பெயரைக் கேட்டதுமே அட வித்யாசமா இருக்கே என்று தோன்றியது. நண்பர் ஒருவர் சாப்பிட்ட கதையை சொன்னதும் நாமும் ஒரு முறை ட்ரை செய்யலாமே என்று அந்தப்பக்கம் வண்டியை விட்டேன். லாயிட்ஸ் ரோடில் அதிமுக அலுவலகத்தின் முன்னே போகும் தெருவில் இருப்பதாய் சொன்னார்கள். ஏனோ என் கண்ணில் அன்று படவேயில்லை. விடாமல் சென்ற வாரம் இரவில் அந்தப்பக்கம் போகும் போது அவர்கள் வைத்திருந்த வழிகாட்டி மின்சார போர்டு தெரிய கடையை கண்டுபிடித்துவிட்டேன்.
மிகச் சிறிய கடை. மொத்தமாய் இருபது பேர் ஒன்றாய் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் சாப்பிடக்கூடிய கடை தான். மிகச் சிறிய மெனு. ஆனால் இந்த காம்பினேஷன் என்றைக்குமே தோற்காது நன்றாக உள்ள பட்சத்தில். தமிழர்களின் உணவான இட்லியை விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. இட்லி என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சைட்டிஷ் ஞாபகம் வரும். எனக்கு நன்கு முழுவதும் அரை படாத, பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை என்ற அளவில் கடித்து மென்று சாப்பிடும்படியான மிளகாய் பொடி, இல்லையேல் நல்ல பச்சை மிளகாய் போட்டு கெட்டியான தேங்காய் சட்னி, அல்லது வெங்காய சட்னி தான் உடன் ஞாபகத்திற்கு வரும். நான் வெஜ்ஜில் என்றால் நண்பர்கள் வீட்டில் தீபாவளியன்று சாப்பிடும் இட்லி கறிக் குழம்பு. நினைத்தாலே நாவூரும். நல்ல சிக்கன் கிரேவியோ, அல்லது மீன் குழம்போ இருந்தால் இன்னும் விஷேஷம். இவர்களின் கடையில் இட்லியோடு கோழிக்குழம்பு தருகிறார்கள். அதனால்தான் கோழி இட்லி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இட்லி நல்ல டீசண்டான சைசில் இருந்தது. முருகன் இட்லியைப் போல அவ்வ்வளவு சாப்டாக இல்லையென்றாலும், நன்றாகவே இருந்தது. கூடவே பெப்பர் போட்ட கோழிக்குழம்பு கோழி பீஸோடு. சுடச்சுட. நல்ல மழை நேரத்தில் போயிருந்தததால் சூடான இட்லியும், சிக்கன் குழம்பும், அதுவும் மிளகு போட்டதால் மழையின் குளிருக்கு இதமாய் இருந்தது. ஒரு ப்ளேட்டில் மூன்று இட்லியுடன் ஒரு கப் சிக்கன் குழம்போடு 60 ரூபாய்க்கு தருகிறார்கள். வெஜிட்டேரியன் என்றால் அதே மூன்று இட்லி உடன் கெட்டியாய் கார சட்னி, இஞ்சி, பூண்டு சட்னி. 30 ருபாய்க்கு தருகிறார்கள். இட்லியுடன் எதை தொட்டு சாப்பிட்டாலும் அதற்கு ஒரு மகிமை வந்துவிடும். சிக்கன் குழம்பில் ரெண்டு சின்ன பீஸ்கள் இருந்தது. குழம்பு நல்ல மணத்தோடு, அதிக காரமில்லாமலும், இருந்தது. நல்ல காரசாரமான கிரேவியாய் பழகியவர்களுக்கு கொஞ்சம் மட்டுதான் என்றாலும். நல்ல குவாலிட்டி.
இட்லிக்கு கொடுக்கும் தட்டு மிகச் சிறியதாய் இருப்பதால் எல்லோரும் டீசெண்டாய் இட்லியை பிய்த்து கிரேவியில் தோய்த்தெடுத்து சாப்பிடுகிறார்கள். எனக்கு இட்லியை கிரேவியோடு லேசாய் பிசிறி சாப்பிட்டால்தான் உள்ளே இறங்கும். அதனால் தட்டை கொஞ்சம் பெரிதாகவே தரலாம். அங்கேயே எலக்ட்ரிக் இட்லி குக்கரில் சுடச்சுட சுட்டுக் கொடுக்கிறார்கள். உடன் ஹீட்டரில் கோழிக் குழம்பு. காலை 11 மணி முதல் 3 வரையும். மாலை 5-11 வரையும் சர்வீஸ் செய்கிறார்கள். சைவ இட்லிக்கு உடன் நல்ல சாம்பார் கொடுத்தால் நன்றாக இருக்கும். இவர்களின் கடைக்கும் கிடைத்திருக்கும் வரவேற்ப்பை பார்த்து மேலும் சென்னை முழுவதும் இதே போல சிறு சிறு உணவகங்களை திறக்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோழி இட்லி
லாயிட்ஸ் ரோடு,
அதிமுக அலுவலகம் எதிரில்.
Comments
மிக intresting வரிகள் . .
தேவையில்லாத ஒரு ஆலோசனை . . .
அட்லிக்கு போட்டியா உங்க பேரை இட்லி ன்னு மாத்திக்குங்களேன் . . .
தொட்டால் தொடரும்
a film by IDLI