Thottal Thodarum

Jan 27, 2011

கவிஞரின் பார்வையில்....

rajasundararajan@gmail.com
அன்பின் சங்கர்,
போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா?

‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன்.
Final Layout1
மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார்.
புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன். உடனே அவைபற்றி எழுதியிருக்க வேண்டும். ஆனால் அது ஒன்றே அலுவலாக வாழ முடிகிறதா என்ன? இடைப்படுகிற பல கடமைகளையும் கடந்தேறி மீள்கையில், என் நினைவுப்புலம் மங்கியிருக்கக் கண்டேன். வயதாகிவிட்டது அல்லவா? ஆனால் எல்லாக் கதைகளும் அப்படி மங்கிவிடவில்லை. ஒன்றிரண்டு நெருடலாக நினைவில் நின்றுகொண்டுதான் இருந்தன. அதாவது, அவற்றை உணர்ந்து உள்வாங்கியிருக்கிறேன் என்று பொருள். அதற்கு அந்தக் கதைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் காரணமாகலாம் அல்லது அவற்றில் வரும் நிகழ்ச்சி/ நேர்ச்சிகள் காரணமாகலாம்.

வாசித்துக் கிட்டிய வழி, உங்கள் எழுத்துநடை ஈர்ப்புள்ளது என்றுதான் சொல்லப்பட வேண்டும். எங்கேயுமே சலிப்புத் தட்டவில்லை. உங்கள் மொழிநடையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று ஒத்துக்கொள்கிறேன்.

//அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட - ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைக்கப்பட்ட - ஒரு திரைக்கதைதான் இந்த தரிசனம்...// - (‘தரிசனம்’)

//சே, எதற்கு இந்தப் போதை என்று படுக்கும்போது நினைத்து, காலையில் எழுந்தால், அவளின் ‘ஹாங் ஓவர்’. அவளால் ஏற்பட்ட ஹாங் ஓவரைச் சரிசெய்ய அவளே வேண்டும்.// - (‘என்னைப் பிடிக்கலையா?’)

//ஒரு இலக்கில்லாத மாலை நேரத்தில் கால் போன போக்கில் இந்தத் தெரு வழியாய் வந்த போதுதான் அவளைப் பார்த்தேன். அவளைப் பார்த்த மாத்திரத்தில் எனக்குள் சிலிர்த்தது. எனக்கானவள் என்ற ஒரு உணர்வு உடலெங்கும் பதறிப் பதறி ஓடியது.// - (காதல்)

//ட்ராஃபிக்கில் மாட்ட, இன்னும் எரிச்சல் ஆனது. சிக்னலில் தேவையில்லாமல் வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தேன்.// - (மீண்டும் ஒரு காதல் கதை)

lemon tree 28 without  image
வாசிக்கிறவர் உணர்ந்துகொள்ளும்படி உணர்வுபூர்வமாக உங்களால் சொல்ல முடிகிறது. சுஜாதாவைப் போல என்று சொல்லமாட்டேன், உங்கள் தனித்தன்மை தெரிகிறது, ஆனால் சுஜாதா வகைப் பளிச்சிடல்களும் மிளிர்கின்றன. அன்னார் அருள் வாழ்க!

வாசித்து நாளான பிறகும் ஒன்றிரண்டு நினைவில் நிற்குமானால், அந்தக் கதைகளில், வாசித்தவர் அனுபவத்தைத் தொட்ட ஏதோ ஒன்று இருக்கிறதுதானே? அது கதையின் கருத்தாக இருந்தால், கதையாசிரியர் ஒரு இலக்கிய கர்த்தா மட்டுமே; நிகழ்ச்சி/ நேர்ச்சியாக இருந்தால், திரைக்கதை ஆசிரியராகும் தகுதியும் பெறுகிறார்.

நீங்கள் ஓர் இலக்கியக் கர்த்தாவாகத் தேறிவிட்டீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஓர் இலக்கியக் கர்த்தா என்பதினும் ஒரு திரைக்கதைக் கர்த்தா ஆவதில்தான் உங்கள் அக்கறை என்பதினால், எனக்குத் தெரிந்த அளவுக்கு அந்தக் கோணத்திலும் இந்தக் கதைகளைப் பார்க்க முயன்றேன்.

“ஹை, தபார்டா, ரிலேசன்னா அப்ப எதுக்கு நைனா.. முக்கா அவரா.. நூல் உட்டுகிணு இருந்தே?” - (‘முத்தம்’)

“பக்தில என்ன ஹிந்து, கிறிஸ்டியன். நம்பிக்கைதான் வாழ்க்கைன்றது என் பக்தி. நீ அதையே வேறு ஒரு சாமிக்குக் கிரெடிட் பண்றே, அவ்வளவுதான். இவ்வளவு பெரிய கூட்டத்துல பதினேழு கிலோமீட்டர் நடந்துதான் பக்தியை வெளிப்படுத்தணுமா?” - (‘உன் கூடவே வரும்..’)

“நாளையிலிருந்து செர்ரி ரெட்டில் லிப்ஸ்டிக் போடாதே, கன்ட்ரோல் செய்ய முடியலை.”, “இன்னைக்கு எத்தனாவது சிகரெட்?”, “ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு, விட்டுவிடுகிறேன்.” - (‘முற்றுப்புள்ளி’)

“நீ என்னைப் போன்றவளிடம் படுத்ததில்லை என்றால், வேறு எவளிடம் படுத்திருக்கிறாய், கண்ணகியிடமா?” - (‘ராமி, சம்பத், துப்பாக்கி’)

இவை நீங்கள் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதைச் சுட்ட, நான் அங்கங்கு இருந்து எடுத்தவை. ‘துரோகம்’ கதை முழுவதையும் இங்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், ஒரு திரைக்கதையாளர் சிறந்த வசனகர்த்தாவாக இருந்தாகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கூலிக்கு ஆள் வைத்து வசனம் எழுதுகிற (மணிரத்னம், சங்கர் இன்ன) திரைக்கதையாளர்களும் இருக்கிறார்கள். என்றால் திரைக்கதைக்கு வேண்டிய சரக்கு எது? நம் பண்டை இலக்கண நூலார் அதை ‘நாடக வழக்கு’ என்றார்கள்.

“உன்னைப் போல அதிர்ஷ்டக்காரி இருக்க முடியாது, ஜெனி. உன் அண்ணனுக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடிவந்து, ஜீவாவைக் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவதற்குள், உன் அண்ணன் உன் வீடு தேடிவந்து உன் கணவனைத் தாக்க, இருவருக்கும் கைகலப்பாகி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதில், உன் கணவனுக்கு ஞாபகங்கள் எல்லாம் போய்விட, உன் அண்ணன் கோமாவில் படுத்தவன் எப்போது எழுந்திருப்பான் என்றே தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாய் நீ பட்ட கஷ்டம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் உன் கணவனுக்கு ஞாபங்கள் வர, என் மருத்துவமும் நீ கொடுத்த ஆதரவால்தான் இவ்வளவு முன்னேற்றம். கவலைப்படாதே, ஜெனி, இன்னும் ஒரே மாதம், என் மருத்துவம் செய்யாத ஜீனி வேலையை இனி உன் காதல் செய்துவிடும் பார்.” - (‘ஒரு காதற்கதை இரண்டு க்ளைமாக்ஸ்’)

இது கதையைக் கொண்டுகூட்டப் போதுமானதுதான், ஆனால் ஒரு திரைக்கதையாளனுக்கு ஆகாத ஒன்று. வசனமாய் வருவதைத் தவிர்த்துக் காட்சியாய்ப் புலர்த்திக்காட்ட என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கலாம். வலைப்பதிவுக்காய் எழுத நேர்ந்ததால் வந்த கோளாறு இது என்றே எண்ணுகிறேன். ஒரே இடுகையில் பதிவேற்றித் தீரவேண்டும் என்று கட்டாயமா என்ன? இடைவேளை விட்டுத்தானே சினிமாக் காட்டுகிறீர்கள்?

நான் சொல்ல வருவதும் இதுதான். ஒரு சினிமா எழுத்தாளனாக உள்வேட்கை கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் எல்லாக் கதைகளையுமே இரண்டு இடுகைகளாகப் பதிவேற்றுகிற வகையில் எழுதினால் என்ன? வலைத்தளத்தை உங்கள் நோக்கங்களுக்கான பயிற்சிக் களமாக மாற்றலாமே? முதல் இடுகையில், ஒரு திரைக்கதைக்கான முதல் மூன்று plot point-களும் இரண்டாவது இடுகையில், மேலும் இரண்டு plot point-களும் அமைகிறாற்போல எழுதிப் பாருங்களேன்.
‘மீண்டும் ஒரு காதல் கதை’, நீங்கள் உங்களை ஓர் youth என்று உணர்வதற்கு இணங்க, youthful-ஆக இருக்கிறது. இங்கே, என் வாசிப்பு நோக்கத்தின் காரணம், இந்தக் கதையைப் பகுத்துப் பார்த்தேன்:

மொத்தம் 34 பக்கம். இதில் 3 % to 9 % என்பது 1-இல் இருந்து 3-ஆவது பக்கம் வரை; 25% = 9-ஆம் பக்கம்; 50% = 17-ஆம் பக்கம்; 75% = 26-ஆம் பக்கம்; 96% = 33-ஆம் பக்கம். இவை கதையின் திருப்புமுனைகள் வந்தாகவேண்டிய பக்கங்கள்.
புத்தகத்தின் 6-ஆவது பக்கத்தில் கதை தொடங்குவதால், 6 ~ 8 ஆவது பக்கத்துக்குள் முதல் திருப்புமுனை வந்தாகவேண்டும். அதாவது முதல் அத்தியாயத்திலேயே. ஆம், வருகிறது. மூன்று முதன்மைக் குணவார்ப்புகளும் அறிமுகப்படுத்தப் பட்டதோடு, “ஹவ் டேர் யூ டச் மை ஹேர்?” என்னும் கோபக் கத்தலில் முதல் திருப்புமுனை வந்துவிடுகிறது.

அடுத்து, 14 (9 + 5)-ஆம் பக்கத்தில், ஷ்ரத்தாவின் காது வளையத்தால் நேரும் விபத்து காரணம் உருவாகும் அடுக்கமும், அவளிடமிருந்து சங்கருக்கு வரும் போன் காலிலும் இரண்டாவது திருப்புமுனை வந்திருக்கிறது.

22-ஆம் பக்கத்தில், அவள் அவனை நெருங்கவிட்டு உதைத்துத் தள்ளி வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதில் மிகச் சரியாகவே மூன்றாவது (அதாவது இடைவேளைத்) திருப்புமுனை வந்திருக்கிறது. ஆனால் அந்த அத்தியாயம் அங்கே முடிந்திருக்க வேண்டும். நீட்டிக்கொண்டுபோய் முத்தத்தில் முடித்திருப்பது கதை முடிவைக் கணக்கில் வைத்து எழுதப்பட்டிருக்கலாம். தேவை இல்லை என்பதே என் கருத்து.

31-ஆம் பக்கத்தில், அவள் அவனை அவன் முயற்சியைக் கடைகட்டிவிட்டு அமெரிக்காவுக்கு வரச்சொல்லும் சிக்கல் (crisis) திருப்புமுனை சரியாகவே வந்திருக்கிறது, ஆனால் இங்கும் அத்தியாயம் சரியான புள்ளியில் பிரிக்கப்படாத இலக்கியத்தனம் நிகழ்ந்திருக்கிறது.

36-ஆம் பக்கத்தில்... (இது இங்குதான் அமைய வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை - எ.டு: ஹிட்ச்காக்கின் ‘Frenzy’ படத்தில், climax-உம் resolution-உம் ஒரே புள்ளியில் அமைந்திருக்கக் காணலாம்.)... இக் கதையிலும் இது அப்படி அமைந்திருக்கக் காண்கிறேன்.

உங்களுடை கதைகள் எல்லாமே வாசகத் தன்மையுள்ள மொழிநடையில் உள்ளதோடு, மிக்கவாறும் முடிச்சுகள்/ அவிழ்ப்புகளோடு கூடியதொரு நாடகவழக்கு எழுத்துநடையிலும் ஆகிவந்திருப்பதால் நீங்கள் திரைக்கதை ஆசிரியத் தகுதிக்கு உரியவர்தான் என்பது மிகத் தெளிவாகவே வெளிப்பட்டிருக்கிறது. நான் தொடக்கத்தில் கூறிய போக்குவரத்துச் சூழ்நிலை, இப்படி முடிச்சுகள்/ அவிழ்ப்புகள் நிறைந்த ஒன்றுதான் என்று நினைவுகூர வேண்டுகிறேன். (‘பதேர் பாஞ்சாலி’யும் செம்மையானதொரு திரைக்கதை வடிவம் கொண்டதாகப் போற்றப் படுகிறது).

என்னைப் பாதித்து, நாட்பட்டும் என் நினைவில் நின்றவை: ‘தரிசனம்’, ‘ஒரு காதற்கதை இரண்டு க்ளைமாக்ஸ்’, ‘போஸ்டர்’, ‘கமான்.. கமான்..’, ‘பைத்தியம்’, ‘தேவர் மாப்பிள்ளை’, ‘தனுக்கு கொண்டாலம்மா’ ஆகியவை. இவற்றில், ‘தனுக்குக் கொண்டாலம்மா’க் கதையின் கருத்து (உடற்புனித மனவக்கிரம், இருந்தும் அறம்பிதற்றல்) காட்டும் இந்தியப் போலிமை தோலுரிக்கப்பட்டது அருமை. நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் சிறப்பித்துச் சொன்ன, ‘குண்டம்மா பாட்டி’ மிகச் சாதாரணமானதொரு கதையாகவே எனக்குப் படுகிறது. (அளியரோ அளியர் நம் பாரதப் பெண்கள்!).
அன்போடு
ராஜசுந்தரராஜன்

நன்றிகள் பல கவிஞர் அவர்களே..
கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

மாணவன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...

Unknown said...

நன்றி ராஜசுந்தராஜன் நான் கடந்து போன வரிகளின் மீது மீண்டும் கவனம் கொள்ள செய்த்தற்க்கு...

Cable சங்கர் said...

haai nanda.. how are you? mudincha call pannunga..

சக்தி கல்வி மையம் said...

Nice, Review..
congratulation..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

Jana said...

வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்............

'பரிவை' சே.குமார் said...

திரு. ராஜசுந்தர்ராஜன் அவர்களின் பார்வை மிகவும் வித்தியாசமாய்...
அலசலுடன் கூடிய அருமையான விமர்சனம்.
படிக்காதவர்களைப் படிக்க வைக்கும் எழுத்து.
வாழ்த்துக்கள்.

க ரா said...

நல்ல விமர்சனம் .. பகிர்ந்தமைக்கு நன்றி :)

ADMIN said...

விமர்சனத்தைப் படிக்கும்போது நூல்களை வாங்கிப் படிக்க எண்ணம் தோன்றுகிறது.

நல்ல விமர்சனத்தை அளித்தமைக்கு, நன்றி..!!

ADMIN said...

இந்நூல்கள் இணையத்தில் இங்கும் கிடைக்கும்; நூல்உலகம்