Thottal Thodarum

Nov 12, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

thambi நண்பர் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம். இன்றைய கரண்ட் அட்ராக்‌ஷனான அஞ்சலி நடித்திருக்கும் படம். நம் பா.ராகவன் வசனமெழுதியுள்ள படம். கரண் மிகவும் நம்பியிருந்த படம். தமிழக கேரள எல்லையோரத்தில் நடந்த உண்மைக் கதை என்று சொன்னது, அதையெல்லாம் விட முக்கியமாய் வெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்திருக்கும் புதுப் படம். இப்படி ஏகப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் படம்.


சுந்தரம் கன்யாகுமரி மாவட்டத்தில் வாத்தியார் வேலைக்கு படித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவன். அப்பா அம்மா அவனுக்கு விட்டுப் போனது ஒரு வீடு மட்டுமே. அதனுடன் பேங்க் லோனையும் விட்டுப் போயிருக்கிறார்கள். அஞ்சலி சிலுவை என்கிற சாராய வியாபாரியின் மகள்.  சரவணன் இன்னொரு சாராய, அரிசி கடத்தல்காரனான ஆடு தாமஸின் அல்லக்கை. வேலை தேடியலையும் கரணுக்கு சென்றவிடமெல்லாம் ரிஜெக்‌ஷன். அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டத்தில் பெரும்பாலோர் செய்யும் தொழில் கடத்தல். ஆனால் கரண் அதில் ஈடுபட விரும்பவில்லை. கரண் வீட்டில் இருக்கும் சரவண சுப்பையா அக்ரி படித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் கல்யாணமாகி குழந்தைப் பெற்றவர்.  வேலை கிடைக்கவில்லை என்று தூக்கு போட்டு செத்து போகிறார். வீடு வேறு ஜப்திக்கு வருகிறது.வேறு வழியில்லாமல் கரணும் கடத்தல் தொழிலுக்கு வருகிறார். படித்தவராகையால் குறுகிய காலத்தில் பெரும் கடத்தல்காரர் ஆகிறார். இதற்கு நடுவில் அஞ்சலியின் அம்மாவை கொன்ற கதை ஒன்று. அதில் ஈடுபட்ட ஒரு இன்ஸ்பெக்டரின் தம்பி அம்புரோஸாக அஞ்சலியின் அப்பாவை பழி வாங்க துடித்துக் கொண்டிருப்பவர். அவர்கள் கதை வேறு. ஏற்கனவே சிலுவையின் கையாலான ஷண்முகசுந்தரம் கரணிடம் அடி வாங்கி அவமானப்பட்ட விஷயம் வேறு ஓடிக் கொண்டிருக்க, அஞ்சலி கரணின் காதலை வைத்து கரணை முடிக்க அவர் அலைய, இன்னொரு பக்கம் பழிவாங்க அலையும் அம்புரோஸ், இன்னொரு பக்கம் இவர்கள் காதலை எதிர்க்கும் அஞ்சலியின் அப்பா சிலுவை என்று இருக்க.. என்ன ஆயிற்று என்பதுதான் கதை.
Thambi Vettothi Sundaram_sf-13 வழக்கமாய் கதையில்லை, கதையில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இதில் ஏகப்பட்ட கிளைக் கதைகள். அதுவே ஒரு பெரிய மைனஸ் என்று சொல்லலாம். கரணுக்கு அழுத்தமான பாத்திரம். சிரிப்பு, சோகம், அழுகை, காதல், பழி வாங்கும் எண்ணம் என்று கலந்து கட்டி அடிக்கும் கேரக்டர்தான். மனிதர் உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் காதலிக்காக காத்திருக்கும் சோகத்தையும், அதன் பிறகு அடுக்கடுக்காய் நடக்கும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளையும் அநாயசமாய் கையாண்டு வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன இன்னும் கொஞ்சம் இளைமையான ஹீரோவாக இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

அஞ்சலி. ம்ம்ம்ம்ம்ஹும்.. லட்டுப் பாப்பா.. இப்படத்தின் ஓப்பனிங்குக்கு மிக முக்கியமான காரணகர்த்தா என்று தான் சொல்ல வேண்டும். படு க்யூட். அஞ்சலி ப்ரேமில் வந்ததுமே தியேட்டரில் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறதே.. அது சொல்லும் அஞ்சலியின் வெயிட்டை. அளவான எளிமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். என்னை லவ் பண்ணேண்டா.. என்று அவர் கூறிவிட்டு செல்லும் போது நான் பண்ணுறேன் என்று சொல்லாம் போல இருக்கிறது. ம்ஹும். அஞ்சலி…..
 Thambi_Vettothi_Sundaram_stills_photos_01 படத்தில் சிறப்பான கேரக்டர் சரவணனுடயது. உடலெங்கும் சரம் சரமாய் டுபாக்கூர் நகைககளுடனும், மஸ்லின் ஜிப்பாவும், லுங்கியுமாக, கட்டைக் காலுடன் அலையும் கேரக்டர். வாழ்க்கையை ஜாலியாய் கழிக்கும் ஒரு கடத்தல்கார அல்லக்கையின் ஆடம்பரமும், அட்டகாசத்தையும் அநாயசமாய் கொண்டு வருகிறார். உடனே ரூமை போடறோம்.. ஒரு கட்டிங் அடிக்கிறோம்.. யோசிக்கிறோம் என்று சொல்லும் போது சிரிக்க வைப்பவர். கொஞ்சம் அழவும் வைக்கிறார். நல்ல கேமியோ.வில்லனாக நடித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்ஸின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.  மற்றபடி ஷண்முக சுந்தரம், காதல் தண்டபாணி, சரவணனுடன் வரும் ஒரு கேரக்டர் என்று எல்லோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு ஓகே ரகமே. நிறைய இடங்களில் கொஞ்சம் மசமசக்கிறது.  வித்யாசாகரின் இசையில் “கொலைகாரா” பாடல் Soothing மெலடி. அதன் பிறகு வரும் எம்.ஜி.ஆர் ஸ்டைல் குத்து பாட்டும் ஓகே ரகம். பின்னணியிசையில் ஆங்காங்கே வரும் கொலைகாராவைத் தவிர மற்ற இடங்களில் இரைச்சல் அதிகம். வசனங்களில் ஆங்காங்கே பா.ராகவனின் டச் தெரிகிறது. குறிப்பாய் நட்பு பற்றி பேசும் இடத்திலும், சரவணனின் டயலாக்குகளில் இருக்கும் குதூகலங்களிலும். ”இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேலை கிடைக்கலைன்னா அதனால பாழா போறது அவன் இல்லை, இந்த சமூகமும், நாடும்தான்”.
Thambi_Vettothi_Sundaram_stills_photos_03 எழுதி இயக்கியிருப்பவர் வி.சி.வடிவுடையான். கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மண்ணின் பேச்சு வாசம் படமெங்கும் தெரிகிறது. நிஜத்தில் எப்படி வெட்டோத்தி சுந்தரம் இருந்தானோ அது நமக்கு தெரியாது. ஆனால் அப்படி ஒரு கேரக்டரை உருவாக்கி நம்முன் உலவ விட்டதில் இவரின் உழைப்பு நிறையவே இருக்கிறது. ஏகப்பட்ட கேரக்டர்கள், அவர்களுக்கான கிளைக் கதைகள், என்று ஆரம்பக் காட்சிகள் காட்டப்பட்டு  தொய்வு வீழ்கிறது. இவர்களுக்கான கேரக்டர்அறிமுகம் இல்லாமலேயே மிக சுலபமாய் புரியும். அப்படி புரியவில்லை என்றாலும் எதுவும் குறையாது. அஞ்சலியின் அப்பா சிலுவையை கருவருக்க ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஒரு கிறிஸ்துவர். அவர் தன் அண்ணனுக்கு காரியம் செய்வது இந்து முறைப்படி. சரி.. அண்ணன் வேறு ஜாதி. காதலுக்காக தன் சாராயத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு காதல் கொண்டவன், காதலிக்காக மதம் மாற சம்மதிப்பது என்பது போன்ற காட்சிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் க்ளைமாக்சுக்கு உருகி போகும் அளவிற்கு ஒரு காதல் கதை கிடைத்திருக்கும். கரணின் வீட்டில் இருக்கும் ஆட்கள் யார். குடியிருப்பவர்களா? அப்படியென்றால் அதற்கான காட்சிகள் இல்லை. வேலை கிடைக்காமல் அலைகிறார் ஹீரோ என்பது இன்றைய காலகட்டத்தில் சுத்தமாய் ஒத்து வராத விஷயம். அதுவும் கவர்மெண்ட் வேலைக்காக கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று ஒருவர் காத்திருக்கிறார் என்பதும், அது கிடைக்காமல் தூக்கு போட்டு இறப்பதும். அதனால் நல்வழியில் போய்க் கொண்டிருக்கும் கரண் கடத்தல்காரன் ஆவதற்கான லீட் சீன்ஸ் என்றால் சாரி பாஸ் கொஞ்சம் ஏறவில்லை.  அதே போல அந்த மத மாற்றம், கல்யாண நிறுத்தல் விஷயம். படமெங்கும் சாகிறவர்கள் எண்ணிககையும் அதிகம்தான். ஆரம்ப கடத்தல் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு மலையாள படத்தில் பார்த்ததாய் ஞாபகம். இடைவேளை வரை மிகச் சாதாரணமாக போகும் திரைக்கதையும் கொஞ்சம் மைனஸ் தான்.

ப்ளஸாக பார்பதானால் அருமையாய் நெருக்கமாய் பின்னப்பட்ட சம்பவங்கள், கேரக்டர்களை உள்ளடக்கிய திரைக்கதையை முடிந்த வரை குழப்பாமல்  கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கடத்தல் காட்சிகளை விட, ஊர் திருவிழா காட்சிகள், குழாயில் மோர் மாங்காய் ஊற்றும் நிகழ்வு, கொஞ்சம் மலையாள ஆக்ஸண்ட் கலந்த தமிழ். க்ளைமாக்ஸ் நோக்கிச் செல்லும் காட்சிகளில் இருக்கும் தெளிவு. அதன் பின்வரும் காட்சிகளில் இருக்கும் ரியலிசம், இவ்வளவு நடிகர்களை வைத்து அவர்களுக்கான கேரக்டர்கள் என்று நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்களை கொடுத்து இரண்டாவது பாதியை படு சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். அஞ்சலியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸையும், கரணின் உழைப்பையும் சரியே பயன் படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு அபாரமான காதல் கலந்த ஆக்‌ஷன் படம் கிடைத்திருக்கும்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - 35/70
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Jawahar said...

இன்னும் சில வசனங்களையும் மேற்கோள் காட்டியிருக்கலாமே? பாரா வை மனசில் வைத்துக் கொண்டு விமர்சனத்தைப் படிக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்!

http://kgjawarlal.wordpress.com

prasanth s said...

வெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு
" WHAT YOU MEAN ".

shortfilmindia.com said...

yes.. i mean what i mean. prasanth.s

rajasundararajan said...

//வழக்கமாய் கதையில்லை, கதையில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இதில் ஏகப்பட்ட கிளைக் கதைகள். அதுவே ஒரு பெரிய மைனஸ் என்று சொல்லலாம்.//

அதாவது அளவுக்கு அதிகமான கதையாலும் கேடு வரும் என்று சொல்ல வருகிறீர்கள்.

உங்களது கூறியதுகூறலான (cliche) 'திரைக்கதை சரியில்லை' என்னும் கூற்று இந்த விமர்சனத்தில் இடம்பெறவில்லையே, படத்தைப் பார்க்கலாமோ?

பிறகும் உங்களது எழுத்தை நம்பிப் படம்பார்க்கக் கூடாது என்பதைக் காலம் கடந்து 7ஆது மனிதன் பார்த்துப் புரிந்துகொண்டேன்.

CS. Mohan Kumar said...

முதல் பாராவில் "படம்" என்கிற வார்த்தையை (வழக்கம் போல் ) பல முறை உபயோக படுத்தியதால் ஆட்டத்தில் நீங்கள் அவுட் ஆகிறீர்கள் :))

Damodar said...

//படித்தவராகையால் குறுகிய காலத்தில் பெரும் கடத்தல்காரர் ஆகிறார். //

?????

ஜோ/Joe said...

/படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டத்தில் பெரும்பாலோர் செய்யும் தொழில் கடத்தல்.//
அடேங்கப்பா ! என்ன ஒரு கண்டுபிடிப்பு :)

வவ்வால் said...

கேபிள்,

நீங்க சொல்றத பார்த்தா படம் பரவாயில்லைப்போலா இருக்கே. ஆனால் பாவம் இயக்குநர் கரண் போன்ற ஹீரோக்களை வைத்து படம் செய்து அவரது ஓப்பனிங்கை தவறவிட்டாரோனு தோனுது.

//அதன் பிறகு அடுக்கடுக்காய் நடக்கும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளையும் அநாயசமாய் கையாண்டு வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன இன்னும் கொஞ்சம் இளைமையான ஹீரோவாக இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்//

கரண் இளமையை எல்லாம் பலான படங்களில் தொலைத்துவிட்டார் :-)) அந்த காலத்தில பப்லு, இவர் எல்லாம் மலையாள பிட் படங்களின் ஹீரோக்கள்.

இவர் இப்போ என்ன தான் சூப்பர் கதையில் நடித்தாலும் யூத்கள் கூட்டம் அதே கண்ணோட்டத்தில் வராது.காதல் காட்சிகளில் கரணை பார்க்கும் போது சிரிப்பு வந்து விடுகிறது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அஞ்சலியின் அப்பா சிலுவையை கருவருக்க ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஒரு கிறிஸ்துவர். அவர் தன் அண்ணனுக்கு காரியம் செய்வது இந்து முறைப்படி//

க‌ர‌ண் மொத‌ த‌ட‌வ‌ இன்ஸ்பெக்ட்ர‌ பார்க்க‌ வ‌ரும் போது இன்ஸ் ஞான‌ஸ்தான‌ம் வாங்கின‌ விச‌ய‌த்த சொல்லுவார் !!!!