
பல வருடங்களாய் பேப்பரில் படித்த ஒரு பிரபலமான கேஸ் தான் படத்தின் கதை. அதை இவ்வளவு சுவாரஸ்யமாக, மனம் நெகிழும்படி கொடுக்க முடியுமா? என்று கேட்டால், நல்ல திரைக்கதை, நடிகர் நடிகைகள் என்று முழு இன்வால்வ்மெண்டோடு கொடுத்தால் முடியும் என்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் குப்தா.
டெல்லியின் ஸ்டார் ஓட்டல் பாரில் ஒரு அமைச்சரின் பையன், பார் டைம் முடிந்து சரக்கு தராததால் கோபத்தில் ஜெஸ்சிகா எனும் பார் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிஜக்கதை தான் படத்தின் கதையும். இம்மாதிரியான கதைகளில் என்ன பெரிய திருப்பத்தை எதிர்பார்த்துவிட முடியும்?. அரசியல் வாதியின் பையன் என்றாகிவிட்டால் சட்டம் எப்படி தன் கடமையை செய்யும் என்று எல்லோருக்குமே தெரியுமல்லவா? அதே தான் நடக்கிறது. பின்பு எப்படி ஜெஸ்ஸிகாவின் கேஸ் பெரிய அளவில் பேசப்பட்டு மீண்டும் சர்ச்சையானது என்பது மிக அழகாய், இழைத்து, இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெஸ்சிகாவாக நடித்த பெண்ணின் துடிப்பு மிக்க நடிப்பு அவரின் மீதான ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்துகிறது. அது படத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்க காரணமாயிருக்கிறது. அவரது சகோதரி சபரீணாவாக வருகிறார் வித்யா பாலன். ஒரு எக்ஸ்ட்ராவர்டான சகோதரிக்கு இன்னொரு பக்கமான இண்ட்ரோவர்ட்.. மிக அழகாய் சித்தரிக்கப்பட்ட கேரக்டர். உணர்ந்து நடித்திருக்கிறார். தன் சகோதரியை ஆம்புலன்ஸில் தூக்கிக் கொண்டுப் போகும் போது ”அவ இறந்திட்டா.. அவ உடம்பிலேர்ந்து ரத்தம் ஊறுவது நின்றுவிட்டது. அவ இறந்திட்டா” என்று இறந்த ஜெஸ்சிகாவின் உடலை பார்த்து புலம்புவதிலிருந்து, தன் சகோதரியின் கொலைக்கு சாட்சிகளிடம் கோர்ட்டுக்கு வந்து உண்மையை சொல்ல வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டு அலையும் போதும், அதே கேஸ் யாரும் ஜெஸ்சிகாவை கொல்லவில்லை என்று தீர்பாகி, தன் தாயை இழந்து, தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலுக்கும், வீட்டிற்குமாய் அலையும் நொந்து போனவளாய் இருக்கும் போதும், ராணி முகர்ஜி தனக்கு அவளுடய சப்போர்ட் தேவையென்று கேட்கும் போது அந்த மெல்லிய உதடுகள் துடிக்க அவர் காட்டும் விரக்தியாகட்டும் வித்யாபாலன் கலக்குகிறார்.

முதல் பாதியில் பெரிதாய் இல்லாவிட்டாலும் பெரிய பில்டபோடு ஆரம்பிக்கிறது ராணி முகர்ஜியின் கேரக்டர். பின்பாதியில் தூள் பரத்துகிறார். இந்த டாமினெண்ட், அரகண்ட், சோஷியல் கான்ஷியஸுள்ள, டிவி தொகுப்பாளினி. ராணி முகர்ஜி தன் கேரக்டரை மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சியில் வரும் கார்கில் போர் ரிப்போர்ட்டிங்கில் ஆரம்பித்து, ப்ளைட்டில் தன்னுடன் பயணிக்கும் சக பயணி, கார்க்கில் போர் ஒரு ஆங்கில ஆக்ஷன் படம் போல என்று சிலாகித்து சொல்லும் போது கொடுக்கும் பதிலடியில் ஆகட்டும், தன் காதலனுடன் உடலுறவுக்கு தயாராகும் போது போன் ஒலிக்க, ஒரு ப்ளைட் ஹைஜாக் விஷயத்துக்காக உடனடியாய் கிளம்ப வேண்டும் என்று கிளம்ப, காதலன் இப்போது நான் என்ன செய்ய? என்று கேட்க, லைட்டைப் போட்டு அவன் உடையேதும் இல்லாதிருப்பதை பார்த்து, “Go.. and Fly on your own” என்று சொல்லிவிட்டு லைட் ஆப் செய்வதாகட்டும், மிகவும் யோசனையுடன் மொட்டைமாடியில் புகைப்பிடிப்பதாகட்டும், ஜெஸ்சிகாவின் கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்ய கார் டிக்கியின் மீது உட்கார்ந்து போராடும் காட்சியாகட்டும் க்ளைமாக்ஸ் வரை அதகளப் படுத்துகிறார் ராணி.
நிஜ வாழ்க்கையில் கேரக்டர்கள் எப்படியோ.. இயக்குனர் ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுத்திருக்கும் டீடெயிலிங்க்குகாகவே பாராட்டபட வேண்டும். பாரில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மேல் தட்டு மக்கள் இருந்திருக்க, ஒருவர் கூட சாட்சி சொல்ல வராத கொடுமையும், அதற்கு அவர்கள் நடிக்கும் நடிப்பும், போலி அழுகையும், கண் துடைத்து உடன் உதடு கரைபடியாமல் ப்ளாக் க்ரண்ட் கேக் சாப்பிடும் லாவகமும் மிக அருமையான தருணங்கள். ஒரு மனசாட்சியுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இம்மாதிரி கேஸ்களினால் வரும் மன உளைச்சலை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் மூலம். கேஸின் முக்கிய சாட்சியான விக்ரம், அவனுடன் இருந்த வேலையாள், அந்த வயதான லாயர், ஜெஸ்சிகாவின் லாயர், அரசியல்வாதியின் மனைவி, என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு குட்டி கேரிகேட்சரை கொடுத்திருப்பதினால் இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். இவரது முதல் படமான ஆமீர் இன்றளவில் இந்தி சினிமாவில் குறிபிடத்தகுந்த படமாய் இருக்கிறது.
இப்படத்தில் குறையென்று சொன்னால் ஒரு சில ரிப்பீட்டீஷனான காட்சிகளும், ஆங்காங்கே தெரியும் மெலோட்ராமாக்களை மட்டுமே சொல்லலாம். அமித்த்ரிவேதியின் பாடல்கள் ஆங்காங்கே படத்தினூடே கலந்து வருகிறது. அந்த இந்தியா கேட் பாடல் நிச்சயம் நெகிழ்விக்கும் பாடல். அதே போல ஒளிப்பதிவையும் குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த ஒளிப்பதிவு.
No One Killed Jessica – A Must See Film
டிஸ்கி: நேற்று எஸ்கேப்பில் ஹவுஸ்புல்.. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தியேட்டரில் என்பது சதவிகிதம் பெண்களே இருந்தார்கள். நல்ல படங்களுக்கு இன்றும் பெண்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பது சந்தோஷ சமாச்சாரமே.
கேபிள் சங்கர்
Comments
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...
இந்தி படத்துக்கு இவ்வளவு அழகான விமர்சனம்.
திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதும் இந்தியாவின் தமிழ் சுப்புடு ஆகிவிடுவீர்கள் போல.
yes....
I like the way you watch a film and make your observations.It gives a wholesome satisfaction and makes you see the film, if the review is good.
keep up.Its apity that Tamil directors, barring Mani Rathinam, do not dare to venture into such topics.
Keep up.
ரொம்ப நாளைக்கு அப்புறம் அடிச்சு ஆடிருக்கீங்க..
ஒரிஜினல் dvd க்கு ஆவலாக இருக்கிறேன். (ஏன் தியேட்டர்க்கு போகலைங்கறீங்களா? அண்டார்டிகாக்கு அடுத்த coldest பிளேசில் இருந்து கொண்டு அதெல்லாம் நினைக்க முடியாது)
இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..