Man Of Steel
சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி அவனும் ஒர் சாதாரணன். அவனுக்கு உணர்விருக்கிறது, காதல் இருக்கிறது என்று பழைய எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் தூசு தட்டி படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நோலன் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவை ஏசு ரேஞ்சுக்கெல்லாம் தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது இனி ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்பேனா என்று சந்தேகமே.
க்ரெப்டான் கிரகத்திலிருந்து தந்தை ஜாரினால் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான் குழந்தை எல். நம்ம மகாபாரதத்தில குந்தி தேவி கர்ணனை ஆத்துல அனுப்பினா மாதிரி, இவங்க விண் கலத்துல அனுப்புறாங்க. பூமியில ஒரு தம்பதியிர் எடுத்து வளர்க்கிறான். க்ரெப்டான் கிரத்தில் புரட்சி செய்த வில்லன் எல்லின் அப்பாவை கொன்றுவிட, க்ரெப்டான் கிரக அதிபர் அவர்களை சிறைச் சேதம் செய்கிறார். க்ரெப்டான் கிரகமே அழிந்தாலும் பூமிக்கு அனுப்பப்பட்ட எல்லின் உடலில் உள்ள மரபணுக்களை வைத்து புதிய உயிர்களை படைக்க முடியும் என்பதால் வில்லன் 32 வருஷம் கழித்து பூமிக்கு வருகிறான். வழக்கம் போல் பூமியில் இருக்கும் குழந்தைதான் அந்த சூப்பர்மேன் என்று புரிந்து கொண்டு பூமியை அழிக்க வந்திருக்கும் வில்லனிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை.
படம் நெடுக பேசி பேசி மாய்கிறார்கள். நோலன் கதை என்ற போதே கொஞ்சம் யோசித்திருக்கணும். அவரும் புதுசா யோசிக்கலை. உலகத்த காப்பாத்துறேன்னு ஹீரோவும் வில்லனும் உடைக்கிற, எரிக்கிற கட்டிடங்களை எண்ணினால் ரோலன் எமிரிச் பட அழிவை விட அதிகமாய் தெரியும். ஸ்கிரீன் பூராவும் தூசு. அடங்கவே மாட்டேன்குது. படம் வேற ரொம்ப நேரம் பறந்து, சாரி.. ஓடி.. நம்மைளையும் டயர்டாக்கிடறாங்க. சூப்பர் மேனை விட செம ஸ்பீடா வில்லனெல்லாம் பறக்குறாங்க.. சூப்பர்மேன் காப்பாத்துறேன்னு அழிச்சத விட வில்லனுங்க பெரிசா அழிக்க மாட்டாங்கன்னு தோண வச்சிட்டாங்க. இரும்பு இதயம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம். நம்மாள எல்லாம் முடியாது. ம்ஹும்
கேபிள் சங்கர்
Comments