Thottal Thodarum

Dec 23, 2011

ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.


வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.


என் அம்மாவின் தோழியின் குடும்பத்தில்,  கணவன், மனைவி, மூன்று பெண், இரண்டு ஆண் என்று ஏழு பேர். குடும்பத்தலைவர் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நல்ல வேலை. மனைவி ஹவுஸ் வைப். ஒரு காலத்தில் வீடியோ டெக் எடுத்து படம் பார்க்கும் வழக்கம் எல்லா குடும்பங்களிலும் இருந்தது. தொடர்ந்து 24 மணி நேரமோ, அல்லது இரண்டு நாள், மூன்று நாள் கணக்கில் தொடர்ந்து லீவு நாட்களில் டெக் எடுத்து படம் பார்பவர்கள் இருந்த காலம். அப்போது அவர்கள் டெக் எடுத்தால் குறைந்தது இரண்டு நாளைக்கு 5 முதல் 7 எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பார்கள். சரி வயதானவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகராய் இருப்பது  ஓகே. ஆனால் அவர்களுடய மகள், மகன்களும் ஆர்வமாய் திரும்பத் திரும்ப எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து வந்தது எனக்கு ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் அந்த தம்பதிக்கு ரொம்ப நாள் கழித்து கடேசி கடேசியாய் ஒரு பெண் குழந்தை பிறந்தது கூட அல்ல. அவளும் ஒரு வெறி பிடித்த எம்.ஜி.ஆர். ரசிகையாய் இருந்ததுதான். அவர்கள் வீட்டில் இன்றைக்கும் எம்.ஜி.ஆர் சாமிப் படங்களுக்கிடையே ஒரு சாமியாய்த்தான் பார்த்து வருகிறார்கள். இப்படி எம்.ஜி.ஆரை வெறிபிடித்து ரசிக்கும் கூட்டம் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறது.

கிழவிகளில் பலர் இன்னும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருப்பதாய் நினைத்துக் கொண்டிப்பவர்கள் அதிகம். என் நண்பரின் மனைவி ஒர் அரசு அதிகாரி. எலக்க்ஷனின் போது,  வயதான கிழவிகள் “எம்.ஜி.ஆர். சின்னத்துக்கு போட்டுரும்மா..” என்று சொல்லிவிட்டு “ எம்.ஜி.ஆர். நல்லாருககாருல்ல.. நல்லா இல்லாம.. அதான் நெதம் டிவில வர்றாரே.. என்னா பாட்டு .. என்னா அழகு” என்று சிலாகித்துக் கொண்டு போனதாய் சொன்னார். 

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றாள் இந்த கதையில் வரும் ப்ரியா என்கிற கேரக்டர் தனக்குள் எம்.ஜி.ஆரின் ஆவி புகுந்துவிட்டதாய் மனநிலை பிழன்று அதனால் வரும் ப்ரச்சனையால் மற்றவர்களை அவதிப்படுத்துகிறாள். அவளுக்கு வெண் குஷ்டம் வருகிறது. அவளுக்கு அதனால் தான் மனப்பிழற்வு வருகிறதா? இல்லை வீட்டில் சின்ன வயதிலிருந்தே புகட்டப்பட்டதால் வந்ததால் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும் அவளின் மனப்பிழற்வுக்கு பின்னால் சொல்லப்படும் பெண்ணின் மன ஓட்டங்கள் அபாரம். அதுவும் எம்.ஜி.ஆரை பற்றி யாராவது தவறாய் சொன்னால் படுகிற கோபமும், ஆத்திரமும், அதே சமயம் அவரது பாடல்களைப் வைத்து சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே படு சூப்பர். சில சமயங்களில் நாம் ப்ரியாவாகி விடுகிறோம். ஒரு கட்டத்தில் ப்ரியாவின் பார்வையில் தெரியும் அருணை அவளைப் போலவே வெறுக்க ஆரம்பிக்கிறோம் எனும் போது எழுத்தாளர் தமிழ்மகன் வெற்றி பெற்று விடுகிறார்.

எம்.ஜி.ஆர் எனும் போது எப்படி ஊரெல்லாம் அவர் புகழ் பாடும் விஷயங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார்களோ..  அதே போல அவரைப் பற்றிய நெகட்டிவ் விஷயங்களும் சொல்லிக் கொண்டுதானிருப்பார்கள். ஏபி.நாகராஜனிடம் ஒரு முறை பத்திரிக்கை பேட்டியின் போது நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுப்பதில்லை என்று கேட்ட போது, எனக்கு நடிக்கத் தெரிந்தவர்களை வைத்துத்தான் படமெடுக்கத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். இது எம்.ஜி.ஆருக்கு பெரிய அவமானமாய் ஆகிவிட்டதாம். ஆனால் அப்போது ஏதும் சொல்லவில்லையாம். ஏ.பி.என்னின் மகள் திருமணத்தின் போது திடீரென பணப் ப்ரச்சனை வர, அவர் சிவாஜியிடம் போனதாகவும், மிக சொற்ப தொகையையே அவர் கொடுத்ததாகவும், இதை கேள்வி பட்ட எம்.ஜி.ஆர் லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பினாராம். திருமணமும் நன்றாக நடந்தது. நன்றி சொல்வதற்காக ஏ.பி.என் போன போது எம்.ஜி.ஆர் அவரை மிக அன்பாக, மரியாதையாக அழைத்துக் கெளரவித்து, கிளம்பும் போது “உங்கள் இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும். என் கால்ஷீட் உங்களுக்கு தருகிறேன்.” என்று கேட்டிருக்கிறார். ஏ.பி.என்னுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. யோசித்திருக்கிறார். “எனக்கு சிவாஜி அண்ணன் போல ஒன்பது வேஷமெல்லாம் போட்டு நடிக்க வராது. அதனால என்னை சுத்தி ஒன்பது ஹீரோயின்களை வைத்து கதை பண்ணுங்க” என்று சொல்லியிருக்கிறார். கஷ்டத்தின் போது பணம் கொடுத்து மானம் காத்தவர். அவருக்கு எப்படி இல்லை, முடியாது என்று சொல்ல முடியும்?. வேறு வழியில்லாமல் ஆரம்பித்தது தான். நவரத்தினம். படம் ஆரம்பித்து ஏ.பி.என்னுக்கு பயங்கர டார்ச்சர் கொடுத்து ஷூட்டிங் பாதியில் நின்று, கடன்காரனாகி, பாதி படத்திலேயே அவர் இறந்து போனார். பின்பு அதே படத்தை எம்.ஜி.ஆர் தன் செலவில் முடித்து வெளியிட்டு நல்ல பெயர் எடுத்தார் என்று என் தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். என் தாத்தா ஜெமினி ஸ்டூடியோவின் சீப் செக்யூரிட்டி ஆபீஸராக இருந்தவர்.

இம்மாதிரியான பல விஷயங்கள் எம்.ஜி.ஆரை பற்றி இந்நாவலில் வருகிறது. எம்.ஜி.ஆரை இன்றைய கால ஆட்கள் பார்க்கும் பார்வையையும், அவதானிப்புகளையும் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். தமிழ்மகன் தனனையே ஒரு சிறு கேரக்டராய் கொண்டு வந்து விமர்சித்துக் கொள்கிறார். சில இடங்களில் வசனங்களால் வசீகரிக்கிறார். “என்னை ஸ்லீப்பிங் பில்ஸ் மாதிரி யூஸ் பண்ணாதப்பா”

எடுத்த மாத்திரத்தில் சுவாரஸ்யமாய் கதை சொல்லும்  பாணியும், ஒரே விஷயத்தை ஒரு ஆணின் பார்வையிலும், பெண்ணின் பார்வையிலும் பார்க்கும் போது கிடைக்கும் பர்ஷப்ஷன்களும் படு சுவாரஸ்யம். அதுவும் கதையின் ஆரம்பங்களில் வரும் முதலிரவு காட்சிகள். பெண்ணிற்குள் ஏற்படும் உணர்வுகளும், ஆணுக்குள் ஏற்படும் உணர்வுகளையும் படீரென போட்டு உடைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். போன்றொரு மகா பிம்பத்தை பற்றி மாற்றுக் கருத்தாகவோ, அல்லது ஆதரவாகவோ எழுதுவதும், அதுவும் எம்.ஜி.ஆர் கேரக்டரை அறிமுகப்படுத்தும் போது அவர் அழுது கொண்டிருந்தார் எனும் போது அட.. என்று துள்ளிக் குதிக்க வைக்கிறார். மைனஸ் என்று பார்த்தால் பெண்ணின் பார்வையை விட ஆணின் பார்வையில் டெப்த் குறைவாய் இருப்பது தான் என்று தோன்றுகிறது. அதே போல் தெளிவு படுத்த என்று நினைத்து எழுதிய முன்னுரை படு குழப்ப கதம்பம். அந்த முன்னுரைக்கே அவசியமில்லாத வகையில் படு சுவாரஸ்யமான, அசத்தலான நடையில் நாவல் போகிறது. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
ஆண்பால் ..பெண்பால் – தமிழ்மகன்.

உயிர்மை வெளியீடு

விலை : 200  


சங்
கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

R. Jagannathan said...

//இந்த கதையில் வரும் ப்ரியா என்கிற கேரக்டர் தனக்குள் எம்.ஜி.ஆரின் ஆவி புகுந்துவிட்டதாய் மனநிலை பிழன்று அதனால் வரும் ப்ரச்சனையால் மற்றவர்களை அவதிப்படுத்துகிறாள்.....சில சமயங்களில் நாம் ப்ரியாவாகி விடுகிறோம்// பயமாயிருக்கிறதே!

//ஏ.பி.என்னுக்கு பயங்கர டார்ச்சர் கொடுத்து ஷூட்டிங் பாதியில் நின்று, கடன்காரனாகி, பாதி படத்திலேயே அவர் இறந்து போனார்// அப்போதே இது பரவலாகத் தெரிந்த விஷயம். சந்திரபாபுவுக்கும் எம் ஜீ ஆர் டார்சர் கொடுத்ததை சொல்வார்கள். அவர் வருவதைப் பார்க்காமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்த கதாநாயகியின் கதையும் கந்தலானது.
//பெண்ணின் பார்வையை விட ஆணின் பார்வையில் டெப்த் குறைவாய் இருப்பது தான் என்று தோன்றுகிறது.// எழுத்தாளர் ஆண் என்னும்போது அவர் எழுதிய பெண் பார்வை கற்பனையாகத்தானே இருக்கமுடியும்? அதனால் அதீதமாக கற்பனை செய்திருப்பார். ஆண்கள் எதையும் ரொம்ப டீப்பாக பார்ப்பதில்லை - பொதுவாகச் சொல்லுகிறென்!

//“என்னை ஸ்லீப்பிங் பில்ஸ் மாதிரி யூஸ் பண்ணாதப்பா”// புத்தகம் அப்படியில்லை என்று சந்தோஷம்!

-ஜெ.

கத்தார் சீனு said...

நன்றிங்க சங்கர் ...
இப்பத்தான் வெட்டுபுலி படிச்சிக்கிட்டு இருக்கேன்....
அடுத்து இதையும் வாங்குவோம் !!!

rajamelaiyur said...

படிசுடுவோம் ..

rajamelaiyur said...

இன்று

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

ம.தி.சுதா said...

அண்ணாச்சி இப்புத்தகம் நம்ம கை்குக் கிடைக்குமோ தெரியல..

இருந்தாலும் எம்ஜிஆர் விடயத்தை ரசித்தேன்... உண்மையில் இங்கு கூட பலர் மனதில் இப்பவும் உயிரோடை தான் இருக்கார்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

இது தமிழ் said...

படிச்சிடுவோம்!! :-)

- சாம்ராஜ்ய ப்ரியன்.

என்றும் இனியவன் said...

அன்பு நண்பர்களே , நம் வாழ்வில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயணம் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்டது, நாம் சும்மா இருந்தாலும் நொடிகள் பயணப்பட மறப்பதில்லை....சரி சரி நான் விசயத்திற்கு வருகிறேன்.
நாம் எங்காவது வேலை விஷயமாகவோ அல்லது சுற்றுலாவோ சென்றால் உணவுக்கு அடுத்த செலவினம் தங்கும் விடுதிகள் தான், உதாரணமாக நாம் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஊட்டி செல்கிறோம் அல்லது கோவா அல்லது பெங்களூர் செல்கிறோம் என்று வைத்துகொள்வோம்.
இன்றய சூழலில் சுமார் நான்கு நபர்கள் தங்கினால் ஒரு நாளைக்கு நான்கு நபர்கள் ஒரு நல்ல லாட்சில் தங்கிட சுமார் ஆயிரம் ரூபாயாவது ஆகும். இதற்காகவே நாம் அனேக நேரங்களில் நாம் சுற்றுலா குடும்பத்தோடு செல்ல பயப்படுகிறோம். நாம் ஒரு நபராக தங்கினாலும் 500 ரூபாய்க்கு குறைவாக நல்ல லாட்சு கிடைப்பதில்லை. சுற்றுலா தளங்களில் கேட்கவே வேண்டாம்.
குறைந்த செலவில் தங்கிட ஒரு மாற்று வழி உண்டு, ஒரு நபருக்கு 125 மட்டும் செலுத்தி நல்ல ஒரு இடத்தில் நாம் குடும்பத்தோடு தங்கிட இயலும். அதற்காகவே இந்த பதிவு.
idhayampesukiren.blogspot.com