தமிழ் சினிமாவில் கார்பரேட் கம்பெனிகள் செய்ய முனையாத முயற்சிகளையெல்லாம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான் செய்வார்கள். ஆனால் சமீப காலமாய் அம்மாதிரியான சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களூம், வழக்கமான கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அட்டகத்தி போன்ற வித்யாச படத்தை எடுத்து வெற்றி பெற, இதோ அவரது அடுத்த வித்யாச படைப்பு.
த்ரில்லர், ஹாரர், படங்களைப் பார்த்து அதிர்ந்து போய், வாய் பிளந்து படம் பார்த்து மாமாங்கமாகிவிட்டது. அதிலும் தமிழில் அதை விட அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த பிட்சாவில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நடைபெறும் விஷயங்கள் உங்களை திரைக்குள்ளேயே இழுத்துவிடக்கூடிய அளவிற்கு சுவாரஸ்யம். மிகைப்படுத்தி சொல்வதற்காக சொல்லவில்லை. நிஜமாகவே இரண்டு மணி பத்து நிமிடப் படத்தில் வழக்கமான குத்துப் பாட்டில்லை, கவர்ச்சிக் காட்சிகள் கிடையாது, அபத்த காமெடிக் காட்சிகள் கிடையாது இப்படி பல கிடையாதுகளோடு ஒரு படத்தை சீட்டின் நுனிக்கு நம்மை வரவழைத்து படம் பார்க்க வைகக் முடியுமா? என்று கேட்டீர்களானால் நல்ல திரைக்கதை, சுவாரஸ்யமான கதை சொல்லல், நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் இருந்தால் நிச்சயம் முடியும் என்று இந்த டீம் அடித்து சொல்லியிருக்கிறது.
இப்படத்தின் கதை என்று எதையாவது சொன்னால் அது படம் பார்க்கும் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன்.படம் பார்த்து கதையை தெரிந்து கொள்ளுங்கள்.
விஜய்சேதுபதிக்கு இப்படம் திருப்புமுனையாய் அமையும் என்பது நிச்சயம். ஆரம்பக் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸ் வரை மிக இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார். குறிப்பாக அந்த அமானுஷ்ய பங்களாவில் தனியொரு ஆளாய் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் காட்சிகளில் எல்லாம் பரிதாபத்தையும், நம் முதுகு தண்டில் லேசான சில்லிப்பையும் வரவழைக்கிறார்.
ரம்யா நம்பீசன். க்யூட்டாக இருக்கிறார்.அதிலும் ஒரு பாடல் காட்சியில் அவருக்கும், சேதுவுக்கும் இடையே ஆன நெருக்கம் படு இயல்பு. நரேன், ஓவியர் வீரசம்மர், சிம்ஹா, ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தான். வழக்கமாய் ஒரே இடத்தில் படமெடுத்தால் நமக்கு சலிப்பு வந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. இந்தப் படத்தில் சுவாரஸ்யத்திற்கான அபாயமே ஒரே லோகேஷனில் படமெடுத்தால்தான் என்பதால் அந்த நாற்பது நிமிடங்களும் வெறும் டார்ச்சை மட்டும் வைத்துக் கொண்டு மனுஷன் ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறார் பாருங்கள் அப்படி ஒரு ஆட்டம். வாழ்த்துக்கள் கோபி. இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தமிழில் முதல் 7.1 டிஜிட்டல் மிக்ஸிங்கில் வெளிவந்திருக்கும் படம். இம்மாதிரியான படங்களுக்கு இசை மிக முக்கியம். அதை உணர்ந்து மிக அருமையான பின்னணியிசையை கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் மட்டுமே முழுவதுமாய் வருகிறது. மற்றபடி ஹிட் பாடலான “தினக்குதே” வை உபயோகித்த இடம் இன்னும் சுவாரஸ்யம். லியோவின் எடிட்டிங் படு ஸ்மூத். குறிப்பாய் அந்த பங்களாவில் நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோரின் உழைப்பு அடி தூள்.
எழுதி இயக்கியவர் நாளைய இயக்குனர் முதல் பகுதியில் வெற்றி பெற்று இரண்டாவதாய் வந்த கார்திக் சுப்புராஜ். இவரது துரு, ப்ளாக் அண்ட் வொயிட் போன்ற குறும்படங்கள் பேசப்பட்டவை. இவரது முதல் திரைப்படம் இது. ஆனால் படம் பார்த்தால் சொல்ல மாட்டீர்கள் அவ்வளவு அழகான மேக்கிங். இம்மாதிரியான படத்திற்கு என்ன தேவையோ அதை கேட்டு வாங்கி சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நம்மை தயார்படுத்தியவர், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் கதைக்குள் போய், நம்மை படத்தின் கதையோடு ஒன்றி விடச் செய்து விடுகிறார். குட்டிக் குட்டி டயலாக்குகள், ஸ்டைலான மேக்கிங் என்று ஜெட் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. தடதடக்கும் வேகத்தோடு கூட்டிக் கொண்டு போனவர் க்ளைமாக்ஸின் போதுதான் லேசாய் சுருதி குறைந்தார்.
இந்த படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. இருக்கிறது அதெல்லாம் நம் கண்ணில் படாமலேயே போய்விடக்கூடிய அளவிற்கு படம் நம்மை ஆக்ரமிப்பதால் டோண்ட் நீட் டூ ஒர்ரி. க்ளைமாக்ஸை நோக்கிப் போகும் போது கொஞ்சம் நீளும் காட்சிகள், வீரசந்தானம் கேரக்டர் எல்லாம் தேவையில்லாததாய் தோன்றினாலும் படத்தை பார்த்து முடிக்கும் போது 3அவை படத்திற்கு கொடுத்த இம்பாக்ட் நியாயப்படுத்திவிடும். நிச்சயம் எதிர்பார்க்காமல் போய் பார்த்தால் ஒரு ஆச்சர்ய பொக்கே காத்துக் கொண்டிருக்கிறது. டோண்ட் மிஸ். தயவு செய்து படம் பார்த்தவர்கள் கதையை வெளியே சொல்ல வேண்டாம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
ஓவியர் வீர . சந்தனம்
தியேட்டர் வாயிலில் இயக்குனர் நின்று கொண்டிருந்தார் . .
கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க தோன்றியது . .
அவர் வேறு குண்டாய் குட்டிபையனாய் இருக்க
" அவனா நீ " போல் மற்றவர் நினைத்துவிடுவார்களோ
என தவிர்த்து விட்டேன் . .
பாராட்டுக்கு உரிய படம்
“அன்னிக்கு ஆர்டர் வந்தது இந்த ஏரியாவில இருந்து தான். ஆனா ஆர்டர் வந்த வீட்டுக்கு இவன் போகல. அவன் சொன்னா மாதிரி பைக் இந்த வீட்டு வாசலில தான் கிடந்திச்சு.”