Thottal Thodarum

Nov 1, 2013

தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்

ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று  கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.


பறக்கப் போகிற வண்டியைப் பொறுத்துதான் அந்த காட்சிக்கான பட்ஜெட்  அதிலிருந்து ஆரம்பிக்கிறது. நம் கனவை நினைவாக்க போராடும் போராட்டம். இந்த இடத்தில் தான் ஒரு தயாரிப்பாளர் மீதான மரியாதை அதிகமாகிறது. சுமோன்னா ஒரு விலை. ஸ்கார்பியோன்னா ஒரு விலை, குவாலிஸ்னா ஒரு விலை இப்படி விலையைப் பார்த்து வண்டியைக் கவிழ்ப்போம்னு நினைச்சிட்டிருந்தா நேரத்தில தயாரிப்பாளர் “இதோ பாருங்க சங்கர். வண்டில போறது அமைச்சர். ஒரு அமைச்சர் என்ன வண்டியில போனா சரியாயிருக்கும்னு யோசிக்கிறீங்களோ அந்த வண்டியில போனாத்தான் நம்பிக்கை வரும். அதனால யோசிக்காதீங்க.. சரியான வண்டியை செலக்ட் செய்யுங்க” என்று உடனிருந்தார். நம் கனவை நனவாக்கும் ஆதரவு.

 அப்படியென்ன இது பெரிய விஷயம்? எல்லா படங்களிலும் நடப்பதுதானே? 50 வருஷமா நடக்கிற விஷயம் இதை பெருசா சொல்ல என்ன இருக்கு? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.  எனக்கும் அப்படித்தான் தோன்றியது. எத்தனையோ படங்களில் பதியப்பட்ட காட்சிதானே இதில் என்ன பெரிய டென்ஷனென்று. வண்டி ஜம்ப்புக்கான ரன்வே ரெடியாகிவிட்டது. வண்டியை ஓட்டப்போகும் குட்டியண்ணனை மாஸ்டர் நாக்கவுட் நந்தா அறிமுகப்படுத்தினார். அகண்ட தோள்களுடன் இருந்தார். பார்க்க கரடு முரடாய் இருந்தாலும் பேச்சில் குழந்தைத்தனம் இருந்தது. 

“அண்ணே.. லெப்டுல ஜிம்மில ஒரு எம்.எக்ஸ். இங்க ஒரு எபிக், ராம்புக்கு கீழே ஒரு கோ ப்ரோ. எதிர்ல வர்ற கார்ல ஒரு 5டி, அது தவிர ஒரு கோ ப்ரோ உங்க வண்டிக்குள்ள” என்று சொல்ல.. “அண்டர் டேக்கன் “ என்றார் குட்டியண்ணன். புரிஞ்சிக்கிட்டாராம். ராம்ப் கடகடவென அடிக்க ஆரம்பித்தார்கள். இதன் நடுவில் அவர் ஸ்கார்பியோ காரை எடுத்து ஒரு நாலு வாட்டி ரன் வேயில் ஓட்டினார். டெஸ்ட் ரைடே80 கி.மீ ஸ்பீட். எல்லா கேமராக்களையும் பிக்ஸ் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டம் வேறு சேர்ந்ததுவிட, எல்லார் முகத்திலும் ஆர்வம் அதிகமான காணப்பட்டது.  குட்டியண்ணன் பதட்டமில்லாமல் இருந்தார்.

”இது மாதிரி எத்தனை ஜம்ப் பண்ணியிருக்கீங்கண்ணே?”

“அது நிறைய சார். என்றபடி தன் கையில் உள்ள ஒரு குட்டி செல் போனில் ஒரு வீடியோவை காட்டினார். அதில் இரண்டு கார்கள் தலைக்குப்புற விழுந்து பல்டியடித்துக் கொண்டிருந்தது. “இரண்டாவது கார்ல நான் தான் இருந்தேன்” என்றார் பெருமையாய். வீடியோவை பார்த்துவிட்டு நிஜத்தில் அதனுள் இருந்த ஆளைப் பார்க்கையில் லைட்டாய் ஜெர்க்காகத்தான் செய்தது.

“இது வரைக்கும் எத்தனை ஜம்ப் பண்ணியிருப்பீங்கண்ணே?

“சரியா ஞாவகமில்லை. 60-70 இருக்கும்”

“பெருசா அடி ஏதும் பட்டதில்லையில்லை?

“அது இல்லாமய.. உடம்பு பூராவும் உள் காயமா நிறைய இருக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு ஓட்ட வேண்டியதுதான். உனுக்கு ஒண்ணு தெரியுமா எங்களூக்கு எல்லாம் மெடிக்கல் இன்சூரன்ஸ், லைஃப் இன்ஸூரன்ஸ் ஏதும் கிடையாது. தெரியுமா?” என்றபோது அவர் குரலில் வருத்தமேயில்லை. பெருமைதான் இருந்தது. இதெல்லாம் இல்லாமயே இப்படியெல்லாம் செய்யுறோம் பாத்தியா என்ற பெருமை.

“வண்டியில ஏறச் சொல்ல என்னா நினைப்பீங்க?”

“ஒண்ணியும் நினைக்க மாட்டேன். நினைச்சா.. வண்டி ஒழுங்கா ராம்புல ஏறாது”

“வண்டிய ரன்வேல ஓட்டிட்டேன்னா அவ்வளவுதான். ஃபீனீஷ். அதுக்கப்பால ரன்வேல ஒரு சைடா, ஏத்தும் போது கண்ணை மூடிக்குவேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நம்ம கையில இல்லை. என்று மேலே கையைக் காட்டினார். ஒரு முறை ஸ்பீடாய் வண்டி ஓட்டி பேலன்ஸ் போய் சிராய்ப்பு வாங்கியதிலிருந்து மழைக்காலங்களில் ஸ்பீடாய் வண்டியோட்ட இன்றும் யோசித்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து பார்க்கையில் அபத்தமாய் இருந்தது. வீழ்ந்தால் என்னவாகும் என்று தெரிந்தே மறுபடியும் மறுபடியும் விழும் வேலை செய்யும் அவரை பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.

நந்தா மாஸ்டர், கேமராமேன் ஆம்ஸ்ட்ராங், என்னை, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர், குட்டியண்ணனை ராம்புக்கு முன்னால் நிற்க வைத்து எலுமிச்சை பழம் சுற்றிய போது வயிற்றுக்குள் சுர்ரென அமிலம் ஊறியது. அதுவரை எனக்குள் எல்லா கேமராவிலேயும், சரியா விழணும். எத்தனை ஷாட் கிடைக்கும். கேமரா ஆங்கிள் வச்ச இடத்தில சரியா வண்டி விழணும்னு இப்படியெல்லாம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த என் நினைப்பில் சட்டென “அப்பா பெரியாண்டவனே.. குட்டியண்ணனுக்கு ஏதும் ஆகாம நல்ல படியா எழுந்து வரணும் என்று தோன்றியது. மாஸ்டரில் ஆரம்பித்து, ஒவ்வொருவராய் குட்டியண்ணனை கட்டி அணைத்து “நல்லா வாங்கண்ணே” என்று வாழ்த்தும் போது கண்ணீர் மல்கி எங்கே அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. அண்ணன் எந்த விதமான உணர்வும் இல்லாமல் எல்லோரிடமும் கை கொடுத்துவிட்டு, சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து ரன் வேயின் அடுத்த முனைக்கு கிளம்பினார்.  கிளம்பிய அடுத்த நொடியில் எல்லார் உடலிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, ஆர்ம்ஸ்ட்ராங், எல்லா கேமராக்களையும் சரியாக பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? என்று ஒன்றுக்கு மூன்று முறை செக் செய்துவிட்டு “ரெடி மாஸ்டர் “ என்று வாக்கியில் கத்த, மாஸ்டர் குட்டியண்ணுக்கு அருகில் இருந்த அஸிஸ்டெண்டுக்கு “ரெடி ரோட் கிளியர் வண்டி கிளப்புங்க.. ஆக்‌ஷன்” என்று கத்த, ஆயிரம் பேர் இருந்த இடத்தில்  மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறேதுமில்லை.  “வண்டி ஸ்டார்ட் ஆயிருச்சு” என்று வாக்கியில் பதில் வந்ததும் எல்லார் கவனமும், வண்டி வரும் திசையிலேயே இருக்க,  தூரத்தில் வெகு வேகமாய் ஒரு கார் வரும் சத்தம் மெல்ல கேட்க, கிட்டே வர வர, அதன் சத்தம் அதிகமாக பீல்டில் எட்டிப்பார்த்த மாஸ்டர் வண்டி வந்திருச்சு என்று கத்திக் கொண்டே மறைவிடத்தை நோக்கி ஓட, ஐந்து கேமராக்கள் ஒரே நேரத்தில் சுழல, பெரும் சத்தத்துடன் வந்த வண்டி, ராம்பின் மேல் டம்மென்ற சத்தத்துடன் மோதி ஏறி, சட்டென அந்தரத்தில் ஒரு சுழன்று சுழன்ற வேகத்தில் தரையில் நெட்டுக்குத்தாய் சட்டென குத்தி, எக்குத்தப்பாய் மறுப்பக்கம் சுழன்று தரையில் மோத, எதிர் திசையில் 5டியை முகத்தில் கட்டிக் கொண்டு வந்த குவாலிஸ் ட்ரைவர் தன் கார் மீது மோத இருந்த குட்டியண்ணன் வண்டியை படு நேக்காய் தவிர்த்து, காரில் இருந்த படி “ஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி குட்டியண்ணனின் வண்டியை அரைவட்டமடித்து ஸ்கிட்டோடு தன் கேமராவை மீண்டும் குட்டியண்ணனின் வண்டியை நோக்கி திருப்ப ஸ்கிட் செய்து புழுதி பரக்க நிறுத்திய விநாடி, குட்டியண்ணனின் வண்டியும் நின்றது. சடுதியில் நடந்துவிட்ட இத்தனை நிகழ்வுகளில் ஆச்சர்யத்தையும்  தாங்க முடியாமல் மொத்த கூட்டமும் அதே அமைதியுடன் இருக்க, சட்டென ரிலாக்சான குழு ஆட்கள் குட்டியண்ணனின் வண்டியின் அருகே ஓடினார்கள்.

உள்ளேயிருந்த அண்ணணை உடைந்த கண்ணாடிகளூக்கிடையே விலக்கி, மெல்ல தன் உடலில் இருந்த பேட் எல்லாவற்றையும் விலக்கி மெல்ல கண் விழித்து சிரித்தபடி எழ,  குட்டியண்ணன் ஸேஃப். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி. விழுந்த அதிர்ச்சி, ஆச்சர்யம் எல்லாவற்றையும் மீறி எல்லா கேமராக்களிலும் ஒழுங்காய் பதிவாயிருக்கிறதா என்று பார்க்கும் ஆர்வம் மிக, அண்ணனை கட்டியணைத்துவிட்டு, அதற்கு ஓடிவிட்டேன். என்னா ஒரு சுயநலமி நான் என்று என்னையே நொந்து கொண்டேன். எல்லாம் முடிந்து அடுத்த காட்சிக்கான விஷயங்களை லைட் போவதற்கு எடுக்க நானும், ஒளிப்பதிவாளரும் நகர, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் குட்டியண்ணனை அழைத்தார். கட்டியணைத்து  பாராட்டை தெரிவித்துவிட்டு, சட்டென தன் பாக்கெட்டில் கையைவிட்டார். கையை வெளியே எடுத்த போது அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கக் கூட இல்லை. அப்படியே குட்டியண்ணனிடம் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிட்டார்.  ஒழுங்காய் பேட்டாவே கொடுக்காத தயாரிப்பாளர்கள் மத்தியில் சம்பளத்திற்கு மேல் பரிசு கொடுத்து கவுரவிக்கும் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரைப் போன்ற மனிதர்களை  காண்பதறிது.
கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

Kalyankumar said...

unga producer

”தளிர் சுரேஷ்” said...

இது போன்ற ஸ்டண்ட் நடிகர்கள்,மாஸ்டர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டாலும் அவர்களை யாரும் கண்டுகொள்வது இல்லை! குட்டியண்ணனை பாராட்டி பதிவில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் அவருக்கு வெகுமதி அளித்த தங்கள் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! நன்றி!

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

முஹம்மது யூசுப் said...

இந்தப் பதிவில் உள்ள விறுவிறுப்பும் சுவாரசியமும் உணர்ச்சிகளும், பாதியளவு தொட்டால் தொடரும் படத்தில் இருந்தாலே போதும். படம் அமோக வரவேற்பைப் பெருவதில் சந்தேகமில்லை. நீங்கள் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது தலைவரே!

திருவாரூர் சரவணா said...

ஒரு படத்தை உருவாக்குவதில் திரைக்கு பின்னால் உயிரைக்கொடுத்து உழைக்கும் எவ்வளவோ பேரின் மீது இப்போது இது போன்ற வெளிச்சம் விழுவது நல்லதொரு மாற்றத்திற்கான அறிகுறி.

தேங்க்ஸ் டூ இணையம்.

Kathasiriyar said...

Great Kuttiyannan. Real heros of our Cinema. ...

Kathasiriyar said...

Great Kuttiyannan. Real heros of our Cinema. ...

arul said...

inspiring post thanks for sharing sankar anna

நம்பள்கி said...

ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

லதானந்த் said...

படம் பார்த்த உணர்வு அப்படியே ஏற்பட்டது. வெற்றி நிச்சயம். புகைப்படத்தின் பின்புலத்திலும் சாப்பாட்டுக்கடை இருப்பது எதேச்சையா?

Mohan Maggi said...

I like post,writing well,,,,Continue Shankar sir,,,,,Thanks for write our stunt man.

mohamed salim said...

எல்லா ஸ்டார்களின் பின்னாலும் குட்டியண்ணன் போன்றவரின் உழைப்பு அவர்களை வாழவைகின்றது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஷக்தி said...

Pramathamana pathivu.endrum nalamudan kuttiannan vaazhga. Arumayana chirukathai paditha feeling. Ezuthil irukkum kavanam padathin makinglayum irukkattum. Padam vetri perum. Depawali vaazthukkal.

Muraleedharan U said...

A touching story ahead of a movie , more and more behind scenes to be continued ..thanks Cable ji

Unknown said...

Sir film eppo varum i m waiting

Unknown said...

அண்ணன் டைரக்டர் ஆனதுக்கு அப்புறம் டைம்கு கொத்து பரோட்டா வர மாட்டேங்குது

திவ்யாஹரி said...

Real hero. Thanks for sharing sir.

ppage said...

சுவாரசியம்.... பரபரப்பு தகவல்கள்... கொஞ்சம் பிலாசபி, கொஞ்சம் இரக்கம் என ஏக களேபர கலவை இந்த பதிவு...

ரொம்ப சூப்பர் கேபிள்...

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் தயாரிப்பாளருக்கும்.. உங்களு குழுவுக்கும்....

தங்கள் முயற்ச்சிகள் யாவும் நிச்சயம் வெற்றி பெறும்...

பிரார்த்தனைகளும்.... வாழ்த்துக்களும்

லாரன்ஸ் பிரபா

தருமி said...

குட்டியண்ணனுக்கு ஜே!

ALL IS WELL ... also, all would be well!

A Simple Man said...

TT yaarukku potti ? vishwaroopam -2 or Kochadaiyaan