Thottal Thodarum

May 31, 2012

துரோகம்


DRRR___Blaming_you_by_lehananமிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “எஃப்” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சட்டென அடுத்த சேனலை மாற்ற… நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள்.
” நடந்திட்டிருந்தவளூக்கு ஒரு இருவது வயசிருக்குமா? சும்மா சிக்குன்னு எப்படி நடந்தா இல்ல?”

சிவா அவளின் கேள்விக்கு முக்யத்துவம் கொடுக்காதவன் போல முகத்தை வைத்துக் கொண்டு “ ம்” என்றான்.

“அப்ப ஏன் சேனலை மாத்தினீங்க..?”

பெரியதாய் எதற்கோ ஆரம்பிக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. “ உனககு பிடிக்காது அதனால”

”அப்ப எனக்கு பிடிக்காததை எல்லாம் எனக்கு தெரியாம செய்வீங்க.. அப்படித்தானே?’

“எதுக்கு தேவையில்லாம டென்ஷனாகுறே..?”

“எதுதான் தேவை உங்களுக்கு?”

“சரி..ஓகே விடு நான் ஆர்க்யூ செய்யலை.. ஒரு வாரமாவே நீ டென்ஷன்ல தான் இருக்கே.. என்ன ஆச்சு..?”

“சும்மா நடிக்காதீங்க.. சான்ஸ் கிடைச்சா டிவிக்கு சீட் பண்ற மாதிரி நிஜத்திலேயேயும் எவ்வளவு செய்யறீங்களோ..?’

”ஏய்.. என்ன பேசுறே நீ? சரி.. நான் எஃப் டிவி பார்த்தேன். ஓகே ஒத்துக்கிட்டேன். ஐஸ்ட் ஒரு லூக்வார்ம் இன்ட்ரெஸ்ட். அவ்வளவுதான். இதுக்குப் போய் சீட்டிங், துரோகம்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே”

”அப்ப நீங்க இதுவரைக்கும் எனக்கு துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க..?”

“சே..சே .. என்னாச்சு இன்னைக்கு? உனக்கு போய் நான் துரோகம் செய்வேனா..?”

“கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. அன்னைக்கு உங்க ஆபீஸ் ரம்யாவை கார்ல கொண்டு போய் அவங்க அம்மா வீட்டிற்கு ட்ராப் பண்ணிட்டு வந்தீங்களா இல்லையா.?”

“அய்யோ ஆமாம் ட்ராப் பண்ணினேன். அதை பத்தி உன் கிட்ட போன்ல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால்தான்னு சொல்லிட்டுதானே போனேன்.?”

“அது ஒரு ப்ளான்.. சொல்லிட்டா எது வேணா செய்யலாமா..? இல்லை எனக்குத்தான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?”

“ஏய்.. விட்டா அறைஞ்சிருவேன்.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..”

“அஹா.. அது ஒண்ணுதானே குறைச்சல். அப்ப வேற யாரு?”

“ஹேய் யார் என்ன சொன்னாங்க..? உன் ப்ரெண்ட் அனிதாவா?”

“ஆங்… அனிதா.. அவளா..? படுபாவி… கூட இருந்தே குழிப்பறிக்கிறாளே..? சொல்லு அவளா. எனக்கு அப்பவே தெரியும்.. நீ அவ நம்ம வீட்டுக்கு வரும்போது வழிஞ்சு வழிஞ்சு பேசுறதும், அவ மாரையே பார்க்கறதும்,  அவளும் உன் கிட்ட நெருக்கமா பேசுறதும் அதும் என் முன்னாடியே..”

“தபாரூ.. பூஜா.. நிஜமாவே அறைஞ்சிருவேன்.. என்ன பேசிட்டே போறே. ஒரு ஆம்பளை நினைச்சான்னா வீட்டுல ஏதும் சொல்லாம எதை வேணும்னாலும் செய்ய முடியும். “

“அதான் செய்யுறீங்களோ..?”

“சரி என் கண்ணை பார்த்து சொல்லுங்க.. நீங்க எனக்கு துரோகம் செய்யலைன்னு?”

கண் சிவந்து அழ தயாராக இருந்த பூஜாவின் விழிகளை உற்று பார்க்க, சற்று தயங்கி, பின் நிறுத்தி நிதானமாய் உற்று பார்த்து “ இல்லை” என்றான் சிவா.

“பாருங்க..பாருங்க… டக்குனு இல்லைன்னு சொல்ல முடியுதா? முடியலைல்ல.. மனசு குறுகுறுக்குது.. அதான் பொய் சொல்றீங்க”

“ஏய் யார் என்ன சொன்னாங்க உன்கிட்ட..? “

“ஏன் யாராவது சொன்னாத்தான் எனக்கு தெரியுமா? நான் என்ன சின்ன பப்பாவா.?”

“அதை விட மோசம். எதையோ மனசில வச்சிட்டு பேசறே நீ?”

“எதையுமில்ல.. அன்னைக்கு உன் மொபைல்ல ஒரு பொண்ணு உங்களை கேட்டாளே.. அவ யாரு..?”

“பூஜா அன்னைக்கே சொன்னேன் அவ என் தூரத்து உறவு, கசின் சிஸ்டர்னு”

“அவவளவு நேரம் சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்க?’

“அவளும் நானும் சின்ன வயசில அவங்க ஃபேமிலி இங்க இருந்த போது ஒண்ணா விளையாடுவோம் அதை பத்தி பேசி.. சிரிச்சோம்.  ஏன் எல்லாத்தையும் சந்தேகமா பாக்குறே?

“அப்ப அன்னைக்கு ஒருத்தி ஏதோ பேங்குலேர்ந்து லோனுக்காக பேசினவகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்களே.. “

”அவ என் கம்பெனியில ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒர்க் பண்ணவ.. குரல் கேட்டதும், ஞாபகம் வந்திச்சு.. அதான் சிரிச்சு பேசினேன் அது தப்பா..?

“எல்லாத்துக்கு ஒரு பதில் வச்சிருப்பீங்க..? “ என்று குப்புறபடுத்து குலுங்க, ஆரம்பித்தாள்.

சிவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏன் இப்படி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறாள் “பூஜா.. ஏய்.. எழுந்திரு.. என்ன பண்றே?’

“ம்.. அழறேன். என்னை நினைச்சு அழறேன். என் வாழ்க்கைய நினைச்சு அழறேன். என்னடா இது அழறாளே..? தூக்கி வச்சி சமாதானம் பண்ணுவோம்னு ஒருத்தனுக்கு தோணுதா? மனசில கொஞ்சமாவது லவ், பாசம் இருந்தாத்தானே?”

“நான் தூக்கினா நடிக்கிறேன், பாசாங்கு செய்யறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்கு”

ஒரு கணம் ஆழமாய் சிவாவை உற்றுப் பார்த்தாள். “சிவா.. என்னை பார்த்து சொல்லு.. உன் மேல சத்தியமா சொல்லு.. நீ எனக்கு இதுவரை ஒரு வாட்டிக்கூட துரோகம் பண்ணதில்லை..?”

”நிச்சயமா இல்லைம்மா.. இதை எப்படி ப்ரூப் பண்ணனும்னு சொல்லு செய்யறேன். கல்யாணத்துக்கு முன்னாடி அங்க இங்க கேர்ள்ப்ரெண்ட்ஸோட சுத்தினது உண்டுதான். அதையும் உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ என் செல்லம்டா.. ராணி.. உனக்குப் போய் துரோகம் செய்வேனா..? உனக்கென்ன குறை..? உனக்காக நான் என்ன செய்யணும் சொல்லு செய்யறேன். பட் ப்ளீஸ் என்னை சந்தேகப்படாதே”

“அப்ப நீ எனக்கு துரோகம் செஞ்சதேயில்லையா..?”

“நிச்சயமா இதுவரைக்கும் மட்டுமில்ல இனிமேலும்” என்ற சிவாவை பார்த்து கலங்கிய கண்களுடன் ஏறிட்டு மெதுவாய் பார்த்து..

“நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்ங்க..” என்றாள் பூஜா..

கேபிள் சங்கர்


டிஸ்கி: மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலிருந்து. புத்தகத்தை வாங்க இங்கே அழுத்தவும்

Post a Comment

9 comments:

Unknown said...

அட்டகாசம்..பிரமாதம்!

rajamelaiyur said...

கடைசி டுவிஸ்ட் சூப்பர்

rajamelaiyur said...

அருமையாக இருகின்றது நண்பா

arul said...

inniku naatla ithu than nilamai

'பரிவை' சே.குமார் said...

அருமை...

Prabhu said...

ரொம்ப காலத்துல மனுஷன் படிக்க முடியுற o'henry கதை இன்னைக்கு தான் பாக்குறேன். எல்லாரும் ஒ’ஹென்றிய abuse பண்றாங்கபா!

Prabhu said...

ரொம்ப காலத்துல மனுஷன் படிக்க முடியுற o'henry கதை இன்னைக்கு தான் பாக்குறேன். எல்லாரும் ஒ’ஹென்றிய abuse பண்றாங்கபா!

SAS said...
This comment has been removed by the author.
Nat Sriram said...
This comment has been removed by the author.