Thottal Thodarum

Oct 17, 2012

சாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்

என்னடாது ஓட்டல் பேரே ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? சட்டென கண்டு பிடிக்க முடியாத வகையில் தான் இந்தக் கடை அமைந்திருக்கிறது. நாலு பேரிடம் கடையின் பெயரை கேட்டு விசாரிக்கலாம் என்றால் டவுசர் கடை என்று கேட்டு அவர் என்ன் நினைத்துக் கொள்வார்களோ என்ற வெட்கம் வேறு வந்து தொலைக்க, ஒரு வழியாய் தேடிப் பிடித்து கண்டுபிடித்தோம். மைலாப்பூரிலிருந்து ஆர்.கே மடம் சாலையில் ஓம் மெடிக்கல்ஸின் எதிரில் ஒரு குட்டிக் கடை. வாசலில் பெயர் பலகை கூட கிடையாது. இரவு நேரங்களில் வாசலில் பரோட்டா போடும் சாதாரண உணவகம் போலத்தான் இருக்கிறது. ஆனால் ஏரியாவில் டவுசர் என்று சொன்னவுடனே இடத்தை சொல்லுமளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் அவ்வுணவகத்தின் சுவை மற்றும் அதன் ஓனர் வெறும் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பதும் தான்.


மிகவும் சிறிய உணவகம். மொத்தமே எட்டு அல்லது ஒன்பது பேர்தான் சாப்பிட முடியும். மதிய சாப்பாட்டுக்கு காத்திருந்துதான் சாப்பிட வேண்டியிருந்தது. நானும் கே.ஆர்.பியும் போயிருந்தோம். சிறிது நேரத்திலேயே இடம் கிடைத்தது. மெனு கார்ட் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்க, அதில் இருந்த் விலையெல்லாம் பார்த்தால் சல்லீசாக இருக்க கொஞ்சம் பயமாகவே இருந்தது ஒரு வேளை சொதப்பலாய் இருக்குமோ என்று யோசித்தபடி  சாப்பாடும், மட்டன் வறுவல், வஞ்சிரம் மீன் ஆர்டர் செய்தோம். 

சூடான சாதத்தை பரிமாறினார்கள், உருளை பொரியல், கோஸ் கூட்டு, கூட்டு குண்டு மிளகாய் போட்டு தாளித்தது லேசாய் உறுத்தும் காரத்தோடு இருக்க, வெறும் சாதத்தோடு கலந்து சாப்பிட சுவையாய் இருந்தது. உடன் ஒரு சின்ன கப்பில் சிக்கன் குழம்பு கொண்டு வந்தார்கள். கெட்டியாய் அதிக காரமில்லாமல், மசாலா இல்லாமல் தேங்காய் அரைத்து செய்திருந்தார்கள் அதிரடியாய் இருந்தது.  அடுத்து வந்த மட்டன் குழம்பு கொஞ்சம் தண்ணியாய் இருந்தாலும் சுவையில் குறையேதுமில்லை. மீன் குழம்பு, ரசம் எல்லாம் ஓகே ரகம் தான். வஞ்சிரம் மீன் கொஞ்சம் சூடு குறைவாய் இருந்தாலும் நல்ல சுவை. தடாலடியாய் புரட்டிப் போட்டது மட்டன் வறுவல் தான். சிறிதும் இல்லாமல் பெரிதும் இல்லாமல் போடப்பட்ட போன் இல்லா துண்டுகளை மசாலாவில் போட்டுப் பிரட்டி, அடிப்பிடித்துவிடாமல் கொஞ்சம் கிரிஸ்பாய் லேசான நெய்யிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு நெய் சகோதர அயிட்டத்துடன் பிரட்டி எடுக்கப்பட்ட, துண்டங்கள் வாயில் போட்டதும் கரைந்தது. அதன் சுவை மிகவும் பிடித்துப் போய் மீண்டும் அதையே ஆர்டர் செய்தோம். மோர் சாதத்திற்கு க்ளைமாக்ஸாக நிறைய பேர் வாங்கி சாப்பிட்ட முட்டைக் குழம்பை கொஞ்சம் குழைத்து அடித்தேன். நல்ல சுவை.

சாப்பிட்டு முடித்து பில் கேட்ட போது அட பரவாயில்லையே என்று தோன்றியது. இரண்டு சாப்பாடு, ஒரு வஞ்சிரம் மீன், இரண்டு மட்டன் வறுவல் எல்லாம் சேர்த்து 240 ரூபாய்தான். ரொம்ப வருஷமாய் இந்தக்கடை இங்கேயிருப்பதாய் சொன்னார்கள். ஓட்டல் பெயர் பலகையை தேடாதீர்கள் அது இருக்காது. உட்கார்ந்து சாப்பிட யோசிப்பவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு போவது உசிதம்.

டவுசர் ஓட்டல்
ஆர்.கே. மடம் சாலை
மைலாப்பூர்,  ஓம் மெடிக்கல்ஸ் எதிரில்.
கேபிள் சங்கர்


Post a Comment

7 comments:

அஜீம்பாஷா said...

ராமராஜன் ரசிகனா இருப்பாரோ ஹோட்டல் முதலாளி அதான் அவர் நினைவாக டவுசர்னு பேரு வச்சுருக்கார் . ஆமா கேபிள்ஜீ புதிய பதிவு போடாம KRP உங்ககூட சுத்திகிட்டு இருக்கார். ஒரு ஹாய் சொல்லுங்க அவர்க்கு,.

Unknown said...

சின்னக் கடைன்னா..போட்டோ எடுத்து போட மாட்டீங்களா? வாழ்க உங்கள் ஒதுக்கீடு கொள்கை!

கார்த்திக் சரவணன் said...

ரொம்ப வருஷமா மைலாப்பூரில் தான் இருக்கேன்... இத்தனை நாள் தெரியாம போச்சே... அது சரி, நீங்க புரட்டாசி மாசம் எல்லாம் பாக்க மாட்டீங்களா?

Ravikumar Tirupur said...

அதானே டவுசரோட போட்டோ போட்டிருக்கலாம்ல

ttpian said...

pl.go to Dindugal:For all i Know,be it vegetarian or Non.veg(Thalappa kattu/Venu biriyaani),it is always ECONOMICAL @ Dindugal!

R.Mohanbalu said...

புதன்கிழமை மட்டும் மட்டன் பிரியாணியும் மட்டன் கோளா உருண்டையும் ஸ்பெஷல். பிரியாணி பரவால்ல ரகம். ஆனா கோளா...வெளிய முறு முறுன்னும் உள்ள பஞ்ஞு பஞ்ஞா வெந்த கறியும்...சுட சுட சாப்பிட்டா...டிவைன்... ஓரு உருண்ட 20ரூபா.
But வஞ்சனை இல்லா சைஸ்.

அஜீம்பாஷா said...

தனபாலன் சார் இந்த ஹோட்டலை பற்றி ஒண்ணும் சொல்லவே இல்லையே ttpian. இருந்தாலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.