Thottal Thodarum

Jul 23, 2013

மரியான்

ஒரு கடலோர கிராமத்திலிருந்து தன் காதலியின் கடனை அடைப்பதற்காக சூடான் செல்லும் இளைஞன் ஒருவன். அவன் வேலை காண்ட்ராக்ட் முடிந்து தன் காதலியை சந்திக்க வரும் நேரத்தில் சூடான் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறான். அவன் அங்கிருந்து தப்பித்தானா? காதலியை அடைந்தானா? இல்லையா? எனும் தக்குணூண்டு கதைதான் மரியான்.



ஆஸ்கர் ரவிசந்திரன், பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மான், ப்ரெஞ்ச் கேமராமேன் மார்க்ஸ், தனுஷ், பூ பார்வதி, எழுத்தாளர் ஜே.டி.குரூஸ், குட்டி ரேவதி, என இலக்கியவாதிகளின் பங்களிப்பு வேறு எதிர்பார்ப்புக்கு கேட்க வேண்டுமா? என்ன எனக்கு மட்டுமே அந்த எதிர்பார்ப்பு இருந்தது போல.

படம் பார்த்தால் நம்மால் எந்தவிதமான கேள்வியும் கேட்கக்கூட முடியாத அளவிற்கு விறுவிறுவென சிங்கம் போல கதை சொல்வது ஒரு முறை. இன்னொரு பக்கம் கேரக்டர்களின் உணர்வுகளை அப்படியே திரையில் கொண்டு வந்து நம்மை அவர்களோடே பயணிக்க வைக்கும் படியான கதை சொல்லல் ஒரு முறை. இதில் ரெண்டாவது முறையில் சிக்கல் அதிகம். அதற்கு கேரக்டர்கள் நம்மை முதலில் ஆகர்ஷிக்க வேண்டும். அவர்களின் ப்ரச்சனைகள் நம்முடைய ப்ரச்சனைகளாய் கருதும் அளவிற்கு நம்முள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்படி ஏற்பட்டால் தான் அவனோ, அல்லது அவளோ எப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி வாழ்கிறார்கள்? சாகிறார்கள் என்ற ஈடுபாடு வரும்.
இப்படத்தின் ப்ரச்சனையே அங்குதான் ஆரம்பிக்கிறது. கொம்பன் சுறாவையே பழைய மெத்தட்டில் வேட்டையாடும் கடல் ராசா என்று ஹீரோவுக்கான பில்டப் கொடுத்தாகிவிட்டது. பின்பு அவனையே சுற்றிச் சுற்றி வரும் ஹீரோயின் அவள் யார்? அவள் ஏன் இவனையே சுற்றிச் சுற்றி வர வேண்டும்? என்பதற்கெல்லாம் விளக்கமில்லை. ஹீரோவை ராவாக காட்ட, ஹீரோயின் இடுப்பில் எத்தித் தள்ளும் பருத்தி வீரனாய் காட்டியாகிவிட்டதால் மீனவர்களின் இயல்பு வாழ்கையை காட்டியதாகிவிட்டது. பின்பு அவளின் காதலை ஏற்று பாட்டு வேறு பாடியாயிற்று. இனி கதைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏதாவது பிரச்சனை வேண்டுமே? ஹீரோயின் தாத்தா கடன் வாங்கியதை திருப்பி கேட்டு வில்லன் ஒருவன் ப்ரச்சனை பண்ணுகிறான். ஒண்ணு பணத்தைக் கொடு இல்லாட்டி உன் பேத்தியை கொடு. ஹீரோ ஊரிலேயே கடனில்லாமல் நல்லபடியாய் தொழில் செய்து கொண்டிருக்கும் ஒருவன் அவளுக்காக சூடானிற்கு வேலைக்கு செல்கிறான். அங்கே அவளுக்காக உழைத்து கடனை அடைத்துவிட்டு ஊர் திரும்பும் நேரம் பார்த்து ஜீப் ஓட்டும் போதும், சில்ஹவுட்டிலும், கையில் உள்ள மிஷின் கன் மூலம் வெடிக்கும் போதான எஃபெக்டேயில்லாமல் ரஹ்மானின் ஆரோ3டி சவுண்ட் எபெக்ஃடில் வெடித்து போகிறார்கள். படு மொக்கை வில்லன்கள். 300 கிலோமீட்டர் பாலைவனத்தில் அலையும் தனுஷின் கால்களில் அடிபடுகிறது. இடது காலில் அடிப்பட்டு கட்டப்பட்ட கட்டு, அடுத்த ஷாட்டில் வலது, அதற்கு அடுத்த ஷாட்டில் இடது என்று ஷாட்டுக்கு ஷாட் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஹீரோயினுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது? கதை எந்த காலத்தில் நடக்கிறது? இது ஃபீரியட் பிலிமா? யாரிடமும் செல்போன் கூட இல்லை. ரேப்பெல்லாம் செய்ய வருகிற வில்லன் ஒரு தொம்மை தாத்தாவின் கட்டை அடிக்கு மட்டையாகிறான்.  ஊரில் உள்ள அத்தனை பெண்களும் பாவாடை தாவணியோ, அல்லது புடவையோ கட்டிக் கொண்டு அலையும் போது பார்வதி மட்டும் ஏன் டாப் ஆங்கிளில் க்ளிவேஜ் காட்டித் திரியும் படியான பாவாடை சட்டையுடன் அலைய வேண்டும்?. ஒரு வேளை மலையாளத்தில் டப் செய்ய வசதியாய் இருக்குமென்று நினைத்திருப்பார்களா? அத்துவான பாலைவனத்தில் சம்பந்தமேயில்லாத இடத்தில் ஒரு காய்ந்த மரத்தை நட்டு, அதன் பின்னணியில் தனுஷை மிரட்ட ரெண்டு சிறுத்தை புலிகளை உலவ விட்டதன் காரணம் என்ன? ஒரு வேளை படத்தில் பெப் ஏதுமில்லை என்பதால் ரெண்டு மூணு புலியை விட்டாலாவது பயந்து போய் பிபி ஏறும் என்று நினைத்தா?  வில்லன்கள் போன் போட்டு கம்பெனியிடம் பணம் கேள் என்று சொல்லும் காட்சியில் எட்டே டயலில் இந்தியாவில் உள்ள காதலிக்கு போன் அடித்து,  திரிசூலம் சிவாஜி ரேஞ்ஜில் அம்மா சுமதீஈஈஈஈ என காதல் கசிந்துருகும் காட்சியில் எப்படி கூப்பிட்ட மாத்திரத்தில் பக்கத்து வீட்டு போனின் வாசலிலேயே காத்திருக்கிறார் ஹீரோயின்?. த்ரெட்டிங்,மற்றும் ஸ்ட்ரெயிட்டினெங் செய்த அலங்காரத்தோடு இருக்கும் ஒரு பெண்ணை எப்படி மீனவப் பெண்ணாய் ஏற்றுக் கொள்ள முடியும்?. கொம்பன் சுறா பாடல் இடம் பெற்ற இடமும், சிவந்த மண் படத்தில் வருவது போல, தனுஷை பொடி வில்லன்கள் டான்ஸ் டான்ஸ் என்று இம்சித்து ஆடிப் பாடும் எடமெல்லாம் படத்தில் காமெடி இல்லாத குறையை போக்க வந்த காட்சிகள். ஒட்டாத திரைக்கதையால் தனுஷ் பார்வதியின் நடிப்பு எல்லாம் நடிக்கிறோம். நடிக்கிறோம் என்று பறைச் சாற்றிக் கொண்டேயிருக்கும் படியாய்த்தான் அமைந்திருக்கிறது. இப்படியான கேள்விகள் எல்லாம் நமக்கு தோன்றுமளவிற்கு படத்தின் திரைக்கதை போவதால் படம் முடிந்தும் கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கிறது.
இப்படி ஏகப்பட்ட மைனஸ்களோடு இருக்கும் படத்தை உட்கார்ந்து பார்க்க வைத்த பெருமை ஒளிப்பதிவாளர் மார்க்ஸுக்கே சென்று சேரும். அற்புதமான ஒளிப்பதிவு. அண்டர் வாட்டர் ஷாட்களாகட்டும், பாலைவனக் காட்சிகளாகட்டும், தனுஷ், பார்வதியின் நடிப்பை நம்முள் கொண்டு செல்ல உபயோகித்த அதீத க்ளோசப் ஷாட்களாகட்டும் மனுஷன் கலக்கியிருக்கிறார். ரஹ்மானின் ‘நெஞ்சே எழு” ”சோனாபரியா” “கொம்பன் சுறா” “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?” ஆகிய பாடல்களில் இருக்கும் அழுத்தம் பின்னணியில் இல்லை.  சோனாபரியாவில் “பப்பு காண்ட் டான்ஸ் சாலா”வின் ரீமிக்ஸும், இன்னும் கொஞ்ச நேரம் பாடலில் கடலில் வரும் “நெஞ்சுக்குள்ளே”யும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இயக்குனர் பரத்பாலா மிகுந்த அனுபவம் பெற்றவர். அவரிடமிருந்து மேக்கப்பிலிருந்து கண்டின்யூட்டி வரை இவ்வளவு குழப்பங்களை எதிர்ப்பார்க்கவில்லை. கடல் சார்ந்த வாழ்க்கையையும் ஒழுங்காய் சொல்லாமல் அழுத்தமில்லாத காதலாய் போனதால் அற்புதமான டெக்னிக்கல் டீம். அருமையான நடிகர்கள். இலக்கியதரமுள்ள எழுத்தாளர்கள் ஆகியோர் இருந்தும் ஸ்கோர் பண்ண முடியாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது.  படத்தைப் பற்றி இப்படி நிறைய குறைகள் தோன்றிக் கொண்டேயிருந்தாலும் தரமான ஒளிப்பதிவு,  ரஹ்மானின் பாடல்கள். தனுஷ் பார்வதியின் அற்புதமான நடிப்பு இவையெல்லாம் கலந்த ஒர் அனுபவத்தை பெறலாம் என்ற எண்ணமுடையவர்களும், வழக்கமான மசாலா, காமெடி படங்களைத் தவிர வித்யாசமான படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கு மரியான். மற்றவர்களுக்கு பொறுமையை சோதிக்கும் படமாய்த்தான் இருக்கும்
கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

'பரிவை' சே.குமார் said...

தனுஷ் பார்வதியின் அருமையான நடிப்பை பாலைவனத்தில் தள்ளிவிட்டார்கள்...

நல்ல விமர்சனம்.

Unknown said...

after long time .. a straight forward and good review Mr.Cable.... dhanush and paravathi acting was awesome.... even thought this film was not commercial entertainer.. lot of awards are waiting ... let see

R. Jagannathan said...

Seems to be a fair review! Try to obtain a response from Mr. Bharath Bala!

Hope you will not look for any excuses of budget / other constraints when your film gets released, as there are many waiting to pounce on you!! - R. J.

jones sooraj said...

கடலுக்கும் , நம்மாளுங்களுக்கும் செட் ஆக மாட்டேங்குதே..!யாரோ செய்வினை வச்சிட்டாங்க போல...!!!

Kavin said...

படத்தில் ரொம்பவே சொதப்பல்கள்

http://karuvooraan.blogspot.in/2013/07/blog-post_20.html

Unknown said...

Nice Review..

Learn #Interactive #SQL #Tutorial #ONLINE www.FundasMadeEasy.com

Unknown said...

Enna cable ungaluku intha padathula oru Chinna business kooda kodukaliya..

Appadi koduthuruntha neenga itha appadiye reverses la pottutrupenga.. Any how now I know u too Brutus...

appuking said...

super vimarsanam. Ungaloda ella vimarsanamum nachunu iruku. Indha filmla dhanush acting paravala, but aadukalam filmku appuram avaru eppo parthalum nadikurenu solli mokkai poduraru. Dhanushku comercial padam dhan nalla set aagum. Poo parvathi rombha over acting panranga. Mudiyala da sami, nalla nadikuravangala pudikuravanga parkura padam idhu cable G. Thanks for posting my comment.