Thottal Thodarum

Jul 27, 2017

கொத்து பரோட்டா -2.0-36

கொத்து பரோட்டா 2.0-36
The Affair -குறும்படம்.
தமிழில் தற்காலத்தில் வரும் பெரும்பாலான குறும்படங்களில் ஒரு கேரக்டரைக்  காட்டி, இவர் பெயர் ராமசாமி. செம்ம காமெடியா பேசுவார்னு அறிமுகபடுத்தி ஆரம்பிப்பதுதான் லேட்டஸ்ட். வழக்கம். காமெடியா பேசுவார்னு முன்னமே சொல்லிட்டோமேன்கிற உரிமையில்,  பெரும்பாலான குறும்படங்கள், ப்ளாக், ப்ளூ, வொயிட் என பல கலர்களில் காமெடியாய் நினைத்து கொடுக்கும் பல விஷயங்கள் சோகமாய் முடிவதுண்டு. உறவுகள் பற்றியோ, அதன் முரண்கள் பற்றியோ பேசும் படங்கள் மிகக்குறைவு. பாஸ்ட் கட்டில்யே படம் எடுத்து பழகி, உணர்வுகளை வெளிப்படுத்த சில மாண்டேஜ் ஷாட்களோ, நிறுத்தி நிதானமாய் நடிக்க வாய்பிருக்கும் காட்சிகளோ வைத்தால் அது லேக் என்று முடிவாகி, சட்சட்டென எகிறும் எடிட் தான் சாஸ்வதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படம் விதிவிலக்கு.. உடல்நலமில்லாத படுத்த படுக்கையான மனைவி, காதல் கல்யாணம் செய்ததால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட மகன், திருமணமான மகள். மகனின் மனைவி மூலமாய் தங்கள் அப்பாவிற்கு வேறு ஒரு சிறு வயது பெண்ணுடன் தொடர்பு என்று அறிகிறான் மகன். மகள் குமுறுகிறாள். இனி அம்மா அப்பாவோடு இருக்கக்கூடாது என்று தங்களுடன் அழைக்கிறார்கள் . அப்பாவோ, இவர்கள் சொல்வது உண்மைதான். எனக்கு ஒரு உதவி செய், நீ இன்னும் ஒரு மாதம் தான் உயிரோடு இருப்பாய் நீ இறந்த பிறகு என்னுடன் இருக்கும் பெண்ணிற்கு உன் கண்களை தானம் செய்ய கையெழுத்து இடு” என்கிறார். குடும்பம் கொதிக்கிறது. பின்பு என்ன ஆனது என்பது தான் கதை. விவிங்ஸ்டன், அனுபமா குமார், போன்ற அனுபவஸ்தர்களுடன் புதியவர்களும் அருமையாய் நடித்திருக்கும் படம். நடிகர்களை கையாண்டிருக்கிற விதமாகட்டும், அப்பாவிற்கும் மகளுக்குமான வார்த்தை தடித்த உரையாடல்கள் ஆகட்டும், செம்ம மெச்சூரிட்டியாய் கையாட்டிருக்கிறார் இயக்குனர் சூர்யா நாராயணன். வாழ்த்துக்கள் . https://www.youtube.com/watch?v=C_mVB6ng5lU
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிவி சேனல்களுக்கு இலவசமாய் பாடல்களோ, காட்சிகளோ கொடுக்காதீர்கள் என்று புதிய தயாரிப்பாளர் சங்கம் கேட்டு கொண்டதும் பல குட்டிக் குட்டி டிவி சேனல்கள் எல்லாம் ஆடித்தான் போய்விட்டது.  அதற்கு இணையத்தில் ஆதரவு தெரிவித்திருந்தேன். சில பேருக்கு கோபம் வந்து பர்சனலாய் பேச ஆரம்பித்தார்கள். அதற்கு காரணமிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் சேனல்கள் அதுவும் சாட்டிலைட் சேனல்கள் என்று எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட நூறு சேனல்கள் இருக்கும். இதில் லோக்கல் கேபிள் சேனல்களை கணக்கெடுத்தால் இருநூறுக்கும் மேலிருக்கும். முன்பெல்லாம் டிவி சேனல் ஆரம்பிப்பது மிகவும் கடினம். ஆனால் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியில் ஒரு கோடி இருந்தால் டிவி சேனல் ஆரம்பித்துவிடலாம். அப்படி ஆரம்பிக்கப்பட்ட சேனல் ஊரில் உள்ள எல்லா கேபிள் மற்றும் டி.டி.எச் நெட்வொர்க்குகளில் தெரிவதற்குத்தான் பல கோடிகள் வேண்டும். டிவி சேனல் ஆரம்பித்தாயிற்று, மாதா மாதம் சேனலுக்கான நிகழ்ச்சிகளுக்கு எத்தனை செலவு செய்ய வேண்டும்? அதற்குரிய பட்ஜெட்.? போட்டிச் சேனலுக்கு ஈடான நிகழ்வுகள்? என்றெல்லாம் யோசித்தீர்களானால் நியாயம் தான். ஆனால் நிஜத்தில் பல சேனல்களின் மாதாந்திர ப்ரோக்கிராமிங் செலவு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? 50 ஆயிரத்திலிருந்து 3 லட்சம் வரை தான். பின் எப்படித்தான் இவர்கள் பிழைப்பு ஓட்டுகிறார்கள்?. என்ற யோசனை வரத்தான் செய்யும். சேனல் தொடங்க ஆகும் செலவைப் விடுங்கள். அதான் ஆரம்பித்தாயிற்றே?. ஆரம்பித்த உடன் மக்களுக்கு சேனல் சென்றடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி அரசு கேபிள் நெட்வொர்க்தான். சென்னையைத் தவிர தமிழகமெங்கும் நெட்வொர்க் நடந்தும் அரசு கேபிளில் கேரேஜ் பீஸ் இல்லை என்று சட்டமிருந்தாலும், ஆரம்பிக்கப்பட்ட சேனலின் ”கொடுக்கும்” வசதியை வைத்து முப்பது மாவட்டமா? அல்லது பத்து மாவட்டமா? என்று முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் முன்பிருந்த ப்ரதர்ஸ் காலத்தில் வாய்ப்பே இல்லை..

நிகழ்ச்சிக்காக பெரியதாய் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. இருக்கவே இருக்கிறார்கள் நம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.  படத்தின் ஒவ்வொரு நிலையிலும், டிவி சேனல் கவரேஜ் மூலம் கிடைக்கும் புட்டேஜுகள். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் பேட்டிகள். அதைவிட முக்கியமான விஷயம் சுமார் 20 நிமிடங்களுக்கு, படத்திலிருந்து காமெடி, சீரியஸ், ஆக்‌ஷன் காட்சிகள், முழு பாடல்கள் என எல்லாவற்றையும் விளம்பரத்துக்காக இலவசமாய் அளிக்கிறேன் என்று லெட்டர் பேடில் கையெழுத்திட்டு, பென் ட்ரைவ், டிவிடி, டிவி டேப் என டிவி சேனலின் ஒளிபரப்பு தரத்திற்கு ஏற்ப செலவு செய்து, இலவசமாய் அளிக்கிறார்கள். ஆறிலிருந்து எட்டு மணி நேர நிகழ்ச்சிக்கு புட்டேஜ் தயார்.  பத்துக்கு பத்து இடத்தில் சின்ன ப்ளூ மேட் ஸ்டூடியோ போட்டுவிட்டு, சல்லீசாய் கிடைக்கும் ஆர்வகுட்டி ஆணையோ, முகம் முழுவதும் லிப்ஸ்டிக் தடவிய ஒல்லிப்பிச்சான் பெண்ணையோ தெரிவு செய்து, ஒரு மணி நேர பாடல் காட்சிகள் லைவ், பின்பு காமெடி காட்சிகள் என வரிசைக்கட்டி போட்டுவிட்டால் ப்ரோக்ராமிங் ஓவர். இதற்காக இவர்கள் பெரும் செலவு செய்வது ப்ளூ மேட் ஸ்டூடியோவுக்கான செட்டப்பும், ஆங்கருக்கு கொடுக்கும் சுண்டல் பணமும் தான். எப்படியும் சேனலுக்கு என்று ஒர் ஆஸ்தான கேமராமேன், எடிட்டர், வரைகலை ஆள், லைட் எல்லாம் முதல் இன்வெஸ்ட்மெண்ட்டில் வந்துவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாய் சினிமா புட்டேஜுகளை காட்டி, நானும் ரவுடி தான் எனும் ரேஞ்சுக்கு நாங்களும் சேனல் தான் என்று காட்டியாகிவிட்டது. அடுத்ததாய் ஆரம்பிப்பது தான் இவர்களுக்கான வருமானம். வாதம்,பித்தம், நரம்பு  தளர்ச்சி, ஸ்வப்ன ஸ்கலிதம், குழந்தையின்மை போன்றவைகளுக்கான சித்த வைத்தியம், ஜோசியம், ராசிக்கல், கஜகாமினி உற்சாக எழுச்சி கேப்ஸூயூல்ஸ், தற்போதைய மார்கெட் நிலவரம் கலவரமாய் இருக்கும் ரியல் எஸ்டேட், டேபிள் மேட் போன்ற வசீகர சாதனங்கள்,  என அரை மணி நேர ஸ்லாட்டை ஆயிரத்தில் ஆரம்பித்து விற்க ஆரம்பிப்பார்கள். ப்ரைம் டைமுக்கு இருக்கவே இருக்கு சினிமா ஓசி புட்டேஜ். மீதி நேரத்திற்கு மேற்ச் சொன்ன விளம்பரதாரர் நிகழ்ச்சிகள். இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எம்மாதிரியான வரவேற்பு இருக்கும் என்று கேட்பீர்கள். பல கோடி ரூபாய் வியாபாரம் கொண்ட சந்தையிது. எப்படி இன்றைக்கும் இருட்டு திருவல்லிக்கேணி லாட்ஜுகளை ஆக்கிரமிக்கும் சித்த வைத்திய சிகாமணிகள் இன்றைக்கும் குறைவில்லாமல் இருக்க எப்படி மார்கெட் இல்லாது போகும். இப்படி ஆயிரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரை மணி நேர ஸ்லாட்  தற்போது ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரை, ப்ரைம் டைம் 6-10 தவிர மீதி நேரங்களை அரை மணி நேரங்களாய் கணக்கிட்டு மேற்ச் சொன்ன தொகையை போட்டு கணக்கிட்டு பாருங்கள் அவர்களுடய வருமானம் எவ்வளவு என்று. எனக்கு தெரிந்து மொத்தம் நான்கைந்து பேரை மட்டுமே வைத்துக் கொண்டு பல வருடங்களாய் சேனல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். கிட்டத்தட்ட குடிசைத் தொழில் போல. கொஞ்சம் வியாபாரம் ஆக, ஆக, பிறிதொரு நன்னாளில் வளரும் அரசியல் கட்சித் தலைவரின் அன் அபீஷியல் சேனலாய் கன்வர்ட் ஆனவர்களும் உண்டு.  அந்த அந்தஸ்தை வைத்து ஊர் பக்கம் தெரிந்து கொண்டிருந்த சேனலை மெல்ல சென்னையில் உள்ள நெட்வொர்க்குகளில் தெரிய வைக்க ஆரம்பிக்க முடியும். 

இப்படி புட்டேஜுக்கோ, அல்லது நிகழ்ச்சி தயாரிப்புக்கோ கொஞ்சம் கூட மெனக்கெடாத சேனல்களுக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் நிகழ்ச்சிக்களின் தரத்தை உயர்த்தி, பகாசூரர்களிடையே நேர்மையாய் தொழில் செய்யும் சேனல்களும் உண்டு என்றாலும், மற்றவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்ட பணம் வாங்கும் நிறுவனங்கள் தங்களை சேனலாய் நிறுவ உதவும் தயாரிப்பாளர்களின் புட்டேஜுக்கு காசு கொடுத்தால் என்ன குறைந்துவிடுவார்கள்.?. எப்படியும் இவர்களின் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதில்லை. பார்க்காத சேனலுக்கு எதற்கு வீண் விளம்பரத்திற்காக இலவச புட்டேஜ்? அப்படி விளம்பரம் கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு என்ன பிரயோஜனம்?. அடிமாட்டு ரேட்டுக்காகவாவது சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவார்கள் என்று பார்த்தால் அதுவுமில்லை. அப்படியிருக்க எதற்கு இலவச புட்டேஜ். நூற்றுக்கு மேற்பட்ட சேனல்கள் இருக்க, சிறு முதலீட்டு படத்திற்கு குறைந்த பட்சம்   25 ஆயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நூறு சாட்டிலைட் சேனல்கள் இருக்கும் மார்கெட்டில் எவ்வளவு ரூபாய் வருமானம் வரும். இதில் லோக்கல் கேபிள் சேனல்களின் வாழ்வாதாரமே சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறது.

அரசு கேபிள் காலத்திற்கு முன்  தனியார் நெட்வொர்க்குகள் இருந்தது. அதில் லோக்கல் சேனல் நடத்துபவர்கள் படம் வெளியான  அடுத்த நாளே புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடியை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். பின்பு லோக்கல் தியேட்டர்களின் ப்ரெஷர் தாங்காமல் தியேட்டர்களிலிருந்து படம் எடுக்கப்பட்டவுடன் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். மக்களும் எப்படியும் படம் எடுத்தவுடனே போட்டுருவான் கேபிள்காரன் என்று காத்திருக்க ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது நடப்பது அரசு கேபிள். இதில் லோக்கல் கேபிள் நடத்துவதற்கு தனியே அரசுக்கு லைசென்ஸ் தொகை கட்டித்தான் நடத்த வேண்டும். அப்பிடியிருக்கும் போது அதில் ஒளிபரப்பாகும் அத்துனை சினிமா புட்டேஜுகளும், படங்களும் உரிமை இல்லாமல் ஒளிபரப்பப்படுவதே.. அரசு சார்ந்த நிறுவனத்தில் இதை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?. பைரஸியை தடுக்க தனிப்படையெல்லாம் ஏற்பாடு செய்வதற்கு முன் இவர்களது நெட்வொர்க்கில் உரிமம் இல்லாது படம் போடுவதை தடுக்கலாம் இல்லையா?.


இப்படி பல பேருக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் சினிமா, அந்த சினிமாவை வைத்து விளம்பரம் மூலம் சம்பாதிக்க ஏதுவாக இருக்கும் சினிமாவை தயாரிக்கும் தயாரிப்பாளர் மட்டும் இலவசமாய் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?. லோக்கல் சேனல்களிலும் சினிமாக்களுக்கான விளம்பரம் வெளிவர ஆரம்பித்திருக்கிறது இலவசமாய் புட்டேஜ், பைரஸி டிவிடி மூலம் சேனல் நடத்து லோக்கல் கேபிள் நெட்வொர்க்குகள் தொழில் தர்மத்திற்காகவாவது இலவசமாய் விளம்பரம் செய்கிறார்களா? என்றால் இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் விளம்பரம் போடுகிறார்கள். இப்படி எல்லாருடய உழைப்புக்கும், தொழிலுக்கும், நேரத்திற்கும், பணத்திற்கும் மதிப்பிருக்கும் போது, பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் உழைப்பிற்கும், பணத்திற்கும் உரிமைக்கும் மதிப்பு கொடுத்து வாங்கச் சொல்வதில் தவறென்ன இருக்கிறது?. 

Post a Comment

2 comments:

Unknown said...

உங்களுடைய கருத்து எனக்கு மிக நியாயமாக படுகிறது ...

க கந்தசாமி said...

நீங்க வேறண்ணே சினிமா.. வாழ்வாதரம்னு பேசிக்கிட்டு.
இப்போ எவன் கேட்டான் சினிமா வாழணும்னு.. சினிமா தொழிலுக்கு எதற்கு வரி விலக்கு? நூறு சதவிகிதம் வரி
விதிக்க வேண்டும். கருப்பு பணத்தின் உறைவிடம் திரை தொழில். அதை மாற்றுங்கள்முதலில். முதலில் சினிமா எடுப்பதைக் குறைங்க.. ஒரு வருடத்துக்கு எதுக்கு
200 படம் ரிலீஸ் ஆகணும்? இதைத் தவிர இன்னும் 500 படங்கள்
ரிலீஸ் ஆகாம பெட்டியில் தூங்குகின்றன. சினிமா தொழில் குறைந்தால் ஓன்று குடி மூழ்கி விடாது. இதென்ன
விவசாயமா?