Thottal Thodarum

Feb 26, 2015

மீண்டும் ஒரு காதல் கதை- 9

9bb2c8b5eaad26df0fdfc188d343d19c”ஏய்.. என்ன பார்க்கிறாய்.. நம்ப முடியவில்லை இல்லையா..? அதான் என் அப்பா.. என் செல்ல அப்பா.. ஓகே… ஓகே.. என்னால் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப். நாளை காலை சீக்கிரமே ஆபீஸ் போய்விடுவேன். நீ நேரே ஆபீஸுக்கு வந்துவிடு, நிறைய பேச வேண்டும்.. நிறைய.. ஓகே..பாஸ்போர்ட் இல்லையென்றால் உடனே வாங்கிவிடு. அடுத்த வாரம் அப்பா வந்ததும் உன் வீட்டோடு வந்து பேசி முடித்துவிடுவோம் என்றிருக்கிறார்.” என்று துள்ளி குதித்தபடியே பேசினாள். அவளின்  உடம்பு முழுவதும் சந்தோஷம் பரவியிருந்தது நன்றாக தெரிந்தது. ஆனால் என்னால் அவளைப் போல சந்தோசப்பட முடியவில்லை. நான் அமைதியாய் இருந்ததை பார்த்து ஏதும் புரியாமல்

” ஏய்.. ஷங்கர்.. என்ன டல்லாக இருக்கிறாய். காதலித்த பெண்ணையே திருமணம் செய்யப் போகிறோமே என்று வருத்தமா..? உன் விதி அதுதான் என எழுதியிருக்கிறது” என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஓகே.. பை.. நான் என் அப்பாவிடம் இன்னும் சில விஷயஙக்ள் எல்லாம் பேச வேண்டும். உனக்கான வேலை எல்லாம் பற்றி பேச வேண்டும். என் செல்ல க்ண்ணாட்டி.. பை.. குட் நைட்.. சாரி.. குட் மார்னிங்..பை.. என்று என்னை இன்னும் இறுக்க அணைத்து, உதடு வலிக்க அழுத்தமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு ஓடினாள்.

நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் காதல் கைகூடிய விஷயம் சந்தோஷத்தை தரவில்லை. நான் எப்படி அமெரிக்கா போவது? அங்கே போய வீட்டு மாப்பிள்ளையாய் இருக்கவா..? அப்போது என் சினிமா கனவு? அமெரிக்க பெண்ணை காதலித்து அவள் தகப்பன் காசில் வாழ்ந்து, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கி  சாக எனக்கு விருப்பமில்லை. என்னால் அப்படி வாழ முடியும் என்றும் தோன்றவில்லை. ஆனால் அவளிடம் இதை எப்படி சொல்வது என்ற குழப்பத்தோடும், அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. 

அன்று முழுவதும் தூங்காததால், சீக்கிரமே ஷ்ரத்தாவின் ஆபீஸ் கேண்டீனில் காத்திருந்தேன். இன்றைக்கு எப்படியாவது சொல்லியாக வேண்டுமென்ற முடிவோடு, கொஞ்சம் பதட்டத்தோடு வெளியே சென்று தம்மடித்தேன். மனதின் ஒரு மூலையில் அழகான பொண்ணு, அமெரிக்கா, அங்கேயே செட்டில் ஆவது இது எல்லாத்தையும் உன் கனவுக்காக இழப்பது முட்டாள் தனமாக இல்லையா? என்று ஒரு கேள்வி மனதில் ஓடத்தான் செய்தது. அதையெல்லாம் மீறி அப்படி செய்தால் நான் என்னையே இழந்தது போல ஒரு ஃபீல் தான் மேலோங்கியது.

ஷ்ரத்தாவும், மீராவும் முகம் முழுவதும் சிரிப்போடு நுழைந்தார்கள்.  மீரா என் கை பிடித்து குலுக்கி “கங்க்ராட்ஸ்” என்றாள். அவளின் கைபிடிப்பில் இருந்த இறுக்கம் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரத்தா கண்கள் பளபளக்க, என்னருகில் நெருக்கமாய் உட்கார்ந்தாள்.

“அப்பாவிடம் எலலா விஷயமும் பேசிவிட்டேன் ஷங்கர். உனக்கு ஒரு வேலையை அங்கேயே போட்டு தருகிறேன் என்று சொல்லிவிட்டார். வேலை என்ன எல்லாமே உனக்குத்தானே.. நான் உட்பட..” என்று கண் சிமிட்டினாள்.

“ஷ்ரத்தா.. ஒரு விஷயம்.. என்னால அமெரிக்காவெல்லாம் வர முடியாது” என்றேன் மெல்லிய குரலில். ஷ்ரத்தாவின் முகம் சட்டென சுருங்கியது. சுறுசுறுவென கோபம் ஏறுவது தெரிந்தது.

“ஏன்.. இங்கே என்ன கிழிக்கப் போகிறாய்?. காதலித்த பெண், ஏராளமான பணம், அமெரிக்க வாழ்வு, இதைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு? ஒரு வேலை மாமனார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வெட்கப்படுகிறாயா..? புல்ஷிட்.. உன் மிடியோகர் மேல் ஷாவனிஸ்ட் புத்தியை, காட்டுகிறாயா..? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கியிருப்பேன் தெரியுமா?.”

“ஷ்ரத்தா.. கோபப்படாதே.. உனக்கு என்னை பற்றி தெரியும். எனக்கு சினிமாவில் இயக்குனராவது தான் கனவு என்று. என்னை தயார் செஞ்சிக்கிறதுக்காக நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் சம்பாதிச்சு சேர்த்து வச்சி, அடுத்த கட்டத்திற்கு நகர ஆசைப்பட்டுட்டு இருக்கிறவனு. இப்படி சடார்னு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம், அமெரிக்கான்னா எப்படி? ஒரு அஞ்சு வருஷம் நாம கல்யாணம் செஞ்சிட்டு இங்கேயே இருக்கலாம். அதுக்குள்ள எப்படியாவது செட்டிலாயிடுவேன். அப்ப போலாம் அமெரிக்காவுக்கு. அமெரிக்காவை சுததி பார்க்க ஆசைதான் ஆனா.. அங்கேயே இருக்க எனக்கு ஆசையில்லை.. புரிஞ்சிக்க..” என்று அவள் கையை பிடித்தேன்.
அவள் சட்டென கையை பின்னுக்கிழுத்து, என் முகத்தில் பளீரென அறைந்தாள்.

“நீ என்னை காதலிக்கவேயில்லை.. நான் முன்பே சொன்ன மாதிரி சும்மா சுத்திவிட்டு, சான்ஸ் கிடைத்தால் முடித்துவிட்டு ஓடிப்போகலாம் என்று நினைத்திருந்தவன் என்பதை மீண்டும் நிருபிக்கிறாய். என் மீது உனக்கு காதல் இருந்தால் நீ இப்படியெல்லாம் பேசுவாயா..?”

“ஷ்ரத்தா.. ஒரு ஆம்பளைக்கு காதல் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவுக்கு கேரியரும் முக்கியம். வெறும் காதல் வாழ்க்கையாகாது ஷ்ரத்தா..”

“சினிமாவுல உனக்கு சான்ஸ் கிடைச்சி, அதுல நீ பெரிய ஆள் ஆகி என்ன செய்யப்போறே? பணம் சம்பாதிப்பாயா..? எல்லாமே ஸ்பெகுலேஷன் தான் ஆனால் நிஜத்தில் நீ நினைக்கும் அளவுக்கு மீறிய பணம், வசதி, அமெரிக்க வாழ்க்கை இதுவெல்லாம் உனக்கு இலவசமாய் இந்த ஷ்ரத்தா உன்னை காதலித்ததால் வருகிறது. இதை வேண்டாம் என்று சொல்வதும் ஷ்ரத்தா வேண்டாம் என்று சொல்வதும் வேறல்ல..”

“முட்டாள் தனமாய் பேசாதே.. நம் காதல்  கூட உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்ததால் தான் வந்தது. அது போலத்தான் ஒரு ஆம்பளைக்கு கேரியரும்.”

“எல்லாரும் பிடிச்சுத்தான் வேலை பாக்குறாங்களா?  பிடிக்காத வேலையை எத்தனையோ பேர் பார்க்கலை? அவங்களெல்லாம் சந்தோஷமா வாழல?”

“அவங்ககிட்ட போய் கேட்டுப் பாரு.. புரியும். அவங்க உள் மனசுல இருக்கிற ஆதங்கத்தை. என்னால அது மாதிரி போலியா வாழமுடியாது ஷ்ரத்தா.. “

“ஒரு வேளை நீ அதுல தோத்திட்டன்னா..?”

“முயற்சி செய்யாமலேயே தோக்கிறதை பத்தி யோசிக்கிறதை விட, முயற்சி செய்து தோற்பதோ, ஜெயிப்பதோ சந்தோஷம் தானே.’

“நீ விதண்டாவாதமாய் பேசுகிறாய்”

“இல்லை.. லாஜிக்கா பேசுறேன். மீரா நீயே சொல்.. என்னோட கனவை பற்றி.. என்னை உனக்கு நல்லா தெரியுமில்லை நீ சொல்லு மீரா இவளிடம்” என்றேன். ஏதும் சொல்ல முடியாமல் இருவரையும் மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மீராவிடம்.

“ஆமா ஷரத்தா.. இவனின் லட்சியமே சினிமாதான். எனக்கு ஒரு ஐடியா தோணுது.. ரெண்டு பேருக்கு ஒன்னும் பெரிய வயசாயிடலையே.. அவன் சொல்றா மாதிரி ஒரு அஞ்சு வருஷம் இரண்டு பேரும் கல்யாணத்தை தள்ளிப் போடுங்க.. அவன் ட்ரை பண்ணட்டும், ஒரு வேளை அவன் ஜெயிச்சிட்டான்னா..வெல் அண்ட் குட்.. இல்லைன்னா உன் ப்ரோபஸலை அவன் ஏத்துக்கட்டும். என்ன நான் சொல்றது?”

“புல்ஷிட்.. ஐந்து வருடம் கழித்து தோற்று போனவனை என் கணவனாகவோ, அல்லது மாப்பிள்ளையாகவோ ஏற்றுக் கொள்ள என் அப்பாவோ தயாராக இருக்க மாட்டார்.”

“நீ ஏன் அப்படி நினைக்கிறே? பாஸிடிவாக நினையேன்.”

“மீரா.. ஷட் அப்.. இது என் வாழ்க்கை. இதில் உன்னோட அட்வைஸ் எல்லாம் வேண்டாம். சொல்லு ஷங்கர்.. முடிவாக சொல். உன்னால் என்னோடு அமெரிக்கா வந்து செட்டிலாக முடியுமா? முடியதா..? ஸே எஸ் ஆர் நோ.?’

என்ன பெண் இவள்? ஏன் இவளை பற்றி மட்டுமே யோசிக்கிறாள். இரண்டு பேர் சம்மந்தப் பட்ட விஷயத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், என் முடிவையும் சேர்த்து எடுப்பது மற்ற விஷயங்களை போலில்லை. எனக்கென ஒரு ஆசை, கனவு எதையும் மதிக்காதவளை, பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைப்பவளை, அமெரிக்காவில் அல்ல இந்தியாவிலும் சகித்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி என் முன் பூதாகராமாய் தெரிய..

“நோ.. “ என்றேன்.

“நம் காதல் இத்தோடு முடிந்துவிட்டது. இனி நீ யாரோ.. நான் யாரோ.. குட்பை..” என்று விருட்டென எழுந்து கிளம்பி போனவளை நானும் மீராவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
##########
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Unknown said...

why you are not posting review about recent films particularly after thottal thodarum release