Thottal Thodarum

Apr 21, 2015

கோணங்கள் -25

கோணங்கள் 25: பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்கள்!

செயற்கைக்கோள் அலைவரிசைகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளும் எப்படி சினிமாவைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று சென்ற வாரம் எழுதியதற்கு குட்டி சேனல்களிலிருந்து வந்த பல தொலைபேசி அழைப்புகள் என் தலையில் குட்டின!


“ஒரு சேனல் நடத்த நாங்க எவ்ளோ கஷ்டப்படுறோம்... என்னவோ... நாங்க எல்லாரும் லட்ச லட்சமாய் சம்பாரிச்சுக் குவிக்கிற மாதிரியில்ல சொல்லியிருக்கீங்க?” என்று ஆரம்பித்து என்னை வெளுக்க ஆரம்பித்தார்கள். “சேனல் தொடங்குறது இன்றைக்கு அவ்வளவு சுலபமான விஷயமில்ல… லைசென்ஸ் வாங்கவே பல தில்லாலங்கடி வேலைகள் பண்ணணும்” என்று ஆரம்பித்து அவர்கள் கொட்டித்தீர்த்த கதைகள் நூறு.

விளம்பரக் கடிவாளம்
ஆனால் இவர்களில் யாரும் செயற்கைக்கோள் அலைவரிசைத் தொலைக்காட்சிகள் இன்று சினிமா விளம்பர விஷயத்தில் மலை விழுங்கி மகாதேவன்கள் ஆகிவிட்டது பற்றி வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழ் நாளிதழ்களில் முழுப் பக்கம், அரைப்பக்கம் எனப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பணபலம் மற்றும் நடிக்கும் முன்னணி நடிகர்களின் தகுதியை வைத்து விளம்பரம் செய்வார்கள். இத்தகைய முழுப் பக்க விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இப்படி எல்லோராலும் அவ்வளவு செலவுசெய்து விளம்பரம் கொடுக்க முடியாது என்ற நிலை வந்தபோது, படத்தின் விளம்பரச் செலவைக் கட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து அதைக் கடுமையாகவும் அமல்படுத்தியது. அதாவது படத்தின் பூஜை, இசை வெளியீடு, பட வெளியீட்டு நாள், வெளியாகி வெற்றிபெற்ற 25-ம் நாள், 50-ம் நாள், 100-வது நாட்களுக்கு மட்டுமே கால் பக்க விளம்பரம் கொடுக்க அனுமதிக்கப்பட்டது.

மற்ற நாட்களுக்கு இரண்டு பத்தி அளவுக்குள் வரும் விளம்பரம் மட்டுமே கொடுக்க வேண்டுமென்று கட்டுப்பாடு விதித்தது. இத்தனைக்கும் தமிழ் சினிமா விளம்பரங்களுக்குத் தமிழ் நாளிதழ்கள் சிறப்புச் சலுகை விலையில்தான் கட்டணம் வடிவமைத்திருக்கிறார்கள். இதனால் பெரிய படமோ, சிறிய படமோ அத்தனை படங்களுக்கும் ஒரே மாதிரியான விளம்பரம், செலவு என்று வரையறைக்குள் வந்தது.

ஆக்கிரமித்த சேனல்கள்
ஆனால் இன்றைய சினிமா வெளியீட்டு விளம்பரச் செலவில் முக்கியப் பங்கு வகிப்பது சேனல்கள்தான். டிவி விளம்பரங்களைத் தொடக்கத்தில் பெரிய நிறுவனங்கள்கூட அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல்தான் இருந்தன. அச்சமயத்தில் ஒரு தனியார் சேனல் படத் தயாரிப்பிலும், விநியோகத்திலும் இறங்கியது. தன்னுடைய நெட்வொர்க் சேனல்களிலிருந்து, பிற குட்டி சேனல்கள்வரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லா சேனல்களிலும், தங்கள் படத்தின் விளம்பரத்தை ஒளிபரப்பியது. வெள்ளியன்று படம் வெளியாகிறது என்றால் வியாழன் இரவு பன்னிரெண்டு மணியிலிருந்தே படம் ‘சூப்பர் ஹிட்’ என்று கத்த, திரும்பிய சேனல்களில் எல்லாம், குறிப்பிட்ட படத்தின் பாடலை மட்டுமே குறிவைத்துப் போட, பாட்டு ஹிட், படமும் ஹிட் என்ற தொடர்ச்சியான விளம்பரத்தை நம்பிய மக்கள், கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளுக்குப் போய் “இதையா இவ்வளவு விளம்பரம் போட்டு ஹிட் ஹிட்டுன்னாங்க” என்று கேட்டுக்கொண்டே பார்க்க, விளம்பரத்தின் மாயை பற்றிய புரிதல் மக்களுக்கு வந்ததோ இல்லையோ, படத் தயாரிப்பாளர்களுக்கு வந்தது.

பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்கள்
விளம்பரம் செய்தால் மக்கள் கூட்டம் வருமென்று தெரிந்த பிறகு எல்லாத் தயாரிப்பாளர்களும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, இருக்கிற சேனல்கள் அத்தனையிலும் விளம்பரம் கொடுக்கத் தொடங்கினர். சேனல்களும், அவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஆஃபர் கொடுக்க, நாளிதழ் விளம்பரம் மட்டுமே என்றிருந்த சினிமா வியாபாரம், அப்படியே தொலைக்காட்சிக்கு மாறியது.

இன்றைக்கு அந்த சேனல் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு, விநியோகத்தைப் பெரிய அளவில் செய்யாவிட்டாலும், தாங்கள் தயாரித்த, விநியோகித்த படங்களில் சம்பாதித்ததைவிட, அதிக அளவுக்கு இன்றைக்கு மற்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள் மூலமாக வருமானத்தைக் குவித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் அளவில் வியாபாரம் ஹிட். ஆனால் அன்று அவர்கள் ஆரம்பித்துவைத்த அந்த விளம்பர உத்தியை ஒரு ‘பொறி’ என்று உணர முடியாமல் இன்று சேனல் விளம்பரங்களைக் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அவற்றை விட முடியாமல் சிறு தயாரிப்பாளரோ, பெரிய தயாரிப்பாளரோ, அத்தனை பேரும் வேறு வழியே இல்லாமல் ஒரு கோடிவரை செலவுசெய்ய வேண்டியிருக்கிறது.

மௌனியாக மாறிய சங்கம்
நாளிதழ் சினிமா விளம்பரத்துக்கு வரையறை செய்த தயாரிப்பாளர் சங்கம் சேனல்களில் தரப்படும் விளம்பரத்துக்கு வரையறை எதையும் போடவேயில்லை என்பது ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதே தயாரிப்பாளர் சங்கம்தான் வாரப் பத்திரிகைகளில், சிறு சிறு இணையதளங்களில் விளம்பரம் செய்யக் கூடாது, தமிழ்நாடு முழுக்க ஹோர்டிங் விளம்பரங்கள் வைக்கக் கூடாது என்பது போன்ற வரையறைகளைக் கொண்டுவந்தது.

இதனால் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துகொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் செலவு குறைந்தது. ஆனால் பெரும் செலவு பிடிக்கும் தொலைக்காட்சி, பண்பலை வானொலி விளம்பரங்களுக்கான வரையறையை ஏன் தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவரத் தயங்குகிறார்கள் என்றே புரியவில்லை. எத்தனையோ பூனைகளுக்கு மணி கட்டியவர்கள் இந்தப் பூனைகளுக்கு மணி கட்ட ஏன் இத்தனை யோசனை செய்ய வேண்டும் என்பதும் தெரியவில்லை.

ஏன் இந்த பாரபட்சம்?
ஒவ்வொரு தயாரிப்பாளரும் பாடல்கள் மட்டுமில்லாமல் படத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கான காட்சிகளின் தொகுப்பு என அத்தனையும் சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பிக்கொள்ளத் தங்கள் கைப்பட எழுதிய கடிதத்துடன் கொடுக்கிறார்கள். சரி படத்தின் புரமோஷனுக்காகக் கொடுக்கிறார்களே அவர்களுக்கு புரமோஷன், தங்களுக்கு நிகழ்ச்சிக்கான இலவச உள்ளடக்கம் என்ற அடிப்படைப் புரிதலில்தான் இது ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இப்படிக் கொடுக்கப்படும் படக் காட்சிகளை எத்தனை சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன என்று கேட்டீர்களானால் மிகக் குறைவே.

பிரபல சேனல்கள் என்றில்லாமல் எல்லா சேனல்களுக்கும் விளம்பரமும், படக் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்க, பெரிய சேனல்கள் சிறு முதலீட்டுப் படங்களின் காட்சிகளையோ பாடல்களையோ ஒளிபரப்ப முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் சிறு சேனல்களாவது காட்ட வேண்டுமல்லவா? அவர்களுக்கும் பெரிய நடிகர்கள், தயாரிப்புகளின் படங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான் பெரிதாக இருக்கிறது.

பின் இலவசமாகப் படக் காட்சிகளைக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு என்ன பிரயோஜனம்? என் இயக்கத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பாடல்களை பெரிய சேனல்கள் என்று இல்லாமல் எல்லா சேனல்களும் ஒளிபரப்பி ஆதரவு கொடுத்தன. அதற்குக் காரணம் அவர்களுடனான என் நட்பு. அது எத்தனை தயாரிப்பாளர்களுக்கு வாய்க்கும்?
தொடர்புக்கு sankara4@gmail.com

Post a Comment

1 comment:

kalil said...

நல்ல கேள்வி அண்ணே. இத ஏன் தயாரிப்பாளர் சங்கம் கேக்கலன்னா அதற்கு பதில் அரசியலா இருக்குமோ? ஏன்னா எல்லா அரசியல் கட்சியும் சேனல் இருப்பதலய?

குறிப்பு: இந்த விளம்பர கலாசாரத ஆரம்பிச்சது ஏவிஎம் தான் உதா:- மின்சார கனவு, ஜெமினி இப்படி நிறைய
என்ன அந்த தனியார் தொலைகாட்சி அதவிட அதிகமா விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க