நிகிலுக்கும் அவனது இரண்டு நண்பர்களுக்கும் தொழில் பிக்பாக்கெட் அடிப்பது. டியூசன் டீச்சரும், ஜர்னலிஸ்டுமான சுவாதிக்கும் நிகிலுக்கும் சுவாதியின் வெஸ்பா ஸ்கூட்டரின் மூலமாய் கனெக்ஷன் வருகிறது. அவளிடம் நிகில் தான் ஒரு சாப்ட்வேர் எஞினியர் என்று பொய் சொல்லி காதலிக்க ஆரம்பிக்கிறான். இதனிடையில் பத்மநாபசாமி கோயிலிருந்து திருடப்பட்ட ஒரு குட்டி விநாயகர் சிலை ஒன்று விற்கப்படுகிறது. சில ஆயிரங்களுக்கு விற்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு பத்து கோடி. அந்த சிலை ஒரு கட்டத்தில் சுவாதியிடம் வந்து அதை லவுட்டி நிகில் விற்று விடுகிறார் ஐந்து லட்சத்திற்கு. சிலையை தேடி வந்த கும்பல் சுவாதியை தூக்குகிறது. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து நிகில் சுவாதியை தப்பிக்க வைத்து தன் காதலில் வெற்றி பெற்றான் என்பதுதான் கதை.
வழக்கமான கதைதானே இதில் என்ன புதுசு இதுபோல எத்தனையோ ராம் கோபால் வர்மா படம் பார்த்திருக்கோமே? என்று யோசிப்பீர்கள். ஆமாம் பார்த்திருப்போம். ராம் கோபால் வர்மாவை ஃபாலோ செய்து அவரை போலவே பல பேர் படமெடுக்க முயற்சிசெய்திருக்கிறார்கள். இந்தப்படக் குழுவினர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ராம் கோபால் வர்மாவை மட்டுமல்ல குவாண்டினின் பாணியையும் அப்பட்டமாய் வரிந்தெடுத்திருக்கிறார்கள்.
ஜெமினி டிவியிலோ, மாடிவியிலோ சினிமா விமர்சனம செய்யும் இரண்டு இளைஞர்கள் பிரபலம். அவர்களை வைத்து ஒரு லாங் டிராவலோடு சினிமா பற்றிய பேச்சுக்களோடு ஆரம்பிக்கும் படம் தடாலென ஒரு கொலையில் முடியும் இடம் அப்படியே குவாண்டினின் பல்ப் பிக்ஷன். ஆனால் வசனங்களும் அதை கொண்டு வந்த விதமும் நல்ல முயற்சி.
ஹாப்பி டேஸ் நிகிலுக்கு ரொம்ப நாள் கழித்து ஒர் சுவாரஸ்ய கேரக்டர். அதை அழகாய் செய்திருக்கிறார். ஆள் ரொம்பவே மாறியிருக்கிறார். கலர்ஸ் சுவாதி அழகாய் இருக்கிறார். கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை ஜர்னலிஸ்ட் அது இது என்று பில்டப் செய்திருந்தாலும் வழக்கமான லூசு ஹீரோயின் போலவே சித்தரித்திருப்பது கொடுமை. ஏகப்பட்ட நடிகர்கள் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் ப்ரசாத்தின் டிஜிட்டல் ஒளிப்பதிவு தரம். சன்னியின் பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது. எழுதி இயக்கியவர் சுதீர் வர்மா. இந்த கதையின் இன்ஸ்ப்ரேஷன் என்று வர்மா, குவாண்டின் என்று எல்லோருக்கும் க்ரெடிட் கொடுத்திருக்கிறார். க்ரெடிட் கொடுத்ததோடு இல்லாமல் அவர்களைப் போலவே சுவாரஸ்யமாய் கதை சொல்லி பேரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். கதை என்று பார்த்தால் மிக சாதாரணமான கள்ளக்கடத்தல், பொருள் இடம் மாறுவது அதனால் வில்லன்கள் துரத்தல் என்ற ராம் கோபால் வர்மாவின் ஷணம்.. ஷணம் கதை தான் என்றாலும் அதை திரைக்கதையாய் கொடுத்தவிதத்தில் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் குழப்பங்கள் கொஞ்சம் க்ளீஷேவாக இருந்தாலும், அந்த மகா குண்டு அடியாள், கல்யாணமாகாத வில்லன் ரவிபாபு, என்று காமெடி கலாட்டா ஒர்க்கவுடாகியிருக்கிறது. எதிர்பார்க்காமல் பார்த்தால் சின்ன சந்தோஷ பொக்கே கிடைக்கும்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
its all n d game