Thottal Thodarum

Feb 14, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -1

மீண்டும் உங்களுக்காக.. காதலர் தின ஸ்பெஷல் - ஷ்ரத்தா
International_House_of_Coffee_by_germancars”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும.?

“யெஸ்”



“ஹாய்.. ஐம் ஷ்ரத்தா ஹியர்..” என்ற சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தாள். ஷரத்தா.. ஆம ஷரத்தாவேதான். அவளுக்குத்தான் இந்த பெயரை இவ்வளவு ஸ்டைலாய் உச்சரிக்க முடியும். கர்வமாய், மந்தஹாசமாய்.. அவளால் மட்டுமே முடியும்.

“சாரதா ரெட்டியா..?”

“புல் ஷிட்.. சாரதா இல்லையடா முட்டாளே.. ஷ்ரத்தா.. எங்கே சொல் பார்க்கலாம்.. ஷ்ரத்தா ரெட்டி.. நீ சரியாய் சொன்னாயானால் மூன்று முத்தம் தருவேன்”

“சா.. ர..தா.. ரெ..ட்..டி.. சரியா..? வேண்டுமானால் ஆறு முத்தம் என்று சொல்லேன். வார்த்தைக்கு ஒன்று. இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுகிறேன்.”

முதல் முதலாய் அவளை என் தோழி மீராவின் அலுவலகத்தில் தான் பார்த்தேன். ஒரு வேலையாய் அவள் அலுவலகம் பக்கம் போக வேண்டியிருந்தது, கேன்டீனில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் முக்கு முழுவதுவதும் விதேசி செண்ட் அடைத்து மணக்கும்படி, எங்களை க்ராஸ் செய்தாள், திடும்.. திடும் என்று அவள் ’அதிர’ நடந்த நடையை பார்த்துக் கொண்டேயிருப்பதை பார்த்த மீரா ”ஏய்.. ரொம்ப ஜொள்ளு விடாதே புதுசாய் வந்திருக்கிற ட்ரெயினி. ஷ்ரத்தா ரெட்டி. ரொம்பவும் புவர் பேமிலி. அமெரிக்காவில் ரெண்டு பார்மா கம்பெனி வைத்திருக்கிறான் இவளது அப்பன். அடுத்த வேளை சோத்துக்கே பஞ்சம்”

‘அவளின் ”…. ” பார்த்தாலே எவ்வளவு பஞ்சம் என்று தெரிகிறது” என்ற என் தலையில் ‘டொங்’ என்று வலிக்காமல் ஒரு குட்டு வைத்தாள் மீரா. “எடுத்தவுடனேயே பார்க்கும் இடத்தைப்பார். நீ திருந்தவே மாட்டாயா..?”

“இதோ பார்.. எடுத்தவுடன் முகத்தை பார்ப்பவன் என்னை பொருத்தவரை இளைஞனே இல்லை. அப்படி முகத்தை பார்ப்பவன் நல்லவனாக இருப்பான் என்று என்ன உத்திரவாதம். எல்லாம் சரி இண்ட்ரோ கொடுக்கிறாயா..? றாயா என்ன கொடுக்கிறாய்.. கமான்..கமான்” என்று அவளை நச்சரிக்க ஆரம்பித்த நேரத்தில் ஷ்ரத்தா மிகவும் சுவாதினமாய் ஒரு லெமனேட் பாட்டிலையும், இரண்டு சாண்ட்விச்சுகளையும் இரண்டு கைகளில் ஏந்தியபடி எங்களை நோக்கி வருவதை பார்த்த மாத்திரத்தில் ராத்திரி பார்த்த போர்னோ அநியாயமாய் ஞாபகத்துக்கு வந்தததை தடுக்க முடியவில்லை.

என் முகத்திற்கருகே பாட்டிலை நீட்டி, ரொம்ப தெரிந்தவள் போல் “கமான் டேக் இட்..” என்று சொல்லியபடி, சாண்ட்விச்சை ஆளுக்கொன்றாய் மீராவும், ஷ்ரத்தாவும் சாப்பிட ஆரம்பிக்க, அப்போதுதான் முதல் முதலாய் அவளை முழுசாய் பார்த்தேன். கருகருவென சுருள் சுருளான கூந்தலை அடக்க முடியாமல் அடக்கி வைத்திருக்க, நல்ல பெரிய பெரிய கண்கள் துறுதுறுவென அலைந்து கொண்டிருக்க, கோடுபோட்டார் போல இருந்த மெல்லிய உதடுகளில் உடைக்கு மேட்சாக லிப் க்ளாஸ் மட்டும் போட்டிருக்க, வலது ஓரத்தில் தெத்துப்பல் ஒன்று தெரிய, காதில் முகத்தை விட பெரிதான ஒரு ஜிமிக்கி போல ஒன்று ஆடிக் கொண்டிருக்க, டிபிக்கல் ஆந்திர ஸ்டைல் மூக்குடன், கொஞ்சம் உயரத்துடன், அகிருத்யாய், அழகாய், மிகவும் நாசுக்காய் சாண்ட்விச்சை கடித்து தொண்டையில் இறங்குவது தெரியாமல் சாப்பிட்டாள். அவளின் நாசூக்கு மீராவிடம் இல்லை. பார்க்கும் போதே நான் உன் ஜாதியில்லை என்று அலறி கொண்டிருந்த அவளது பாடி லேங்குவேஜை நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தவள் “ஹாய்.. சாரி.. அறிமுகபடுத்திக் கொள்ளாததது என் தவறுதான். ஐயம் ஷ்ரத்தா ரெட்டி.. இங்கே இப்போது மீராவுடன் ட்ரைனியாய் சேர்ந்து ஒரு வாரமாகிறது. நீ” என்று கட கடவென பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் பேசியபோது காதில் மாட்டியிருந்த வளையம் ஆடியது நன்றாக இருந்தது.

“இவன் என் நண்பன் ஷங்கர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சம்மந்தமில்லாத மார்க்கெட்டிங்கில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறான். கேட்டால் இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் பிறகு சினிமாதான் என் வாழ்க்கை என்பான். ஓகே. ஷங்கர்.. ஷரத்தா. ஷரத்தா.. இது ஷங்கர்” என்று என்னை பார்த்து கண்ணடித்தாள் மீரா.

கைநீட்டி பரஸ்பரம் குலுக்கிய போது நிச்சயம் இவளுக்கும் எனக்கும் ஏதொ ஒரு பந்தம் இருப்பது போன்ற உணர்வு உடலெங்கும் சிலிர்த்து ஓட.. “ஹாய் “ என்றேன். வெறும் காற்றுத்தான் வந்தது. மீரா என்னை ஆச்சர்யமாய் பார்த்தாள். நான் தொண்டையை கனைத்துக் கொண்டு, மீண்டும் “ஹாய்..சாரதா” என்றேன். இப்போது பரவாயில்லை. எனக்கே கேட்டது. பிடித்திருந்த கையை உதறி..”சாரதா இல்லை.ஷ்ரத்தா. எங்கே சொல்லு பார்க்கலாம்.. ஷ்..ர..த்..தா.. ஷ்ரத்தாரெட்டி. யாருமே என் பெயரை சரியாக உச்சரிக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று அலுத்தபடி, என்னை நேரே பார்த்தாள் ”சினிமாவில் வரும் முதல் இரவு புதுப்பெண்ணைப் போல் வெட்கப்படுகிறான் இல்லையா..மீரா..?”என்றவளை பார்த்து மீரா வெட்கப்பட்டாள். அவர்கள் இருவரும் என்னை பார்த்து சிரித்துக் கொள்வது என்னை வெறுப்பேற்றுவதுபோல இருந்தது. இரண்டு பெண்கள் சேர்ந்தால் நிச்ச்யமாய் ஆண் ஒரு கேலிப் பொருள் தான். என் முகத்தை பார்த்து “பார்..பார்.. மீரா.. அவன் முகத்தில் இருக்கும் கோபத்தை..” என்று சொல்லி மீண்டும் சிரித்து.. என்னை பார்த்தபடியே தன் கையை உயர்த்தி “நைஸ் ஹேர்” என்று கோதிவிட,

“ஹவ்..டேர் யூ டச் மை ஹேர்..?” என்று கோபத்துடன் கத்தினேன். சிரித்து கொண்டிருந்த மீராவும், ஷ்ரத்தாவும் ஒரு கணம் அதிர்ந்து நின்றார்கள்.
தொடரும்….


டிஸ்கி: ஏற்கனவே தொடராய், புத்தகமாய் படித்தவர்களுக்கும், புதியதாய் படிக்கிறவர்களுக்கும், எத்தனை முறை எழுதினால், படித்தால், பார்த்தால், உணர்ந்தால் என்ன? காதல் ...காதல் தான். ஹேப்பி வேலண்டைன்ஸ் டே.. - கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள் தொடர்கிறோம்...

”தளிர் சுரேஷ்” said...

இதுவரை உங்கள் கதைகள் எதையும் படித்தது இல்லை! இப்போது முதல் முறையாக வாசிக்கிறேன்! சுவாரஸ்யமாக இருக்கிறது! தொடர்கிறேன்! நன்றி!