Thottal Thodarum

Feb 16, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -2


Lonely_Bike_by_DaveAyerstDavies “ஹவ்..டேர் யூ டச் மை ஹேர்..?” என்று கோபத்துடன் கத்தினேன். சிரித்து கொண்டிருந்த மீராவும், ஷ்ரத்தாவும் ஒரு கணம் அதிர்ந்து நின்றார்கள். ஷ்ரத்தாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை சில நொடிகள் ரசித்து, ஹா..ஹா.. ஹா.. என்று சிரித்தேன். என் சிரிப்பை பார்த்து, ஒரு மாதிரி சமாளித்து சிரித்தார்கள். “பின்னே எவ்வளவு நேரம்தான் ஒரு யூத்தை ஓட்டுவீர்கள்?” என்றதுதான் தாமதம். கையில் இருந்த பாதி ஸாண்ட்விச்சை என் மேல் வீசி, “இடியட்.. இப்படித்தான் கத்துவாயா..? உனக்கு மேனர்ஸ் கிடையாது. பெண்களிடம் எப்படி பேசுவது என்று தெரியாது? பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்ல தெரியாது?. உன்னை எவன் மார்கெட்டிங்கில் சேர்த்தது? நீயெல்லாம் என்ன கிழிக்க போகிறாய்?” என்று படபடவென பொரிந்துவிட்டு, மீராவிடம் “சாரி..” என்றபடி வேகமாய் காண்டீனை விட்டு வெளியேறினாள்.



நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு காட்டமாய் முகத்திற்கு நேரே பேசிய பெண்ணை நான் சந்தித்ததில்லை. பெரும்பாலான சமயங்களில்  நான் உபயோகிக்கும் டெக்னிக் இது.  என்னை யாராவது கலாய்த்துக் கொண்டிருந்தால் திடீரென உச்சஸ்தாயியில் ஒரு கத்தல் கத்தி, அந்த மூடை கலைத்து அவர்கள் விதிர்த்து போய் நிற்பதை பார்த்து சிரிக்கும் போது எனக்குள் ஒரு விதமான குரூர சந்தோஷமாய் இருக்கும். இதுவரை மீராவிடமே வெளியிடப்படாத என் இன்னொரு முகம். முகத்தில் படிந்திருந்த பிரட் தூள்களை கர்சீப் வைத்து தட்டிக் கொண்டே, மீராவை பார்த்தேன். அவளின் முகத்திலும் கோபம் இருந்தது. காண்டீன் ஆட்கள் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, எனக்கு அவமானமாய் இருந்தது. கிளம்ப யத்தனிக்கையில் “சாரி.. என்னால உனக்கு சப்போர்ட்டா பேச முடியலை.. பை” என்று வேறேதும் பேசாமல் மீரா கிளம்பினாள். அதுவரை என்னிடம் இல்லாத ஒரு குற்ற உணர்வு என்னுள் எழும்ப ஆரம்பித்தது.

இருந்தாலும் அவளிடம் அதை காட்டிக் கொள்ளாமல், விறுவிறுவென வெளியேறி பைக்கை ஒரே உதையில் ஸ்டார்ட் செய்து ஒரு கடையில் நிறுத்தி ”தம்”மை பற்ற வைத்துக் கொண்டு யோசித்தேன். திரும்ப திரும்ப ஷ்ரத்தாவின் கோபமும், அவள் பேசிய வார்த்தைகளுமே ஒலித்தது. இவள் யார் என்னை திட்டுவதற்கு? அவள் என்னை ஓட்டினாள்? பதிலுக்கு நான் ஓட்டினேன். அவ்வள்வுதான். நான் கிழிப்பேன்.. கிழிக்காமல் இருப்பேன். இவளுக்கென்ன.? த்தா.. வா.. நான் கிழிக்கிறேனா.. இல்லையா என்று காட்டுகிறேன். கோபத்தில் சிகரெட் சீக்கிரம் இழுக்கப்பட்டு, கையை சுட, விதிர்த்து கை உதறினேன். 

ஷ்ரத்தா திட்டியது, மீரா ஏதும் சொல்லாமல் போனது, என் கோபம், சிகரெட் சுட்டது, எல்லாம் சேர்ந்து கோபம் இன்னும் ஏற.. பைக்கில் அமர்ந்து மீண்டும் ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்து, விருட்டென கிளம்பினேன். இலக்கில்லாமல் வண்டியும், மனமும் ஓட, அண்ணா சாலை வந்து ட்ராப்பிக்கில் மாட்ட, இன்னும் எரிச்சலானது. சிக்னலில் தேவையில்லாமல் வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தேன். சிக்னல் ஓப்பன் ஆனதும், கிடைத்த கேப்பில் வண்டியை விரட்டி மெரினாவில் போய் நிறுத்தினேன். மாலை வேளை கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வர ஆரம்பித்திருக்க, காந்தி சிலையருகில் அமர்ந்தேன். வெறுமையாய் இருந்தது என்  பார்வை. கண் முன் ஏதும் தெரியவில்லை. ஷரத்தா, மீரா, கோபம், சிகரெட் , கை சுட்டது என்று ஒரு மாதிரி குழப்பமான அலைவரிசை ஓடியது. ஓடிய காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சமாய், அலைவரிசைகள் குறைந்து கடைசியாய் பயத்தில் உறைந்த ஷரத்தாவின் முகமும், திடீரென கை சுட்ட சிகரெட்டும், நான் சூடு தாங்காமல் விதிர்த்ததும் மட்டுமே மனதில் ஓட, முகத்தில் சில்லென ஒரு கை மெத்தென பட, கலைந்து திரும்பினேன். க்யூட்டாய் ஒரு குழந்தை விகல்பமில்லாமல் சிரித்து கொண்டிருந்தது. பின்னாலேயே சற்றே பெரிய குழந்தையாய் அவள் அம்மா ஓடி வந்து, “தீபு. வா.வா. ஸாரி சார்” என்று குழந்தையை தூக்கி சென்றாள். ஏனோ மனம் இப்போது லேசாகியிருக்க, குழந்தை எனனையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தது.

வண்டியை எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்து, பதட்டமில்லாமல் ஓட்டினேன். வண்டியை பார்க்கிங்கில் வைத்துவிட்டு நேரே ஏழாவது மாடிக்கு லிப்டில் ஏறி, நடந்து, அலுவலகத்தின் கதவை திறந்து, ரிஷப்ஷனில்  இருந்த பெண்ணிடம் “லைக் டு மீட் மிஸ்.ஷ்ரத்தா ரெட்டி” என்றேன்.

Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்!