Thottal Thodarum

Jun 14, 2017

கொத்து பரோட்டா -2.0-30

கொத்து பரோட்டா 2.0-30
சென்ற வார ராயல்டி கட்டுரையில் நான் கூட ஒரு படத்தில் பாடியிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அதற்கு காரணம் நான் வழக்கமாய் பாடும் கரோக்கே பார்தான் காரணம். அங்கே தான் என் குரல் வளத்தை அந்த இசையமைப்பாளர் கண்டு கொண்டு வாய்ப்பளித்தார். இன்றைக்கு க்ரோக்கே பாரெல்லாம் தேவையில்லை எப்படி டப்மேஷ் எனும் ஆப்  பல பேரின் திறமைகளை வெளிக் கொணர்ந்ததோ அது போல தற்போது ஸ்மூல் எனும் புதிய ஆப் பல திறமையான பாடகர்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆம் இந்த ஆப் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமான கரோக்கே ஆப். எப்படி டப்மேஷில் டயலாக் போர்ஷனை அப்லோட் செய்து  வைத்திருப்பார்களோ? அது போல தமிழ் ஹிட் பாடல்களின் மைனஸ் வர்ஷனும், பாடல் வரிகளையும் அப்லோடிட்டிருப்பார்கள். நாம் ஆப்பை திறந்து, பாடலை தெரிவு செய்து ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாடினால் வீடியோவாக சேவ் ஆகும். சமீபத்தில் வெளியான  ரெண்டு புதிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல். ஒன்று நான்கைந்து பேர் சேர்ந்து பாடிய ராஜாவின் “என் கண்மணி” பாடல். அட்டகாச ஜுகல் பந்தி என்றால். .ரம்யா துரைசாமி என்பவர் பாடிய வள்ளி பட பாடலான “என்னுள்ளே.. என்னுள்ளே” அட்டகாசம். பாடுகிறவர்கள் அனைவரும் அமெச்சூர் பாடகர்களே ஆனாலும் கிட்டத்தட்ட பர்பக்‌ஷனோடு இருந்தது. என்ன இந்த ஆப் மொத்தமும் இலவசம் கிடையாது. முத்ல முறை மட்டும் ஒரு பாடல் சோலோவாக பாடி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். மற்றபடி ட்யூட்டாகவோ, அல்லது ஒரே பாடலை இரண்டு மூன்று பேராகவோ பாடி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். தனியே சோலோ, ட்யூட் வேண்டுமென்றால் பணம் கேட்கிறது மாத, வருட வாடகை என்று. பாடலின் மேல் ஆர்வமிருக்கிறவர்களுக்கு மாதம் 55 ரூபாய் ஒன்றும் அதிகமாய் தோன்றாது என்றே தோன்றுகிறது. https://www.youtube.com/watch?v=jU7lR5qdh4E&t=23s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் விஷால் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள். அவர் அணியினர் முன் நிற்கும் சினிமா தொழில் சார்ந்த பிரச்சனைகள் பல. அவற்றுள் பைரஸி பற்றி பேச நிறைய இருந்தாலும் முக்கியமாய் பேச வேண்டிய விஷயம் சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர்கள்/ தியேட்டர் அதிபர்களிடமிருந்து வரும் வசூல் கணக்கு வழக்குகள். பெரிய படங்களுக்கு வசூல் பிரச்சனையில்லையா? என்று கேட்டீர்களானால் அவர்களுக்கும் உண்டுதான் ஆனால் பெரும்பாலான பெரிய படங்களின் வியாபாரம் எம்.ஜி, அட்வான்ஸ், என விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளரும், தியேட்டர் அதிபர்களிடமிருந்து விநியோகஸ்தரும் வசூல் செய்துவிடுவதால் வந்த வரைக்கும் லாபம் என்ற வகையில் வியாபாரம் போய் விடுகிறது.  சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் நிலை அப்படியில்லை.  யாராவது ஒரு விநியோகஸ்தரை நம்பி படத்திற்கான விளம்பரச் செலவிலிருந்து க்யூப், யூஎஃப் ஓ, ஸ்க்ராபிள், பி.எக்ஸ்.டி என எல்லா டிஜிட்டல் ஒளிபரப்புக்கும் பணம் கட்டி,  போஸ்டர், பேனர்களுக்கு செலவு செய்து, விநியோகம் செய்து கொடுக்கிறேன் எனும் நிறுவனங்களுக்கு குறைந்த பட்ச தொகையாய் ஒரு தொகையை முன் பணமாய் கட்டி வெளியிடுகிறார்கள்.  அப்படி வெளியான படத்தின் கணக்கு வழக்கை ஒழுங்காக தருகிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சென்னை மல்ட்டி ப்ளெக்ஸுகளில் கணக்கு சரியாகவே வந்துவிடும்.  ஏனென்றால் இங்கே அரசின் வரி முதற்கொண்டு கணக்கு காட்டப்பட்டு அந்தந்த வாரத்துக்கு செக் மூலம் தயாரிப்பாளருக்கான ஷேரை  விநியோகஸ்தரிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் வெளியூர் தியேட்டர்கள், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் அப்படியில்லை. பெரும்பாலும் வாய்க் கணக்காய் காலையில் ரிப்போர்ட் என்று ஒரு நம்பரை சொல்வார்கள். அது ரொம்பவும் சின்னபடமாய் இருந்துவிட்டால் போதும், அவ்வளவு தான். விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தினமும் ஒர் எக்ஸெல் ரிப்போர்ட் மெயிலில் அனுப்புவார்கள். எந்தெந்த ஊரில் எவ்வளவு காட்சிகள், எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்  என ஒரு கணக்கு வரும். அது தியேட்டர்காரர்கள் சொல்வதுதான் அதை செக் செய்ய முன்பெல்லாம் தியேட்டர் ரெப் என்றொருவர் இருப்பார். இன்றைக்கு அப்படியெல்லாம் இருப்பதாய் ஏதும் உத்தரவாதமில்லை. ஆனால் தினசரி செலவு கணக்கில் மட்டும் ரெப் சம்பளம் 300 ரூபாய் வந்துவிடும். ஒரு நாளைக்கு மொத்த வசூலே தியேட்டர் பங்கு போக 300-400மாய் கணக்கு காட்டப்பட்ட படத்திற்கு அதிலும் இம்மாதிரியான செலவுகள் போக ஒன்றுமே மிஞ்சுவதில்லை.

சமீபத்தில் வெளியான ரகுமான் படமொன்றின் தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர், தியேட்டர் சைடிலிருந்து கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டை பார்த்து ரத்தக்கண்ணீர் தான் வந்தது.  வழக்கமாய் டி.சி.ஆர் எனும் டெய்லி கலக்‌ஷன் ரிப்போர்ட் அனுப்புவார்கள். இண்டர்நெட் காலத்துக்கு முன் தியேட்டரில் விநியோகஸ்தரின் ரெப் பத்து ருபாய், 20 ரூபாய், 30 ரூபாய் டிக்கெட் என வரிசைக்கிரமாய், இந்த நம்பரிலிருந்து இந்த நம்பர் வரை என்று டிக்கெட் சீரியல் நம்பர் கவுண்டர் பாயிலை கணக்கெடுத்து அந்த ஷோ  ஆரம்பித்தவுடன் டெலிபோனில் சொல்லுவார். அதை மேனேஜர் கொடுக்கும் டி.சி.ஆர் ரிப்போர்ட்டும் உறுதிப்படுத்தும். இன்றைக்கு டெக்னாலஜி வளர்ந்த காலத்திலும் ரெப்புக்கு பதிலாய் தியேட்டர் அலுவலரே இத்தனை டிக்கெட் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அரசு நிர்ணையித்த டிக்கெட் விலைக்கு விற்காமல் விலை போடாத கூப்பன் மூலம் தான் விற்பனை நடைபெறுகிறது.  அப்படி விற்ற டிக்கெட்டுகளின் நம்பர் ஏதும் சொல்லாமல் 15 டிக்கெட், 40 டிக்கெட் ப்ளாட் ரேட்டாய் 60-80 ரூபாய்க்கு விற்றதாய் கணக்கு சொல்லப்படும். ஒரு வாரம் கழித்து வரும் டிசிஆரில் கூட பொத்தாம் பொதுவாய் இத்தனை டிக்கெட் என  வெறும் நம்பர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நம்பரிலிருந்து இந்த நம்பர் வரை என்று கூட கணக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. இதற்கு ரெப் சம்பளம் 300 ரூபாய் வேறு வசூலில் கழிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான சின்ன பட தயாரிப்பாளர்களுக்கு எப்படி தயாரிப்பு பற்றி பெரிய அனுபவமில்லாமல் மாட்டிக் கொள்கிறார்களோ அதை விட ரெண்டு படி மேலே போய் விநியோகம் பற்றி ஒரு அரிச்சுவடி கூட தெரியாமல் மாட்டிக் கொண்டு, படம் நல்லாயில்லை, ஆர்டிஸ்ட் இல்லைன்னா படத்துக்கு கூட்டம் வரலை, எனும் கூற்றின் உண்மை, பொய் எதுவும் அறியாமல் ரெண்டு கோடி ரூபாய் படத்தின் வசூல் மொத்தமே பத்து லட்சத்திற்கும் குறைவாய் வந்து, சினிமாவே ரொம்ப மோசங்க.. என்றோ.. அல்லது பெரிய ஆர்டிஸ்ட் இருந்தாத்தான் படம் பண்ணுவேன் என்று வளரும் நடிகர் யாராவது ஒருத்தருக்கு அவர் வாழ்நாள் சம்பளமாய் ஒரு பெரிய சம்பளத்தை கொடுத்து இன்னும் பெரிதாய் இழப்பார்.

மேற்ச்சொன்ன தயாரிப்பாளர் இயக்குனர் இருவரும், சென்னையின் முக்கிய திரையரங்கின் முதல் நாள் காட்சியின் போது உடனிருந்து தியேட்டரில் போய் தலை எண்ணி, பரவாயில்லை நம்ம படத்திற்கு இத்தனை பேர் முதல் நாள் வந்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனால் கணக்கு வந்ததோ வெறும் நூற்றுச் சொச்சம். பின் வரும் நாட்களில் அதை விட மோசம்.

இங்கே தயாரிப்பாளர் பொய் சொல்கிறார் என்று விநியோகஸ்தரும், தியேட்டர்காரர்கள் சரியான கணக்கு தருவதில்லை என்று விநியோகஸ்தரும், ஆள் வந்தா நாங்க ஏன் சார் பொய் சொல்லுறோம் என்று தியேட்டர்காரர்களும் ஆளாளுக்கு ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, ஆக வேண்டிய காரியத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். யாரோ ஒரு ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு தன்னுடய சீட் அமைப்பு. எத்தனை ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணையித்து, ரசிகன் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து படம் பார்க்க முடியும் போது, ஒரு தயாரிப்பாளனுக்கு தன் படத்தின் டிக்கெட் விற்பனையை ஏன் மூன்றாம் நான்காம் மனிதன் சொல்லும் தகவலை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்?.
எல்லா திரையரங்கின் டிக்கெட் விற்பனையும் கணினி மூலம் மட்டுமே விற்க வேண்டுபடியாகவும், அந்த விற்பனையை அப்படத்தின் தயாரிப்பாளரும் அவ்வப்போதே பார்க்கக்கூடிய அளவில் ஏற்பாடு செய்ய முடியும். கேரளாவில் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்பட்டுவிட்டது.  டிக்கெட் விற்பனை வெளிப்படையாகும் போது, அரசு நிர்ணையித்த கட்டணத்தை மீறி விற்க முடியாது.  எனவே இப்போது இருக்கும் நிலை அனைவருக்கும் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் சூப்பர் ஹிட் படம் என்று விளம்பரப்படுத்தும் படங்களின் நிஜ வசூல் நிலை எல்லாம் கேட்டால் நொந்து போய்விடுவீர்கள்.  விற்பனையில் வெளிப்படைத்தன்மை  ஒவ்வொரு நடிகனின் மார்கெட் நிலையை மிகத் துல்லியமாய் வரும் கணக்கு நிர்ணையித்துவிடும். வசூல் நிலவரம் தெளிவாகும். அதற்கேற்றார்ப் போல வியாபாரம் சிறப்பாகும். நல்ல ஆரோக்கியமான நிலை இருந்தால் நிறைய வியாபாரிகள், இன்வெஸ்டர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்கள். இதையெல்லாம் செய்ய மலையை புரட்டிப் போடத் தேவையில்லை. முற்றிலும் கணினி மயமாக்க அனைத்து தியேட்டர்களிலும் இன்று கம்ப்யூட்டர், இணையம் இருக்கிறது. டிக்கெட் விற்பனைக்கான சர்வர் மட்டுமே. அதனின் மெயிண்டெனெஸ் மட்டுமே.. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்ட்ர் அதிபர்கள்  அனைவருக்குமே நல்லது. விஷால் தலைமையிலான அணி இதை செய்யும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளபடியால் தான் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் குழுவில் உள்ளவர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், அவர்களின் இத்தனை நாள் பிரச்சனையை வழிக்கு கொண்டு வர இதே நல்ல சமயம். செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு.. இன்னொரு சினிமாக்காரன்.



Post a Comment

1 comment:

tshankar89 said...

கேபிள் சங்கர்...

பிரச்சினை என்னெவெனில் இங்கே யாருக்கும் நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் துளிக்கூட இல்லை. அது தான் முக்கிய காரணம்.

சங்கர நாராயணன் தியாகராஜன்.