரும்பிப் பார்க்க, அவன் குதிரையின் பின்பக்கத்தில் “சுளீர்” என பிரம்பால் அடித்து, கூட்ட்த்தை நோக்கி விரைவாய் ஒரு சுற்றி சுற்ற ஆரம்பிக்க, சலசலப்பு சட்டென அணைந்து ஊசி விழுந்தால் கூட ஒலி உண்டாகும் அளவிற்கான அமைதி உண்டானது.

அங்கி மனிதனை கயிற்றிலிருந்து விடுவித்து எழுப்பி, நிற்க வைக்கப்பட்டான். அவனால் நிற்க கூட முடியவில்லை. சரிந்து சரிந்து விழுந்து கொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தவனின் தலையில் குளிர்ந்த நீர் வேகமாய் ஊற்றப்பட, அரை மயக்கத்திலிருந்து விழித்தான். அவன் விழித்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒரு பார்வை பார்த்ததுதான் தாமதம். அருகிலிருந்து வீரனொருவன் தன் சாட்டையை சுழற்றி அவன் மேல் வீச, அவ்வளவு பெரிய மைதானத்தில் சாட்டை உடலில் படும் ‘சுளீர்’ ஒலி தெளிவாகக் கேட்டது. அங்கி மனிதன் வலி தாளாமல் கத்தும் ஒலி வெளிவராமல் ஒரு பெரிய ஓலமாய் எதிரொலித்தது. அதற்கு காரணம் அவனின் வாயில் அடைக்கப்பட்டிருந்த துணி.

ராஜகுரு கண்களில் ஒரு விதமான குரூரம் தாண்டவமாடியது. “ என்னே நெஞ்சழுத்தம் இவனுக்கு? இவ்வளவு தண்டனைகளுக்கு பிறகும் அந்த பஞ்சாட்சரத்தை சொல்ல விழைய என்ன தைரியம் இருக்க வேண்டும்?. எனதருமை மக்களே.. இவன் யாரென்று உங்களுக்கு தெரியும். இவன் ஒரு பித்தன். மக்களின் மனதில் உட்புகுந்து மாற்றும் ஒரு மாயாவிச்சித்தன். மனநிலை பிழன்றவன். உங்களுக்கே தெரியும். நாம் தழுவும் சமயம் எதுவென. அப்படியிருக்க நமக்கு பிடிக்காத பஞ்சாட்சரத்தை உச்சரிப்பது எவ்வளவு கேடானது என்பதும், அதை உச்சரித்தால் அதற்கான தண்டனை என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இச்சமயத்தில்  இந்த பித்தன், மூடன், நிர்மூலன் உங்களிடம் திரும்பத் திரும்ப ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி, அதிலும் நம் உலகம் அறியாத மொழியில் ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி உங்கள் மூளையை மழுங்கச் செய்திருக்கிறான்.

பஞ்சாட்சரத்தை உபயோகிப்பதையே தேசத்துரோகமாய் கருதப்படும் நம் நாட்டில் இருக்கிற பிரச்சனை போதாதென்று புதியதாய் நமக்கு தெரியாத, புரியாத ஒரு புதிய பஞ்சாட்சரத்தை சொல்லி அதை பரப்புவதை எப்படி நம் மன்னர் பொறுத்துக் கொள்ள முடியும்?. உலகின் ஒரே ஒரு உயர்ந்த சமயமான நம் சமயத்தில் சொல்லாத, நிகழ்த்தாத ஆச்சர்யங்களையா? இவன் சொல்லும் புரியாத பஞ்சாட்சரம் செய்யப் போகிறது?. இவனைப் போன்ற ஆட்களுக்கு தகுந்த தண்டனையை கொடுத்தால் தான் இம்மாதிரியான நிர்மூடர்கள் மீண்டும் கிளர்ந்தெழ மாட்டார்கள்.  மக்களிடையேயும் தேவையில்லாத ஒரு குழப்பம் உருவாகாமல் இருக்கும். இதை நன்கறிந்த நம் அரசர் தீர்க்கமாய் யோசித்து இட்ட தண்டனைதான் இந்த கழுவேற்றும் தண்டனை. கழுவேற்றிய நொடியிலிருந்து அவனுக்கு கிடைக்கப் போகும் வலியின் உச்சம் அவன் தன்னை தானே உணர்ந்து கொள்ள, தான் செய்த தவறின் பலனை உணர்ந்து கொள்ள, அவனின் ஊழை களைய  ஒரு வாய்ப்பாக அமையும்.”  என்றார்.

ராஜகுருவின் பேச்சுக்கு மறுபேச்சென்பது அரசரிடமே இல்லை என்பது மக்களுக்கு தெரியுமாதலால் கூட்டத்தில் ஏதும் சலசலப்பில்லை. மெல்ல கூட்ட்த்தை விலக்கிக் கொண்டு ஒரு தேர் வர, மக்கள் தங்களையறியாமல் குனிந்து வணக்கம் செலுத்தினர். அரசன் தேரினிலிருந்து இறங்கி மெல்ல மக்களைப் பார்த்து கையசைத்து, ராஜகுருவை பார்த்தார். ராஜகுருவின் பார்வையில் எல்லாம் தயார் என்ற பதிலிருக்க, அரசன் நடக்கட்டும் என்பது போல தலையாட்டினான். அங்கியணிந்தவனை இரண்டு வீரர்கள் தோள் பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். அரசன் அவனை பார்த்து “அரச நிந்தனைக்கு உட்பட்டால் இதுதான் பதில். உன் பஞ்சாட்சரம் உன்னை காப்பாற்றட்டும்” என்று சொல்லி பலமாய் சிரித்தார். அந்த சிரிப்பின் எக்காளம் அந்த மைதானமெங்கும் எதிரொலித்தது.

வீரர்கள் அவனை தரையில் உடல் தேய்த்தபடி இழுத்து சென்று கழுவேற்றும் மேடை மீது போட்டார்கள். அவன் ஏற்கனவே அரைமயக்க நிலையில் இருந்தான். அவன் மீது மீண்டுமொரு  குடம் குளிர்ந்த நீர் ஊற்றப்பட சிறிதும் சலனமில்லை. ஒரு வேளை இறந்துவிட்டனோ? என்ற சந்தேகத்துடன் மூக்கின் அருகில் மூச்சிருக்கிறதா? என்று கை வைத்து சோதித்தான் வீரன்.  இருக்கிறது என்பது போல பக்கத்திலிருந்தவனைப் பார்த்து சிரித்துவிட்டு, மேலும் ஒரு குடம் தண்ணீரை எடுத்து முகத்தில் மிகுந்த வேகத்தில் ஊற்றினான். தண்ணீரின் வேகம் தாங்காமல் மூச்சு திணறி “ஹாக்க்க்க்” என்ற சத்தத்துடன் சிலிர்த்தான். வீரர்கள் முகத்தில் சிறிய மகிழ்ச்சியுடன். அவனை அப்படியே மேலேழுப்பி, அவன் பெரிய அங்கியை களைந்து அம்மணமாக்கினார்கள். கூட்டத்தில் இருந்த பெண்கள் எல்லாம் தலைகுனிந்து கொள்ள, ஆண்களின் கண்களில் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தது.

அம்மணமாக்கிய அவனின் கைகள் பின்பக்கமாய் கட்டப்பட்டது. வீரர்கள் கழுமரத்தின் கூர் முனையை அவனின் ஆசனவாய் நுனிக்கு சரியாய் பொருத்தி உட்கார வைத்தார்கள். கூட்டத்தில் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்ற ஒலி ஒரு சேர ஒலிக்க, ஒரு மாபெரும் பெரு நாகத்தின் மூச்சுக்காற்றைப் போல எழும்பி அடங்கிய நேரத்தில், அங்கிக்காரனின் உடல் கனத்தினால்  உட்கார்ந்த மாத்திரத்தில் கழுவின் கூர் முனை அடிவயிற்றின் முனையில் குத்தியிருக்க வேண்டும். வலி தாங்காமல் அவன் வாயிலிருந்த துணியை மீறி ஒவ்வொரு வார்த்தையாய் சொல்ல ஆரம்பிக்க, அரசனுக்கு பயந்து ஏதும் பேசாமலிருந்த மக்கள் இப்போது முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவனுடன் சேர்ந்து அந்த பஞ்சாட்சரத்தை பெருங்குரலெடுத்து ஆவேசமாய் உச்சரிக்க ஆரம்பித்தார்கள்.
J…..E….S…..U…..S” 

Post a Comment

No comments: