Thottal Thodarum

Dec 20, 2011

நான் – ஷர்மி - வைரம் -12

12 ஷர்மி
என் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.

ஒரு விதத்தில் அவனை பார்க்க பாவமாயிருந்தது. அடிப்பட்ட பார்வையுடன், என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அலைபவனாகவே இருந்தான். ரேஷ்மாவின் அக்கா திருமணத்தின் போது அவன் வழக்கம் போல தூரத்திலிருந்து என்னை பார்ப்பதை உணர்ந்து அழைத்தேன். தயங்கித் தயங்கி வந்தான். அந்த மண்டபத்திலிருந்த மாடி ரூமில் அவனை கூட்டிச் சென்று கதவை சாத்தி, அவனின் கைகளை பிடித்தேன். சில்லென்று இருந்தது. சரேலென கையை இழுத்துக் கொண்டான்.


“உனக்கென்ன வேணும் என்னைத் தொடணும் அவ்வளவு தானே..? வா..தொடு.. நல்லா தொடு.. “ என்று அவன் கைகளை இழுத்து வைத்து, முகம், மார்பு, இடுப்பு என்று தடவினேன். வலுக்கட்டாயமாய் அவன் கைகளை விலக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவனின் அழுகை எனக்கு ஒரு மாதிரியிருந்தது. சிறிது நேரம் அவனை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

“நான்.. நான்.. உன்னை அப்படி நினைக்கல.. ப்ளீஸ்.. ஐ ஃபீல் கில்டி. அன்னைக்கு...அன்னைக்கு.. சாரி... சாரி.. யு..நோ.. ஐ லவ் யூ..ஸோ..மச்.. என்னால் உன்னை அப்படி நினைக்கவே முடிவதில்லை” என்றான். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. என் செய்கை எனக்கே அசிங்கமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் எனக்கு காதல் என்ற எதுவும் வரவேயில்லை. தமிழ் சினிமாவில் மட்டுமே சிம்பதியால் காதல் வரும் என்பது என் எண்ணமாகவேயிருந்தது. ஏதும் பேசாமல் அவன் கன்னத்தை தடவிவிட்டு நகர்ந்தேன். ஆனால் அவன் பின் தொடர்வது மட்டும் நிற்கவேயில்லை.

திருப்பத்தை பற்றிச் சொல்ல வந்துவிட்டு வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல.. வளைந்து, நெளிந்து திரும்பத் திரும்ப ஒரே பாதையில் ஓடுவது போல் தெரிந்தாலும், ஒவ்வொரு சறுக்கலிலும் ஏற்படும் அடிவயிற்று கத்திக்குத்தும், ஏற்றத்தில் கிடைக்கும் உற்சாக எக்ஸ்டசி அனுபவங்கள், ஒவ்வொரு முறையும் வேறுபட்டுக் கொண்டேதானிருக்கும். வெகு சிலரால் தான் உச்சஸ்தாயியில் கத்தாமல், இறுக கண் மூடிடாமல், கடவுள் பெயரை கூப்பிடாமல், வேகத்தோடு அட்ரிலின் மண்டைக்குள் ஏற, முகம் முழுக்க, பிய்ந்து போகும் காற்றின் எதிர்திசையில் பயணிக்க முடியும். மிகவும் சாதாரண நிலையிலிருந்து வெகு உயரத்திற்கு சென்ற என் அப்பாவினால் அந்த நேரத்தில் அரசு எடுத்த முடிவினால் டிராக்கில்லாமல் தலை குப்புற வீழ்ந்தது போல அந்தரத்திலிருந்து வீழ்ந்தார்.

பைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் நாற்பது சதவிகிதம், ஐம்பது சதவிகிதம் வட்டி தருகிறேன் என்று வாங்கிய பணத்தை, எல்லாம் நிலத்திலும், தேக்கு மரத்திலும் இன்வெஸ்ட் செய்திருந்தார்கள். அந்நேரத்தில் ஊரில் லட்சத்திற்கு இருந்த இடமெல்லாம் பத்து லட்சத்திற்கும், பதினைஞ்சு லட்சத்திற்கு போக, ஏகப்பட்ட்தாய் புழங்கும் பணத்தை இன்வெஸ்ட் செய்ய, இருந்த போட்டி இப்படி எல்லாம் சேர்ந்து ஐந்துரூபாய் பொருள் ஐம்பது ரூபாயாக ஏறியது. அந்த இட்த்தை சின்ன மேடம் வாங்கியிருக்காங்க, இந்த இடத்தை இவங்க வாங்கியிருக்காங்க என்று பேசுவது சகஜமாகிப் போன ஒன்றாய் இருந்த காலம் அது. ரியல் எஸ்டேட் மார்கெட் உச்சத்தால் ஏற்றிவிடப்பட்ட மார்கெட்டினால் வாங்கியவர், விற்றவர், மீடியெட்டர் என்று எல்லோரிடமும் காசு புழங்க, காசு புழக்கம் வேண்டுமென்றால் இந்த ஆட்சியில் மட்டும் தான் நடக்கும் என்று பேச துவங்கினார்கள்.

போலியாய் ஏற்றிவிடப்பட்ட மார்கெட் அதன் பாரம் தாங்காமல் சரேலென கவிழ, இன்வெஸ்ட் செய்த பணத்திற்கு ஏற்ற ரிட்டன் இல்லாமல் ஒவ்வொரு பைனான்ஸ் கம்பெனியும் முழிக்க ஆரம்பித்தது. சரி வாங்கி வைத்த நிலங்களை விற்று விடலாம் என்றால் பதினைந்து லட்சத்திற்கு வாங்கிய நிலமெல்லாம் வெறும் அஞ்சுக்கும் ஆறுக்கும் கேட்க, வாங்கி வைத்த்தை கொள்வாரில்லாமல் ரியல் எஸ்டேட் சரேலென அதள பாதாளத்திற்குள் மார்கெட் கீழே விழுந்தது. மக்களுக்கு வட்டிப் பணம் கொடுக்க முடியாமல் ஒவ்வொரு நிறுவனமாய் டிபால்ட் ஆக, ஆக, அரசு முழித்துக் கொண்டு ஒவ்வொரு நிதி நிறுவன அதிபராய் கைது செய்ய ஆரம்பித்த வேளையில் என் அப்பாவும் கைதானார்.

அப்பா கைதானதை டிவியில் மறுபடியும், மறுபடியும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள். வீடே போன் களேபரமாய் இருந்தது. யார் யாரோ வந்தார்கள். போலீஸ், சில லோக்கல் அரசியல்வாதிகள், மீடியா என்று ஏகப்பட்ட பேர். நான் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தேன். பேப்பர், டிவி, எல்லாவற்றிலும் இதைப் பற்றியே பேச்சு. அப்பா அப்படி வாழ்ந்தார். இப்படி வாழ்ந்தார். அந்த நடிகையுடன் உல்லாசம், இவளுடன் ஹாங்காங் பயணம் செய்தார். சுருட்டிய பணத்தில், மனைவி, மகள், மற்றும் பினாமிக்களின் பேரில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக ஆளாளுக்கு செய்தி போட்டார்கள். உண்மை எதுவென்று எங்களுக்கு மட்டுமே தெரியும். நாங்கள் இருந்த வீடும், அம்மா போட்டிருந்த நூற்றிச் சொச்ச பவுன் நகைகளும், ஈசிஆர் பங்களா, ஊரில் கொஞ்சம் நிலம், வீட்டில் இருந்த இரண்டு கார்கள் என்று மிகச் சொற்பமே வைத்திருந்தாய் அம்மா சொல்லித்தான் தெரியும். ஆனால் இவையெல்லாம் நொடிகளில் காற்றாய் கரையும் என்பது எங்களுக்கு தெரியாமல் போனது. எப்பவும் அரசியல்வாதிகளாலும், மீடியா உலகின் முக்யஸ்தர்களும், ஊரிலிருந்து டொனேஷன் வாங்க வரும் ஆட்களும், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் என்றிருக்கும் எங்கள் வீட்டு வரவேற்பரை காலியாகி, வெறிச்சோடியது. அவசரத்திற்கு உதவி கேட்டு அம்மா போன் செய்தால் பாதி பேர் எடுக்கவேயில்லை. சில பேர் நேரடியாகவே சொல்லிவிட்டார்கள் இனிமேல் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று. சமூகத்தில் அவர்களுக்கென்று மரியாதை இருக்கிறதாம். வீட்டிற்கு வழக்கமாய் வரும் ஆட்களில் வக்கீல் அங்கிள் மட்டுமே மிச்சமாய் இருக்க, அம்மாவுக்கு ஆதரவாய் வேறு யாருமில்லாத அந்த நேரத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

தினமொரு போலீஸ் விசாரணை, ஸ்டேஷன், கோர்ட், ஆபீஸில் வேலை செய்தவர்களின் சம்பள பாக்கி, வாடகை, ஒவ்வொரு முறையும் வரும் போதும் போகும் போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு போகும் அதிகாரிகள் என்று ப்ரச்சனைகள் பெரிதாகியது.

ஒரு முறை நடு ராத்திரியில் ஒரு வயதானவர் வீட்டு வாசலில் வந்து நின்று ஓவென அழுதார். தன் பெண் கல்யாணத்திற்காக வைத்திருந்த பணத்தை தான் முதலீடு செய்ததாகவும், பணம் இல்லையென்றால் அடுத்த நாள் ஏற்பாடாயிருந்த கல்யாணம் நின்றுவிடும் என்றும் காசு கொடுக்காமல் போக மாட்டேன் என்று டிசம்பர் மாத பனியில் ரோட்டில் உட்கார்ந்துவிட்டார். அம்மா அவரை வீட்டிற்குள் கூப்பிட்டு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் கேட்பதாய் தெரியவில்லை. அவரின் அழுகையை பார்க்க பாவமாயிருந்தது. அம்மாவிடம் நகை, பணம் என்று எதையும் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை. வீட்டிற்குள் வந்தபின்பும் அவர் ஆரற்றிக் கொண்டேயிருந்தார். ஒரு நிலையில் அவரின் கண்களில் கண்ணீரே இல்லாமல் வெறும் அழுகுரல் மட்டுமே வந்து கொண்டிருக்க, “என் பொண்ணு கல்யாணம்.. என் பொண்ணு கல்யாணம்” என்று மறுபடி, மறுபடி சொல்லிக் கொண்டேயிருக்க, அம்மா தாங்கமாட்டாமல் என்னை எழுப்பி என் கழுத்திலிருந்த ரெண்டு சவரன் செயினை கழட்டினாள். நான் அழுதேன். எனக்கென இருக்கும் ஒரே நகை அதுதான். அம்மா பிடிவாதமாய் பிடுங்கி அவரிடம் கொடுத்து, “இதைத் தவிர எங்க கிட்ட பணமோ, நகையோ இப்ப இல்லை. ப்ரச்சனை முடிஞ்சதும் நிச்சயம் திரும்பக் கொடுத்துருவோம்” என்று அவரின் காலில் விழுந்து அழுதாள். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “பொண் குழந்தை கழுத்துலேர்ந்து அழ, அழ, கழட்டுன நகை என் பொண்ணுக்கு வேண்டாம். நீங்க ஏமாத்தல இல்லை.. பகவான் இருக்கான். அவன் பார்த்துண்டே இருக்கான். அவனுக்குதெரியும் நீங்க நல்லாயிருப்பேள்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினார். அவர் ஆசீர்வாதமாய் சொன்னாரோ, அல்லது வயிறெரிந்து சொன்னாரோ.. அதன் பிறகு நடந்த விஷயங்கள் எதுவுமோ நன்றாக நடக்கவில்லை.

அப்பாவை ஜெயில் பார்க்க பாவமாய் இருந்தது. இளைத்துப் போய் கண்களுக்கு பதில் கருவளையங்களாய் இருந்தது. மிக நம்பிக்கையாய் பேசினார்.

“என்னதான் கோடி கோடியா பணம் இன்வெஸ்ட் பண்ணாலும் ஒரே ராத்திரியில எல்லாரும் பணத்தை திரும்பக் கேட்டா எப்படி தர முடியும். கவர்மெண்டும் இதைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும். இதைப்பத்தி இன்னும் சில கம்பெனி எம்டிக்கள் இங்க இருக்கிறவங்க கிட்ட பேசி வெளிய மூவ் பண்ணப் போறோம். சீக்கீரம் எல்லாம் சரியாயிரும்.. நம்ம வக்கீல் கிட்ட பெயிலுக்கு மூவ் பண்ணச் சொல்லியிருக்கேன். அவரோட போய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. பேபி.. நீ பயப்படாத.. எல்லாம் சரியாயிரும். டாடி வந்திருவேன்.” என்று ஜன்னல் இடுக்கு வழியே என் கன்னத்தை தடவினார். சில்லென இருந்தது. அவரின் விரல் பட்ட மாத்திரத்தில் அழுகை பொத்துக் கொண்டு வர, “பாத்தியா பேபி.. நீ அழுதியானா.. எனக்கும் அழுகை வரும். இனி பேபியை கூட்டுட்டு வராதே” என்றார் அம்மாவிடம் சொன்னார்.

உள்ளே நுழைந்ததிலிருந்து லஞ்சமாய் நிறைய பணம் கொடுக்க வேண்டியிருந்த்து. மற்றவர்களை விட அதிகமாய் குறைவாய் கொடுத்தால் ”என்னம்மா நீங்களே.. “ என்று இழுத்தார்கள். யாருடைய பார்வையிலும் மரியாதை இல்லை.

என் நண்பர்கள் எல்லோரும் விலகிப் போய் என்னுடன் பழகவே யோசித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா என்னுடன் சேரக்கூடாது என்று சொல்லிவிட்டாளாம். எங்கேயும் போகப் பிடிக்கவேயில்லை.

அம்மாவை பார்க்க வக்கீல் அங்கிள் வந்திருந்தார். அவர்கள் இருவரும் இருந்தால் நான் கீழே போவதேயில்லை. அம்மாவுடன் அவர் காட்டும் நெருக்கம் அருவருப்பாய் இருந்தது. அன்றைக்கு நான் கீழே இறங்கியதற்கான காரணம் அம்மா கோபமாய் கத்திய காரணத்தால். அம்மா ஏன் கத்தினாள் என்று ரெண்டு நாள் கழித்து, இரண்டு வயதானவர்கள் வீட்டில் இரவு தங்கிவிட்டு போன போதுதான் புரிந்தது. அம்மா அப்பாவுக்காக முதல் முதலாய் சோரம் போனது அப்போதுதான்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Unknown said...

ம்.. பிரமாத’ம்’.....

Anonymous said...

nice story
ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு பீலிங்

Jayaprakash said...

ரொம்ப நன்றி சார் (இந்த கதைய கேட்டுட்டே இருந்தேன் இப்போ தன நேரம் கெடச்சது போல). இந்த மாசம் சாப்பாடு மாசமா இருக்குனு நெனைக்கிறேன், என்ன சார் கரெக்ட் அஹ!