Thottal Thodarum

Oct 3, 2012

வாஸ்து


Car_by_Shuttercolour”வாஸ்து சரியில்லை சார்.அதான் இப்படி படுத்தறது” என்ற என் நண்பரை ஒரு மாதிரி பார்த்தேன். என்ன எழவுடா இது காருக்கெல்லாம் கூட வாஸ்து பார்க்கும் அளவுக்கு முத்தி போய்ட்டாரே என்று நினைத்துக் கொண்டேன்.



“வாஸ்துங்கறது.. இருக்கிற இடத்துல மட்டும் இல்ல சார்.. நாம காரை வைக்கிற காரேஜுல இருக்கு..  உங்க கார் காரேஜ் எந்த சைட் பேஸிங்?” என்று கேட்டுவிட்டு.. “ஒரு கிங்ஸ் வாங்கிக்கிறேன் உங்க அக்கவுண்ட்ல” என்று பதிலை எதிர்பார்க்காமல் வாங்கிக் கொண்டார்..

எனக்கு கொஞ்சம் கோபமாய் வந்தாலும், என் நிலையை நினைத்து துக்கம் துக்கமாய்தான் வந்தது. இருந்திருந்து காரை வாங்கினதுலேர்ந்து, விடாது கருப்பு போல அடிபட்டுக் கொண்டிருந்தால் தான் தெரியும் என் கஷ்டம். ரத்தக் கண்ணீர் வரும்.

இதுவரை ரெண்டு முறை ஆகிவிட்டது. ஒரு கார் என்றால் ஆக்ஸிடெண்ட் ஆவது சகஜம் தானே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் என் கேஸ் கொஞ்சம் வித்யாசம் நான் வண்டி ஓட்டி எப்பவும் விபத்து நடந்ததேயில்லை. எப்போது நிற்கும் போது, அதுவும் சிக்னலில் நிற்கும் போதுதான் நடக்கும்.
முதல் முறை அம்பிகா எம்பயர் சிக்னல் அருகே ஏசியை புல்லாக ஏற்றிவிட்டு, புதிதாய் போட்டிருந்த மீயூசிக் சிஸ்டத்தில் ரஹ்மானை கொஞ்சம் நிலவு என்று திடுமிடச் செய்து கொண்டிருந்த நேரத்த்தில் முக்கியமாய்.. பாட்டின் நடுவில் ஒரு பினிசிங்குக்காக பெரிய ட்ரம் ஓசை வரும் நேரத்தில் என் வண்டியே அதிர்ந்தது. சவுண்ட் ஜாஸ்தியா வச்சிட்டமோன்னு குறைக்கிறதுக்காக குனிந்த போதுதான்  பார்த்தேன். ஒரு ட்ரை சைக்கிள் அந்தரத்தில் ஜாக்கிசான் போல பல்டியடித்து, அதன் கூடவே ரெண்டு ரவுண்டு அதில் உட்கார்ந்திருந்தவனும் சம்மர் சால்ட், பல்டி, டபுள், ட்ரிபுள் எல்லாம்  அடித்து கீழே வருவதற்குள், ‘பிதாவே என்னை ரட்சியும்” என்பதை போல இரண்டு கை விரித்து வண்டி விழுந்த சில நொடிகளுக்குப் பின் விழுந்தான்.

பதறிப்போய் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போதுதான் தெரிந்தது. என் வண்டி அதிர்ந்தது பாட்டினால் அல்ல, அந்த மீன் பாடி வண்டிக்காரன் இடித்து என் சைடு பானட்டை துகிலுரித்து, கிழிந்த தோலாய் இருந்தது என் வண்டி.. என் வண்டிக்கும் அடுத்த வண்டிக்கும் இடைவெளியிருப்பதை பார்த்து, அவனுடய வண்டியின்  அகலத்தை கணக்கிடாமல் ஓட்டி வந்த ஸ்பீடிலேயே உள்ளே நுழைய முயற்சித்தபோது அவனது இடது பக்கம் தட்டி என் பானட்டை தட்டி பறந்திருக்கிறான் என்று. என்ன கொடுமை பாருங்க சார்.. பக்கத்தில ஒரு பழைய பியட் இருந்திச்சு.. அதுல இடிச்சிருக்க கூடாதா..?

சரி இதாவது பரவாயில்லை.. ஒரு ஒன்பதாயிரம் ருபாவோட போச்சு.. அடுத்த வாட்டி நடந்தது அநியாயம்ங்க.. அசோக்நகர் சிக்னல்லேர்ந்து உதயம் தியேட்டருக்கு போறதுக்காக சிக்னல் கிடைச்சு மொத வண்டியா, திரும்பக் கூட  ஆரம்பிக்கல. எதிர்பக்கத்திலேர்ந்து ஒரு பல்ஸர்.. வில்லுலேர்ந்து வந்த அம்பு மாரி.. நேரே தூக்கி கிளப்பிட்டு வந்து என்ன நினைச்சானோ தெரியலை.. கட் பண்ணி போவாம,  ப்ரேக் போட்டு, வண்டியை மட்டும் ஸ்கிட்ல விட்டுட்டு எழுந்து நின்னு பார்த்தான். வண்டி இங்கிலீஷ் படத்தில தேய்ச்சிட்டே நெருப்பு பொறியோட வரும் அது போல என் கண்முன்னாடியே  பொறி பரக்க தேய்ச்சிட்டே என் வண்டியின் இடது பக்கதில மோதி.. டோர், கண்ணாடி ரெண்டு போச்சு. வந்த போலீஸ்காரன் என்னை பார்த்து வரக்கூடாதான்னு கேட்டு அவன் வாங்கிகட்டினது வேற விஷயம்.. என்ன ஒன்ணு என் வண்டி ரிப்பேர் மட்டும் 27 ஆயிரம் ஆச்சு..

இப்படி தொடர் இடிப்புகளினால் நொந்து நூலாகி போயிருந்த போதுதான். என் நண்பர் வாஸ்து பற்றி பேசினார்.

சிகரெட்டை பற்ற வைத்து கொள்ளிக்கட்டை போல் கங்கு வரும்படி உள்ளூக்கிழுத்து, மூக்கின் வழியே மெல்ல புகையை விட்டபடி, “நான் சொல்றத கேளூங்க.. மொதல்ல உங்க வீட்டுக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறதுனால எனக்கு ஒரளவுக்கு ஐடியா இருக்கு. அதனால..உங்க காரை கிழக்கு பக்கம் இருக்கிற கேரேஜுல வைக்காதீங்க.. வடக்கு பக்கமா இருக்குறாப்புல வையுங்க.. அப்புறம் உட்கார்ற பொசிஷன்ல கூட வாஸ்து இருக்கு தெரியுமோ? சில பேருக்கு சீட்டு செண்டர்ல உக்காருவா.. இன்னும் சில பேர் காலை கையை பரத்தி வச்சுண்டு உட்காருவா நீங்க எப்படி?

அவர் அப்படி கேட்டதும் தான் நான் உட்காரும் பொஸிஷனை யோசித்து பார்த்தேன்.  அதை எப்படி சொல்வது? ஒரு மாதிரி.. சீட்டை பின்னுக்கு தள்ளி என் முட்டி டாஷ் போர்டில் இடிபடாமல்.. பப்பரப்பா என்று கால்விரித்த கோழி போல இருக்கும் என்பதை எப்படி விவரிப்பது? “ அத நீங்க நான் ஒக்காரும் போது பாத்துக்கங்க..” என்றேன்.

அதுக்கு பிறகு அவர் சொன்னதெல்லாம் பாலோ செய்ய வேண்டுமென்றால், வண்டியை பக்கத்துவிட்டு கிச்சனில் தான் பார்க் செய்ய வேண்டும் என்பதால், மேற்கொண்டு பேசாமல் நின்றேன்.

”என்ன பாக்குறீங்க.? நம்பிக்கையில்லையா.. நான் வேணும்னா.. உங்க கூட வண்டியில வர்றேன்.. நீங்க எப்படி ஓட்டுறீங்க? உட்கார்ற பொஷிஷன் எல்லாத்தையும்..பார்த்துட்டு சொல்றேன்.” என்றார். எனக்கு எதை தின்றால் பித்தம் தெளியும்ங்கிற நிலைமையிலிருந்ததாலே.. சரி வாங்க.. ஆனா போற வழியில.. வண்டியை வாட்டர் வாஷ் பண்ணனும்.. அத முடிச்சிட்டு போயிறலாம். என்றேன்.

வடபழனி ஏவி.எம்முக்கு எதிரே உள்ள வாட்டர் வாஷ் செய்யும் இடத்திற்கு கிளப்பினேன். வழி நெடுக நண்பர்.. “பாருங்க.. நீங்க வண்டியோட சீட்டுல லெப்டுல அழுத்தம் கொடுத்து உக்காந்திருக்கீங்க.. அது கிட்டத்தட்ட கியர் ஷாப்டை ஒட்டி, அது அக்னி மூலை.. சூடு இருக்கிற இடம்.. அப்படி ஒக்காரக்கூடாது. உங்க மகர ராசிக்கு இடது ஓர அக்னி மூலை ஆகவே ஆகாது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து வேணும்னா கதவு கிட்ட இருக்கிறா மாரி கூட உக்காந்துக்கலாம். கதவுன்னா காத்து, வாயூபகவான். உங்க ராசிக்கு உதவுரவன். இவ்வளவு நாள் இந்த இடி இடிச்சும் உஙக்ளுக்கு ஒண்ணும் ஆகாம இருக்கிறதே இதனாலதான். தெரியுமோ..? எல்லாத்துக்கு ஒரு கணக்கு இருக்கு. என்று தொடர்ந்து அங்க உட்காருஙக்.. இப்படி ஒக்காருங்க.. என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

வண்டி வாட்டர் வாஷ் செய்யும் போது கூட.. அந்த இடத்தின் வாஸ்துவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பக்கதில் எதாவது கட்டிடத்தை பார்த்தால் எது ஈசானிய மூலை.. என்று மனது தேட ஆரம்பித்தது. வண்டியை கழுவி முடித்து ஸ்டார்ட் செய்து கிளம்ப எத்தனிக்கும் போது “சார்.. இவ்ளோ சொல்றேன் திரும்பவும் பழைய இடத்திலேயே உக்கார்றேளே.. என்றது. சற்று தள்ளி, வலது ஓரத்துக்கு நகர்ந்து கொண்டேன். கொஞ்சம் அசெளகரியமாய்தான் இருந்தது.. இருந்தாலும் பரவாயில்லை என்று உட்கார்ந்து, சீட் பெல்டை இழுத்து, போட்டுக்கொண்டு, “நீங்களும் போட்டுக்கங்க..” என்றேன்.

“அதெல்லாம் எதுக்கு நாமெல்லாம் என்ன ரேஸுக்கா போறோம்? முக்கினா ரெண்டாவது கியரே தாண்ட முடியாது மெட்ராஸ் ட்ராபிக்ல..” என்றார். நான் வேறேதும் சொல்லாமல் வண்டியை கிளப்பி சிக்னலுக்கு வந்து நின்றேன். இவ்வ்ளவு காலம் வழக்கமாய் சிக்னலில் இருக்கும் போது கொஞ்சம் டென்ஷனாகவே இருப்பேன். எங்கே எவனாவது வந்து இடித்துவிடுவானோ என்று.. இன்று கொஞ்சம் தைரியமாய் இருப்பதாகவே பட்ட போது,  பக்கத்தில் ஒரு குப்பை வண்டி வந்து நின்று, சட்டென திரும்ப, சரியான என் பாணட்டுக்கு ஒரு இஞ்ச் முன்னால், அடிபடாமல் லாவகமாய் திருப்பி எதிர் பக்கம் ஓட்டினான். ஒரு முறை மூச்சிழுத்து விட்டேன். பக்கத்து சீட் நண்பர்..” பாத்தேளா.. ஒரு சின்ன இடமாற்றம்.. எவ்வளவு எபெஃக்ட் பாருங்க.. இதுக்கே இப்படின்னா இன்னும் கார் பார்க் பண்ற இடத்தை மாத்தினீங்கன்னா என்ன என்ன நடக்கும்னு” என்றதும். மீண்டும் பக்கத்துவீட்டு சமையலறையில் எப்படி காரை பார்க் செய்வது என்ற யோசனை ஓட ஆரம்பித்தது.

சிக்னல் கிடைத்து வண்டியை இடது பக்கமாய் திருப்பி வடபழனி பஸ்ஸ்டாண்ட் நோக்கி கொஞ்சம் கேப் கிடைத்து இரண்டாவதிலிருந்து, மூன்றாவதுக்கு மாற்றி வேகமெடுப்பதற்குள், சிக்னல் வந்துவிட, வண்டியை நிறுத்தி டென்ஷன் இல்லாமல் இருந்த போது, வண்டியே குலுங்கியது. ஒரு கணம் தான் ஒரே கணம்தான்.. உடலெல்லாம் கூசி.. குலுங்கி அதிர்ந்துபோய்விட்டது. என் நண்பர் அதிர்ச்சியில் முன்பக்கம் இருந்த கண்ணாடியில் மோதி, கண்ணுக்கு மேல் ஒரு ரத்த வெட்டு, மெல்ல வழிய ஆரம்பிக்க.. இறங்கி பார்த்த போது, என் வண்டியின் இடது பக்கம் பூராவும், சென்னை மாநகராட்சியின் பஸ் தேய்த்து, பெயிண்ட் இல்லாத பிறந்த மேனி வண்டியாக்கியிருந்தான்.

இறங்கி கூட நின்று பார்த்த நண்பர்.” இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். ரத்த காயம் ஆயிட்டுது” என்றார். சீட் பெல்ட் என்னை காப்பாற்றியது. நான் வண்டியை விற்றுவிட்டேன்.

கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Sivaraman said...

:)

R. Jagannathan said...

Ungalidam Vandi vaanginavar irukkiraaraa? - R. J.

குரங்குபெடல் said...

நல்ல content

ஆனா சொதப்பலான presentation

story type பண்ணும்போது வாஸ்து படி உட்காரலை போல . .

அமர பாரதி said...

:) Should I follow any vaasththu to read this post?

IlayaDhasan said...

இவ்வளவு நாள் இந்த இடி இடிச்சும் உஙக்ளுக்கு ஒண்ணும் ஆகாம இருக்கிறதே இதனாலதான். தெரியுமோ..? எல்லாத்துக்கு ஒரு கணக்கு இருக்கு.


பதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

super

குரங்குபெடல் said...



Cable Sankar VS CID Sankar


அது நிஜம்னா முதல்ல நீங்க ராங் ரூட்டுல வந்திருக்க கூடாது. ஒழுங்கா இருக்கிறவனை குத்தம் சாட்டியிருக்க கூடாது. ரோட்டோரம் கடை போட்டு காசு வாங்கிட்டு அலோவ் பண்ணியிருக்ககூடாது. இவ்வளவு வண்டிய சர்வீஸ் ரோட்டுல எப்படி ஓட்ட விடலாம்?. சர்வீஸ் ரோட்டுல எப்படி இவ்வளவு வண்டிய பார்க் பண்ண விடலாம்? இதையெல்லாம் கேள்வி கேட்காம ஓரமா நின்னுட்டு போன் பேசினவனை அரஸ்ட் பண்ணுவீங்கன்னு சொன்னீங்கன்னா பப்ளிக் ப்ரச்சனைத்தான் பண்ணுவோம். இதெல்லாம் நான் பண்ணலை என் டிபார்ட்மெண்டுல வேற ஆளூங்க பண்றாங்கன்னு சொன்னீங்கன்னா அதை சரி பண்ணிட்டு பப்ளிக்கை கேள்வி கேளுங்க”

எத்தனை கேள்வி . .


வெளிநாட்லேந்து திரும்புன

இந்தியன் தாத்தா இப்போ

சைதைலதான் இருக்காராம . . .


Salute Sankar






மர்மயோகி said...

//பதறிப்போய் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போதுதான் தெரிந்தது. என் வண்டி அதிர்ந்தது பாட்டினால் அல்ல, அந்த மீன் பாடி வண்டிக்காரன் இடித்து என் சைடு பானட்டை துகிலுரித்து, கிழிந்த தோலாய் இருந்தது என் வண்டி.. என் வண்டிக்கும் அடுத்த வண்டிக்கும் இடைவெளியிருப்பதை பார்த்து, அவனுடய வண்டியின் அகலத்தை கணக்கிடாமல் ஓட்டி வந்த ஸ்பீடிலேயே உள்ளே நுழைய முயற்சித்தபோது அவனது இடது பக்கம் தட்டி என் பானட்டை தட்டி பறந்திருக்கிறான் என்று. என்ன கொடுமை பாருங்க சார்.. பக்கத்தில ஒரு பழைய பியட் இருந்திச்சு.. அதுல இடிச்சிருக்க கூடாதா..?///

தரைப்படைகளை ஒழித்துக்கட்டி, ட்ராபிக் ஒழுங்குமுறைகளை கடினமாக செயல்படுத்தினால் போதும் தமிழ்நாடு உருப்பட்டுவிடும்..

துளசி கோபால் said...

அட ராமா..........:(