Thottal Thodarum

Feb 16, 2019

Sammohanam

Sammohanam
ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து பாட்டு பாடுவாங்களோ என்று கற்பனையிலாவது கடைசி ரீலுக்கு முன் ஒரு குத்துப் பாட்டை போட்டு நம்மை ஜெர்க்காக்கி உட்கார வைக்கும் தெலுங்கு சினிமாவில் அவ்வவ்ப்போது தென்றலாய் படங்கள் வருவதுண்டு. அதில் முக்கியமானவர் சேகர் கம்மூலா.

இவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ், சமிபத்திய ஃபிடா வரைக்கும் என சொல்லலாம்.  அதே நேரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன பட்ஜெடுகளில் ஃபீல் குட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கிய இயக்குனர் மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி. இவரது முதல் படமான கிரகணம் தேசிய விருது பெற்ற படம். அதன் பிறகு இவர் எடுத்த படங்களில் அஸ்தா சம்மா, கோல்கொண்டா ஹைஸ்கூல், அந்தாக்க முந்து ஆ தரவாத்தா, ஜெண்டில்மேன், அமிதுமி போன்ற படங்கள் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களே. மினிமம் கேரண்டி காதல் கதை. அதில் கொஞ்சம் நகைச்சுவை, நல்ல எமோஷன் என கலவையாய் அமையப் பெற்ற படங்கள். இவரது புதிய படமான சம்மோகனமும், அந்த லிஸ்ட் தான்.

ஹூயூக்கிராண்ட், ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த “நாட்டிங்ஹில்” படத்தை லேசாய் தழுவியபடம் என்றாலும், ப்ரசெண்ட் பண்ண விதம் ஆஸம். சுதிர்பாபு ஒரு ஆர்டிஸ்ட். குழந்தைகளுக்கான அனிமேசனில் தான் ஆர்வம். நல்ல அப்பா, அம்மா, தங்கை என அருமையான குடும்பம். அவர் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு கேட்கிறார்கள். தன்னையும் ஒரு கேரக்டர் ரோலில் நடிக்க ஒத்துக் கொண்டால் வீடு தருகிறேன் என்கிறார் சினிமா ஆர்வலரான சுதிர்பாபுவின் தந்தை நரேஷ். பிரபல ஹீரோயின் சமீரா நடிக்கிறார் என்றதும், ஊரே ஆர்வமாயிருக்க, சுதிர் மட்டும் பெரிய சுவாரஸ்யம் காட்டவில்லை. சமீரா டயலாக் பேசும் கொச்சை தெலுங்கை கிண்டல் செய்ய, தன் தெலுங்கை சரி செய்து கொள்ள சுதிரையே வசனம் சொல்லித்தருமாறு பணிக்கிறாள். இருவருக்கிடையே ஆன நெருக்கம் வளர்கிறது. ஒர் மழை நாளில் சுதிர்பாபு வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருவருக்கிடையே ஆன நெருக்கம் அதிகமாகி, விலகுகிறார்கள். தன் காதலை சொல்லப் போன சுதிரை அவள் மறுக்கிறாள். பின்பு என்ன ஆனதுதான் கதை.

சிம்பிளான லைன். அதை அழகாய், அழுத்தமாய் மாற்றியது இயல்பான திரைக்கதை. வசனம். அண்ட் இயக்கம். காதல் மறுதலித்த சோகத்தில் மகன். தான் நடித்த படத்தின் தன் காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்ட விஷயம் தெரிந்து நொந்து போயிருக்கும் கணவன், அண்ணன் தங்கைக்குள்ளான சண்டையில் முறுக்கிக் கொண்டிருக்கும் தங்கை என ஆளாளுக்கு தனித்தனியாய் இருக்க, மகனுக்கு காப்பி எடுத்துக் கொண்டு வந்த அம்மா “எல்லாரும் மூட் அவுட் ஆகி ஒவ்வொரு ரூமுல இருக்க, நான் மட்டும்தான் சந்தோஷமா ரூமுக்கு ரூம் சர்வ் பண்ணிட்டிருக்கேன்” என்று ஆரம்பித்து மகனுக்கு ஆறுதல் சொல்லும் காட்சியில் அவர் பேசும் வசனங்களும், அதை சுதிர் பாபு எதிர்கொள்ளும் விதமும், அவ்வளவு இயல்பு.

மொட்டை மாடியில் சுதிர்பாபுவும், அதிதியும் பேசும் காட்சி லைட்டான ஹைக்கூ. அக்காட்சியில் வரும் க்ளேசப் வசனங்கள் அட்டகாசம். அதற்கு பின்னணியாய் உறுத்தாத இசை இன்னும் சூப்பர்.


அனுபமா கிருஷ்ணமூர்த்தி, நரேஷ் என அனுபவமிக்க நடிகர்களின் இயல்பான பங்களிப்பு. அதிதி ராவின் பேசும் கண்கள். ரொம்பவுமே அடக்கி வாசிக்கப்பட்ட அண்டர்ப்ளே சுதிர்பாபு, அவ்வப்போது மனசாட்சியாய் அறிக்கைவிட்டுப் போகும் அவரின் நண்பர் ராகுல் ராமகிருஷ்ணா என நல்ல நடிகர் பட்டாளம். மிக இயல்பான வசனங்கள். உறுத்தாத பிண்ணனி இசை, இரைச்சல் இல்லாத விவேக்கின் இசை. அதீத க்ளோசப்களில் கூட கவிதையாய் வண்ணம் இழைக்கும் பி.சி.விந்தாவின் ஒளிப்பதிவு, படம் நெடுக இழையோடும் இயல்பான நகைச்சுவை போன்ற பல ப்ளஸ்கள் இருந்தாலும், நாடகத்தனமான நரேஷின் கேரக்டர். சினிமா காட்சிகள். ஹாலிவுட் டெம்ப்ளேட் க்ளைமேக்ஸ் போன்றவை லேசான உறுத்தல்தான். பட். .ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பீல் குட் படம் பார்த்த திருப்தி. 

Post a Comment

No comments: