கேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி
கேட்டால் கிடைக்கும் இந்தக்குழுவை முகப்புத்தகத்தில் ஆரம்பித்த போது நிறைய கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர, வளர, குழுவிலிருப்பவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு சாதாரணனுக்கும் மறுக்கப்படும் அவனது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலையை குறைக்க வேண்டுமென்பதே அக்குழுவின் இலக்கு. அப்படி கேட்டுப் பெற்ற வெற்றிகளும், தோல்விகளும் நிறைய என்றாலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டம் ஒன்று தான் மால்களின் புட் கோர்ட்டுகளில் நடக்கும் கொள்ளை.
புட்கோர்டுகளில் நாம் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு அங்குள்ள கவுண்டரில் குறைந்த பட்ச தொகையாய் நூறு ரூபாய் கட்டி க்ரெடிட் கார்டு போன்ற கார்டை வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் இருபது ரூபாயை அவர்களின் கார்டுக்காக கழித்துக் கொண்டு, மீதமுள்ள என்பது ரூபாய்க்குத்தான் உணவுப் பொருட்களை வாங்க முடியும். இந்த இருபது ரூபாய் எதற்கு என்று கேட்டால்தான் இவர்கள் அடிக்கும் கொள்ளை உங்களுக்கு புரியும். புட்கோர்ட்டில் இருக்கும் கடைகளின் வியாபாரத்தில் 25திலிருந்து 30 சதவிகிதம் வரை மாலின் உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். எனவே இவர்களது வியாபரத்தை கணக்கிட்டுக் கொள்வதற்காக இந்த கார்டு சிஸ்டம். இவர்களின் அக்கவுண்டபிலிட்டிக்கு நாம் எதற்கு காசு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த்தினால் நிறைய மால்களில் அதற்கான காசு கொடுக்க மாட்டேன் என்று நானும் சுரேகாவும் போராடியிருக்கிறோம். சில மாதங்களுக்கும் ஈ.ஏவில் உள்ள மாலில் போராடி கார்டுக்கான பணத்தை வாங்காமல் மக்களுக்கு உணவு வழங்கும் பழக்கத்தை கொண்டு வரச் செய்தோம். ஆனால் அப்படி செய்தவர்கள் இன்னொரு தில்லாலங்கடி செய்தார்கள். நூறு ரூபாய்க்கு சார்ஜ் செய்துவிட்டு என்பது ரூபாய்க்கு சாப்பிட்ட மிச்சம் போக மீதமிருக்கும் 20 ரூபாயை நாம் மீண்டும் திரும்ப வந்து சாப்பிட்டுத்தான் கழிக்க வேண்டுமே தவிர, பணத்தை திரும்ப தர மாட்டார்கள். இப்படி இவர்களிடம் தங்கிப் போகும் தொகையைப் பற்றியும், இவர்கள் அடிக்கும் கொள்ளையைப் பற்றியும் வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள் என்ற தலைப்பில் ஒர் கட்டுரை எழுதியிருந்தேன்.
கண்ணுக்கு தெரிந்து நம் பாக்கெட்டினுள் கைவிட்டு இவர்கள் அடிக்கும் கொள்ளையை எதிர்த்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த புட் கோர்ட்டுகளில் உணவருந்துவதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறந்தள்ளியிருக்கிறேன். அதை விட கொடுமை உணவு பரிமாறப்படும் இடத்தில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டார்கள். நாம் மினரல் வாட்டர் பாட்டிலைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் அதுவும் 20 ரூபாய் வாட்டர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பதை நிறைய பேர் கேட்டு ப்ரச்சனை பண்ணுவதால் புது யுக்தி கண்டுபிடித்து, இம்மாதிரி மால் மற்றும் தியேட்டர்களில் விற்பதற்காகவே அதிக விலை போட்ட வாட்டர் பாட்டில்களையே சப்ளை செய்ய ஆரம்பித்தார்கள். லீகலாய் அடிக்கும் கொள்ளை. இந்திய அரசின் சட்டப்படி ஒரு உணவகத்தில் உணவு பரிமாறப்படும் போது அங்கே குடிப்பதற்கு நல்ல குடிநீரும், டாய்லெட் வச்திகளும் இருக்க வேண்டுமென்பது விதி. ஆனால் அதை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. மக்களும் தங்கள் உரிமைகளை கேட்பதில்லை. நிறைய இடங்களில் தண்ணீருக்காக சண்டைப் போட்டு வாங்கி கொடுத்திருக்கிறோம். அப்படி கேட்டுப் பெற்ற விஷயம் தான் சென்னையில் உள்ள கே.எப்.சியின் உணவகம் எல்லாவற்றிலும் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுடன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நல்ல குடிநீரை ஒரு க்ளாஸில் தர ஆரம்பித்திருப்பது. ஈ.ஏ மாலில் தருவதில்லை. ஏனென்றால் அது ரெஸ்டாரண்ட் கிடையாது என்ற நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் சண்டைப் போட்டு தண்ணீர் வாங்கியிருக்கிறேன். இப்படி நமது அடிப்படை உரிமைகளை கேட்டுத்தான் பெற வேண்டிய நிலையில் இருக்க, தொடர்ந்து கேட்க கேட்க நம் உரிமைகளை அவர்களே கொடுக்க வேண்டிய நிலை வரும் என்பது உண்மையாகியிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் வடபழனியில் ஆரம்பித்திருக்கும் புது மாலான ஃபோரம் மாலுக்கு சென்றிருந்தேன். அங்கேயிருந்த புட் கோர்ட்டில் என் முதல் கேள்வியே கார்டுக்கு எவ்வளவு என்பது தான். கார்டுக்கு இருபது ரூபாய் என்றார்கள். அடுத்ததாய் நான் கேள்வி கேட்க வாயெடுப்பதற்குள் கார்டை திரும்ப நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்றால் அந்த இருபது ரூபாயை கொடுத்துவிடுவோம் என்றார்கள். அதே போல நீங்கள் சார்ஜ் செய்த தொகையின் மீதமிருந்தாலும் கார்டை திரும்பக் கொடுக்கும் போது கொடுத்துவிடுவோம் என்றார்கள். க்ரெடிட் கார்டு மூலமாய் பணம் கட்டி கார்டு வாங்கினால் மட்டும் பணத்தை திரும்பத் தர இயலாது என்றார்கள். என்னடா இது என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உள்ளே சென்ற போது அடுத்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. குடிநீர் என்ற போர்ட் கண்ணில் பட, அங்கே போய் பார்த்தால் இரண்டு பெரிய ஆர்.ஓ வசதியுள்ள குளிர்பதனபடுத்தப்பட்ட நல்ல குடிநீரை இலவசமாய் கொடுக்க இரண்டு மிஷின்களை வைத்திருக்கிறார்கள். வேண்டுகிறவர்கள் அங்கேயிருக்கும் க்ளாஸில் பிடித்துக் கொள்ளலாம். பாட்டில் தண்ணீர் தான் வேண்டுமென்கிறவர்கள் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. நிச்சயம் இது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. இதை நாம் வீண் ஜம்பம் பார்க்காமல் ஒவ்வொரு பயணாளிகளும் கார்டை திரும்பக் கொடுத்து நம் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த முறை போகும் போது மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இருபது ரூபாய்தானே என்று அசால்டாக விட்டீர்கள் என்றால் நிச்சயம் அவர்களும் மற்றவர்களைப் போல கொள்ளையடிக்கவே விரும்புவார்கள். யாருக்கு வேண்டாம் பணம்?. அப்படி செய்தால் தான் தொடர்ந்து மற்ற மால்களிலும் இதே நிலை தொடரும்.கேளுங்கள் நிச்சயம் கேட்டால் கிடைக்கும். கிடைக்காத மால்களில் உங்களது ஆதரவை தராதீர்கள். கேட்காமலே கிடைக்கச் செய்த ஃபோரம் மால் நிர்வாகத்திற்கு நன்றி.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Doubt: by law they just need to provide the facility or must provide it for Free.?
Www.tngovernmentjobs.in