செய்தித்தாள்களில், சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும் ஒர் விஷயம் அம்மா உணவகம். ஊருல இருக்கிற கையேந்திபவனையெல்லாம் எழுதுற நீ ஏன் இதை பத்தி எழுதலை? நீ திமுகவின் அல்லக்கை என்றெல்லாம் கூப்பிட்டு சில பேர் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்காக க்யூவில் நிற்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால் கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
இப்போது வார்டுக்கு ஒரு கடை என்றாகிவிட்டதால் அவ்வளவாக கூட்டமிருப்பதில்லை என்பதாலும் ஏரியாவைப் பொறுத்து கூட்டம் க்யூவெல்லாம் இருப்பதால் முயற்சி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது துரைசாமி சப்வேயின் ஓரமாய் ஒர் உணவகம் ஆரம்பமாகியிருந்தது. வாசலில் ஒர் அம்மா வேகாத வெய்யிலில் ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டில் மசால் வடை, வீல் சிப்ஸ், பாக்கெட் ஊறுகாய்கள் என்று சிறு கடை போட்டிருந்தார். சிப்ஸ், வடை எல்லாம் 5ரூபாய். ஊறுகாய் ரெண்டு ரூபாய். ஆனால் தக்குணூண்டாய் இல்லாமல் நல்ல கூவாண்டிட்டியில் இருந்தது.
க்யூவில் ஒன்றிரண்டுபேர் மட்டுமே இருந்தார்கள். எல்லோரும் சாம்பார் சாதம் ரெண்டு வாங்கிக் கொண்டிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. நான் ஒர் சாம்பார் மற்றும் தயிர் சாதம் வாங்கினேன். மொத்தம் எட்டு ரூபாய். ஒரே எவர்சில்வர் தட்டில் இரண்டையும் போட்டுக் கொடுத்தார்கள். சூடான சாம்பாதத்தின் மணம் நாசியில் புகுந்து பசியைக் கிளம்பியது. ஐந்து ரூபாய்க்கு அருமையான சாம்பார் சாதம். காய்கறிகள் என்று பார்த்தால் பெரும்பாலும் அதிக வெங்காயமும், நூக்கோல் போன்றவைகள் ஆங்காங்கே தென்பட்டது. நல்ல பருப்பு போட்டிருக்கிறார்கள். விலைக்காக கொஞ்சம் கூட சுவையில் காம்பரமைஸ் செய்யவில்லை என்பது ஆரம்பித்து இத்தனை நாட்களுக்கு பிறகும் இருப்பது சந்தோஷம். தயிர்சாதம் வெள்ளைக்கலர் மோர் சாதம் அவ்வளவே. தயிர்சாதத்தை கொதிக்கக் கொதிக்க கொடுத்ததும், கொஞ்சம் கூட தயிர் வாசனையே இல்லாமல் இருந்ததும் பெரிய மைனஸ். இடத்தை சுத்தமாய் வைத்திருக்கிறார்கள். நல்ல காற்றோட்டமான இடம் மற்றும் ஃபேன் வசதிகள். பத்து ரூபாய் கொடுத்தால் மீதி சில்லறையெல்லாம் கொடுக்கிறார்கள். டாஸ்மாக் போல ஆகாமல் இருந்தால் சரி.
பெரும்பாலும் மகளிர் சுய உதவி குழு பெண்களின் தலைமையில்தான் செயல்படுவதால் மிக ஆர்வமாய் வேலை செய்கிறார்கள். இடத்தை சுத்தமாய் வைத்திருப்பதில் இவர்களின் ஆர்வம் மிக அதிகமாய் இருக்கிறது. சென்னையில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் இல்லாமல் முடியாது என்ற நிலையில் எட்டு ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது என்பதை வரவேற்க வேண்டும். இதே குவாலிட்டியும், குவாண்டிட்டியும், சர்வீஸும் தொடரும் பட்சத்தில்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Good; At a very cheapest rate with good environment; But it should be OF 'STOMACH FRIENDLY" IS THE FOREMOST ONE
RSM