சரண்டர்- என் பார்வையில்.
தேர்தல் காரணமாய் துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் போலீஸில் அதை சரண்டர் செய்ய வேண்டும். அப்படி நடிகர் மன்சூர் அலிகானால் சரண்டர் செய்யப்படும் துப்பாக்கி, காணாமல் போகிறது. இதனால் இன்னும் ஆறு மாசத்தில் ரிட்டையர் ஆகப் போகும் லாலுக்கு பிரச்சனை. இன்னொரு பக்கம் ஆளூம்கட்சியின் ரவுடி குணா அனைத்து ஏரியாக்களுக்கும் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறான். அதில் சோழிங்கநல்லூருக்கு போக வேண்டிய பணத்தை போலீஸ் ஆபீசர் ஒருவர் மூலம் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் போகும் வழியில் ஆக்ஸிடெண்ட் ஆகிவிடுகிறது. ஆபீஸர் ஆஸ்பத்திரியில் பணம் காணோம். அதை தேடியலைய வேண்டிய கட்டாயத்தில் ரவுடி குணா. இத்தனை பிரச்சனைக்கு இடையே புதியதாய் வந்து சேரும் டிரைனிங் எஸ்.ஐ புகழேந்தியான பிக்பாஸ் தர்ஷன். எப்படி இது எல்லாம் கனெக்ட் ஆனது?. எப்படி சால்வ் செய்தார்கள்? என்பது தான் கதை.
சமீபத்தில் பார்த்த நல்ல திரில்லர் என்றே சொல்ல வேண்டும். போலீஸ் கிரிமினல்களுக்கிடையே இருக்கும் நட்பு, அதனூடே ஊடாலும் வன்மம், கொலை வெறி. ஆபீஸர்களுக்கிடையே இருக்கும் வன்மம். என எல்லாவற்றையும் மிக அழகாக எழுதி எடுத்திருக்கிறார்கள். நடித்த நடிகர்கள் பெரும்பாலும் நல்ல தரமான நடிகர்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாய், இன்ஸ்பெக்டராக வரும் அரோல் டி சங்கர். வில்லன் சங்கர். கருப்பு நம்பியார், லால், என நல்ல நடிகர்களை கேஸ்ட் செய்தபடியால் சிறப்பாகவே வந்திருக்கிறது.
பிக்பாஸ் தர்ஷன் போலீஸ் கேரக்டருக்கு மிக சரியான பொருத்தமாய் இருக்கிறார். நடிப்பில் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது என்றாலும் இக்கதையில் அவர் கதையில் ஒரு முக்கிய கேரக்டர் என்றே சொல்ல வேண்டும்.
ஆரம்பக் காட்சிகளில் அத்துனை கேரக்டர்களையும் காட்டி, கதையின் மையப் புள்ளிக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் திரைக்கதை எழுதி இயக்கிய கெளதமன் கணபதி. பட் இது இந்த கதைக்கு தேவையாய் இருக்கிறது. அத்துனை கேரக்டர்களையும் சொல்லி, அவர்களின் குறிக்கோள் எல்லாவற்றையும் சொல்லி, அதை கனெக்ட் செய்த விதம் சிறப்பு. ஒரு சில டிவிஸ்ட் காட்சிகள் அட போட வைக்கிறது. இதில் தேவையில்லாத ட்ராக் என்றால் அது முனிஷ்காந்த ட்ராக் தான். க்ளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் ஆக்ஷனாக சொல்லியிருக்கலாம். இந்த வாரத்தில் வந்த படங்களில் ப்ளாக் ஹார்ஸ் என்றால் இந்த சரண்டரை சொல்லலாம்.

Comments