பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.
ஒவ்வொரு முறை அவரின் ஊரூக்கு செல்லும் போது அவரை சந்திக்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவரின் குரலும் என் குரலும் இருவருக்கும் பரிச்சயம். நேரில் பார்த்திருக்கிறோமா? இல்லையா? என்றே நியாபகத்தில் இல்லை. என் நியாபகத்தில் இதுவரை நான் அவரை பெயர் சொல்லி அழைத்ததாய் நினைவில்லை. அவருக்கு என் பெயர் தெரியும். கேபிள் சங்கர் என்றோ அல்லது சங்கர் என்றோ சொன்னால் போதும். நானும்வ் அவரும் ஒரே தொழிலில் இருப்பது எங்கள் பேச்சுக்கு காரணம். அதைத்தாண்டி நாங்கள் இதுவரை பேசியதாய் கூட நினைவில்லை.
இந்த முறை அவரது ஊருக்கு போன பின் உடனடியாய் அவரை அழைத்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். காரணம் எத்தனை நாள் தான் தயக்கம் கொண்டு அவரை சந்திக்காமல் இருப்பது?. தயக்கத்திற்கு காரணம் மெய்யழகன் பிரச்சனை தான். என் மொபைலில் அவரது பெயரில்லாமல் சேவ் செய்திருந்ததும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை அவர் வாத்சல்யமாய் போனில் பேசும் போதும் சாரி உங்க பேர் மறந்துட்டேன் அப்படி என்று கேட்க அவமானமாய் இருந்தது. உடனே மெய்யழகனுக்கு சொன்னது போல பெயர் கண்டுபிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயமா? எத்தனையோ டெக்னாலஜி இருக்கு? என்று கிளப்பிக் கொண்டு வருகிறவர்களுக்கு என் மனதின் வருத்தம் புரியாது. ஏதோ ஒரு குற்றவுணர்வு எனக்குள் எழும்பிக் கொண்டே இருந்தது. எதுக்கும் போன் செய்வோம் என்று அவரை தொடர்பு கொண்டேன். கால் எடுத்ததும் "அலோ.. யாரு?" என்றார். "சார்..நான் தான் கேபிள் சஙகர் சென்னையிலேர்ந்து" என்றதும் "ஆங் சொல்லுங்க சார். எப்படி இருக்கீங்க?' என்று உற்சாகமாய் ஆரம்பித்தார்.
"உங்க ஊருக்கு வந்திருக்கேன். சரி உங்களை சந்திக்கலாமேன்னுதான்."
"அஹா.. இன்னைக்கு பூரா முகூர்த்த நாளா? எத்தனை நாள் இருப்பிங்க?"
"நாளை இரவு வரை இங்க தான். நானும் கல்யாணத்துக்கு தான் பேமிலியோட வந்திருக்கேன்."
"நல்லது. நான மதியம் வரை கொஞ்சம் பிஸி. வீட்டுக்கு வந்ததும் கூப்பிடுறேன். இந்தவாட்டி நிச்சயம் சந்திக்கிறோம்"
"கண்டிப்பா சார்.." என்றபடி பக்கத்தில் உள்ள ஒரு ஏரியா போக வேண்டுமென்று சொன்னேன்.
"அவ்வளவுதானே பஸ்ஸெல்லாம் சரிப்பட்டு வராது. நம்ம டிராவல்ஸ் டாக்ஸி இருக்கு அவரை அனுப்பி விடுறேன்" என்று என் பதிலை எதிர்பார்க்காமல் போன கட் செய்துவிட்டார்.
என்னா மனுஷன் இவரு. இவரு பேர மறந்துட்டோமே? என்று மேலும் குற்றவுணர்வு அதிகமானது. இத்தனை வருஷ சந்திப்பில் பெயர் சொல்லாமலா அறிமுகமாகியிருப்போம் எதையும் தேடி அறியாமல் நாமே கண்டுபிடிப்போம் என்று வீராப்பாய் இருந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் அவரது டிரைவரிடமிருந்து கால் வந்தது. சொன்ன நேரத்திற்கு உடனே வந்தார். காரில் அவருடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன். அவ்வப் போது அவரது ஓனர் ஓனர் என்று சொல்லிக் கொண்டு வந்தேன். அவராக ஓனரின் பெயர் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ம்ஹும். அவரது வாயிலிருந்து ஒனர் ரிலேஷன் வந்திருக்காரு என்று வந்தததே தவிர வேறேதும் வரவேயில்லை.
இரவு மீண்டும் போன் செய்தார். டிரைவர் சரியாய் வந்தாரா இல்லயா? என்று விசாரித்துவிட்டு, நாளை மாலை நிச்சயம் சந்திப்போம் என்று போனை வைத்துவிட்டார். இரவெல்லாம் அவரின் குரலுக்கு ஏற்றார்ப் போன்ற பெயர்களை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் டிபிக்கல் கொங்கு ஸ்டைல் குரல். மெலிதான குரல்தான் ஆனால் அதில் கொஞ்சம் கமேண்ட் இருக்கும் தொனி. மாரிமுத்து. தேவ சகாயம். சக்தி, சுரேஷ், நாகப்பன். என எத்தனையோ பெயர்களை எல்லாம் யோசித்தாலும் ஒன்றும் என் நியாபகத்திலிருந்து கிளரவேயில்லை.
அடுத்த நாள் மாலை சரியாய் போன் செய்தார். உங்களுக்கு எத்தனை மணிக்கு கிளம்பணும். 7.50 மங்களூர். சரி ஒரு வேளை பண்ணுறேன் உங்க மேப் அனுப்புங்க. நான் உங்களை வந்து என் பைக்குல பிக்கப் பண்ணிக்கிறேன். உஙக் வீட்டு ஆட்களையெல்லாம் நான் பிக்கப் பண்ணி ஸ்டேஷன்ல விட்டுர்றேன். என்ன?
"அய்யோ உங்களுக்கு எதுக்குங்க சிரமம்?. எட்டு பேர் பெரியவஙக் மூணு பேர் இருக்காங்க நான் பாத்துக்கிறேன்.
"அதெல்லாம் முடியாதுங்க. ஸ்டேஷன்லேர்ந்து ஒரு கிமீ தான் என் ஆபீஸ். நம்ம கார் ரெண்டை அனுப்பு அவங்களை ஏழரைக்குள்ள ஸ்டேஷன்ல விடுறது என் பொறுப்பு. நீங்களும் என்னையும் என் ஆபீஸையும் பார்த்தா மாரி இருக்கும். என்னாங்குறீங்க?" என்று அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கல்யாண மண்டபத்தின் வாசலிருந்து போன் செய்தார். அஹா மனிதன் முகமே நமக்கு நியாபகமில்லை. எங்கே கண்டு பிடிக்காமல் போய்விடுவேனோ என்கிற பயம் வேறு. அவசரமாய் வெளியே வந்தேன்.
தலை முழுக்க நரைத்த நண்பரின் முகம் சட்டென அரை குறை கருத்த முடியோடு பார்த்த நியாபகம் வர, அவரைப்பார்த்து கையசைச்சேன். அவருக்கு மிகக் மகிழ்ச்சி. வண்டியில் உட்கார்ந்த மாத்திரத்தில் எங்களது தொழிலைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம். அவரது அலுவகத்தை நெருங்கும் முன்பே.. போனில் சரியான உத்தரவுகளை பிறப்பித்து அவரது அலுவகம் நுழையும் முன்பே எங்க வீட்டு ஆட்களை ரெண்டு காரில் பிக்கப் செய்திருந்த விஷயத்தை என்னிடம் கன்வே செய்துவிட்டு. அவரது அலுவலகத்தை சுற்றிக் காட்டினார். நான் சுற்றிலும் அவரது அலுவலகத்தை பார்த்தேன். எங்கேயாவது அவரது நிறுவனத்தின் பெயரோடு அவரது பேர் இருக்குமோ என்று தேடினேன். பேசிவிட்டு கிளம்பும் போது ஒரு காப்பிக்கடையில் காப்பி சாப்பிட நின்றோம். அப்போது என் ஓ.டி.டி பற்றி பேசிக் கொண்டிருக்க, இருங்க நான் டவுன்லோட் பண்ணுறேன் என்று சொல்லி டவுன்லோட் செய்தார். ரிஜிஸ்றேஷன் செய்யும் போது பெயர் கேட்கும். அது என்ன என்பது போல பார்க்க, நான் அவரிடமிருந்த் மொபைலை வாங்கி பெயர் இருக்கும் இடத்தில் கர்சரை வைத்தேன். அவர் தன் பெயரை சொல்லுவார் என எதிர்பார்த்து. அவர் என்னையே பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு யோசனையில் அவரது பெயரை டைப் செய்தேன். "பரவாயில்லைங்க. என் முழு பெயரை நியாபகம் வச்சிருக்கீங்க. எல்லாரும் என்னை சாமி சாமின்னுதான் கூப்பிடுவாங்க. நீங்கதான் என் முழு பெயரான சாமிநாதன்னு நியாபகம் வச்சிருக்கீங்க" என்றார். எனக்கே தெரியாமல் என் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை தடுக்க முடியவில்லை.
ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறக்கி விட்ட போது "ரொம்ப நன்றி சாமி நாதன். உங்க உதவிக்கு."
"அய்ய.. இதெல்லாம் என்னாங்க. நாம சந்திச்சு எத்தனை வருஷம் ஆயிருக்கும் சொல்லுங்க"
"ஒரு ரெண்டு வருஷம் என்றேன்.
ஆஹா. இல்லைங்க. பத்து வருசத்துக்கு மேல ஆயிருச்சு. பைக்குல பார்த்த உடனேயே கண்டுபிடிச்சிட்டீங்களே.. நீங்க மாறவேயிலலி அப்படியே இருக்கிங்க என்றார்.
"வர்றேன் சாமி நாதன்.நாளைக்கு ஊருக்கு போய்ட்டு கூப்பிடுறேன்" என்று சொன்ன போது மனம் சந்தோஷமாய் இருந்தது.
Comments