
பெயரைப் பார்த்தாலே எவ்வளவு காலமாய் ஓட்டல் நடத்துகிறவர்கள் என்று தெரிந்துவிடும். ஏனென்றால் இப்போதெல்லாம் மிலிட்டரி ஓட்டல் என்று யாரும் பெயர் வைப்பதேயில்லை. வழக்கொழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, சேலத்தில் 65 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சென்னையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
சாலிகிராமத்தில் நடிகர் ஆர்.கே ஆரம்பித்த சாப்பிடவாங்க என்கிற ஓட்டலை மூடிவிட்டு அங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு கிளைகள் அவசர கதியில் ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே மூடிவிட்டார்கள். அருணாசலம் ரோடிலிருந்து சாலிகிராமம் பஸ்ஸ்டாண்டுக்கு, ப்ரசாத் லேபுக்கு முன் எல்லா பஸ்களும் திரும்பும் ரோட்டில்தான் இந்தக் கடை இருக்கிறது.

உள்ளே சென்றால் குளிரடிக்கும் ஏசியுடன், தலைவாழை இலைப் போட்டு ஆரம்பிக்கிறார்கள். வழக்கமாய் இம்மாதிரியான ஓட்டல்களில் பெரும்பாலும், பீட்ரூட் பொரியல், ஏதாவது இத்துப் போன காயைப் போட்டு கூட்டு ஒன்றை கடனே என்று போடுவார்கள். ஆனால் இவர்கள் அப்படியல்ல.. ஆரம்பிக்கும் போதே சும்மா அதிரடியாய், உருளை, வாழைக்காய், கோஸ், என்று அசத்துகிறார்கள். சரி.. அடுத்து சாப்பாட்டுக்கு வருவோம். சுடச் சுட சாதம், அதற்கு சிக்கன், மட்டன், மீன் குழம்புகளுடன்,மோர் ஆகியவற்றை வரிசையாய் அடுக்க, வழக்கமாய் ஓட்டல் சிப்பந்திகளுக்கு டிப்ஸ் கொடுத்துதான் நல்ல கிரேவி வாங்கி பழக்கப்பட்ட எனக்கு கேட்காமலேயே நல்ல கிரேவியை வழங்கியது ஆச்சர்யமாய் இருந்தது.

அடுத்து நாங்கள் ஆர்டர் செய்த மட்டன் சாப்ஸும், நாட்டுக்கோழி பிச்சிப் போட்டது. அட.. அட.. அட. இங்கே தான் இவர்கள் அசத்தி போட்டார்கள். நாட்டுக்கோழி பிச்சிப் போட்டதை எடுத்து வாயில் வைத்தால் அளவான காரம், மசாலாவுடன், க்ரிஸ்பாக சமைக்கப்பட்டு, வாயில் வைத்தால் கரைகிறது. அவ்வளவு சுவை. நல்ல கிரேவி, சாப்பாட்டுடன் ஒரு துண்டை வைத்து கவளம் சாப்பிட்டால் நிச்சயம் நான் அடிக்கடி சொல்லும் டிவைனுக்கான அர்த்தம் புரியும். விலை என்று பார்த்தால் மொக்கை செட்டிநாடு ஓட்டல்களில் வாங்கும் காசைவிட ஒர்த் என்றுதான் சொல்ல வேண்டும். சாப்பாடு மற்றபடி சிறந்த சர்வீஸ், தொடர்ந்து நான்கைந்து முறை போயும், தரம் குறையவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜனின் மேற்பார்வையில் இந்த ஓட்டல் நடப்பதாய் சொன்னார்கள். இங்கு என்னை அழைத்துப் போன இயக்குனர் பத்ரிக்கு நன்றி.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அடிக்கடி அங்கே போவீங்க.. நான்
பெட் கட்றேன்..
வாழ்த்துகள்.
2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?
Salem vanthaal kandippa antha hotel la saapduven. Pakirvukku Nanri!