Thottal Thodarum

May 2, 2013

எதிர்நீச்சல்

 
சமீபகாலமாய் கமர்ஷியல் சினிமா வெற்றியின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம். அனிருத்தின் ரெண்டாவது படம். ஏற்கனவே பாடல்கள் ஹிட் லிஸ்டில் அலறிக் கொண்டிருக்கிறது.இப்படி பல ப்ளஸ்களை கொண்டு வெளி வந்திருக்கும் படம். எதிர்நீச்சல்.


சிவகார்த்திகேயன் ஒர் சாதாரணன். குஞ்சிதபாதம் என்கிற பெயரால் பெரும் அவமானத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறவன். ஒரு சுபயோக தினத்தில் தன் பெயரை ஹரீஷ் என மாற்றி வைத்துக் கொண்ட மனதிற்குப்  பிடித்த பெண்ணை சந்திக்கிறான் காதல் கொள்கிறான். எல்லாம் சிறப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் பழைய பெயரின் காரணமாய் நடந்த ப்ரச்சனைகள் வெடித்து காதலில் விரிசலை உண்டாக்குகிறது. தன்னை ப்ரூவ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் தன் ஒரே திறமையான ஒட்டத்திற்கு ஒர் வாய்ப்பு வருகிறது. அவருக்கு கோச்சாய் வருகிறார் நந்திதா. பின்பு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க.
சிவகார்த்திகேயனுக்கு மிக இயல்பாய் அமைந்திருக்கும் கேரக்டர். மனிதர் வலிக்காமல் மிக கேசுவலாய் நடிக்கிறார். அதுவும் இப்படி அசமந்தத்தனமான கேரக்டர் என்றால் அல்வா. கூடவே கொடுக்காய் சதீஷ். ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் அடித்துக் கொண்டேயிருக்கிறார். ப்ரியா ஆனந்த் அழகாய் இருக்கிறார். அதை தவிர வேறொன்றும் இல்லை. ஒடுக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திரத்தில் ஓட்டக்காரியாய் பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்யாவிட்டாலும் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறார் நந்திதா. நேமாலஜிஸ்ட் மனோபாலா புன்முறுவல் பூக்க வைக்கிறார் என்றால், அவரிடம் பேர் மாற்ற வரும் நடிகர் அவரது ஒரிஜினல் பெயரான பாவாடை சாமியை முழுசாய் கூப்பிடாமல் பாதியாய் கூப்பிட்டு அதனால் படு அவதியை சொல்லுமிடம் செம. நந்திதாவுக்கு அப்பாவாக நடித்தவர் தான்  நடிக்கிறேனப்பு என்று நன்றாக தெரியும்படியாய் நடித்திருந்தார். அனிருத் கேமியோ பண்ணியிருக்கிறார். தனுஷும், நயந்தாராவும் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார்கள். சும்மா டைம் பில்லிங்தான்.
படத்திற்கு பெரிய ப்ளஸ் அனிருத். பாட்டெல்லாம் பட்டாசாய் ஹிட்டித்திருக்கிறார். படம் முழுவதும் ரீரிக்கார்டிங்கில் வேறு கலக்கியிருக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் சீன்ஸ்.. க்ளாஸ். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. சில காட்சிகளில்மட்டும் அவுட்டாப் ஃபோகஸ் தெரிந்தது.
எழுதி இயக்கியவர் செந்தில். முதல் பாதி முழுவதும் குஞ்சிதபாதம் மேட்டரையும், பிரியா ஆனந்தை கரெக்ட் செய்யும் முயற்சியிலேயும் கவனம் செலுத்தி நடு நடுவே நாலு பாட்டையும் போட்டு, சதீஷை வைத்து செந்தில் அடித்திருக்கும் லூட்டி செம காமெடி. இரண்டாம் பாதியில் தான் கதைக்கே வருகிறார்கள். அத்லெட்டிக் விஷயங்களை ஒரு பாடல் மாண்டேஜில் காட்டி விட்டு, நந்திதாவின் ப்ளாஷ்பேக்குக்கு போனது பெரிய ப்ளஸ். இருந்தாலும் க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் பெப் சேர்த்திருக்கலாம். படம் முடிந்ததும், வரும் ப்ளூபர்ஸில் வரும் காமெடி கொஞ்சம் அடல்ட் ரகமென்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பெயருக்காக காதலி கிடைக்கவில்லை என்பது கூட ஓகே அந்த பழைய பெயரை சொல்லாததினாலும், அந்த பெயர் இருந்த போது நடந்த ஒர் கலாட்ட சம்பவத்தினால் சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் காதலில் விரிசல் விழுவது இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் அமைத்திருக்கலாம். அதே போல வள்ளியின் கதையில் அவரை ஆண் என்று சொல்லி நிருபித்து பதக்கங்களை திரும்ப வாங்கியதை, அதன் வலியை இன்னும் அழகாய் பதிவு செய்திருக்கலாம். ஒரு ஜனரஞ்சகமான, சம்மர் எண்டர்டெயினராய் அமைந்திருக்கிறது எதிர்நீச்சல்.
கேபிள் சங்கர்


Post a Comment

5 comments:

Unknown said...

மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம் இங்கே
http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_2.html

arul said...

thanks for review

உண்மைகள் said...

அருமையான இடுகை ஒன்றை எழுதியுள்ளீர் சகோதரரே,
இந்த இடுகை இவ்வளவு சிறப்பானதாக அமைய அல்லாஹ் தான் காரணம். அளவற்ற அன்பாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாவின் கருணையினால் தாங்கள் மேலும் சிறப்படைவீர்கள்.
“அல்லாஹ் ஒருதடவை சொன்னா, அது நூறு தடவை சொன்னமாதிரி”

Dhamu said...

Is it must watch movie ji???

Dino LA said...

அருமை