Thottal Thodarum

Jun 25, 2013

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா

 
வெஜ் உணவு என்றால் சென்னையை பொருத்தவரையில் பதினோரு மணிக்குள் தேடினால் தான் கிடைக்கும். அதற்கு மேல் நல்ல சுவையான குவாலிட்டியான வெஜ் உணவு என்றால் நிச்சயம் ரோடு ரோடாய் அலைய வேண்டியதுதான். அந்த வகையில் 11.30 வரை அசோக் நகர் சரவண பவன் தான் கை கொடுக்கும். 3ஸ்டார் ஓட்டல் விலையென்றாலும், நல்ல சுவையான வயிற்றைக் கெடுக்காத உணவு நிச்சயம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இரவில் சரவணபவனே தஞ்சம். சாப்பிட்டதற்கான பில் கொடுத்த அடுத்த நிமிடம் எடத்தை காலி பண்ணு என்று வெளியே துறத்தும் உணவகங்கள் இருக்குமிடத்தில், அதுவும் மூடுகிற நேரத்தில் நின்று நிதானித்து வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டு விட்டு கல்லாவை மூடும் பண்பிற்காகவே இங்கே சாப்பிட போகலாம். அசோக்நகரில் இவர்களுக்கு பதிலாய் இன்னொரு சைவ ஓட்டல் திறக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அசோக்நகர் கிட்டத்தட்ட சரவணபவன் ரிப்ளிக்காவில் ஒரு பாஸ்ட் புட் உணவகத்தை 7வது அவின்யூவில் திறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே ஓப்பன் கிச்சன். நின்று கொண்டும், உட்கார்ந்து சாப்பிடும் வசதியென்று. மங்களாம்பிகா என்ற பெயரில் இவர்கள் ஏற்கனவே கல்யாண கேட்டரிங் செய்து பிரபலமானவர்கள். இவர்களின் முதல் உணவகம் இது.


உணவகம் நீட்டாக இருந்தது. நான் போன நேரத்தில் கிட்டத்தட்ட மூடும் நிலையில் ஏறக்கட்டிக் கொண்டிருந்தார்கள். என்ன இருக்கு என்று கேட்ட போது கிச்சடி, செட் தோசை வடகறி, பரோட்டா, சப்பாத்தி என்று லிஸ்ட் போட்டார்கள். நான் கிச்சடியையும், செட் தோசை வடகறியையும் ஆர்டர் செய்தேன். சரவணபவனின் பாணியிலேயே ப்ளேட்டுகள், சப்ளை செய்யும் முறை. உடனடியாய் கிச்சடியை கொடுத்துவிட்டார்கள். வழக்கம் போல் கிச்சடி மஞ்சள் கலரில் இல்லாமல் வெள்ளையாய் இருந்தது. நல்ல நெய் மணத்தோடு முந்திரி போட்டு, தக்காளி சட்னி, சாம்பார், கார சட்னி தந்தார்கள். சுவையில் ஏதும் குறையில்லை. அடுத்ததாய் உடனடியாய் செட் தோசை வடகறி வந்தது. தோசை நல்ல பதமாய் இருந்தது. ஆனால் அது செட் தோசை என்று சொல்ல முடியவில்லை. செட் தோசை மஞ்சள் போட்டு கொஞ்சம் வேறு விதமான சுவையில் இருக்கும். இவர்கள் கொடுத்தது கல் தோசை. உடன் கொடுத்த வடகறி அதீத மசாலா இல்லாமல், வெகு சிறப்பாக இருந்தது. சைதாப்பேட்டை வடகறி பேமஸான மாரி ஓட்டல் வடகறி சாப்பிட்ட நாக்கிற்கு நன்றாக இருந்தது என்றால் நிச்சயம் நல்ல வடகறி தான். 
குடிப்பதற்கு தண்ணீர், சப்ளை, க்ளீனிங் எல்லாம் அப்படியே சரவணபவனின் இம்பாக்ட். விலையில் மட்டும் கொஞ்சம் நியாயமாகவே போட்டிருந்தார்கள். சரவணபவனில் 55 விற்கும் பரோட்டா இங்கே 38 ரூபாய்தான். இப்படி எல்லா விலையிலும் நியாயமாய்த்தான் இருந்தது. மற்றொரு நாள் பரோட்டா குருமா மட்டும் இரவில் சாப்பிட்டேன். சைவ ஓட்டல்களில் பரோட்டா எப்போது அவ்வளவு சிலாகிப்பாய் இருக்காது. ஏதோ இவர்களுக்கு வாய்த்த மாஸ்டர் கொஞ்சம் பரவாயில்லை சாப்டாக இருந்தது. உடன் வந்த குருமாவும் நல்ல சுவை. மதியத்தில் மாடியில் சாப்பாடு போடுகிறார்கள். இந்த ஐயிட்டங்களுடன், தோசை வகைகள், நான், ரொட்டி, என்று தந்தூரி வகைகளும் கொடுக்கிறார்கள். விலையும் ஓரளவுக்கு ஓகேதான். சர்வீஸில் மற்றும் பில்லிங்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு வேண்டும். புதியதாய் ஆரம்பித்திருப்பதால் டீத்திங் ப்ராப்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நிச்சயம் சரவணபவனுக்கு இணையாய் நல்ல சுவையான வெஜ் உணவு அசோக்நகரில் தரத்தோடு, சற்றே குறைந்த விலையில் கொடுக்க வந்திருப்பது சந்தோஷமே.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Cinema Virumbi said...

கேபிள் சார்,

போன வாரம் சென்னையில் இருந்த போது இந்த ஹோட்டலில் பல முறை சாப்பிட நேர்ந்தது. எங்க வீடு இந்த ஹோட்டலில் இருந்து கூப்பிடு தூரம்தான்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Philosophy Prabhakaran said...

சார்... மங்கா டிபன் செண்டர் படத்துக்கு எப்ப சார் விமர்சனம் போடுவீங்க ?

raamraam said...

thank you very much for your information

ஸ்ரீராம். said...

தஞ்சாவூர் மங்களாம்பிகா ஞாபகத்தில் வந்தேன். நான் படித்த காலத்தில் தஞ்சாவூரில் அது ஃபேமஸ்! நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களும், படங்களும் ஒருமுறை அங்கு சென்று சுவைத்துப் பார்க்கத் தூண்டுகின்றன.