Thottal Thodarum

Feb 12, 2015

கோணங்கள் -16

கோணங்கள் -16: வெளிநாட்டு உரிமையை விற்காதே!

இன்றைய காலத்தில் ஒரு சினிமா எடுப்பதைவிட அதை வெளியிடுவதற்குப் பிரயத்தனம் தேவைப்படுகிறது. அப்படிப் பிரயத்தனம் செய்து வெளியிட்ட படத்தை பைரஸி திருடர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
பிலிம் சுருள்களில் படம் எடுத்துக் கொண்டிருந்த நாட்களில் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் படச் சுருள்கள் பாதுகாப்பாக இருந்த இடம் பட லேப். அது இன்றி ஓர் அணுவும் அசையாது. லேபில் தயாரிப்பாளர் அனுமதியின்றி ஒரு துண்டு பிலிம்கூட வெளியே போகாது. அம்மாதிரியான ராணுவப் பாதுகாப்பு இருந்த காலத்திலேயே திருட்டு வீடியோ எடுத்த காலமும் உண்டு. திரையரங்குகளுக்குப் படப்பெட்டியை எடுத்துப் போகும் ‘பிலிம் ரெப்’பைக் கைக்குள் போட்டுக்கொண்டு திருடி வந்தவர்கள் வரிசையாக மாட்ட ஆரம்பித்தார்கள். இதனால் திரையரங்கப் படமோட்டியின் உதவியுடன், கிட்டத்தட்ட சிறு நகர அரங்குகளில் வீடியோ கேமராவை எடுத்துக்கொண்டு போய்ப் பதிவு செய்தார்கள்.

பின்நாட்களில் டி.வி.டி. வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்படிப் பதிவாகும் திரையரங்கப் பிரதியின் தரத்தை மதிப்பிட்டு வாங்கிப் போகும் அளவுக்கு ‘குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர்களாகி’விட்டதால், பார்க்கத் தெளிவான தரத்தில் இருந்தால் மட்டுமே திருட்டு வீடியோ வியாபாரம் என்று ஆனது.

எஃப்.எம்.எஸ். எனும் ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமம் கொடுப்பதினால்தான் தற்போது திருட்டு வீடியோ பிரச்சினை என்கிறார்கள். வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் இங்கு ஏன் திருட்டுத்தனமாய் பிரின்ட் போட்டு விற்க வேண்டும்?. நேரடியாய் இங்கேயே உரிமம் கொடுத்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ஒரு சின்ன படத்தின் வெளிநாட்டு உரிமத்தின் விலை சுமார் 8லிருந்து 15 லட்சத்துக்குள் வரும்.

இன்றைய தமிழ் சினிமாவுக்கு வருமானமென்று வரும் ஒரே நம்பிக்கையான இடம் இதுதான். அதுவும் உள்ளடக்கம் மற்றும் படமாக்கலில் தரம் குறைவான படங்கள் என்றால் அங்கேயும் தற்போதைய நிலையில் வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை வந்துவிட்டது. அங்கிருக்கும் தனியார் தொலைக்காட்சிக்காரர்கள் படத்தின் டிரைலரைப் பார்த்தே அதன் தகுதியை நிர்ணயிக்கும் அளவுக்குத் தெளிவாகிவிட்டார்கள்.

எல்லாத் தமிழ் சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகாது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளுக்கான உரிமை மற்றும் டி.வி.டி விற்பனையை மட்டுமே நம்பி விலை கொடுத்து வாங்குகிறார்கள். படம் வெளியான இண்டாவது நாளே புத்தம் புதிய டி.வி.டி மலேசியாவில் வெளிவந்துவிடும்.
வந்த மாத்திரத்தில் அவை சிங்கைச் சந்தையில் பத்து வெள்ளிக்கு பைரஸியாய்க் கொட்டிக் கிடக்கும். அங்கு வெளியாகும் பிரதிகள்தான் இங்கே கடத்தி வரப்பட்டு விற்கப்படுகின்றன என்பதாக ஒரு பக்கம் பேச்சு. ஆனால் பெரும்பாலான சிறு முதலீட்டுப் படங்களின் ஒரிஜினல் டி.வி.டிக்கள் மலேசிய நிறுவனங்களுக்காக இங்கேயே தயாரிக்கப்பட்டு, இங்கிருந்தே அனுப்பப்படுகின்றன என்பதுதான் உண்மை.

அதுவும் வெளிநாடுகளில் திரையிட வேண்டுமானால் பத்து நாட்களுக்கு முன்னமே படத்தின் ஹார்ட் டிஸ்க்கை அனுப்பி, ஒவ்வோர் ஊரிலும் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதினால் முன்னதாக அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் ஹார்ட் டிஸ்க்குகளிலிருந்து டி.வி.டி.க்கான படம் இங்கேயே காப்பி செய்யப்பட்டு, ஒரிஜினல் விடியோக்களாய் தயார் செய்யப்படும்போது அதிலிருந்தும் இங்கேயே விற்பனைக்குத் திருட்டு வீடியோ தயார் செய்யப்படுகிறது.

இப்படி ஒரு விதத்தில் திருட்டு டி.வி.டி. வருகிறதென்றால் இன்னொரு பக்கம் கேமரா பிரின்ட் என்றில்லாமல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் திரையரங்க ஒளிபரப்பு அறையிலேயே ஒரிஜினல் பிரின்டைப் போல பிரதியெடுக்கும் நவீன எந்திரங்களைக் கொண்டு திருட்டுத்தனமாய் படம் காப்பி செய்யப்படுகிறது.

சமீபத்தில் கூட இக்குற்றச்சாட்டில் இரண்டு மூன்று தியேட்டர்கள் மாட்டியிருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் அதன் உரிமையாளர்களைவிட, மேலாளர், மற்றும் படமோட்டியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதிலும் பழைய திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் அரங்கைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, மாசம் காசு வருகிதா என்கிற நிலையில் இருக்கும்போது கண்காணிப்பில்லாத அரங்குகளில் இக்கொடுமை அரங்கேறுகிறது. எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்துகொள்ளத் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் அதைச் செயல் படுத்த தயாரிப்பாளர் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. படத்தை எடுத்து வெளியீடு செய்யவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்கிற நிலையில் இருக்கும்போது இதற்காகத் தனியே பணம் செலவழிக்க அவர்களால் முடிவதில்லை. எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம்.

மினி ரிவ்யூ -பேபி
இந்திய உளவுத்துறையான ராவின் செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தீவிரவாதத்தை, எப்படி இந்திய அரசு டீல் செய்கிறது? ஆபரேஷன் பேபி என்ற பெயரில் ஒரு குழு எப்படி ஆதரவு நாட்டில் அமர்ந்துகொண்டு தீவிரவாதத்தைச் செயல்படுத்துகிறவனை இங்கே பிடித்து வருகிறார்கள் என்பதுதான் கதை. ஆர்கோ போன்ற ஹாலிவுட் பாணிக் கதைதான்.

பெரிய திருப்பங்கள் ஏதுமில்லாத் திரைக்கதை என்றாலும் அக்‌ஷய் குமாரின் துறுதுறுப்பான உடல்மொழியை வைத்து விறுவிறுப்பாக்கியிருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் சுவாரஸ்யக் காட்சிகள், நறுக்குத் தெறிக்கும் படத்தொகுப்பு, மிக இயல்பாய் அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், எனப் பல விஷயங்கள் படு சுவாரஸ்யம். நல்லவேளை இம்மாதிரியான படம் தமிழில் எடுக்கப்படவில்லை.

படம் பார்க்காமலேயே தடை செய்ய போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள். இக்குழுவின் தலைவராய் வரும் டேனி, அக்‌ஷய், பெண் அதிகாரியாய் வரும் தப்ஸியின் நடிப்பும் நச். இந்திய அளவில் ஒரு சுவாரஸ்யமான, வித்தியாசமான கதைக் களம் கொண்ட திரைப்படத்தை அளித்திருக்கிறார் நீரஜ் பாண்டே.

Post a Comment

4 comments:

Unknown said...

சார் உங்கள் படத்தை தியேட்டரில் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.நல்ல தியேட்டரில் ஏன் பார்க்க முடிய நேரத்தில் ரிலீஸ் செய்தீர்கள்.செகண்ட் வீக் படமே இல்லை.நீங்களே ஏன் படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வில்லை

Unknown said...

மினி ரிவ்யூ -பேபி கதை நல்லா இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...
மலர்

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
தங்கள் படம் இங்கெல்லாம் வரவில்லை...
நல்லபடம் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் தியேட்டர்களில் திடீரென தூக்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்... ஏன்?

கோணங்கள் நன்று.

silviamary.blogspot.in said...

திருட்டு டீவிடி யையெல்லாம் ஒழிக்கவே முடியாது.தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை வெகுவாகக் குறைப்பதும் அவர்கள் தின்பண்டங்களில் அடிக்கிற கொள்ளையை தடுப்பதும் மட்டுமே சாமான்யமானவனை தியேட்டருக்கு வர வழைக்கும்.
எல்லாப் படங்களுக்குமா உடனேயே திருட்டு டீவிடீ வந்து விடுகிறது? அதைத் தயாரிப்பவர்கள் அது போணி ஆகுமா என்று பார்க்க மாட்டார்களா என்ன? ஸ்டார்கள் நடித்திருக்க வேண்டும். அல்லது படம் கொஞ்சமாச்சும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
சோ.சுப்புராஜ்