Thottal Thodarum

Aug 24, 2013

அனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை

ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அத்தொழிலின் மேல் அதீத ஈடுபாடும், காதலும் வேண்டும். அப்படித்தான் நான் சினிமா மீதான அதீத ஆர்வத்தில், காதலில் இருபது வருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த தொழில் வீடியோ கேசட் பார்லர். இன்ஜினியரிங் படித்துவிட்டு பார்ட்டைமாக டோர் டெலிவரியில் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விட ஆரம்பித்த தொழில் மெல்ல, வளர்ந்து பார்லாராய் மாறியது. மிக நன்றாக போய்க் கொண்டிருந்த காலத்தில் பார்ட்னர்களிடையே கொஞ்சம் பிரச்சனை வர, மீண்டும் அதே ஏரியாவில் வீடியோ கடையை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அண்ணாமலை ரஜினி கணக்காய் இதே ரோட்டில் கடை ஆரம்பித்து வென்று காட்டுவேன் என்ற சபதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொழில். வெறும் நம்பிக்கை மட்டும் என்ன இந்த சபத்தத்தை போட வைக்கவில்லை. அதற்கான அடிப்படை விஷயங்களிலிருந்து ரசனை வரை என்னை நான் வளர்த்துக் கொண்ட திமிர் என்றும் கூறலாம். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு படத்தை எடுக்கும் முன் அதைப் பற்றி சின்னதான் ஒரு சில தகவல்கள், தொடர்ந்து அவர்கள் பார்க்கும் படங்கள் மூலமாய் அவர்களின் ரசனை அறிந்து நான் சிபாரிசு செய்யும் படங்கள்.  அவர்களின் ரசனைக்கேற்ப மாற்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகப்படுத்தும் விஷயம் என எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு நெருங்கிய பந்தம் உருவாகிவிடும் அளவிற்கு ஆகிவிடும். அதற்கு காரணம் நான் அத்துனை படங்களையும் பார்த்துவிடுவேன்.  ஃபோர்ன் வகை படங்கள் உட்பட. என் ரசனையின் மேல் அவர்களது நம்பிக்கை வளர, வளர, நான் என்னை வளர்த்துக் கொண்டேயிருந்ததாலும், என் வியாபாரமும் வளர்ந்தது.


எதற்கு இவ்வளவு பெரிய பில்டப் என்று கேட்டீர்களானால் மேலே உள்ள புத்தகக் கடை திறப்பு விழாவிற்காகத்தான். அகநாழிகை எனும் இணையதளம் மூலம் அறிமுகமானார் வாசு. நேரில் பார்த்த போது பழகுவதற்கு மிக இனிமையான நண்பராய் உணர்ந்தேன். அந்த இனிமை கொடுத்த சந்தோஷம் மேலும் அவருடன் நெருக்கமாக்க உதவியது. அப்போது தான் அவருடய பன் முகத்தன்மையும், அவரது ரசனைகளைப் பற்றியும் புரிந்தது. வாசு அருமையான வாசகர். இன்று வந்த என்னிலிருந்து எதையும் விட்டு வைத்ததாய் தெரியவில்லை. அவரின் மூலம் பல நல்ல நூல்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஒரு புத்தகத்தை பற்றி சொல்லி, அதை படித்தீர்களா? என்று கேட்டால் சட்டென அதில் சிறந்ததாய் உள்ள விஷயத்தை சொல்வார். இன்றைய பல்ப்லிருந்து சங்க கால இலக்கியம் என தன் வாசக அனுபவத்தை மிக அழகாய் விளக்குவார். அவருடன் நான் செலவழித்த நேரங்கள் என் வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள். அப்படிப்பட்ட ஒருவர் புத்தகக்கடை திறப்பது அங்கு இனி வரும் காலங்களில் புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். புத்தகக்கடைகள் நடத்தும் பெரும்பாலான ஆட்கள் அங்கிருக்கும் புத்தகங்களில் சில சதவிகிதங்கள் கூட படிக்காமல் இது அருமை, சமகால இலக்கியத்தில் முக்கியமானது, தலித் இலக்கியம், என ஜல்லியடிக்கும் வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு வியாபாரம் மட்டுமே செய்பவர்கள் தான் அதிகம்.  இவருடன் இணையும் இன்னொரு நண்பர் மணிஜி.

தண்டோரா என எல்லோராலும் அறியப்பட்டு, மணிஜி என்று தன் பெயரோடு அவரே மரியாதை நிமித்த ஜியை போட்டுக் கொண்டவர். என் நெருங்கிய நண்பர். விளம்பர உலகில் நல்ல அனுபவமுள்ளவர். நல்ல ரசனையுள்ள மனிதர். புத்தகம் போடாமலேயே எழுத்தாளராய் அறியப்பட்டவர். இவரது சர்காஸ்டிக் தஞ்சாவூர்காரர் நக்கல் பரந்து ரசிக்கப்படும் ஒன்று. குட்டிக் குட்டியான நச் கவிதைகளுக்கு சொந்தக்காரர். அகநாழிகை வாசுவின் நட்பின் இறுக்கம் இவரையும் ஒர் சிறந்த வாசகனாக்கி தன்னை மேலும் வளர்த்துக் கொண்டவர். இவர்கள் இருவரும் இணைந்து இந்தப் புத்தகக்கடையை இன்று ஆரம்பிக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் ரசனையும், ஆழ்ந்த வாசிப்பனுபவமும், புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும், புதிய புதிய வாசிப்பனுபவத்தை அறிமுகப்படுத்தும் இடமாகவும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  எனவே உங்கள் அனைவரையும் என் சார்பாகவும், என் இனிய நண்பர்கள் சார்பாகவும் உங்கள் அனைவரையும் அகநாழிகை புத்தக கடை திறப்பு விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வருக.. வருக.. உங்கள் நல்லாதரவை தருக.. 
 கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்....!

Unknown said...

காலத்திற்கேற்றபடி வாழ்ந்திட கற்றுக் கொடுக்கும் ஆசான்.

arul said...

thanks for the introduction and invitation

Hari said...

Super sir .. Convey my wishes to them..

'பரிவை' சே.குமார் said...

வாசு அண்ணா மற்றும் மணிஜியின் அகநாழிகை புத்தக நிலையம் சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...